முருகன் App
மண்டூர்ப் பிள்ளைத்தமிழ்
வி. விசுவலிங்கம்
செங்கீரைப்பருவம்3 / 11
மண்டூர்ப் பிள்ளைத்தமிழ் · வி. விசுவலிங்கம்

செங்கீரைப்பருவம்

11✓
மந்தர வரைபுரை யுந்திரு மார்பிடை
வண்டார் நின்றாட
மல்லிகை முல்லை மணங்கம ழுஞ்செழு
மந்தாரஞ் சாரத்
சுந்தர நிறைவத னம்படு குஞ்சிசு
ருண்டுசு ருண்டாடத்
தொல்லைவ ரந்தொலை யுங்கடை நாள்வந்
துற்றதெ னச்சூரன்
சிந்தைத ளர்ந்துப யந்துறு மின்னல்தெ
ரிந்துநி தம்வாடத்
திங்களை நிகர்முக மண்டில மெங்குஞ்
சிறுவியர் முத்தாரச்
செந்தமி ழோங்கவ ரந்தரு செல்வா
செங்கோ செங்கீரை
செந்நெல்வ ளம்பெறு மண்டு ரையா
செங்கோ செங்கீரை.
12✓
கலகம் புரிதரு மசுரன் கொடுமையில்
கந்தா நொந்தாமே
கருணைக் கடலென வருமற் புதமுரு
காவா நீயென்றே
உலகந் துயருற வுளநைந் தமரரும்
உன்பா தஞ்சேர
உயருந் தவமுனி வரருஞ் சரணென
ஒன்றாய் நின்றார்பார்
இலகும் படியற நெறியெங் கணுமினி
இன்றே சென்றாளாய்
இவர்தம் துயர்களை வதுநின் கடமைய
தல்லா லிங்கார்சொல்
திலகஞ் சிறுநறு நுதலிற் றிகழநீ
செங்கோ செங்கீரை
சிவணுங் கலைவள பதிசேர் குழகா
செங்கோ செங்கீரை.
13வேறு✓
கருவுற்ற புயல்விண் டலத்திற் றவழ்ந்திடக்
கால்புடைத் தோங்குவரையிற்
கவசந் தரித்தன்ன உய்த்திட மழைத்தாரை
கான்றுபே ரருவியாக
மருவுற்ற தண்டலைக் கூடாக ஓடிமா
மலர்மணமெ லாமளைந்து
வளியினால் வீழ்கனிக ளோடுமகி ழாரமும்
வாரியிரு கரைமருங்கும்
பெருகுற்ற நதியினொடு மாமா வுகுத்தபால்
பெட்பொடுக லக்கவோடிப்
பெருவரைக் காடென்ன வளர்கருப் பங்கழி
பிழிந்து சாறுகலந்து
திரையுற்ற சங்கமத் தாடுமண் டூரனே
செங்கீரை யாடியருளே
திருவருள்பொ ழிந்துலகை யாளுமுரு கையனே
செங்கீரை யாடியருளே.
14✓
அஞ்சுதீ வினையினி லழுந்தியன வரதநல்
லாறுகா ணாதுமுன்னம்
ஐயநின் னருணெறி யறிந்துய்ந்திலேன் மெய்ம்மை
அறிவிழந்தே னளவிலாப்
பஞ்சபா வங்கள்செய் தேமகிழ்ந் தேனிதன்
பயனைஇன் றேஉணர்ந்தேன்
பையரவ டர்க்குமயில் வாகனத் தெந்தையிப்
பவ்வங் கடப்பதற்குத்
தஞ்சமாய் நின்கழ லடைதனன் றெவருமொரு
தரமுனது பதியடைந்தாற்
சஞ்சல மகன்றுசம் பத்துடன் குலவிநற்
சாயுச்ய மடைவரன்றோ
செஞ்சொலா ரும்பண்ணி சைக்குமண் டூரனே
செங்கீரை யாடியருளே
திருவருள் பொழிந்துலகை யாளுமுரு கையனே
செங்கீரை யாடியருளே.
15✓
மலைவளம் பெறுகண்டி மாநகர் பிடிக்கவென
வந்தயோண்ஸ் ரன்தளபதி
வலியபடை வீரரொடு வழியிலுள வுனதுபதி
வந்துபா சறையமைத்துக்
கொலைதனக் கஞ்சாது குறுகுமிரு கங்களைக்
கொன்றுமலை போற்குவித்தூன்
கோயிலையு மதியா தசுத்தப் படுத்தவக்
கோயிலதி காரியுள்ளம்
நிலைதளர்ந் துணையண்டி முறையிடவு மன்றுநடு
நிசியில்குள வித்திரளெலாம்
நீள்வனமி ருந்துவந் தூறுசெய் திடவுமவர்
நெஞ்சங் கலங்கியோடிச்
செலவரந் தந்தாண்ட தில்லைமண் டூரனே
செங்கீரை யாடியருளே
திருவருள் பொழிந்துலகை யாளுமுரு கையனே
செங்கீரை யாடியருளே.
