மண்டூர்ப் பிள்ளைத்தமிழ்
வி. விசுவலிங்கம்
தாலப்பருவம்4 / 11
மண்டூர்ப் பிள்ளைத்தமிழ் · வி. விசுவலிங்கம்
தாலப்பருவம்
21வேறு✓
தினகர னுதயஞ் செய்திடி லாம்பல்
தேசே சோராதோ
திகழுன தழகில் அசுரர்க ளிதயம்
தேயா தேபோமோ
மனமகிழ் வுறவம் பங்கய மெழிலாய்
மாணா பூவாதோ
மகபதி முதலா மும்பர்கள் வதனம்
மலரா தேபோமோ
வனமுறு கூகை கண்ணொளி யிலதால்
வரவே கூசாதோ
மயலுறு மசுர குலமுனை நாடி
வரவே கூசாரோ
தனமட வறுமீன் தந்திட வந்தார்
தாலோ தாலேலோ
தமிழ்வள முறுநற் பதிவரு குமரா
தாலோ தாலேலோ.
22✓
கடகரி முகனுங் கந்துக மாடக்
காணா தேவாடிக்
கதிருறு வதனங் கன்றிட வருதல்
காணாய் காணாயே
படவர வணையின் பாய லொரீஇப்
பாலா மாலோணும்
பசுபதி முதலும் வந்தன ரேற்றப்
பாராய் சீராளா
இடருற அவுணர் இன்ன லிழைத்தார்
ஈசா காவாயே
எனசுர ரோல மிட்டுள நைந்தார்
ஏகா வேகாயே
தடவரை மிசைவண் டமிழ்விதை யிட்டாய்
தாலோ தாலேலோ
தமிழ்வள முறுநற் பதிவரு குமரா
தாலோ தாலேலோ.
23✓
அரைவட மொளிரக் கிண்கிணி யோடு
மாரச் சேறாடி
அருளொளி பரவுஞ் சுந்தர வதன
மாரச் சிறுமூரல்
பொருவுறு மகரக் குழைசெவி யாடப்
போனா லேகாணும்
புவியுறு மடவார் புங்கவ மாதர்
போதார் காரோதி
வரையர மகளிர் கண்ணிணை யுறால்
வாழ்வே வாடாயோ
மரகத நிறமா மங்கைத னிதயம்
வாடா தேபோமோ
சரவண வாவி தங்கிய குமரா
தாலோ தாலேலோ
தமிழ்வள முறுநற் பதிவரு முருகா
தாலோ தாலேலோ.
24வேறு✓
கதிர்முற் றியநெற் கழனிகளிற்
களிகொள் கருங்கைக் காராளர்
கணிசாற் றியநல் லோரையினிற்
கரும்பொற் கூர்ங்குள் கத்திகொடு
அதிரக் கதிர்கால் தடியமுனம்
ஆங்கே யூடல் கொண்டபெடை
அஞ்சி அயல்சார் ஆன்றொண்டை
ஆரத் தழுவச் சங்கீன்ற
கதிர்கால் முத்தம் கண்டுநகை
காட்டுந் தில்லை மண்டூரா
கனக வரைமா மகள்மடியில்
கனியும் மழலை மொழிபாடிச்
சதிர்கொள் நடனம் புரியுமென
தையா தாலோ தாலேலோ
சசிமங் கல்யங் காத்தருள்சுந்
தரனே தாலோ தாலேலோ.
25✓
தெய்வம் முனியிற் செய்ததவம்
தேயு மென்பார் சிறுபிழையும்
செய்யா திருக்கச் செவ்வதனந்
தேசு குன்றிச் சினமெழிலிவ்
வையந் தழைக்க வழியுண்டோ
வானோர் பிழைக்க வகையுண்டோ
மலர்வாய் விண்டு மகிழ்ந்தினிய
மழலை மொழியா யோகழலைத்
தைவந் திடவுந் தணியாயேற்
தமிழ்ப் பண் ணிசைத்துத் தாலாட்டில்
தணியா திருக்க வியதுண்டோ
சமயா தீதப் பழம்பொருளாஞ்
சைவங் கமழும் மண்டூரின்
தலைவா தாலோ தாலேலோ
சசிமங் கல்யங் காத்தருள்சுந்
தரனே தாலோ தாலேலோ.
