மண்டூர்ப் பிள்ளைத்தமிழ்
வி. விசுவலிங்கம்
சிற்றிற்பருவம்10 / 11
மண்டூர்ப் பிள்ளைத்தமிழ் · வி. விசுவலிங்கம்
சிற்றிற்பருவம்
81வேறு✓
கத்தும் புணரி கதித்ததிரைக்
கையா வளைத்துக் கரையெற்றிக்
கனக மலையிற் குயிற்றியொளி
காலும் மணலைக் கைநோவ
முத்தந் தெரித்துக் கொழித்துவரி
முழக்கில் வெரீஇ முறையேநாம்
முடித்த அருமை யோராயோ
முகமுஞ் சற்றே பாராயோ
பித்தன் குழவி யென்றுலகம்
பேசும் மொழிமேற் கொண்டாயோ
பிறவி சிதைக்கும் பெருங்கருணைப்
பேறே பெருமை யீதாமோ
சித்தந் தெளிய அருள்மண்டூர்ச்
செல்வா சிற்றில் சிதையேலே
சிவசண் முகனே கவுரிதிருச்
சிறுவா சிற்றில் சிதையேலே.
82✓
காக்குங் கருணைக் கடலென்றே
கருத்தி லிருத்திக் கடைத்தேறக்
கடையேம் விழைந்துன் கழலிணையே
கதியென் றரற்றக் கழுமல்துடைத்
தாக்கங் கருதி ஆளாயேல்
ஆரைச் சதமென் றணுகியெம
தரிய குறைகள் சொல்லிமனம்
ஆறி மகிழ்வோ மடைவாக
வீக்கும் பரிய வேலிபயிர்
விளைவை யோரா தழிவுசெயின்
வேறு வழியு முண்டாமோ
விமலா ஈது முறையாமோ
தேக்கும் புகழ்சால் மண்டூர்வாழ்
செல்வா சிற்றில் சிதையேலே
சிவசண் முகனே கவுரிதிருச்
சிறுவா சிற்றில் சிதையேலே.
83✓
கொக்குத் தடிந்தாய் பகிரண்ட
கூட மழித்தாய் கூடல்நகர்
குறுகிச் சமயப் போரிலமண்
கூட்ட மொழித்தாய் குன்றமொடு
கக்கக் குருதி சூரனுடல்
கனன்று பிளந்தாய் கஞ்சமலர்க்
கடவுள் வெருவக் குட்டியருங்
காவற் சிறையி லிட்டாய்நின்
ஒக்கப் புவன முற்றுமெவ
ருள்ளா ருந்தன் திறனெல்லாம்
ஒழியா தோநா மமைத்திரை
உவரி மண்சிற் றிலையழிக்கிற்
திக்குப் புகழ்சால் மண்டூர்வாழ்
செல்வா சிற்றில் சிதையேலே
சிவசண் முகனே கவுரிதிருச்
சிறுவா சிற்றில் சிதையேலே.
84✓
கொந்தார் கடப்பந் தாரணியுங்
குமரா உந்தன் கோயில்வலங்
கொள்ளா ரனந்தங் குரைகழலிற்
கொய்மா மலர்க ளிட்டுவரம்
தந்தா ளைய வென்றுசிரந்
தாழ்ந்தா ரின்னு மனந்தநிதம்
தங்கா நிதியில் மயங்கிமனஞ்
சாம்போ துணருந் தன்மையினர்
அந்தோ அனந்த மனந்தமிவர்
அகத்தின் திமிரஞ் சிதையாதுன்
அடியேஞ் சிற்றில் சிதைப்பதுனக்
கழகோ அறமோ அருளாமோ
சிந்தா வளஞ்சால் மண்டூர்வாழ்
செல்வா சிற்றில் சிதையேலே
சிவசண் முகனே கவுரிதிருச்
சிறுவா சிற்றில் சிதையேலே.
85✓
பூவிற் பொலியும் புதுநறவப்
பொற்றா மரைநேர் பதமலரிற்
புழுதி படித லழகோநற்
புனலு மாட்டி யணியூட்டிச்
சேவித் துயரு நெடுமாடத்
தெருவி லிட்ட சிற்றிடையார்
செயலு மறியா யோஅவரின்
சினமுங் குறியா யோமணலைப்
பாவிப் பலகா லுறுத்திடுமிப்
பாவி யேங்கட் குருகாயோ
பகலைப் புரையும் பானிலவிற்
பக்தர் சூழப் பவனிவரும்
தேவிற் சிறக்கும் மண்டூர்வாழ்
செல்வா சிற்றில் சிதையேலே
சிவசண் முகனே கவுரிதிருச்
சிறுவா சிற்றில் சிதையேலே.
