மண்டூர்ப் பிள்ளைத்தமிழ்
வி. விசுவலிங்கம்
அம்புலிப்பருவம்8 / 11
மண்டூர்ப் பிள்ளைத்தமிழ் · வி. விசுவலிங்கம்
அம்புலிப்பருவம்
61வேறு✓
விண்ணிலீ ரெண்கலையி னோடுநீ மேவலோர்
வெண்பந்து போல்மிளிர்தலால்
வேறுவே றானதா ரகைசூழ லாற்சுனையில்
வெண்கஞ்ச மலர்போறலாற்
கண்ணினீங் காப்பிரபை காட்டலா லிரசதக்
கட்டியே போலொளிர்தலாற்
கங்குலம் போதிலணை யாவிலக் கானதால்
கரமுயர்த் துணையழைத்தான்
மண்ணிலே வந்திவன் மனமகிழ உந்தனது
வடிவினைக் காட்டியுள்ள
மாசகல ஒருவரம் பெற்றுநா டோறுமே
வாழஎண் ணாததென்னே
அண்ணலா மரிமருக னானசர வணனுடன்
அம்புலீ ஆடவாவே
அண்டர்பர வும்புகழ்த் தில்லைமண் டூரனுடன்
அம்புலீ ஆடவாவே.
62✓
காய்கதிர் மறைந்திருள் கவிந்திடப் பொய்கையிற்
கமலங் குழைந்துவாடக்
காவிமுகை மலரவளி பாவிசைக் கக்கருங்
கடல்முழவ மார்ப்பரிக்கப்
பாயிருள் கடிந்துபாற் கதிர்விரித் தொளிபெறப்
பாரிடமெ லாம்புரக்கும்
பண்ணவனெ னப்பெரு மகந்தை கொண்டிவனையோர்
பாலன்என் றெண்ணினாய்கொல்
சேயென விகழ்ந்தது ருடல்கிழித்துச் செய்ய
சேவலும் மயிலுமாகச்
சினவேல் விடுத்தகும ரன்முனிந் தாலுனது
செய்கையென்னா மாகையால்
ஆயனரு திருமருக னான சரவணனுடன்
அம்புலீ ஆடவாவே
அண்டர்பர வும்புகழ்த் தில்லைமண் டூரனுடன்
அம்புலீ ஆடவாவே.
63✓
பானதியெ னத்தண்ணி லாவிரிப் பாயிவன்
பரிதியொரு கோடியொல்கப்
பதுமவத னத்தொளிப ரப்புமிய லானருட்
பார்வையால் நீயுயர்ந்த
வானவெளி யிற்செல்ல மஞ்ஞைமீ தூர்ந்தகில
மண்டலமு மேயுலவுவான்
மானொன்று கொண்டனை இரண்டுமா னுண்டிவன்
வளர்புய மருங்குமேவத்
தேனமுத தாரைநீ சிந்தஉல கில்மடச்
சேயிழையர் நைவரிவனால்
தேவமட மாதர்நிறை யழிவரீ தெல்லாந்
தெரிந்துநீ யங்குறாது
ஆனைமுக னுக்கிளைஞ னானவறு முகனுடன்
அம்புலீ ஆடவாவே .
அண்டர்பர வும்புகழ்த் தில்லைமண் டூரனுடன்
அம்புலீ ஆடவாவே.
64✓
கரிமுகப் பிள்ளைகயி லாசமீ துறைதரக்
கர்வமுற்றே யவன்றன்
கரமோத கம்புழைக் கைமடற் காதுமா
காத்திரங் கண்டிகழ்ந்தாய்
எரியென முனிந்தவ னிடுங்கொடிய சாபமு
மேற்றுமண் ணவர்கண்ணுறா
திழிஞரி லுலைந்துவிண் ணவர்தொழுது செய்தமுறை
யீட்டிற் கிரங்கியருள
விரிகலை வளர்க்குநா லாந்திவச மேயிதுனை
மேயதனை யுணர்கிலாயோ
வேதப் பெரும்பொருள்வி னாயகற் கிளைஞனிவ்
வேலனென் றறிகிலாயோ
அரிதனக் கனமருக னான சரவணனுடன்
அம்புலீ ஆடவாவே
அண்டர் பரவும்புகழ்த் தில்லைமண் ரேனுடன்
அம்புலீ ஆடவாவே.
65✓
விடநாக முண்டுமிழ்ந் தெச்சிற் படுத்தநின்
மேனிமா சுற்றதென்றோ
மின்னுமணி கிம்புரி மருப்புத லோனுனை
வெகுண்டமொழி யால்மெலிந்தோ
தடமா முடித்தக்க னிட்சா பத்தினாற்
றளர்வுற்ற பெற்றிகொண்டோ
தண்ணிலவு பகலவனி டத்துநீ பெற்றதித்
தரணிகண் டறியுமென்றோ
மடமாதர் தந்தலைவ ரைப்பிரிய அவர்மனம்
வாட்டியதி னாற்சினந்து
வைவரென் றெண்ணியோ விண்ணிருந் திங்குநீ
வரமனங் கூசுகின்றாய்
அடனாக வுரிதரித் தோனருளு முருகனுடன்
அம்புலீ ஆடவாவே
அண்டர்பர வும்புகழ்த் தில்லைமண் ரேனுடன்
அம்புலீ ஆடவாவே.
