மாவைப் பிள்ளைத்தமிழ்
மு. கந்தையா
சிறுதேர்ப்பருவம்11 / 11
மாவைப் பிள்ளைத்தமிழ் · மு. கந்தையா
சிறுதேர்ப்பருவம்
100✓
ஆற்றுமதி யணிசடைகொ ளரனருள வரமேவி
யாயிரத் தெட்டண் டமும்
ஆனயுக நூற்றெட்டு மாண்டமரர் வெருவுற
அலக்கண் விளைத்தொ ரரிமா
ஏற்றுவல னுயரவரு மிந்த்ரமா ஞாலத்
தெதிர்ந்துவரு சூர பன்மன்
எண்பெருகு தானைக் கருங்கடலி னூடெழுந்
தேறவரு செங்க டலென
ஊற்றுகுரு திப்புனற் சேற்றிடை நிணப்புல
விழுக்கிய வழுக்க லூடே
ஒருகோடி சிரமுருள வுருளுறு மனோமய
வுயர்தேர்ப் பொலிந்த வரசே
தேற்றுமறை காணாத சிவனரு ளிளங்குழவி
சிறுதே ருருட்டி யருளே
திருமேவு மொருமாவை வருமான்ம நாயகா
சிறுதே ருருட்டி யருளே.
101✓
மலையோ விதென்னமதி மலையவசை கெம்பீர
மதகளி றியக்க மேய்ப்ப
மாபெரு தடந்தோணி வார்திரை யுழக்கிவர
வாம்புரவி நிரையொ டொப்ப
அலையோ டலைந்துவரு மணியோட நிரைதாவ
அணைதிரைப் பேரி யார்ப்ப
ஆடியல் வேலேந்தி யமர்புரி பதாதியென
ஆர்வமுறு தூண்டி லங்கோல்
தலைமே லுயர்த்துமகிழ் சார்பரவர் நிறைவுறச்
சாயுமவ ராவி கொள்ளத்
தத்தமிற் குழுமிவரு சமதூத ரொப்பவலை
தாங்கிவரு வலைஞர் சூழச்
சிலையோத மிரணகள நிலையோது மாவையாய்
சிறுதே ருருட்டி யருளே
திருமேவு மொருமாவை வருமான்ம நாயகா
சிறுதே ருருட்டி யருளே.
102✓
முன்கொண்ட பகையன்று முனைகொண்ட சினமன்று
முப்புரமு மொப்ப வேவ
முறுவலொன் றேயமையு மெனினுமுல காசார
முறையினொரு போர்க ருதியோ
மன்கொண்ட பொன்மேரு மலைகொண்ட வில்வாங்கி
மால்கொண்ட கணைதொ டுத்து
வான்மறைப் பரிபூண்ட மாநிலச் சிறுதேர்
மகிழ்ந்துருட் டும்பி ரானோ
டென்கண்ட பேதநிற் கேன்றமும் மலகார்ய
மெந்தைநின் சொந்த மேகாண்
எமையுற்ற மலமாயை கன்மங் கடந்தியா
மீடேற வீடு மருளுந்
தென்கொண்ட வமரர்பதி திறைகொண்ட மாவைவேள்
சிறுதே ருருட்டி யருளே
திருமேவு மொருமாவை வருமான்ம நாயகா
சிறுதே ருருட்டி யருளே.
103✓
முற்றணிப் பொலிமலர்ப் பொற்றவிசு பொன்பூப்ப
மோக்ஷசாம் ராச்சி யத்து
முழுத்தபே ரானந்த முன்கொலு வமர்ந்தென்ன
மோகனத் தேர்ப்பொ லிந்தே
உற்றெழு சமர்க்களத் துடைதலைக ளத்தனையு
மொருவழித் தொக்க வென்ன
ஓங்குயர் வுற்றதேங் காய்க்குல மலைத்தடம
தொருவிவழி கண்டு டற்றோல்
பற்றுவழி கொப்புளிக் கும்மனற் படுபுழுதி
பங்கயப் பாய லாகப்
பரிவொழுக வருள்வுறும் பல்லாயி ரத்தடியர்
பத்திநீள் நிறைகி டப்பத்
தெற்றிதோ றாடலணி திகழமணி மாவையாய்
சிறுதே ருருட்டி யருளே
திருமேவு மொருமாவை வருமான்ம நாயகா
சிறுதே ருருட்டி யருளே.
104✓
ஐம்பூத சூக்குமமு மற்றொழிய வடுபொழுதி
னண்ணலஞ் சூர னுற்ற
அகன்பூத வையுருவு ளொன்றா யலைத்துவரு
மலைநீர்ப் பெருக்க மங்கண்
வெம்பூத சைன்யம் வெருக்கொள மலைந்தினும்
வேகமோய்ந் திலது கொலென
வெஞ்சின மிகுத்தஞ்ச வஞ்சின முறைத்தோங்கி
வெண்டிரை யுருட்டு மலைவாய்க்
கொம்பூத மகிழ்கொள் குறட்பூத நடமிடக்
கோதிலா வேத மோதிக்
கோலநிரை வேதியர்கள் கும்பிட் டெழுந்துநிமிர்
குமரன்மணி முன்றி லதிரச்
செம்பூதி யொளிகொள்நுரை திரைவீசு செந்தூர
சிறுதே ருருட்டி யருளே
திருமேவு மொருமாவை வருமான்ம நாயகா
சிறுதே ருருட்டி யருளே.
