முருகன் App
மாவைப் பிள்ளைத்தமிழ்
மு. கந்தையா
தாலப்பருவம்4 / 11
மாவைப் பிள்ளைத்தமிழ் · மு. கந்தையா

தாலப்பருவம்

23✓
வடபூ தரத்து வெள்ளருவி
மாமே ருவின்பா லிழிவதென
மாவைப் பொன்மா மண்டபத்து
வனப்பார் முத்து வடந்தொடுத்துக்
கடவுட் சோதி கலந்தொளிரக்
கவினார் நவமா மணிகுயிற்றிக்
கையாற் றீண்டான் கருவியெடான்
கமலன் கருத்தால் வகுத்தமைத்துப்
படமார் நீலம் விதானித்த
பைம்பொற் றொட்டில் பக்குவிடப்
பாத மலர்கள் சிவப்பித்துப்
பதைக்குந் தாயர் பரிவுள்ளந்
தடவுங் குழவிக் கோலமருள்
தலைவா தாலோ தாலேலோ
தமிழார் மாவைத் தலம்புரிந்த
தவமே தாலோ தாலேலோ.
24✓
சால விரிபூம் பாளைகொடு
தண்ணார் கமுகு கவரியிடத்
தழைத்துச் செழித்த தனித்தெங்கு
தலையா லிளநீர்க் குலையேந்தி
ஞாலம் புரந்து வானுலவும்
நலமார் தேவர் குலமகிழ
நன்றிக் கடப்பா டொருவாமே
நாளும் மேற்சென் றுபசரிப்பப்
பாலக் குருகி னிறக்கேய்ப்பப்
பசுவெண் குருத்தாய் விரிந்தலர்ந்து
பத்தி விளங்கப் பணிமாறும்
பண்பா ரால வட்டமொடு
தாலம் விளங்கும் மாவைவளர்
தலைவா தாலோ தாலேலோ
தமிழார் மாவைத் தலம்புரிந்த
தவமே தாலோ தாலேலோ.
25✓
கன்னற் றமிழு மாரியக்கற்
கண்டுங் கனிந்து செறிந்திருகிக்
கதித்த சந்த மெடுத்தெறிந்து
கனவே கத்தோ டுறப்பாய்ந்து
உன்னற் கரிதாங் கலைஞருளத்
தோவா தூறி யுவட்டெடுத்திட்
டொழுகும் பத்தித் திருப்புகழ்சொல்
லுரவோ னண்ண லருணகிரி
துன்னற் கருமா துயர்துடைத்துச்
சுத்த சொரூப சித்துருவாய்ச்
சும்மா விருசொல் லறவென்று
துரியா தீதப் பேறருளுந்
தன்னற் கருணை தனக்குருவாந்
தலைவா தாலோ தாலேலோ
தமிழார் மாவைத் தலம்புரிந்த
தவமே தாலோ தாலேலோ.
26✓
துங்கப் பழைமைத் தமிழ்ப்புலவோர்
தூய புலமை நீராட்டிச்
சோதித் தமைத்த சொல்லணையிற்
றுயிற்றித் தமிழ்ச்சேய் தாலாட்டுஞ்
சங்கத் தொட்டில் தவழ்ந்தேறித்
தகைமாண் கபிலர் பரணரொடு
சாரு மிளநா கன்கீரன்
தகுமிங் கிவர்க்கு நடுவிருந்து
பங்கம் படராக் களவியற்காம்
பல்லோ ருரையுஞ் செவிமடுத்துப்
பட்டுற் றுணர்த்தும் மெய்ப்பாட்டிற்
பண்பா ருரையீ தெனக்காட்டித்
தங்கத் தமிழ்க்குப் புதுமையருள்
தலைவா தாலோ தாலேலோ
தமிழார் மாவைத் தலம்புரிந்த
தவமே தாலோ தாலேலோ.
27✓
வண்டல் மகளி ரட்டவெலாம்
வாழைப் புதலி லெடுத்தடுக்கி
வாய்க்கா லொழுகு நறுநீரில்
வகைமாண் பொம்மை நீராட்டி
மண்டு காத லுறத்துவட்டி
மறைத்து வைதது முலையூட்டி
வளர்மென் மழலை பொதியவிழ்ப்ப
மாசா லங்கள் மிகப்பேசிக்
கண்ட கமுகின் நறும்பாளைக்
கதிராற் றெற்றி வெற்றிலையின்
காண்பின் கொடியிற் றொடுதொட்டில்
கனிவோ டேற்றித் தாலாட்டுந்
தண்டேன் சோலைத் தனிமாவைத்
தலைவா தாலோ தாலேலோ
தமிழார் மாவைத் தலம்புரிந்த
தவமே தாலோ தாலேலோ.