66✓
வெய்யபகு வாயரவு மிழ்ந்தமணி வனமெலாம்
வேய்முத்த மோடொளிர்தர
விளைசாலி முத்தங் களத்தொளிர மாதர்தம்
மேனியணி முத்தமொளிரத்
துய்யவறு வதனமு மலர்ந்தொளிர இருபுறந்
தோகையர்கள் நகையொளிர்தரத்
துங்கவடி வேலொடிவ னுறைதலா லாலயந்
தூநில வெறிக்கவென்றும்
மையிருள கன்றொளிர்செய் தில்லைமண் ரேனொடு
வந்துவிளை யாடுதற்குன்
மனநாணு தென்றுமதி யாதிவனை மருவிலுன்
மான்கறையு மழியுமன்றோ
ஐயமிலை யுய்குவையெ மறுவதன குழவியுடன்
அம்புலீ ஆடவாவே
அயலாரு மரமுநல் லாரங் கமழ்ந்திடும்
அம்புலீ ஆடவாவே.
67✓
வன்பகைஞ ருக்குடைந் தோர்புவியி லவர்செயும்
வஞ்சனைக் கஞ்சியவரின்
வலியரை யணைந்திடிறீ றரியலர் கலங்கிமன
மடிவுறல் வழக்கிதன்றோ
நின்பகையு மழியமகிழ் வெய்திவிண் மீதுநீ
நிலவுவா யிங்குவந்தால்
நெடியவிட வரவினைப் பொடிபட வடர்க்கவொரு
நீலமயி லுண்டிவண்கை
மின்பயிலு மயில்ஞான சக்திமுன்னே மாயை
விறலழியு முனைமறைக்கும்
மேகப் படாமகல விரிகதிர் பரப்புமிவ்
வேலாத லால்விரைந்து
அன்பரக மகலாத அறுவதன குழவியுடன்
அம்புலீ ஆடவாவே
அரமகளிர் பாடுநீ ராகுமண் ரேனுடன்
அம்புலீ ஆடவாவே.
68✓
கள்ளவிழு மல்லிகை விரிந்துபதி எங்குநற்
கந்தம் பரந்துவீசக்
களிகொண்டு வண்டின மிசைக்குமின் கீதநெற்
கழனியிற் பகடுபூட்டி
மள்ளரே ரோட்டுகீ தம்மடப் பாவையர்த
மகவுதா லாட்டுகீதம்
வளர்பைந் தருக்களில் மரீஇகார்ங் குயிலெலாம்
வாய்விட் டரற்றுகீதம்
உள்ளநிறை வுற்றடிய ரோது பதிகந்தினம்
ஓவற நயந்துமகிழ்வாய்
உயர்விண் டலத்துருமு ரற்ற நாளும்மெலிந்
துள்ளங் கலங்கலாமோ
அள்ளலுறு பொய்கைவளர் அறுவதன குழவியுடன்
அம்புலீ ஆடவாவே
அரமகளிர் பாடுநீ ராகுமண் ரேனுடன்
அம்புலீ ஆடவாவே.
69✓
பங்கயன் மாலிந்தி ரன்றினம் போற்றுமிப்
பாலனுயர் திருமாமலர்ப்
பாதங்க ளேதஞ்ச மென்றுபல் லுயிரும்
பராவிநல் லருள்கிடைத்துத்
தங்கறை துடைப்பர்நீ யும்விண்ணி ழிந்திவன்
சரணடையி லுனதுகறையுந்
தங்குமோ மெய்தளர்ந் தெங்கெங் கலைந்தனை
தக்கனிடு சாபமெய்தப்
பொங்கரவ ணிந்தபர னன்றோ உனக்கருள்
புரிந்துசெஞ் சடைபரித்துப்
பொன்றுகலை காத்ததுவ ளர்ந்துதண் ணொளியினைப்
பொழியவர மீந்தததனால்
அங்கயல் குதிக்குநதி சூழுமண் ரேனுடன்
அம்புலீ ஆடவாவே
அருளமு தளித்திடும் அறுவதன குழவியுடன்
அம்புலீ ஆடவாவே.
70✓
பண்டுநாள் கொண்டஉற வன்றோ சிறக்குமிப்
பன்னிரு கரக்குமரனைப்
பங்கய நிறைந்தசர வணதடமிசைச் சிறிய
பைங்குழவி யாய்வரமுனஞ்
சண்டனை முனிந்தபர னாரழற் பொறியாய்நு
தற்கண் டரித்துநின்னைச்
சஞ்சல மிகுத்துநிறை கலையழிவுறக் கொடிய
தக்கன் வெகுண்டவுரையால்
மண்டுசெஞ் சடைபரித் தாரிந்த வகையினால்
வையத்தில் நீயிழிந்து
வந்துவிளை யாடவுற வுளதுன துளத்திலிதை
வைத்துத் தயங்கிடாது
அண்டர்நா ளும்பரவு தில்லைமண் ரேனுடன்
அம்புலீ ஆடவாவே
அருளமு தளித்திடும் அறுவதன குழவியுடன்
அம்புலீ ஆடவாவே.