மாவைப் பிள்ளைத்தமிழ்
மு. கந்தையா
வாரானைப்பருவம்7 / 11
மாவைப் பிள்ளைத்தமிழ் · மு. கந்தையா
வாரானைப்பருவம்
56✓
பல்லா யிரத்துப் பலகோடிப்
பழுதில் கற்பம் பாருலகிற்
பழுத்துச் செறித்த வநுபவத்தீம்
பயனே பயனார் மெய்யறிஞர்
சொல்லா லுரைக்க வாய்சோர்ந்து
சும்மா விருந்து சுகித்துணர்ந்து
சொக்கிச் சுவைத்துத் தேனித்த
சுவையே சுவைஞா னாமிர்தங்
கல்லா னிழற்கீ ழறமுரைத்த
கடவுட் குரைக்குங் கலையரசே
கம்பத் திளைய னாய்த்தோன்றிக்
கருணை யருண கிரிக்கருளுஞ்
செல்லார் பொழில்சூ ழருணகிரிச்
சிவமே வருக வருகவே
சிவமே விளைக்குந் திறன்மாவைத்
திருவே வருக வருகவே.
57✓
பெருந்தே னிரைக்கு நறுங்கொன்றைப்
பிரானார் செவிக்கே பிரணவத்துப்
பேசாப் பொருள்பே சியகுழவிப்
பெருமான் வருக! பெருந்தவத்தோர்
விருந்தே வருக! நகுலமுனி
விரூப முகமும் மாருதப்ர
வீக வல்லி மாமுகமும்
விலகாப் பெருநோய் விலக்குமலை
மருந்தே வருக! மலைமடந்தை
மனைமாண் பினுக்கு நன்கலமாய்
வையம் வாழ வாழ்ந்தபெரு
வாழ்வே வருக! வாழ்வறியாத்
திருந்தா வசுரர் செருக்கொழித்த,
தேவே வருக! வருகவே!!
சிவமே விளைக்குந் திறன்மாவைத்
திருவே வருக! வருகவே!!
58✓
பூவார்ந் திலகு மியாழ்ப்பாணப்
பொருவி லூர்ப்பேர் பலதொகுத்துப்
பொற்பார் கவிதைக் கற்பனைக்குட்
புகுத்திப் புலமைப் புதிர்விளைப்போன்
மூவாக் கலைமா முகில்சுன்னை
முத்துக் குமாரக் கவிராயர்
முகிழ்செம் புலமை முருகுயிர்க்க
முன்னின் றலர்த்துங் கவிதைமலர்
நாவார் சங்கி யாதைமகிழ்
நாமாந் தரிதை யுள்ளுறுத்த
நவமாம் பிரகே ளிகைச்செய்யுள்
ஞால முய்ய நயந்தருளுந்
தேவா தேவர்க் கிதம்புரிந்த
செல்வா வருக வருகவே
சிவமே விளைக்குந் திறன்மாவைத்
திருவே வருக வருகவே.
59✓
பாய வொளிநேர் கண்கவரப்
பழுத்துச் சிலிர்த்துப் பரிமளிக்கும்
பன்மா நிறமுக் கனிபரப்பிப்
பத்தி வாசங் கமகமக்கச்
சேய கதிர்ச்செந் தினையிடியிற்
செந்தேன் பில்கப் பிசைபிசைந்து
சீலத் திருக்கார்த் திகைத்திருநாட்
சிறுமா விளக்கி னகல்கோலி
நேய மணக்க நெய்மணக்க
நினைவு முழுதுஞ் சிவம்மணக்க
நேர்ந்து கொளுத்துந் தீச்சுடரின்
நிறைவா சனைபோய்த் திசைமணக்கத்
தேயம் புகழ்கோ யிற்கடவைத்
தேவே வருக வருகவே
சிவமே விளைக்குந் திறன்மாவைத்
திருவே வருக வருகவே.
60✓
கன்மக் காட்டின் மாயைவலைக்
குள்ளே கட்டுண் டலைந்துலைந்து
கதுவும் புலநாய்க் குலமீர்ப்பக்
கலங்கும் புத்தி யெனும்பொறியால்
நின்னைக் காண்டும் நினையறிதும்
நேயம் புரிதும் நெடிதுணர்தும்
நின்னா ரருளின் திறம்புகழ்தும்
நெகிழ்நுங் குழைதும் மகிழ்துமெனப்
பன்னற் கரிய பாசாங்கிற்
பயில்வோ மல்லோம் பரிந்தொருநீ
பண்பா னின்னைத் தருமவதி
பார்த்துப் பயந்து பணிகுதுமால்
தென்னம் பொழில்சூழ் மாவைவளர்
தேவே வருக வருகவே
சிவமே விளைக்குந் திறன்மாவைத்
திருவே வருக வருகவே.
61வேறு✓
ஒருமையுட னிருதிறமு முக்குற்ற நீக்கியுள்
ளறுகரண நான்கொ டுக்கி
யோரைந்து நின்மலா வத்தையினு மொன்றிநின்
றுணரா றெழுத்து முன்னி
அருமையுற வெழுபவக் கடலுஞ் சுவற்றிநல்
லட்டாங்க யோக முடிவில்
அணைநவ சமாதிக்கு ளானதச காரியத்
தடைவுபட வோர்ந்தி ருக்கும்
பெருமையுறு முனிவரர்ப் பேணுமொரு கருணையிற்
பிரணவத் துள்ளு றொளியாய்ப்
பேசரிய வானந்த மொருவடிவு கொண்டெனப்
பெட்புற வணைந்த ணைக்குங்
கருதரிய திருமேனி காண்பினிய மாவைவளர்
கந்தவே ளேவ ருகவே
கரியகட லின்னடுப் பெரியசூர் மாய்த்திட்ட
கருணைவே ளேவ ருகவே.
