மாவைப் பிள்ளைத்தமிழ்
மு. கந்தையா
முத்தப்பருவம்6 / 11
மாவைப் பிள்ளைத்தமிழ் · மு. கந்தையா
முத்தப்பருவம்
45✓
கத்துந் தரங்க மெடுத்தெறியக்
கரைசேர் தாழை மடல்வெண்பூக்
கையேற் றணைக்கு மரவணைப்பிற்
கவல்தீர்ந் தமர்ந்து வயிறுளைந்த
நத்தும் நளிர்மா கடற்பரப்பில்
நாட்கா லைக்கே பிரிந்தகன்று
நயனில் குடகாற் றெழுந்தலைக்க
நடுக்கு மாலைப் பொழுதாயும்
மெத்துங் கவற்சி யுறத்தாழ்ந்து
மீளா வன்பர் தமைநினைந்து
விரலாற் கிளைத்து மணலுளரு
மென்மா மடவார் மழைக்கண்ணும்
முத்தங் கொழிக்கும் மாவைதொழும்
முதல்வா முத்தந் தருகவே
மும்மைத் தமிழ்சேர் மாவைவளர்
முருகா முத்தந் தருகவே.
46✓
நாவார் தமிழின் சுவைநயந்து
நக்கீ ரன்நூ னயம்வியந்து
ஞாலம் விளங்க நீமுன்னாள்
நலனா ராய்ந்து வளம்படுத்த
தேவா ரகநூற் பொருளமைதி
செயலிற் படுத்து நலம்வாய்ப்பத்
தெய்வ முனிவன் நாரதன்சொல்
செவியேற் றருளுந் திறம்விரும்பிக்
காவார் வேட்டைத் துறையணைந்து
கன்னி வேட்கைக் கடல்கலங்கக்
காமக் கலமுய்த் தருகுறீஇக்
களவில் வள்ளி நலமருவி
மூவாக் காதல் முத்தமருள்
முதல்வா முத்தந் தருகவே
மும்மைத் தமிழ்சேர் மாவைவளர்
முருகா முத்தந் தருகவே.
47✓
சுற்றுங் கடலார் சுரிவளையின்
சுடர்முத் தென்ப மிகவுண்டு
சொல்லா ரிப்பி யகட்டுவிளை
தூமா முத்தும் பலவுண்டு
மற்றிம் முத்த மானவெலாம்
மாயா சாலப் பொருள்வடிவாய்
மயக்கிக் கழியு மவ்வளவே
வாழ்வாம் வாழ்வு தரவிருக்கும்
பற்றும் பற்றின் மையுங்கடந்த
பரமன் கருணைத் திருவுருவாம்
பண்பார் முத்தீ தெனப்போற்றிப்
பாராட் டெடுத்துப் பாருலகம்
முற்றும் புகழுஞ் சரவணத்து
முத்தே முத்தந் தருகவே
மும்மைத் தமிழ்சேர் மாவைவளர்
முருகா முத்தந் தருகவே.
48✓
கொத்துங் குழலுஞ் சுமந்திளைத்த
கொம்மைக் குவட்டுக் குவிமுலையார்
குளிர்வெண் ணிலவா ரரமியத்துக்
கொழுநர் மருங்கிற் குதலைநலம்
மெத்துங் காதற் களரியினும்
மேவு மணல்வெண் முற்றத்து
மிகுமா தரவின் முதுமகளிர்
விழைவார் பேரப் பிள்ளையர்தம்
எத்தும் இணையில் இளவாய்தம்
முதுவாய் முத்துஞ் செவ்வியினும்
எங்கே இன்ன மொன்றென்னு
மெழிலா ரொலிநே ரொத்திசைக்கும்
முத்தச் செழிப்பின் மிகுமாவை
மூர்த்தி முத்தந் தருகவே
மும்மைத் தமிழ்சேர் மாவைவளர்
முருகா முத்தந் தருகவே.
49✓
சித்தம் முழுதுஞ் சிவம்பெருக்குஞ்
செல்வா நின்னா ரருள்விழைவார்
சீரார் காலை மாலையெலாந்
தெய்வத் திருமுன் னிலைத்தாழ்ந்து
தத்தம் பரிவாற் றமிழ்ப்பாடித்
தமையும் மறந்த சிவயோகச்
சார்பே சார்பாய்ச் சலிப்பின்றித்
தழைத்துப் பொங்கு மாவேகப்
பத்திக் கொத்து மலர்ந்தொளிரப்
பரமா னந்தத் தேன்பிலிற்றிப்
பண்பார் புளகப் பயிர்வளர்க்கும்
பாஷ்பங் கசிந்து பனித்துருள்கண்
முத்தஞ் சொரியும் மாவைநல
முதலே முத்தந் தருகவே
மும்மைத் தமிழ்சேர் மாவைவளர்
முருகா முத்தந் தருகவே.
