முருகன் App
மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ்
திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
காப்புப்பருவம்2 / 11
மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ் · திருவாரூர் வைத்தியநாத தேசிகர்

காப்புப்பருவம்

2கணபதி✓
உள்ளங் களித்தெந்தை வார்சடைக் கானத்
துலாவித் துளைக்கை நீட்டி
யுயர்கற்ப கத்தழை முறித்துக் கவுட்சார
லூதுவண் டோச்சி வேணி
வெள்ளந் திளைத்துப் படிந்தாடி வல்லபையின்
வியன்முலைக் கோடு ழக்கும்
விகடகட தடகும்ப நடனகுஞ் சிதசரண
வேழத்தை யஞ்ச லிப்பாம்
பள்ளம் புகும்புன லெனக்குற மடக்கொடிப்
பைந்தொடிப் பேதை நனியிற்
பாயாத வேங்கையாய் நீழல்செய் தவள்கனிப்
பவளவா யூறல் பருக
கள்ளங் கொளுங்கிழக் கோலமேற் கொண்டுநீ
காட்டுகென வேட்டு நிற்குங்
கந்தனைச் சந்தனச் சோலைசூழ் மயிலைக்
கடம்பனைக் காக்க வென்றே.
3முருகன்✓
பஞ்சுட்டு பதுமமும் பதுமத்து நீலமும்
நீலோற் பலங் கிழித்த
பைந்தோட்டு வள்ளையு மணந்த குஞ்சரியைப்
பசுங்கொடிக் குறமா தினைச்
செஞ்சுட்டு சேவலங் கொடியையொரு நொடியிலெண்
டிசையெலாஞ் சூழு மயிலைச்
செவ்வேலை யணிகொண்ட வேலனைப் பணிவதே
தினம்வேலை யாகி நிற்பாம்
பிஞ்சுட்டு மதியமு நறையூட்டு மத்தமும்
பினையூட்டு கங்கை யாறும்
பெட்பூட்டு பாசறுகு முட்பூட்டு பேழ்வாய்ப்
பெரும்பாந்த ளுட னணிந்த
நஞ்சுட்டு மணிமிடற் றான்மகிழ வுமைமாது
நற்கொங்கை யமு தாட்டநீ
ணகையூட்டு மணிமயிலை வளர்முருக னைப்பரவு
நந்தமிழ்க் கவி தழையவே.
4நெடுமால்✓
வேறு
சீர்கொண்ட புகழ்மயிலைச் செல்வனைக்காங் கையனைச்
சிவஞான தேசிகனார் சிந்தைகுடி கொண்டு
வேர்கொண்ட வேலவனை ஞாலமெலா மீன்ற
வெற்பரசி தந்தகந்த வேளையென்றும் புரக்கப்
போர்கொண்ட மால்யானை வாசவனுக் குதவி
புத்தமுதும் பருக்காக்கிப் பொழிகதிர்மா மணியுந்
தார்கொண்ட கருங்கூந்தற் செய்யதிரு மாதுந்
தனக்கெனக்கொண் டயனையுந்தி தந்தநெடு மாலே.
5சிவபெருமான்✓
வேறு
இகலியடு கதமுறுகி மனமிறுகி யெதிர்குறுகு
மவனைமுடு கியசரண பங்கயத் தோட்டின
ரிளநிலவு பொழிமதியு வரியுடல ரவுநதியும்
மிதழிகொடி யறுகொடணி செஞ்சடைக் காட்டினர்
இமையவரு முனிவரரு மெவரும்வழி வழிமொழியு
மெழுதரிய பழமறையெ னும்புகழ்ப் பாட்டின
ரிளகியிரு விழியருவி சொரியவொரு பணியுழுவை
யினிதுதொழு தகமகிழு மம்பலக் கூத்தினர்
புகல்பிறிது மிலையபய மபையமென வழுதழுது
பொருமவிட மிசைவதுசெய் தும்பரைக் காத்தவர்
புகழுமடி யவரிடர்கண் முழுதுமடு பவரநகர்
புனிதர்மழு வலரமலர் வெண்பொடிப் பூச்சினர்
புளகமெறி தரவிமலை களபவள ரிளமுலைகள்
புணருமனு பவருரக கங்கணக் காப்பினர்
புதியசத தளவனச மிசையவனு மவனையருள்
புயலுமறி வுறவரிய நம்பரைப் போற்றுதும்
அகருவொடு தகரநறை யளவளக வெயினர்குல
வரிவைமுலை யமுதொழுகு மம்புயத் தூர்த்தனை
யவனிமுழு வதுநொடியில் வருகலப மயில்கடவு
மறுமுகனை யுறுதுணையை வண்கதிர்ச் சேப்பனை
யளிகுமிறி யுழுதுமடல் வழியுமது நுகரமுகை
யவிழுமரு வமலிதரு கடம்பலர்ச் சூட்டனை
யறுவர்தன தடமொழுகு மதுரமிகு மமுதமினி
துயிலுமுரு கனையுருகு மன்பருக் காத்தனை
மகரசல நிதிகுறுக வசுரர்குல பதிமறுக
மதுகையயில் சிறிதுபணி கொண்டகைக் கோப்பனை
மதுரையினி லொருபனுவ னெறிமுறையி னுறுபொருளை
மரபினுணர் மதிவலனை யம்பரக காப்பனை
வகுளமிடை கமழமுகு ளமலரமண மிசைகுலவி
வளர்பழநி யரசையுயர் செந்திலிற் சேர்ப்பனை
வருடைகுதி கொளமணிகள் சிதறிவெயில் விடுகுகுமி
மயிலைமலை தழையவரு கந்தனைக் காக்கவே.
