மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ்
திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
செங்கீரைப்பருவம்3 / 11
மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ் · திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
செங்கீரைப்பருவம்
12✓
பான்மாரி பெய்துடல் வழிந்தென்ன நீற்றொளி
பழுத்தசெம் மேனி யெம்மான்
பங்கேரு கக்கரங் கூப்பிநின் றேத்தலும்
பரிவுரைத் தன்ன வர்க்கும்
வான்மாரி பொய்ப்பினும் பொய்யாத காவேரி
மாநதி கொணர்ந்து தந்த
மலயமா தவனுக்கு மவனிவட் டத்தடரும்
வன்கலிக் கோடை தணியத்
தான்மாரி பெய்தன்ன நிதிமாரி பெய்யுமிரு
தாமரைச் செங்கை யாளி
தயவாளி சிவஞான தேசிகர்க் கும்பழஞ்
சதுர் மறைப் பொருள்வி ரித்துத்
தேன்மாரி பெய்தென்ன வுரைத்தகுரு தேசிகா
செங்கீரை யாடி யருளே
தென்மயிலை தழையவரு சேனாப தித்தலைவ
செங்கீரை யாடி யருளே.
13✓
வையமீ ரேழுமொரு நொடியில்வல மாகவரு
வாகைபுனை தோகை யாட
வல்லசுரர் வாகுவிட மாடவல மாடுநின்
வாரணத் துவச மாடப்
பையரா நெளியப் பதம்பெயர்க் குங்கரிப்
பருமணிக் கெண்டை யாடப்
பற்றியே றுந்தகர்த் திருகுபுரி கோட்டிற்
பசும்பொனல காட வனசக்
கையில்வே லமராட வரைவடமு மெம்படைக்
கலனுமினி தாட நுதலிற்
கட்டுமொரு பொற்சுட்டி யாடவா டக்கனக
குண்டலங் காதி லாட
செய்யவாய் மழலையமிழ் தூறன்மார் பாடநீ
செங்கீரை யாடி யருளே
தென்மயிலை தழையவரு சேனாப தித்தலைவ
செங்கீரை யாடி யருளே.
14✓
வைக்கத் தகாதென்று மதியாத குலவேடர்
மதகரி மருப்பு வாங்கி
வன்கா னிறுத்திமுக டிலைவேய்ந்து வள்ளிதனை
வைத்தவித ணங்க டோறும்
ஒக்கப் படிந்துவீழ் கிளிகடந் தவள்திரிந்
தோலிடு புனங்க டோறும்
உளமூச லாடவன் னவளுச லாட்டயரு
முயர்மரச் சூழ றோறும்
பக்கத்தில் வருமென்ன காண்பரென வோடிப்
பதுங்கிப் பொதும்பர் தோறும்
பாவையவள் புனல்பருகு பைஞ்சுனை யிடந்தோறும்
பல்காலு மேந டந்து
செக்கச் சிவந்தவிரு சரணார விந்தனே
செங்கீரை யாடி யருளே
தென்மயிலை தழையவரு சேனா பதித்தலைவ
செங்கீரை யாடி யருளே.
15✓
துங்கமால் வரைபுரையு மயிராவ தப்பகடு
துன்னுகா னஞ்செ லாமற்
சுரர்சிறைக் கூடம்பு காமல்விண் டலமெலாந்
தூளிபட் டழிவு றாமற்
கொங்கையா ருந்தருத் தறியுணா தமுதமுங்
கொள்ளைபோ காம லிந்த்ரன்
கும்பிட்டு நில்லாமல் யிந்த்ராணி மங்கலக்
குலரத்ன பணிவி டாமற்
சங்கமோ லிட்டதிர மேலிட்ட வல்லசுரர்
சமரிட்ட வெங்க ளத்துத்
தாருகா சூரனொடு கிரவுஞ்ச கிரியைநொடி
தகர்த்துவரு கென்று பதுமச்
செங்கைவேல் பணிகொண்ட வணிகொண்ட சேவகா
செங்கீரை யாடி யருளே
தென்மயிலை தழையவரு சேனாபதித் தலைவ
செங்கீரை யாடி யருளே.
16✓
மாநாக மெட்டின் பணாமணி மழுங்காமல்
வரைமார்பின் மணிம ழுங்க
வானமணி மாதுர வாசைதொறு மேகட்டு
மத்தமால் யானை யெட்டு
மானாது மும்மதம் பொழியுங் கவுட்குண்
டடைப்பப் புடைத்தெற் றிநீ
டம்புரா சிகளேழும் வற்றிக்கு ழம்புபட
வவுணர்குல மடமா தார்
ஊனாடல் வேற்கண் புதைப்பக் கொடுஞ்சம
ருழந்தெதி ரெழுந்த சூர
னுள்ளமும் புலரவாய் புலரமுக மும்புலர
வுலகமுழு தும்ப ரந்து
சேனாப ராகந் திளைப்பவமர் பொருமுருக
செங்கீரை யாடி யருளே
தென்மயிலை தழையவரு சேனாபதித் தலைவ
செங்கீரை யாடி யருளே.