50✓
தொன்மைத் தமிழ்ச்செங் கருவூலத்
தொல்காப் பியநூல் துருதுருவித்
துப்புத் துலக்கித் தூவறிஞர்
சுவைக்கப் படைத்துத் தாஞ்சுவைக்கும்
புன்னைக் கணேசர் நின்கழற்கீழ்ப்
பொருந்தும் பற்றே ஞானமெனும்
போதம் மலர்ந்து பொற்பூறிப்
பொலிவா ருள்ளத் தொளிசிறந்து
பன்னற் கருநின் படைவீட்டுப்
பழைய விளையாட் டெனுமனைத்தும்
பண்பார் மாவைப் பதிக்கேற்றிப்
படைக்கும் பதிகச் செவ்வியிசை
முன்னர்க் கேட்கும் நன்மாவே
முத்தே முத்தந் தருகவே
மும்மைத் தமிழ்சேர் மாவைவளர்
முருகா முத்தந் தருகவே.
51வேறு✓
தத்துகடல் தவழ்வுறுந் நத்தீனு முத்தினஞ்
சாருமொரு கார்ப்பய தோஷந்
தகுமிப்பி முத்தென்னி லௌச்சிஷ்டம் வயலுறுஞ்
சாலிமுத் தம்மார்த்திகம்
மெத்துகழை முத்தமோ வன்னியம் வேழத்து
மிகுமுத்து மிருக தோஷம்
மேகமுறு முத்தமும் நீரசம தாதலின்
வேண்டிலோ மவைகிடக்க
முத்தியருள் முத்தநின் முத்தமே யாமாறு
மூதறிஞ ரோது நீதி
முருகலர் குழல்வள்ளி தெய்வயா னைச்செய்தி
முரசறைந் தோத நிற்கும்
சுத்தமணி மாவைவளர் தூயமணி நின்னிதழ்த்
துகிரில்விளை முத்த மருளே
தோகைமயில் மீதுறும் வாகைவடி வேலநின்
துகிரில்விளை முத்த மருளே.
52✓
தொல்லுலகி லூனினுக் கூன்மாற் றெனப்புகல்
தொன்மொழி யிருந்த தைய
சொல்லுபுகழ் நின்வயின் முத்துக்கு முத்தமே
தோன்றுமொரு மாற்றா னவா
மல்லுதவு தோளுந்தை மாமுடி மதிப்பிள்ளை
மாடுற்ற காத லால்நீ
மண்புரண் டன்றமுத மாறாத வழுகைக்கு
மலைமகள் பரிந்த ணைந்து
புல்லுமொரு மகிழ்வினிற் புளகமுற மோவாய்
பொருந்தமே லுற்றெ டுத்துப்
புதுமலர் துளித்தெனப் பொலுபொலென் கண்முத்தம்
வாய்முத்த மிட்டு மாற்றச்
சொல்லரிய மகிழ்வுறுஞ் சோதியொரு நின்னிதழ்த்
துகிரில்விளை முத்த மருளே
தோகைமயில் மீதுறும் வாகைவடி வேலநின்
துகிரில்விளை முத்த மருளே.
53✓
பாயவொளி மரகதப் பவளத்தி னணியுறப்
பருத்துப் பசந்து விம்மிப்
பாவையர் கழுத்தினைப் பரிகசித் தெங்குநிகழ்
பைங்கமு குதிர்த்த முத்தந்
தேயமுறு தெங்கிளம் பாளைமுத் தத்தினொடு
சேரத் தொகுத்து வாரிச்
செங்காவி மலர்வுறுஞ் சிறுமுகத் தாமரைச்
செழுமுத்த வியர்தொ குக்கும்
ஆயமுறு சிறுமகளி ராராயந்து வெவ்வே
றமைத்தவட நிரைக ளன்னா
ரணிமுறுவல் நிரையினொடு மாறாட வாடவ
ரசந்துபே ராது நிற்குந்
தூயவொளி மாவையிற் சுடர்ஞான சோதிநின்
துகிரில்விளை முத்த மருளே
தோகைமயில் மீதுறும் வாகைவடி வேலநின்
துகிரில்விளை முத்த மருளே.
54வேறு✓
எழுதரு மறைமொழி யிருநில வடியவ
ரின்புறு மணிமந்த்ரம்
இறையவ னருளினொ டிரைவியி னருளுமு
னியவுறு மிரகஸ்யம்
பழுதறு சரவண பவவெனு மொருநின
பண்புறு நாமசெபம்
பழகிய நியதியி லமுதுறு மொருசுவை
பற்றிய பற்றாலே
எழுமையு நினதடி யலபிற வறிகில
ரேத்திடு மெய்யன்பர்
இகமொடு பரமொரு பெருமையி னிலவுற
வெய்திடு பெருவாழ்வு
முழுமையு முனதரு ளெனவரு மருமணி
முத்தம ளித்தருளே
முருகலர் சரவண மிசைவரு மொருமணி
முத்தம ளித்தருளே.
55✓
பரவரு மறுமுக நிரையுட னருள்பொழி
பத்தொ டிரண்டுவிழி
பலபல படைகளு நிலவிய வழகொளிர்
பன்னிரு திருமொய்ம்பு
கரவறு மனசினி லொளியுற நிலவுக
டம்பணி மணிமார்பு
கனவினு நனவினு நினைவினி லுறநிகழ்
கண்கவர் சுடர்நெடுவேல்
இரவொடு பகலறு மநுபவ நிலையின
ரிருதய குகையூடே
இளநல வெழில்தர வியல்தக ராலய
மெய்திடு பெருவாழ்வே
முரவரி யெனவரு ஹரிதிரு மருகவொர்
முத்தம ளித்தருளே
முருகலர் சரவண மிசைவரு மொருமணி
முத்தம ளித்தருளே.