முருகன் App
மண்டூர்ப் பிள்ளைத்தமிழ்
வி. விசுவலிங்கம்
வாரானைப்பருவம்7 / 11
மண்டூர்ப் பிள்ளைத்தமிழ் · வி. விசுவலிங்கம்

வாரானைப்பருவம்

51வேறு✓
பரவுஞ் சைவப் பெருநெறியின்
பயனே வருக பழமறையின்
பழமே வருக பரமகுரு
பரனே வருக பலகலைக்கா
கரமே வருக கதியருள்பாற்
கரனே வருக கவுரிதிருக்
கண்ணே வருக கண்ணுதலோன்
கதிரே வருக கருணையொளி
விரவும் மணியே மெய்ஞ்ஞான
விளக்கே வருக களக்கமற
மிளிர்வெண் மதியே வருகவடி
வேலா வருக விரைசாருங்
குரவுந் தழையுந் திருமார்பிற்
குலுங்க வருக நலங்கனிந்து
குலவுந் தில்லை மண்டூர்வாழ்
குமரா வருக வருகவே.
52✓
என்பே ருவகைப் பெருநிதியே
ஈரேழ் புவனக் கொருமுதலே
என்றுங் குறையா வருட்கடலே
இடும்பை தீர்க்கு மின்னமுதே
அன்பே அன்ப ருள்ளுறையும்
அறிவே அறிவிற் றெளிபொருளே
அருகே வருக அடையலர்கோ
ளரியே வருக அந்தமிலா
இன்பே வருக கதிரைநகர்க்
இறையே வருக பிறைசூடும்
ஈச னருளே வருகஎம(து)
இதயம் மகிழ வருகநிதம்
உன்பேர் சொல்லித் துதிபாடி
உள்ளங் களிக்க வருகவே
உயர்விண் படரும் பொழில்சூழ்மண்
டூரா வருக வருகவே.
53✓
காலைக் கதிரின் புன்னகையே
களக்க மில்லா வெண்ணிலவே
கசிந்தெ னிதயக் கல்லுனையே
கரங்கள் நீட்டி யழைத்தாலும்
கோலங் கரந்தா லிங்கெவரைக்
கூவி யழைப்பே னென்பெரிய
குறைகள் சொல்வே னினியமொழி
கொள்வே னந்தோ அதிவிரைவில்
மாலைப் போதும் வந்ததுஎன்
வாழ்வே உன்னைக் காணாது
வாடி நைந்தேன் வருகஇனி
வாரா திருக்க வழக்குண்டோ
சோலைத் தடஞ்சார் மண்டூர்வாழ்
சோதி வருக வருகவே
துலங்கு மறுமா முகஞானச்
சுடரே வருக வருகவே.
54✓
சேணார் மரமே யுயர்தூணாச்
செல்லூர் வானே மேற்றிரையாச்
செறிவேய் முத்த மொளிகாலத்
திகழ்வா னிடியே பேரிகையா
வீணா கான மளிபாட
விலங்கு காணப் புல்வெளியே
மேவா டரங்காச் சிகிதோகை
விரித்து நடன மாடவெழிற்
பூணார் முலையா ராங்கேனற்
புனமா டோங்கும் புரைமீது
புள்ளுங் கடியா திருவிழியும்
பொருந்த நோக்கிப் பொலிவிழந்து
நாணா வயர்கா சார்மண்டூர்
நாதா வருக வருகவே
நம்பு மடியார் வினைபோக்கும்
ஞானா திபனே வருகவே.
55✓
பாடும் புலவ ருள்ளநிலாப்
பாவும் மணியே பரசுதவர்
பக்தி வலையிற் கட்டுண்ணும்
பரனே பெற்றால் நின்பரிசம்
தேடும் பொருளொன் றுண்டாமோ
தேவே தேவர் தெள்ளமுதே
திலகந் தீட்ட வருகசுழல்
சேர்க்க வருக சேவடிமீ
தாடுங் கனக குண்டலநீ
ளரைஞா ணணிய வருககடம்
பாரம் புனைய வருகதமி
ழரசே வருக பிரசமலர்க்
காடும் புனலுஞ் சூழ்மண்டூர்க்
கந்தா வருக வருகவே
கரிமா முகனுக் கிளையதிருக்
கடம்பா வருக வருகவே.