62✓
வெள்ளமுறு பிறவிநெறி வேதனைக் கடலின்
வெறுப்புற் றலுத்து வர்த்து
மேவுமோ றிறவாப் பெருந்தவத் தாலுனது
மெய்யுணர்ந் தணையு மடியர்
உள்ளமுறு குறைகளு முலப்பிலா தனபோ
யுடற்குறை யனைத்து நீங்க
ஊமரும் வாய்ப்பேச உழல்குருடர் பார்வையுற
உன்மத்தர் பித்த மகலப்
பிள்ளைமகிழ் நல்வரம் பேருலக மேழினும்
பெருகுற வளித்து மேலைப்
பெரியபெரு மாற்கும் பிராட்டிக்கு மேற்றமருள்
பிள்ளைநா யகப்பி ரமமே
கள்ளமலி கலியுகங் கண்கண்ட தெய்வமே
கந்தவே ளேவ ருகவே
கரியகட லின்னடுப் பெரியசூர் மாய்த்திட்ட
கருணைவே ளேவ ருகவே.
63✓
சென்னிமதி தவழ்வுறுஞ் சிவனருளுங் கலையெலாஞ்
செந்தமி ழகத்தொ டுக்கம்
தீந்தமிழ்ப் பண்பா டெனத்திகழு மவ்வெலாஞ்
சேரவ்வை பாலொ டுக்கம்
தன்னிகர் வருமௌவை சால்புலமை வளமெலாந்
தத்வஞா னத்தொ டுக்கம்
தத்வஞா னத்தெளிவு தழையவொளிர் பொற்பெலாஞ்
சண்முக தயங்கு மொருநின்
மின்னிகர் பெரும்பிரபை வீசியொளிர் மெய்ஞ்ஞான
வேல்வடிவி னுள்ளொ டுக்கம்
வேலின்றி நீயில்லை நீயின்றி வினையரேம்
மேவுகதி வேறில் லைகாண்
கன்னிமதில் சூழ்வரக் காண்பினிய மாவைவளர்
கந்தவே ளேவ ருகவே
கரியகட லின்னடுப் பெரியசூர் மாய்த்திட்ட
கருணைவே ளேவ ருகவே.
64✓
மாயைதான் சடமேனு மாறிலுன் சந்நிதி
மருங்கினது சேட்டிக்குமேல்
மண்கொளா விண்கொளா மற்றதன் சூழ்ச்சிவகை
மாநிலங் கண்டுய்ந்தவா!
ஆயிரத் தெட்டண்ட மளவிலுறு சூரனிவ்
வகிலாண்ட முழுதுமாகி
அசுத்தசுத் தாசுத்த சுத்தமா மாயைதொறு
மங்கங்கு விரவலுக்கி
மாயமுறு மண்ணாகி மருவுமொரு நீராகி
மலையுமணல் காற்றுமாகி
மதிப்பரிய விருளாகி யொளியாகி மாவாகு
மற்றவன் மாயமுற்றுங்
காயுமொரு வேல்வாங்கி மயில்சேவ லாக்கியருள்
கந்தவே ளேவ ருகவே
கரியகட லின்னடுப் பெரியசூர் மாய்த்திட்ட
கருணைவே ளேவ ருகவே.
65✓
மாமேரு நான்கென மருங்குற் றுயர்ந்தோங்கி
மதியிரவி கதிவி லக்கி
மருவுதிசை நான்கினும் மங்கலம் பொலிதரும்
வளர்கோ புரத்து ளொளிரப்
பாமேவு கந்தகிரி கயிலைமலை கதிரைமலை
பரங்குன்ற மாக வோங்கிப்
பண்டிகைக் கோபுரம் பலவேறு பயிறரப்
பாருலகு பொன்னு லகெனத்
தேமேவு கஞ்சத் திருப்பவள் விருப்புறத்
திரவியக் குவைதொ குத்துத்
திருப்பணி விருப்பிற் கதித்தெழும் மெய்யன்பர்
செம்பொனா லயஞ்ச மைக்கக்
காமேவு மாவையிற் கருணைவடி வாகிவளர்
கந்தவே ளேவ ருகவே
கரியகட லின்னடுப் பெரியசூர் மாய்த்திட்ட
கருணைவே ளேவ ருகவே.
66✓
முற்றிவிளை முளரியான் முன்செய்து முதுதந்தை
முராரிக்கு முதுசொமான
முதிர்வனப் பரப்பெலா முருகநீ வில்லேந்தி
முனைவேட்டை யாடுகளமாம்
பற்றினொடு நினைவேண்டு பார்குலவு முயிரெலாம்
பணிமொழித் திருவள்ளியாம்
பனிபடுந் நெடுவரைக் குலமெலா நின்புகழ்ப்
பாங்குடைய படைவீடுகள்
சுற்றிவளை நாற்கடற் பரப்புநீ துணைவரொடு
துள்ளிக் குதித்தலைக்குந்
தூமணற் சிறுகேணி தோன்றநிகழ் வானவெளி
தோகைவை யாளிவீதி
கற்பமுறு மளியமுயிர் நின்கழற் காணிக்கை
கந்தவே ளேவ ருகவே
கரியகட லின்னடுப் பெரியசூர் மாய்த்திட்ட
கருணைவே ளேவ ருகவே.