மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ்
திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
தாலப்பருவம்4 / 11
மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ் · திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
தாலப்பருவம்
22✓
அரும்புக் கருணை மாரிசொரிந்
தன்பு பூண்டோ ரனைவருக்கு
மாண வாதிப் பாசங்க
ளகற்றித் தாபத்திரை யந்தணிய
விரும்பு போலு மனங்களையு
மிளக்கி யுளக்கண் கொடுத்தருளி
யீடேற் றுதற்கே யெழுந்தருளு
மெங்கள் செல்வச் சிவஞானி
கரும்பு பொழிந்த செழும்பாலே
கனியில் வடித்த கொழுஞ்சாறே
கண்டு கேட்டுண் டுயிர்த்துற்றுக்
களிக்கு மமுதே யென்றென்று
விரும்பி னுகரும் பேரின்ப
விளைவே தாலோ தாலேலோ
வீறு மயிலை மலையின்மணி
விளக்கே தாலோ தாலேலோ.
23✓
வள்ளன் மௌலி மீதேறி
மலர்ந்த விதழி நறுந்தெரியல்
மாற்றா யிரம்பெற் றொளிதழைத்து
வயங்கும் பசும்பொற் சரக்காக
வள்ளி யணிந்து தும்பை யம்போ
தடுத்த வெள்ளிக் குவையாக
வருகே யசைந்து பணங்கள் விரித்
தாடு மரவந் துடுப்பாகப்
பிள்ளை மதிய மோடுமொரு
பீடார் தோணி யதுவாக
பெரிது மோட்டி வேணியந்தார்
பிணித்துக் களித்துத் திளைத்தாடி
வெள்ளை நதியில் விளையாடும்
வேலா தாலோ தாலேலோ
வீறு மயிலை மலையின்மணி
விளக்கே தாலோ தாலேலோ.
24✓
வழியும் புனல்பெய் யொருகலசம்
வயிறு வாய்த்த குறுமுனிக்கு
வடநூற் கடலு மழுதொழுக
வடித்த மதுரத் தமிழ்க்கடலு
முழுதும் புகட்டி யதுவன்றி
முடவெண் டிரைகள் சுருட்டியெறி
முன்னீர்ப் பரவை யொருமுறையின்
முற்றும் பருக வருளுதவி
யழிவில் பொருளாய்ப் பரஞ்சுடரா
யாதி நடுவந் தமுமன்றி
யகண்டா கார சின்மயமா
யமர்ந்த முக்கட் பெரும்பொருமான்
விழியொன் றினில்வந் தீராறு
விழிகள் படைத்தாய் தாலேலோ
வீறு மயிலை மலையின்மணி
விளக்கே தாலோ தாலேலோ.
25வேறு✓
மந்தா கினிதன் மகவே மகவான்
வானத் தரசாள
வருகே சரியே பணிபூ சுரர்தம்
வாழ்வே வாழ்வுதரு
மெந்தா யகமே யெளியே முயிரே
யிமைய மடக்கொடித
னெழின்முக பங்கய மலரவு தித்த
விளங்கதி ரேகதிர் சூழ்
சிந்தா மணியே யிருகண் மணியே
தேவர்சி காமணியே
தெள்ளா ரமுதே கள்ளார் நீபத்
தெரியல் புனைந்தருளுந்
தந்தா வளமே மயிலைக் கரசே
தாலோ தாலேலோ
சமரவி பாடன குமர சடானன
தாலோ தாலேலோ.
26✓
ஒருசிற் பரனே தமிழ்விற் பனனே
வுலகமெ லாமுதவு
முமையவ ளுயிரே யெமையினி தாள
வுகந்தகிரு பாநிதியே
யருமைத் தனமே யொருமைக் கதியே
யவுணர் குலப்பகையே
யண்டர்க் குறவே தொண்டர்க் கிணையா
யருண்மழை மாரிபெயுங்
குருவித் தகனே யெழிலற் புதனே
குஞ்சரி மஞ்சரியுங்
கொடிய கிராதர் குலக்கொடி யும்புணர்
கோவே யாவினையும்
தருகற் பகமே மயிலைக் கரசே
தாலோ தாலேலோ
சமரவி பாடன குமர சடானன
தாலோ தாலேலோ.