56✓
துண்டப் பிறைதோய் சடிலமகேச்
சுரனார் முனிவிற் கழுதாயோ
துங்கக் கரிமா முகமுடைய
துணைவ னுன்னை வைதானோ
தொண்டைக் கனிவாய் வள்ளிமடத்
தோகை யூடற் குலைந்தாயோ
சுருதி முனிவ னளித்தநறுஞ்
சுவைமாங் கனிக்கா யழுதாயோ
பண்டைத் தரும நெறியொருவிப்
பழிபா வங்கள் தலைப்பெய்து
படிமீ துலவுங் கொடுமக்கட்
பதடிக் கிரங்கி நைந்தாயோ
அண்டர்க் கிறையே மண்டூர்வாழ்
அரசே வருக வருகவே
அறுமா முகனே அயிலேந்தும்
அழகே வருக வருகவே.
57✓
ஊணும் மிசையா துடல்மெலிய
ஒளிர்பொன் மேனி துகள்படிய
உமையாள் தேட உம்பரெலாம்
ஒருங்கு வாட உயர்பயிரப்
பூணும் புனையா தெங்கேதான்
போனாய் வருக புனலாடப்
பூரித் தெழுந்த முலையமுதம்
புசிக்க வருக புலவருணைக்
காணும் படிசெங் கரங்கூப்பிக்
கலுழ்ந்தார் விரைந்து கவலையெலாங்
கடிந்தாட் கொள்ள வருகமலர்க்
கடம்பா வருக படர்ந்துபுகழ்
சேணும் பரவும் மாமண்டூர்ச்
செல்வா வருக வருகவே
சேவுந் தரனா ரீந்தவருட்
செவ்வேள் வருக வருகவே.
58✓
இல்லே மென்னப் பருவரலோ
டிரக்கு மேழை யுளநோவ
இல்லே மென்னச் செல்வர்பல
ரெறிந்த கொடிய சொல்லம்பும்
வல்லே மென்ன மாண்டகலை
வல்லா ரோடு வழக்காடி
வல்லே யென்னக் கசடரது
வாயூ டெழுந்த வன்மொழியும்
செல்லே யென்னப் பொருளியுந்
திறலா ரீயச் சென்றேற்றுச்
செல்லே மவர்வா யென்றுநுலஞ்
சிதைத்த கயவர் தீமொழியும்
எல்லா மேற்ற செவிகுளிர
இன்பம் பொழிய வருகவே
என்றும் புகழ்சால் மண்டூர்வாழ்
ஈசா வருக வருகவே.
59வேறு✓
கலகல வெனுமா டகவணி கவினக்
கதிர்மணி வருக வருகவே
கலியுக வரத னெனவரு புலவ
கவிமழை பொழிய வருகவே
மலையொடு மகரன் பொடிபட வடல்செய்
வலிகெழு மதலை வருகவே
வதனமொ ரறுமா வனசமு மலர
மழலைகள் பொழிய வருகவே
குலவரை யசைய மயிலிவர் குழக
குறுநடை பயில வருகவே
குறுமுனி வரனும் பரவுறு தமிழ்தேர்
குருபர வருக வருகவே
மலர்விரி பொழில்சார் பதிவரு குமர
மகிழ்வொடு வருக வருகவே
மகபதி யருளும் பிடிபுணர் களிறே
மலரடி வருட வருகவே.
60✓
திரைகடல் சுவற நெடுபடை விடுமா
திறலுறு செழிய வருகவே
சிவபர மறிய மறைபொரு ளருள்செய்
செககுரு வருக வருகவே
சரவண பவவோ மெனுமரு மொழியிற்
றளைபடு முருக வருகவே
தழைவிரி குரவ நறுமல ரசையத்
தமிழ்மொழி பகர வருகவே
விரைசெறி துவர்வா யமுதுக வினைதீர்
விமலநீ வருக வருகவே
விரியிதழ் வனச மலரவ னெழுதும்
விதிகெட வருக வருகவே
கரைபொரு மலைசேர் புனல்வள பதியாய்
கதிரர வருக வருகவே
கருமுகி லனைய மலவிரு ளகலக்
கதிரொளி வருக வருகவே.