6பார்வதி✓
நீடுமா யிரகோடி யண்டமு மண்டத்தி
னிலவுநவ கண்ட வைப்பும்
நேமிப்பொ ருப்பும்வட கோதண்ட சிகரமு
நெட்டுததி யும்போன் றநின்
னாடுநா யகனாட லோய்ந்தபின் மீளவு
மவையெலா மங்கு ரிப்ப
வருள்பொழி கடைக்கண்வைத் தருள்புரியு மன்னைதனை
யாதிபரை யைப்பரவு வாம்
கேடுமீ னமுமடா துவாபட்டு வட்டாது
கிட்டினர்க் கமுத மூறி
கெம்பீர முற்றாறு முகமருவி மணிவெயில்
கிளர்வேலை யைப்பி ணங்கி
யோடுநா வாய்க்குமெட் டாதுபங் கம்படா
தொளிமுத்தி யாம்பெற் றிட
வுயர்மயிலை மலைவந்த வானந்த வாரியை
யுரைக்குநங் கவித ழையவே.
7பிரமன் - வயிரவன் - இந்திரன்✓
வரியளி யினங்குழுமி யேடவிழ்த் திசைபாட
வரிசைபெறு பரிசி லெனவே
வாசப் பொகுட்டுப் பொலன்கட்டி யேந்துமொரு
வனசபீ டத்தி லயனைப்
புரியுரக கங்கண பணாமணிகள் திசையெலாம்
புதுவெயி லெறித்தா லுமெய்
போர்த்தகஞ் சுகமிரு ளெறிக்கும்வயி ரவனைப்
புரந்தரனை யேற்றி நிற்பாம்
இருசிறை விரித்துக் குவித்துப் புடைத்துதர
மெக்கியிறு மாந்து செஞ்சூட்
டெழில்பெற்ற சென்னிசிறி தேகவித் திருளகல
விரவிதனை வரவ ழைக்கும்
ஒருதுவச மீதுயாத் தாடன்மயில் கூவிவரு
மும்பர்சே னாதி பதியை
யோங்குமயி லாசல முகந்தகாங் கேயனை
யுரைக்குநங் கவித ழையவே.
சூரியன்✓
அள்ளிருட் படலங் கிழித்துவிட் டெறியுமோ
ராயிரங் கிரணம் வீசி
யாழிவட் டஞ்சூழ நேமிவட் டங்குலவு
மவனிநெடு வட்ட மெல்லாம்
வள்ளமென் கமலங்கள் பொறியவிழ்த் தளிகுலம்
வாய்மடுப் பப்ப சுந்தேன்
மடற்கடை முறுக்குடைந் தொழுகவுதை யஞ்செயும்
வானிரவி யைத்து திப்பாம்
8✓
உள்ளநெக் குருகியிரு வழியையு மடைத்துமற்
றொருவழியி னைத்தி றந்தே
வோங்கார மீதெழ வெழுப்பியா தாரங்க
ளோராறை யுங்க டந்து
தெள்ளுபுத் தமுதூறு மானந்த வாரிதி
திளைத்திதைய கமல மலரத்
தென்மயில மலைவந்த கந்தவே ளைப்பரவு
செந்தமிழ்க் கவித ழையவே.
9துர்க்கை✓
வேறு
நயகுண விலாசச் செருக்கினால்
நலியுமல ரேவைத் துரக்குமோர்
செயவனிதை தாளைப் பழிச்சியே
தினமு முடிசூடிச் செழித்துமே
அயிலை நெடுமாவைப் பிளக்கவே
யருளிவிடு வாளைத் தருக்கியே
மயிலைமலை வாழக் களிப்பினால்
வருமுருக வேளைப் புரக்கவே.
10சப்த மாதர்கள்✓
நிலனிடந்தொரு கொம்பினிற் சேர்த்தவள்
நிலவணிந்த கருங்குழற் கோற்றொடி
நிலைபெறும்படி யண்டரைக் காப்பவள்
நிமலன்முன்பு பதம்பெயர்த் தார்த்தவள்
இலகுபங்கய விஞ்சைநற் பார்ப்பனி
இனிதுருந் தமுதந்தரற் கேற்றவள்
இகல்பொருங்கணி வெண்கரிக் கோர்கிளி
யினைஞர்தஞ் சரணங்களைப் போற்றுதும்
அலகிலும்பரு மும்பர்பொற் காக்களு
மகிலவண்டமு மெண்டிசைத் தேர்களும்
அரியமுண்டக வம்புயத் தோட்டனு
மரவுவெம்புலி கண்டமெய்க் கூத்தனும்
அலையுமுந்து தடங்கடற் கூட்டமும்
வரமிகுந்த னிடந்தனிற் போற்படை
மகனெடும்பதி கண்டுயக் காட்டிய
மயிலைவந்த கடம்பனைக் காக்கவே.
11குபேரன் - முப்பத்துமூவர் - ஐயனார்✓
வேறு
கதலிக் கனியுஞ் சர்க்கரை யுஞ்செங்
கன்னற் பொழிபாலுங்
கருணையி னருள்செய் திவைபோ லச்சுவை
கனிதந் தினிதாயே
மதுரித் தமுதொழு கும்படி நம்மேல்
வடிதமிழ் பாடுகென
வரமுத வியமயி லைக்கிரி வேளை
மகிழ்ந்து புரந் தருள்வார்
குதலைக் கிளவித் திருமா தஞ்சொற்
கொடிமதி ளகையர் கோன்
கொடியணி தேரும் விமானமும் விடையுங்
கொற்றம் பெறவூரும்
அதிர்பொற் கழல்புனை தேவர்க ணால்வகை
யாம்பதி னொருமூவர்
அகிலமு மகில சராசர முங்காத்
தருள்புரி வையனுமே.