27✓
உத்திப் பன்மணி ராசிகள் பற்பக
லுண்ட செழுங்கதிர்க
ளுமிழ்வது போலத் திசைதிசை தோறு
முதிர்ந்துக மீதுதுயி
னத்துக்கரதல னொருபா லொருபா
னாபிக் கமலத்தோ
னளினத் தவளணி மணியொரு பால்விழ
நாகா திபன்வெருவக்
கொத்திக் கடிதி னெடுத்துத றிக்களி
கொண்டணி தாடுமயிற்
குரகத மேறிப் பஃறணை யருவி
குதித்துக் குவடுதொறுந்
தத்துப் பொருமயி லைக்கிரி வருவாய்
தாலோ தாலேலோ
சமரவி பாடன குமர சடானன
தாலோ தாலேலோ.
28✓
உருவத் தனதட வமர மடந்தைய
ரொளிமணி நிரைவாரி
யுயர்சிக ரந்தவழ் மாலைவெள் ளருவியி
னூடு படிந்தாடச்
செருவித் தொழில்பயில் வனசர மங்கையர்
செங்கனி வாய்வெளிவரச்
சேல்பொரு விழிகள் சிவப்பச் சுரநதி
சென்று குடைந்தாடப்
பருவப் பசுமுட் புறவண் கனிதரு
பலவி னெடுஞ்சினையிற்
பைம்பொற் கரவில தைப்பட ரத்துணர்
பசிய கறிக்கொடிக
டருவிற் படரு மயிலைக் கிரியாய்
தாலோ தாலேலோ
சமரவி பாடன குமர சடானன
தாலோ தாலேலோ.
29✓
தூவுந் துளிமழை பொழிகரு மேகஞ்
சூழ மதக்கலுழி
சொரிகரி யாமென வானின் மடங்கல்
துடர்ந்து களப்பொதுளு
மாவும் பனசமும் வாழையு மீதுயர்
வழையுந் தழைச்சாரல்
வழியிற் குழியின் வந்து பதுங்கி
வதிர்ந்துவிண் ணிடைமேட
மேவும் பொழுதிரு கால்க ணிமிர்த்துகிர்
விட்டழல் விழிசுழல
வெம்புலி வாலை முறுக்கி யடித்தடல்
வெவ்வா யங்காந்து
தாவுங் குவடுயர் மயிலைக் கிரியாய்
தாலோ தாலேலோ
சமரவி பாடன குமர சடானன
தாலோ தாலேலோ.
30வேறு✓
அழுதழுது கண்கள் பிசைந்தே
யோர்போ தோர்போதா
லனைமடியி ருந்து மகிழ்ந்தே
பால்வா யோடேதா
னெழுதரிய திங்கள் முகம்பா
ராநே ராயேபோ
ரிபமுக னணைந்து வழிந்தே
சோர்பா லாராமே
குழலின்சையை வென்று செழும்பா
கோடே மாறாயே
குலவிவடி கொண்ட பசுந்தே
னேபோ லானாதே
மழலைமொழி കൊஞ்சு குழந்தாய்
தாலோ தாலேலோ
மயிலமலை வந்த கடம்பா
தாலோ தாலேலோ.
31✓
அலகில் புகழ்கொண்டு சிறந்தாய்
வேறா யாகாமே
யகிலவுல கெங்கும் நிறைந்தாய்
நாவா லோதாமே
பலகலை தெரிந்து பகர்ந்தாய்
மீதூர் மாலாலே
பழியர் குலமங்கை புணர்ந்தா
யோர்நாண் மாறாமே
கலசமுனி யன்பை யுகந்தாய்
நீர்சூழ் பார்மேலே
கவுணியர் விளங்க மகிழ்ந்தாய்
வாளா மீளாமே
மலரயனை யஞ்ச மலைத்தாய்
தாலோ தாலேலோ
மயிலமலை வந்த கடம்பா
தாலோ தாலேலோ.