86✓
நாயே முந்தன் தொழும்பிலொரு
நாளுங் குறையோ மறியோமுன்
நளினப் பதமே தஞ்சமென
நாடு மடியார் இன்னலுறல்
பேயே முணரா திழைத்தபெரும்
பிழைகள் பொறுத்துப் பேர்பரவை
பிரியா தமைத்த சிற்றிலைநீ
பேணா தழிக்கிற் பேறாமோ
தாயே யன்றோ மக்கள்பிழை
சகித்தூ ணூட்டித் தாலாட்டிச்
சலியா அன்போ டணைப்பதருள்
தழைக்க ஈச னீந்ததிருச்
சேயே தில்லை மண்டூர்வாழ்
செல்வா சிற்றில் சிதையேலே
சிவசண் முகனே கவுரிதிருச்
சிறுவா சிற்றில் சிதையேலே.
87✓
பிறவிக் கடலி லாழ்ந்துதுயர்ப்
பெருமா ருதத்தி லுலைந்துமலப்
பெருக்கில் மோதி நைந்துநெறி
பிறழ்ந்து நீந்தி அறியாமைச்
சுறவுக் கஞ்ச உன்னருளாந்
தூய திரையிக் கரையேற்றத்
தோற்றும் உடலாஞ் சிற்றிலைநீ
துணையாய் நின்று காவாயேல்
உறுமெப் பழியு முனக்கன்றி
உலகி லார்க்கு முண்டாமோ
உரைப்பா ருரைக்கும் பொருளெல்லாம்
ஓவா துணர்ந்து உயர்ந்தவறத்
திறமிக் குயரும் மண்டூர்வாழ்
செல்வா சிற்றில் சிதையேலே
சிவசண் முகனே கவுரிதிருச்
சிறுவா சிற்றில் சிதையேலே.
88✓
மேனாள் ஸ்ரீராமன் பாதம்
மேவச் சிலையோர் பெண்ணாகி
வெகுண்டு முனிவ னுரைத்தமொழி
விலக விலையோ வினைதீர்மெய்ஞ்
ஞானா திபனும் பரவைமனை
நயந்து பாதஞ் சிவப்புற
நலியு மடியார் குறைதீர
நடந்த திலையோ உனதருளுக்
கானா மணலா லடியோமிங்
கமைத்த சிற்றி லழியாதெம்
அயலே நின்று காப்பதுநல்
அறமேயன்றோ அமரர்புகழ்ச்
சேனா பதியே மண்டூர்வாழ்
செல்வா சிற்றில் சிதையேலே
சிவசண் முகனே கவுரிதிருச்
சிறுவா சிற்றில் சிதையேலே.
89✓
கல்லா மனிதர் அறியாமைக்
கசடைச் சிதையாயோ பலநூல்
கற்றுந் தெளியார் அஞ்ஞானக்
கல்லைச் சிதையா யோஅடியார்
பொல்லா வினைகள் சிதையாயோ
புன்மை சிதையா யோபொருளைப்
பொன்னுந் துணையும் போற்றியறம்
போற்றா ரிதயஞ் சிதையாயோ
பல்லா ரிகழ முன்செய்த
பாவஞ் சிதையா யோநின்னைப்
பற்றிப் பரவா திருக்குமனப்
பான்மை சிதையா யோபடரும்
அல்லார் பொழில்சூழ் மண்டூர்வாழ்
அரசே சிற்றில் அழியேலே
அண்டங் கடந்த அருளுருவே
அடியேஞ் சிற்றில் அழியேலே.
90✓
தொடருங் கொடிய கன்மவினை
சூழ வாழ்விற் சுகமென்றுந்
துய்க்கா தலைந்து மெலிந்துனது
தூய பாதஞ் சரணென்று
படரும் அடியார் சன்னிதியில்
பல்லா யிரவர் அவர்துயரப்
பவ்வஞ் சிதையா தருமணலாற்
பலநாள் இழைத்த சிற்றிலையெம்
இடருங் கருதா தழிப்பதுநல்
இயலோ அயரும் பிடிக்குருகி
இலகுந் தெங்கங் குலைதிருகி
இனிதே ஊட்டுங் களிறுலவும்
அடரும் பொழில்சூழ் மண்டூர்வாழ்
அரசே சிற்றில் அழியேலே
அண்டங் கடந்த அருளுருவே
அடியேஞ் சிற்றில் அழியேலே.