28✓
கோரப் பனியாற் புலர்வனவுங்
கொடுகிப் பதைத்துச் சிறுகாலைக்
கூர்த்த வலகாற் சிறகுளருங்
குருமா நிறத்துச் சிறுகுருகு
தீரக் குளிர்ந்து கண்ணுறங்கா
திரங்கிச் சிலம்புஞ் சிறுபார்ப்பைச்
செந்தா மரைப்பூம் பொதியவிழுஞ்
செவ்வி பார்த்து மீதிருத்திச்
சாரத் தோன்று மிளவெயிலிற்
றகுமா தரவாற் றழீஇயணைத்துச்
சலியாத் தாய்மை நீராட்டித்
தன்சீர் மொழியாற் றாலாட்டுந்
தாரக் குளஞ்சேர் மாவைவளர்
தலைவா தாலோ தாலேலோ
தமிழார் மாவைத் தலம்புரிந்த
தவமே தாலோ தாலேலோ.
29வேறு✓
காவிற் கவினுறு மலரிற் கனியிற்
களிமா மயிலழகிற்
கருமா முகிலிற் கண்ணொளிர் மின்னிற்
கார்பொழி கனமழையில்
வாவிப் பொலிவில் வனமரை மலரில்
வார்வுறு செந்தேனில்
வாழைப் புதலில் வளர்வுறு பயிரில்
வளர்கொடி வெற்றிலையில்
கோவில் திருவல கிடுமவர் கையிற்
கும்பிடு மவர்தலையிற்
கோமய மெழுகிய தரையில் அதுபுரி
கோதையர் முகவொளியில்
மாவுற் றகமகிழ் மாவைத் தலமணி
தாலோ தாலேலோ
மாவைப் பெனநிகழ் மாவைத் தவமணி
தாலோ தாலேலோ.
30வேறு✓
தொட்டி லிழிந்து தவழ்ந்திரு தாண்மலர்
சோர்வுற நோவாமே
சோதி முகத்து வியர்த்துளி சூழ்ந்துள
சுடரொளி மங்காமே
கட்டு படித்தல மீதி னுறைத்திரு
கைத்தளிர் கன்றாமே
கரவுறு மவர்சிலர் கண்ணி லெதிர்ந்தொரு
கண்ணூ றடையாமே
பட்டுடல் புழுதி படிந்து நலங்கிளர்
பவுணொளி மங்காமே
பார்வதி யம்மை பராபரன் பூசனை
பங்க முறுதாமே
மட்டுற வண்டொளிர் மாவையி லருமணி
தாலோ தாலேலோ
மருவுற வடியவர் மனமகிழ் குருமணி
தாலோ தாலேலோ.
31✓
நித்திய பூசனை நெறியிறை தவறினு
நெஞ்சு பொறுக்ககிலார்
நீணில மெய்த விழுந்து க்ஷமித்திட
நேர்ந்திடு மறையவர்தாம்
நித்தமு நீர்முழு கிப்புனல் மாற்றினர்
நீர்ப்பசை யாடையொடும்
நியமமு றத்திரு நீற்றணி புண்டர
நீள்குறி நின்றொளிருஞ்
சத்திய தரிசன சால்புறு சிந்தைகொள்
சங்கற் பம்வழுவார்
தர்ப்பையு மலரு மெடுத்தணி நின்பணி
சார்வுற வந்தனர்காண்
மத்தியு முடிவொடு முதலு நிலாயவ
தாலோ தாலேலோ
மருவுற வடியவர் மனமகிழ் குருமணி
தாலோ தாலேலோ.
வேறு✓
விண்ணிற் றுளிக்கும் புகர்முகிலின்
விரைவுற் றணையும் முழுமதிபோல்
விம்மிப் பொருமி யழுதுகண்ணீர்
விரவி வதனம் மலங்காமல்
எண்ணற் கரிதா மம்முகிலின்
எழுந்து துடிக்கும் மின்னலென
இனிமைக் குதலைச் சாறொழுக்கு
மிதழின் கடையுந் துடிக்காமல்
பண்ணிற் பயிலும் யாழிசைதான்
பகையார் நரம்பிற் பட்டிடுமா
பண்பார் மழலைக் குரல்கம்மிப்
பரிவாம் ஓசை விளைக்காமல்
மண்ணிற் கினிய மாவைநகர்
மாண்பே தாலோ தாலேலோ
வளர்செந் தமிழ்சேர் மாவையுமை
மகனே தாலோ தாலேலோ.
33✓
ஞானத் திரோத மாகவளர்
நாசக் கருமா மலஞ்சிதைந்து
நாடிக் கழற்கீ ழுறுமவரை
நலமார் துரியத் தணையடுத்த
மோனத் தொட்டி லுறவேற்றி
முழுத்த கருணைப் பொழிவான
முடிவில் பரமா னந்தசுக
மூழ்கித் திளைக்கத் தாலாட்டும்
மானக் கருணை மாமுகிலே
மண்ணும் விண்ணும் மருவிவளர்
வகையே றியோனிக் குழவியெலாம்
மகிழ்விற் றிளைத்துத் தாலாட
வானக் கருணைப் பெருஞ்செல்வ
வளனே தாலோ தாலேலோ
வளர்செந் தமிழ்சேர் மாவையுமை
மகனே தாலோ தாலேலோ.