17வேறு✓
எம்முடை வல்வினை யிருகட லுடனோ
ரெழுகட லுஞ்சுவற
யீறி லிடும்பை யெனுங்குவ டுடனெதி
ரிகல்குவ டுந்தகர
மும்மல வேருட னடல்புரி வெஞ்சூர்
முதலெவ ரும்பொருது
முரிபுரு வக்கடை சிறிது குனித்து
முனிந்தடு சங்க்ராம
நம்மினு மிவனதி கம்மென வளிகூர்
நளினப தத்துணைகள்
நமவென வினிது வணங்கி மறைப்பொருள்
நவில்கென வுபதேசத்
தைம்முக னுக்கரு ளறுமுக குருபர
னாடுக செங்கீரை
யணிதரு மயிலையில் வருமுரு கன்குக
னாடுக செங்கீரை.
18✓
சோதி தருங்கன கத்திரு நாடுஞ்
சுரருஞ் சுரர்பதியுந்
துளவ மணங்கமழ் புயமுழு தானுந்
துளைநா ளப்பதுமப்
போதில் வருஞ்சது ரானன னுந்திகழ்
புரிநூல் முனிவரரும்
பூதல மும்மெழு பாதல மும்படு
புன்கண் ணவைதீரப்
பாதி சிவந்தொரு பாதியு மென்னப்
பச்சென விச்சையுடன்
பவளக் கிரியைத் துவளப் பொருது
பகுந்து கலந்தருளும்
ஆதி பரம்பரை யருளிய சண்முக
னாடுக செங்கீரை
யணிதரு மயிலையில் வருமுரு கன்குக
னாடுக செங்கீரை.
19✓
நறுமலர் குடுமி வகிர்ந்து புனைந்து
நலந்திகழ் வித்தெழு
நானநெய் பூசி மணிச்சிறு சுட்டி
நயந்து தரித்தெழு
மிறுகிய காதலி னுன்னைய ழேலென
வினிதி னணைத்தெழு
மிலகுபொ னரைவட மேம்படை யார
மெடுத்தணி தந்தெழும்
மறுவின் மணிச்சிறு தண்டை சதங்கை
வனைந்து பணிந்தெழு
வண்பது மத்தொரு தொட்டி லசைத்திரு
வருமுலை யமுதருளு
மறுவரு மன்னைய ரனைவரு மகிழ்வர
வாடுக செங்கீரை
யணிதரு மயிலையில் வருமுரு கன்குக
னாடுக செங்கீரை.
20வேறு✓
எங்களுயி ருக்குயி ரெனும்படி சிறந்தா
யின்பா லன்பாக
வெங்குநிறை வுற்றுமெ மருங்கினி லிருந்தா
ளெந்தாய் வன்பால
வெங்கள்பொழி யத்துணர் விரிந்தலர் கடம்பா
வெஞ்சூர் பஞ்சாகி
விண்டமரி னுக்குடைய முன்சம ருடன்றே
வென்கா ணுந்தீர
தங்கள்குறை யற்றதென வும்பர்பணி யுந்தாள்
தந்தா ளுஞ்சீல
தந்திதரு பொற்றொடி யரும்பிய தனந்தோ
யசைந்தா டுந்தோள
திங்கள்முடி வைத்தவர் பயின்றதிரு மைந்தா
செங்கோ செங்கீரை
செம்பொன் மயிலைக்கிரி யுகந்துவளர் கந்தா
செங்கோ செங்கீரை.
21✓
ஐங்கரவ னுக்கிளைய தம்பியெனு நம்பா
வந்தார் சிந்தார
வண்டர்சர ணத்துணைப ணிந்திட வணைந்தே
யன்பார் செந்தூர
பங்கய மலர்த்தவி சயன்செயல் புரிந்தே
பண்டாளுந் தேவ
பந்தமற முத்திநெறி தந்தருள் பொழிந்தே
பண்போ தும்போத
வெங்கரி யுகைத்துவரு மிந்திர னயர்ந்தே
வெங்கோ தம்போத
விண்டல நடுக்கமுற வந்தம ருடன்றே
வென்றே நின்றாடுஞ்
சிங்கமுக னுக்குமொரு சிங்கமென வந்தாய்
செங்கோ செங்கீரை
செம்பொன் மயிலைக்கிரி யுகந்துவளர் கந்தா
செங்கோ செங்கீரை.