முருகன் App
மண்டூர்ப் பிள்ளைத்தமிழ்
வி. விசுவலிங்கம்
சப்பாணிப்பருவம்5 / 11
மண்டூர்ப் பிள்ளைத்தமிழ் · வி. விசுவலிங்கம்

சப்பாணிப்பருவம்

31வேறு✓
உரமருவு வெள்ளைவா ரணமூர் புரந்தரனு
வந்துதவு பிடியும்பலை
ஓவற வணைத்தகன கத்தறிப் புயமசைந்
துலையாது பைங்கடம்புச்
சரமுமார் பூடுநிலை குலையாது நிறைகலைச்
சந்த்ரமுக மண்டலத்தே
தமனியச் சுட்டியசை யாதுமக ரக்குழை
தழைசெவியி லசைவுறாது
சிரமசைவு றாதுவியர் முத்துமுதி ராதுநின்
செவ்வாய் சிரிப்பறாது
திகழ்கங்க ணங்களிலி ழைத்தநித் திலநிலஞ்
சிந்தாது சிகியேறியந்
தரமருவு பண்ணவர்க் கருள்செங் கரத்தினாற்
சப்பாணி கொட்டியருளே
தங்குபுகழ் மண்டூர் அமர்ந்தசர வணபவா
சப்பாணி கொட்டியருளே.
32✓
தித்தித்த சாறுள்ள மட்டுஞ் சுவைத்ததன்
தீஞ்சுவை நுகர்ந்தபின்னர்ச்
செங்கருப் பங்கழியை வீசுமியல் போற்றனஞ்
சேர்த்திடுங் கணிகையர்நலம்
நத்தித் தனக்குவை யழித்துமெய்ஞ் ஞானமும்
நன்னெறியை யோருமியல்பும்
நல்லோ ரிணக்கமு மிழந்துலைந் தருணகிரி
நாதனுனையே தஞ்சமாய்ப்
பத்தித் தனிச்சிந்தை யோடடைய உயர்நிலைப்
பண்பட்ட உள்ளமதிலே
பருமணி யெனத்திருப் புகழ்ஊற் றெடுத்துஇப்
பாரெலாம் பரவியோடச்
சத்தித் தடங்கருணை யீந்துரட் சித்தவா
சப்பாணி கொட்டியருளே
தங்குபுகழ் மண்டூர் அமர்ந்தசர வணபவா
சப்பாணி கொட்டியருளே.
33✓
விண்ணார் கரங்குவித் துனதுபெரு ஞாட்பினில்
விளைந்ததிறல் வெற்றிகண்டு
மேவுகளி கொண்டுடல் குலுங்கக் கரங்களால்
வேலையொலி யெனமுழக்கக்
கண்ணாயி ரத்தனுங் கண்பெற்ற சிதடனிற்
கரையிலா உவகைபூத்துக்
கழலடி பணிந்துநின் கருணைவெள் ளத்திற்
கலந்தமிழ உனதுபாதம்
நண்ணா ருடற்களங் கண்டுகழு காதியுண்
நசையா லிறக்கைதட்ட
நரிபேரி கைத்தொனி யெழுப்பவேல் விட்டநின்
நளினக் கரங்களாலே
தண்ணார் கடம்பார மணியுமுரு கேசனே
சப்பாணி கொட்டியருளே
தங்குபுகழ் மண்டூர் அமர்ந்தசர வணபவா
சப்பாணி கொட்டியருளே.
34✓
கரையிலா நின்றநின் காட்சியைக் கண்டுதான்
கண்பெற்ற பயனடையநற்
கார்த்திகைத் திங்களிற் கார்த்திகைத் திவசங்
கருத்தொக்க விரதமாற்றிப்
புரையிலாப் பூவடி யருச்சித்த முசுகுந்த
பூபதிக் கன்புகூர்ந்து
பொன்னொளிசெய் குக்குடக் கொடிநிழற் றச்சிகிப்
புள்ளேறி லக்கவீரர்
திரையுலாங் கடலொக்க வேசூழ வந்துநின்
தெரிசனங் காட்டியன்னோன்
திக்கெங்கு மிசைபடத் திகழ்தார காகணத்
தேதிங்க ளெனவிளங்கத்
தரையெலா மொருகுடைக் கீழாள வைத்தவா
சப்பாணி கொட்டியருளே
தங்குபுகழ் மண்டூர் அமர்ந்தசர வணபவா
சப்பாணி கொட்டியருளே.
35✓
அண்டகோ ளகையெலா மசையவா னோங்கியெழும்
அட்டமா மலைகளசைய
அரியமா மேருவரை யசையபா தலமசைய
அசைகாசினி விசும்பிற்
கொண்டலோ டிரவிமதி யசையதா ரகையெலாங்
குலையமா திரநடுங்கக்
கொட்குமா நிலவுலகு தாங்குசே டன்வலிமை
குன்றமா வடவைசிதற
மண்டுபூ துளிவிண் படரவே ழூழியும்
வாரியலை வீசவலிய
மஞ்ஞையுரு வாகவடல் செய்யவரு மகரனின்
வலிகெடுத் தவர்குடிக்கோர்
சண்டமா ருதமென்ன வந்தசர வணபவா
சப்பாணி கொட்டியருளே
தங்குபுகழ் மண்டூர் அமர்ந்தசர வணபவா
சப்பாணி கொட்டியருளே.