105✓
பூட்டுமலி நீண்முகங் கோட்டியெழு துரிதவெம்
பொற்பரி யிவர்ந்து பொலிகட்
புருவவிணை நுதலெல்லை போதவளை வுற்றெழப்
பூழியொடு பூத லமெழ
வேட்டைவினை விளையாடி விளையாட்டு விறலாடு
விந்தைகள் பலவு மாடி
விண்ணிழி விமானமென மேலசையு முக்கூட்டு
விரைமலர்ச் சப்ர மூர்ந்து
கோட்டைமலி விண்ணேறு கொட்பமலி வேடிக்கை
குதுகலித் தடியர் நடுவுட்
கொள்ளையின் பத்துள்ள மாளுமணி பெருவிழாக்
கோலமருள் குமர அடியேம்
தேட்டமென மருள்மனத் தீட்டுபவ மழிவுறச்
சிறுதே ருருட்டி யருளே
திருமேவு மொருமாவை வருமான்ம நாயகா
சிறுதே ருருட்டி யருளே.
106✓
மோதிமிகு மலைகொல் முழங்குமலை பொருகரையை
மூடுமணல் கொள்க ரையிலா
மூவுலகு மோராங்கு முடுகிமுடு கித்திரள
மொய்த்தசன மதுகொ லின்றிங்
கேதிலகு மிம்மூன்றி னெண்ணிக்கை யற்றதென
வெண்ணரெண் ணங்க வலமே
லெய்தவரு பிரவாக வியல்புறு மகாநதியா
யெழுமலைக் கெதிர லைதிரண்
டோதுகட லொருகாத முள்வாங்க நிறைசனத்
துறுவெள்ள முள்ள ணையுமே
வொருபெருங் கடலாட் டுவந்தருளி யலைவுறூஉ
முனதருட் பெருங்க டல்வாய்த்
தீதகல அடியேந் திளைக்கவருள் செவ்வேள்
சிறுதே ருருட்டி யருளே
திருமேவு மொருமாவை வருமான்ம நாயகா
சிறுதே ருருட்டி யருளே.
107✓
ஒருமா முகம்வள்ளி யுறவாட வொருமுகம்
உறுதேவர் குறைவி னவவோ
ரொருமுக மெழுங்கன்ம முங்கரித் துறுமறிக
ழொருமுகங் களங்க றுவவப்
பெருமா மனத்துளார் மருவார் குலப்பெருமை
பெறுமாவை யந்த ணர்சீர்ப்
பெருவேள்வி யோர்த்துமகி ழொருமாமுகத்தினொடு
பேதித்து வாதித் தருங்
கருமா சறுத்துநமர் பெருவாழ்வு காணவருள்
கருணைப்ர வாக முகமுங்
காண்பினிய வறுமுகக் காட்சிதந் தணிவீதி
கனமணித் தேரி வர்ந்து
திருமா பெரும்பவனி தெருவூர வருமண்ணல்
சிறுதே ருருட்டி யருளே
திருமேவு மொருமாவை வருமான்ம நாயகா
சிறுதே ருருட்டி யருளே.
108✓
கற்பானு கற்பமலி கோடானு கோடியெண்
காலங் கடந்த ஞான
கருவுலங் கச்யபர் கருதாது கருதிமுன்
காணாது கண்ட காட்சி
தற்பரன் சிவனோடு தாதான்மி யத்தியைபு
சாரவரு சத்தி மான்நஞ்
சன்மசா பல்யமுற நன்மாவை மேவிவளர்
சண்முக தயங்கு மொருநின்
பொற்றே ருருள்படும் புழுதிப் புரண்டெமது
புன்மைமலி கன்ம வன்பார்
பூழியுற வாத்துமம் புனிதமுற வெளிவந்த
புண்யமே புண்ய முதலே
சிற்றிடைக் குறவள்ளி சிந்தைமகிழ் சீலமே
சிறுதே ருருட்டி யருளே
திருமேவு மொருமாவை வருமான்ம நாயகா
சிறுதே ருருட்டி யருளே.
109✓
பாறாட வெங்களம் பகரெருவை கொடியிடும்
படர்சிறைப் பந்த லாடப்
பைந்தடி நிணக்குவை பரிந்தீர்க்கு மவதியிற்
பாலவெங் கூளி தம்மில்
மாறாட முதுகூளி மன்றாட மறிகுருதி
மாகடல் மறிந்த கயவாய்
மதமா வுடற்றோணி மாமருப் பாற்சவள்
வலித்தோட்டு மலகை யாடச்
சேறாட வுற்றிடு செருக்கள நெருப்பெழச்
சினக்கனற் பொறிக ளாடச்
செங்குடவர் மணமாலை சூட்டிநிண வணிபூண்டு
சிறுகழுது பெருவி வாகச்
சீராட வென்றொரு செருக்கள முடித்தக்குக
சிறுதே ருருட்டி யருளே
திருமேவு மொருமாவை வருமான்ம நாயகா
சிறுதே ருருட்டி யருளே.
110✓
மழமா மணிக்குமர மற்றெமை யிகந்துநீ
மகிழாவி னன்கு டிக்கண்
மருவுற்ற தென்னைகொல் மாதுளங் கனிமேல்
மனத்தாப மோமெய்ஞ் ஞானப்
பழநீ பழம்வே றுனக்குமிகை யமைகெனப்
பரன்பரையி னோடு கெஞ்சிப்
பரிவொழுக மடிமீது கொஞ்சிமுத் தாடமகிழ்
பழனிக் கமர்ந்த திருவே
இளமா நலந்திகழ வெழின்மாவை வளரண்ணல்
இறுமாந்து னடிய ரடியார்
எழுமையுங் குடிவாழ வேழுலகு முய்யயா
மிம்மையே யம்மை வாய்த்துன்
செழுமா பதத்துநிழல் தேனார்ந் திருக்கவருள்
சிறுதே ருருட்டி யருளே
திருமேவு மொருமாவை வருமான்ம நாயகா
சிறுதே ருருட்டி யருளே.