26✓
நன்மங் கலநா ளசுரமட
நங்கை மின்னார் புனைந்தசெழும்
நவமா மணிக ளிழைத்ததிரு
நாணத் தனையு மற்றுவிழ
நின்மங் கலமா மலரடியே
நெஞ்சி லிருத்துஞ் சுரமடவார்
நீள்பொற் றாலி ஒளிகால
நெடுவேல் தொட்ட படைவீரா
சென்மங் களிலு யர்ந்தபெருந்
தேவர்க் கும்மிச் சோதனைகள்
செய்து போதப் பயனுதவுஞ்
செல்வா உந்தன் செய்கையெலாம்
வன்மந் தானோ மாணெறியோ
மலராய் தாலோ தாலேலோ
வனசங் கமழும் மண்டூரின்
வாழ்வே தாலோ தாலேலோ.
27வேறு✓
கனதன வரைமட வரிவைய ருனதெழில்
காணா சீர்பாடிக்
கயல்நெடு விழிகுழை படவிடை நெளிவொடு
கைமே லேயாட
இனவளை கலகல வெனமணி வடமுட
னேடார் தாராட
இசையொடு பரிபுர வொலியெழு நடமிட
லீசா காணாயே
சினவயில் கரமுறு மறுவுறு மறுமுக
சேலே கஞ்சாருந்
திலகந னுதலொளிர் களிறடு மரியருள்
தேனேர் மொழியார்தம்
தனகள பமழகெ ழுதமகிழ் சரவண
தாலோ தாலேலோ
தவர்களி யொடுவரு திருநக ரறுமுக
தாலோ தாலேலோ.
28வேறு✓
இலகும் பரிதியி னொளியினு மொளிருறு
மேகா வலியாடும்
இபமா முகனொடு மரைஞா ணணியுட
னிறையே போனாயோ
பலரும் மறுகினி லுனதணி கலவிலை
பாரார் கூறாரோ
பதுமப் பதமிசை துகள் பட வெளிசெல
பானேர் நிலவுறும்
திலகம் பெறுமுன தழகிய வதனம்
சேயே வேராதோ
திகழுங் கனதன வறுமட மகளிர்
தேடார் வாடாரோ
சலமுந் தடைகரை வளநகர் வருகுக
தாலோ தாலேலோ
சமரம் புரிதரு படையின ததிபதி
தாலோ தாலேலோ.
29வேறு✓
அண்டர் குனித்தன ரவலக் கடலுக்
கப்பா லானோமென்
றருமெய்ச் சுருதிக ளதிரத் துந்துமி
யார்த்தன வார்த்தனபார்
கொண்டு பணிந்தனர் குழைபொற் கடகங்
கோலம் புனைகென்று
குறுகிக் கின்னரர் மதுரப் பண்ணொடு
குழலொத் திசைபாடத்
தொண்டர் துதித்தனர் உபயக் கழலிற்
றூய மலர்தூவி
சுலவும் மகரத் திமிரங் கெடவரு
சோதீ பாராயே
தண்டலை சுற்றிய மண்டூர் முருகா
தாலோ தாலேலோ
தழையும் புகழுறு பதியற் புதமுதல்
தாலோ தாலேலோ.
30வேறு✓
சிந்தைநி னைந்துருகி லுந்தன லுட்கடலைச்
சேரா தாராரே
செங்கம லப்பதமே தஞ்சமெ னப்பரவித்
தேனார் பாமாரி
வந்துபொ ழிந்தனர்பார் செந்தமிழ் வாணரெலாம்
வானோர் வாழ்வேநீ
வம்பவி மும்மலர்வாய் விண்டுமொ ழிந்தருளா
வாறே தோதேரேன்
நைந்தனையோ பசியால் தந்தைமு னிந்தனரோ
நால்வா யானோடும்
நண்ணிய மறுகினிடை நஞ்சுற நோக்கினர்தாம்
நாதா வாராரோ
சந்தவ ரைக்கயிலை எந்தைதி ருக்குமரா
தாலோ தாலேலோ
சங்குமு ழங்குபதி தங்குதி ருக்குமரா
தாலோ தாலேலோ.