36✓
சித்தர்முனி வோர்துதிசெய் தேற்றிடக் களிநடந்
தேவரம்பை யர்களாடத்
திருமாதி னோடுதிரு மாலவன் புடையுறீஇத்
திகழ்பாஞ்ச சன்னியத்தைச்
சித்தமகிழ் வெல்லைதெரி விப்பதென வூதுபுத்
தேனிர்துந் துபிமுழக்கச்
செஞ்சடா முடியசைய வந்துசங் கரியுடன்
சிவபிரா னாசிகூறப்
பத்திமையி னாற்கரங் கூப்பிவிழி நீருகப்
பதிகங்கள் பாடியாடிப்
பால்மதி யெழக்கண்ட பறவையென அடியர்நின்
பாலடைந் தார்ப்பரித்தார்
சத்திவடி வேலனே நீயுமுன் செங்கையாற்
சப்பாணி கொட்டியருளே
தங்குபுகழ் மண்டூர் அமர்ந்தசர வணபவா
சப்பாணி கொட்டியருளே.
37✓
திங்கள்தண் ணமுதுநில வெங்கும் விரிக்கதந்
தேவினுக் குளமகிழ்ந்து
செங்குமுத முகைவிண்டு தேனுகுக் கச்சலந்
தீப்பட்ட தெனவெரீஇ
அங்கலம ரும்மடப் பார்ப்பினை யிறக்கையுள்
அணைத்துமன மாற்றியினிய
ஆறுதல ளிக்குநா ரைகள்வாழ் தடஞ்சுனை
அருத்தியொட டைந்துதொண்டர்
கொங்கறா மலர்பறித் துன்பதம் பரவியே
கூர்முறையிடக் கசிந்து
குழவிக் கிரங்குநற் றாயென்ன உள்ளங்
குழைந்தரு ளளித்துநிதமும்
தங்குபுகழ் மண்டூர் அமர்ந்தசர வணபவா
சப்பாணி கொட்டியருளே
சகமாயை யடுஞான சக்திவடி வேலவா
சப்பாணி கொட்டியருளே.
38✓
மணிகிளர் வரைத்தட மிசைப்பொற் பிறங்கலென
மஞ்ஞைமே லூர்ந்துபவனி
வருதல்கண் ணுற்றுவா ரணமியம்பப் பழன
வாய்மடக் குருகுநரல
அணிமரமெ லாங்குயிலி சைக்கநின் னடியர்வாய்
அரகரா வென்றரற்ற
அரியநன் னீர்ப்பொய்கை மலர்விரிக் கப்பல்
அளிக்குலம் றீங்கரிக்கப்
பனிமலர் சொரிந்துபூம் பொழில்நன் மணத்தினைப்
பரிமளித் திடவால்வளை
பம்பமங் கலமொலிக் கத்திருப் பாவிசை
பரந்துவா னோங்கஉந்தன்
தணிவிலா அருளமுத ளிக்குமண் டூரனே
சப்பாணி கொட்டியருளே
சகமாயை யடுஞான சக்திவடி வேலனே
சப்பாணி கொட்டியருளே.
39வேறு✓
விலகரு மருளொளி பரவுறு முகவர
விந்தம லர்ந்தார
விரைபொதி துவரித முருநறை யுகவுரை
விண்டுமொ ழிந்தேயும்
பலமணி யொடுதர ளமுமொளிர் தமனிய
பைங்கட கப்பூணும்
பயிலிய வளையணி களுமொலி யிடவுயர்
பன்னிரு கையாலும்
மலைதரு மடமயி லொடுசெவி லியருள
மட்டில்க ளிப்பாக
மழவிடை யிறைமொழி மழலையில் மகிழ்வுற
வஞ்சம னச்சூரக்
குலமடு மடலரி யெனவரு குமரநீ
கொட்டுக சப்பாணி
குளிர்புனல் நதிவள முறுபதி வதிகுக
கொட்டுக சப்பாணி.
40✓
அரவித ழியொடிள மதியமு மணியுய
ரைந்துமு கத்தானின்
அழகுறு நுதல்விழி யெழுபொறி யுழலினி
லச்சமு றத்தேவர்
திரையெறி கனைகடல் சுவறிட வடவையி
தென்றுப தைத்தாரும்
திகிலுற வெழுபுவ னமுமன லுறுமிழு
தென்னவெ ருண்டோட
வரநதி யிடையுறு வனசமீ தெழிலொடு
வந்துபி றந்தாயே
மனமயர் வொடுநிலை தளர்வுறு சுரருனை
வந்துப ணிந்தாரே
குரவலர் தொடையணி சரவண பவகுக
கொட்டுக சப்பாணி
குருகின வொலிகெழு திருநக ரறுமுக
கொட்டுக சப்பாணி.