முருகன் App
மண்டூர்ப் பிள்ளைத்தமிழ்
வி. விசுவலிங்கம்
முத்தப்பருவம்6 / 11
மண்டூர்ப் பிள்ளைத்தமிழ் · வி. விசுவலிங்கம்

முத்தப்பருவம்

41வேறு✓
பொங்குந் தரங்கக் கடலில்வலம்
புரிமுத் திப்பி தருமுத்தம்
புழைவேய் முத்தம் பூகத்தே
பொருந்து முத்தம் மீன்முத்தம்
மங்குல் முத்தம் கரியேன
மருப்பு முத்த மராமுத்தம்
மற்றும் பலவா முத்தமெலாம்
முத்த மாமோ ஒளியென்றுந்
தங்கா முத்தந் தேயுமுத்தந்
தரணி தன்னில் மெய்ப்பொருளைச்
சணமுங் கருதா ரணிமுத்தந்
தகுதி மதிக்கப் பெறுமுத்தம்
சங்கம் போற்றும் புலவநின
தருளார் முத்தந் தருகவே
சந்தப் பொழில்சூழ் மண்டூரின்
தலைவ முத்தந் தருகவே.
42✓
அகந்தை கொண்ட அயன்மால்முன்
அழலாய் நின்ற அத்தனது
அடியைத் தேடி நிலங்கீண்ட
அந்தக் குலத்திற் பிறந்ததனால்
இகந்து வெறுத்தேன் ஏனமருப்
பெழிலார் முத்த மீந்தாலும்
இருநீர் வாழும் வளைமீனம்
இப்பி நந்து முத்தமெலாம்
முகந்து கடலைக் குடித்தகுறு
முனிவ னெச்சில் படுமுத்தம்
முருகு மாறா நின்செவ்வாய்
முத்திற் கிவைதா நிகராமோ
சகந்த ழைக்க வந்தசடாட்
சரநீ முத்தந் தருகவே
சந்தப் பொழில்சூழ் மண்டூரின்
தலைவ முத்தந் தருகவே.
43✓
நெஞ்சங் கரந்த கயவர்பெரும்
நிதியை யீந்து நீடுபுகழ்
நிலவக் கருதி லப்பொருளை
நேரு மறிஞர் உண்டேகொல்
நஞ்சங் கரந்த பைங்கணரா
நன்னீர் வாழுங் கொடியகரா
நவையில் முத்த மீந்தாலும்
நான்வேண் டேனுன் செய்யதிருக்
கஞ்சம் புரையும் வாய்முத்தங்
கருணை கனிந்த நறுமுத்தம்
கதிர்கால் முத்தம் பெற்றோர்பற்
கதிகாண் முத்தங் கழலிணையே
தஞ்சம் புகுந்தா ருய்யவரு
சாமி முத்தந் தருகவே
சந்தப் பொழில்சூழ் மண்டூரின்
தலைவ முத்தந் தருகவே.
44✓
செழிய னவையில் மதவாதஞ்
செய்த அமணக் கையருளந்
திகிலே றச்செஞ் சைவநெறி
சிறந்து மிளிரத் தேவாரம்
பொழியுஞ் சமயக் குருவேமெய்ப்
பொருளே பிறவிக் கடல்தாண்டும்
புணையே யன்ப ருள்ளுறையும்
புலமே புலமைக் கொருமுதலே
விழிநீர் முத்தம் பொருணுரலை
விரித்த உரைகள் பலவுள்ளும்
மேன்மை துலங்கத் தெரித்தொன்றை
விளக்கு முத்தம் இன்முத்தம்
வழியும் பவளச் செவ்வாயால்
வந்தோர் முத்தந் தருகவே
மருவார் பொழில்சூழ் மண்டூரின்
வாழ்வே முத்தந் தருகவே.
45✓
வானங் குறையா மழையுதவ
வளங்கொள் பழனங் கழைபுரைய
வளருஞ் சாலி முத்தீன
மக்கள் மகிழ மடியுமிடி
தானம் புரிவா மென்றெவருந்
தரளக் குவையோ டிருந்தாலும்
தாழ்ந்து இரப்போர் இல்லாத
தகைசால் தில்லை மண்டூரா
மோனஞ் சிதையா யோகநெறி
முயன்று காத்த முனிவோரும்
முழுதுங் காண வரியாயுன்
முத்தம் வேண்டா ராரேகொல்
ஞானப் பாலுண் செவ்வாயால்
நாடி முத்தந் தருகவே
ஞானங் கமழுங் குழல்மடவார்
நாதா முத்தந் தருகவே.