16✓
கல்லென விரங்குபல் லியமுழங் கத்தொண்டர்
கைகுவித் தரகரவெனக்
கட்புன லுகுத்துபூ தூளியை நனைத்திடக்
கான்முளைகை ஏந்திமடவார்
அல்லிருட் போதுதா ளொன்றிலிரு பங்கய
மலர்ந்துதேன் சிந்துவதென
அணிமாட மீதுமரு கிலுமார்ந்து செறிதர
அருக்கனொரு கோடிநின்று
எல்பரப் புவதென்ன கற்பூர தீபங்க
ளேந்திநின் னடியர்பலரும்
எங்கணுநெ ருங்கஞா னத்தெதிர்கொள் மாயைபோல்
இருளகல மானமேறித்
தில்லைமண் டூர்வீதி பவனிவரு முருகனே
செங்கீரை யாடியருளே
திருவருள் பொழிந்துலகை யாளுமுரு கையனே
செங்கீரை யாடியருளே.
17✓
பன்னவரி தானசா கரசங்க மத்துளே
பக்தகோ டிகளிறங்கிப்
பம்பைதா ரகைசங்கு வாச்சியமு ழக்கபண்
பாடவர கரவென்னவே
அன்னநடை மங்கையர்கள் கொங்கைமுகி ழும்மவர்கள்
அம்பனைய திருவிழிகளும்
அருவியிற் படுதல்கண் டுள்ளுடைந் தரவிந்த
மப்பினுள் மூழ்ககயல்கள்
நன்னீரி னுட்புகுந் தோடகரை நின்றுபல
நறுமலர்க் கொம்பர்துவளும்
நடையில இடை கண்டு சைவலங் குழலோடு
நட்பாட நீராடவே
சென்னெறி படைத்துவளர் தில்லைமண் டூரனே
செங்கீரை யாடியருளே
திருவருள் பொழிந்துலகை யாளுமுரு கையனே
செங்கீரை யாடியருளே.
18✓
மங்கையர் தினங்குளித் தாடுதலி னாலவர்
மனங்கொண் டணிந்தசாந்தும்
மணமுறு நரந்தமும் போர்த்துமா மாயையுள்
மயங்குமுல கினையொக்கவும்
கங்குல்நீ ராடவரு வோர்க்குமொளி காட்டுநற்
கதிர்மணி விளக்கமுறவும்
கண்விழித் தாம்பல்நறை சிந்தவும் நீரினிற்
கவினசந் திரபிம்பமும்
மங்குலிடை யிடைபட விசும்புதா ரகைசூழ
மதியினொடு கீழிறங்கி
வந்துபடி தரிசித்த தொக்கவுஞ் சீர்த்திகள்
வயங்குதீர்த் தத்தாவணித்
திங்கள்நிறை மதியில்நீ ராடுமண் டூரனே
செங்கீரை யாடியருளே
திருவருள் பொழிந்துலகை யாளுமுரு கையனே
செங்கீரை யாடியருளே.
19✓
வித்திய பொலிந்துபன் னூறென விளைந்துமக
மேருகிரி யிற்பிறங்க
மேவுசெந் நெற்கதி ரறுத்துக் குயிற்றிநல்
வேளையிற் பகடுபூட்டிப்
பத்தியொடு களநடத் திப்பாடி நாவல்வை
பதடிநீக் கித்தெரித்துப்
பார்மகட் பரவியிற் சேமித்து மள்ளர்தம்
பசிநினை விழந்துகூடி
மத்தள மடித்துகைத் தாளங்கள் கொட்டிமகிழ்
வாகநா டகநடித்தும்
மாசிலிதி காசம் புராணங்க ளாய்ந்துமுயர்
வானமாண் பொருள்தேரவும்
சித்திநித மீந்திடுந் தில்லைமண் டூரனே
செங்கீரை யாடியருளே
திருவருள் பொழிந்துலகை யாளுமுரு கையனே
செங்கீரை யாடியருளே.
20✓
உன்மகிமை யறியாத கசடர்பலர் உலகினிடை
உன்மத்த ராகவாழ்ந்து
உண்டுடுத் துத்தனஞ் சேர்க்கவென் றேபிறப்
புற்றதென் றெண்ணிநிதமும்
மன்னுமற நெறிவிலகு வார்பஞ்ச பாவம்
மனங்கொண்டு செய்வர்பெரிய
மதுமயக் குற்றவ ரெனப்பொருட் குப்பையில்
மயங்கிவா ணாளிலுனது
சன்னிதி யடைந்துநெஞ் சுருகாது மந்திர
சடாட்சரத் தைப்படித்துச்
சான்றோரை நிந்தித்து வாழ்ந்துமுடி வில்தமது
தவறுகளெ லாமுணர்ந்து
சென்னியால் நின்பதம் போற்றஅருள் செய்குகா
செங்கீரை யாடியருளே
திருவருள் பொழிந்துலகை யாளுமுரு கையனே
செங்கீரை யாடியருளே.