46வேறு✓
தழைவி ரிக்குங் கமுகுதிர்க்குந்
தரள முன்றிற் றரையெலாம்
சவிபு னற்பங் கயமிறைக்குந்
தனிம துத்தண் கயமெலாம்
பழமு திர்க்குந் தருவனத்திற்
பருவ ரைத்தண் டரளமேம்
படுவ ளத்த பழனமிக்க
பலன ளிக்க வுழவர்தங்
குழைக டக்கும் விழிமடப்பொற்
கொடிக ளின்பங் குலவிநற்
குதலை மைந்த ரொடுமுயர்த்த
குணநி றைந்து மகிழ்வுறும்
முழுவொ லிக்கும் பதிபுரக்கும்
முருக முத்தந் தருகவே
முறுவ லிக்குந் துவருகுக்கும்
முருக முத்தந் தருகவே.
47✓
புலன டக்கு நெறிபடைத்துப்
பொருகு றும்பு ளொருவியே
புரைத பச்செங் கழல்பொருந்தப்
புரித வத்து முனிவரின்
நிலைகு லைத்து மதிமயக்கி
நிறைய ழிக்கு மதனவேள்
நெடுப டைக்கொர் தனுவளைக்க
நெகிழ்சு ருப்பி லுறைதரும்
விலைக திக்குந் தரளமிக்க
வெயில்ப ரக்கு மெனினும்வெவ்
வினைகெ டுத்து ளொளிசிறக்கும்
விலையில் முத்துக் கிணைகொலோ
மலைப ரித்த வரிதனக்கு
மருக முத்தந் தருகவே
வயல்செ ழிக்கும் பதிபுரக்கும்
வரத முத்தந் தருகவே.
48வேறு✓
குரவரடி போற்றிமெய்ந் நூற்பொருளை முறையினிற்
கொள்ளா தொளித்திருந்து
கூறுமுரை செவிமடுப் பாருறுதி யாயின்னல்
கொண்டலைவ ரெனுமுண்மையைத்
தரணியிடை காட்டவென் றெண்ணியோ முன்னையுத்
தரகோச மங்கைதனிலே
சங்கரிக் கெம்பிரா னுபதேச மருளபூந்
தழைசாரு மளகமீது
முரலுமளி யுருவொடும றைந்துகேட் டரவணியு
முதல்வணிடு சாபமதனால்
முந்நீர் புகுந்துமீ னாயினா யுன்னாடல்
முழுதுமுல குய்யவன்றோ
குரவமல ராரமணி குமரநின் பவளவாய்க்
குளிர்முத்த முண்ணவருளே
கொங்கார் பொழிற்றில்லை மண்டூர நினதுவாய்க்
குளிர்முத்த முண்ணவருளே.
49✓
கழைமுத்து வெந்தீயி னாற்றெறுங் கறைபடுங்
கருமுகி லிடித்துமின்னல்
கான்றமுத்தம் நின்கை வேலுக் குடைந்துயர்
ககனத் தொளித்தமுத்தம்
பழனத்தில் விளைநன்னெல் முத்தங் களத்திடைப்
பகடுகால் பட்டுடைந்த
பரல்முத்த மீன முத்தம்புலால் கமழுநின்
பங்கே ருகச்செய்யவாய்
விளைமுத்த மேமுத்த மாமுத்த ருந்தினம்
விழைமுத்த முமைகளித்து
வேண்டுமுத் தம்விலைம திக்கவரி தானநன்
மேன்மைபெறு முத்தமருளாம்
மழைநித்த லும்பொழியு மாறுதிரு வதனநின்
வாய்முத்த முண்ணவருளே
மருவார் பொழிற்றில்லை மண்டூர நின்செய்ய
வாய்முத்த முண்ணவருளே.
50✓
உம்பர்பா ளும்விண் ணிழிந்துநின் பதசரோ
ருகமலர் பணிந்துசெலவென்
றோங்கிவளர் தெங்கின் மிசைக்கவிக் குலநெருங்
குற்றபைங்காய் பறித்துக்
கம்பமா முகனைவந் தனைசெய்வ போற்கருங்
கன்மீது வீசவாங்கண்
கான்றநீத் தம்வயற் கால்வாய் புகுந்திடக்
கன்னல்நற் சுவைகதிக்கும்
இன்பமா வளமோங்கு தில்லைமண் டூரினிலி
ருந்தருளை யீயுமுருகா
இணையிலா முத்தநின் முத்தமே யன்றியிங்
கெம்முத்த மும்முத்தமோ
வம்பவிழு மலர்கடம் பாரனே நின்செய்ய
வாய்முத்த முண்ணவருளே
வலியபகை யகலவர மருளுமொரு குமரநின்
வாய்முத்த முண்ணவருளே.