முருகன் App
மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ்
திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
சிறுபறைப்பருவம்9 / 11
மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ் · திருவாரூர் வைத்தியநாத தேசிகர்

சிறுபறைப்பருவம்

71✓
உந்தா யிரங்கிரண கோடானு கோடிரவி
யுதையஞ்செய் தாலு மகலா
துற்றவா ணவதிமிர படலமுழு வதுமுடைய
வுடைதிரை திரைத்து மோதிப்
பிந்தாது கரைபொருஞ் சலராசி யுஞ்சிறுகு
பெற்றியிற் பெருகு சனனப்
பிழைவற்ற முற்றவிங் குனதுகரு ணாப்ரவாகம்
பெருக்காய் நிறைப்ப வான
மந்தா கினிக்குடில மகுட கோடீரன்
வணங்கவுணர் வித்த வாய்மை
மவுனமொழி யாலுரைத் தெங்கள்சிவ ஞானிதன்
மணிமௌலி மீது வைத்த
செந்தா மரைக்கைத் தலஞ்சிவப் பூரநீ
சிறுபறை முழக்கி யருளே
செம்பொன்மயி லைக்கிரியு கந்தவடி வேலவா
சிறுபறை முழக்கி யருளே.
72✓
கொங்கவிழ் பசுந்துணர் விரிந்தகற் பகநிழற்
கோமகன் விழைவி னணியுங்
குருமணி யிழைத்தமுடி யோவிந்த்ர நீலக்
குவட்டுவளர் பவள மலையோ
பைங்கயல் குதித்துகளு மீரநெட் டோடையிற்
பாசடையி னிடைம லர்ந்த
பங்கயப் போதோ தடங்கண்வளர் மாயவன்
பாரவரை மார்பின் மணியோ
சங்கேறி தரங்கக் கருங்கடன் முகட்டெழுந்
தருண வருணப் பிரபைகூர்
தருபருதி யோவெனப் பொருதுவிரு திட்டசுரர்
சமரிட்டு முதுகிட் டபோர்
செங்கள முழக்கியதிர் மயிலேறு சேவகா
சிறுபறை முழக்கி யருளே
செம்பொன்மயி லைக்கிரியு கந்தவடி வேலவா
சிறுபறை முழக்கி யருளே.
73✓
மந்தார நந்தா வனத்திற்கு மததாரை
மயிறூக்கி யிட்ட தென்ன
வழியுமால் யானைக்கு மழிவுவந் தெய்தாமன்
மைந்தனுந் துஞ்சு றாமற்
சந்தாடு மணிமார்பி லொருவான காதல்
தரவைத்த திரும டந்தை
தரியலா ரில்லம்பு காமலொரு நான்முகத்
தனையண்மண வாட்டி கொட்டி
நந்தாமல் வானுலகு பாழ்பட்டு விளியாமல்
நலிவுபட் டஞ்சி யிந்த்ரன்
நடுநடுங் காமலுயிர் தந்தருளி யிந்த்ராணி
நயனார விந்தங் கணீர்
சிந்தாமன் மங்கிலியந் தந்துரட் சித்தவா
சிறுபறை முழக்கி யருளே
செம்பொன்மயி லைக்கிரியு கந்தவடி வேலவா
சிறுபறை முழக்கி யருளே.
74✓
பூவலங் குடுமிசூழ் காந்தளங் கண்ணியின்
புடைகுலவி யளியி னங்கள்
பொன்மார்ப மீதணி கடப்பமா லிகையுழுவைப்
பொறவண்டி னுடன்மு ழங்க
நாவலம் பொன்னினிற் புனைந்தகிண் கிணிநாக
நகைமணி குயின்ற தண்டை
ஞாலம்விற் குஞ்சிறு சிலம்புபொற் கழலினொடு
நளினபத யுகமு ழங்க
தூவலம் பனையவரி விழியரா மடந்தைமார்
தூயவாழ்த் தொலிமு ழங்கச்
சுருதிகொடு பரவமரர் துதிமுழங் கப்பசுந்
தோகைமே காரத் துடன்
சேவலங் கொடிமுழங் கச்செங்கை கொண்டுநீ
சிறுபறை முழக்கி யருளே
செம்பொன்மயி லைக்கிரியு கந்தவடி வேலவா
சிறுபறை முழக்கி யருளே.
75✓
பொங்கிவழி யினியபாற் கடல்வயிறு சூற்கொண்டு
பொழிகுடம் புரைசெ ருத்தற்
புரிமருப் பெருமைபாய் தலும்வெருக் கொண்டுபூம்
பொய்கையி னெழுந்து பூகத்
தங்கணுறு செம்பழக் காயுதிர வாலினா
லடித்துமாங் கனிக ளிடறி
யளியும்ப லாப்பழங் கீண்டுதா ழைக்குலை
யலைத்துவரி வாளை பாய
பங்கய முறுக்குடையு மடவிதட விப்புதிய
பானலங் காடு ழக்கப்
பழனச் செழுஞ்சாலி வேலியங் கன்னலொடு
பகலிலை யரம்பை சாய்த்துச்
செங்கயல் குதித்தெழு முழங்குபா லிக்கிறைவ
சிறுபறை முழக்கி யருளே
செம்பொன்மயி லைக்கிரியு கந்தவடி வேலவா
சிறுபறை முழக்கி யருளே.
76✓
மிசைதரு சுவைக்கரும் பாலையா டரவமும்
வேலைபாய் மகர மேய்ப்ப
வேரிபா யோடையின் மேதிபாய் தமரமும்
வெள்ளைவாய் மள்ள மகளீ
ரிசைதர நடுங்குரவை யிடுதுழனி யுங்கழனி
யெதிர்நுறப் புனலோ தையு
மீடுசார் போர்பல வழித்துவை நீக்கிநெல்
லேற்றுபண் டிகளி னொலியு
மசைநுகி நுசிப்பன்மங் கையரையா டவர்கண்மன
மயருமணி முழவி னார்ப்பு
மந்தணர்கள் வேள்வியம லையும்விழாக் கம்பலையு
மண்டகோ ளமும ளாவி
திசைதிசை முழக்கமிகு தொண்டீர நாடாள
சிறுபறை முழக்கி யருளே
செம்பொன்மயி லைக்கிரியு கந்தவடி வேலவா
சிறுபறை முழக்கி யருளே.
77✓
வானையுந் தொடனிவந் தண்டகோ ளகையளவு
வஞ்சக்கிர வுஞ்ச கிரியின்
மாயாத மாயனுன் பெருமுழக் கமுமும்
மதம்பாயு மவுண நீல
வானையின் முழக்கமுந் திசைநாக மெட்டுமெட்
டட்டநா கமுமு மெட்டு
மதிர்முழக் கந்தணிய வெம்முழக் கஞ்செயு
மகாகே சரிமு ழக்குந்
தானையுங் கடல்குளிர நாண்சங்க மார்ப்பச்
சமர்க்கள மெதிர்ந்த வெய்ய
தறுகட் கொடுங்கொலைச் சூர்முழக் கமுநீடு
தானவ குலத்து வந்த
சேனையின் முழக்கமு மடங்கநீ செங்கைகொடு
சிறுபறை முழக்கி யருளே
செம்பொன்மயி லைக்கிரியு கந்தவடி வேலவா
சிறுபறை முழக்கி யருளே.
78✓
கானாறு செவ்விதழ்க் கோடல்கமழ் நெரிசுரி
கருங்குழற் கற்றை சரிய
காரளக பந்தர்மிசை மிசைவண்டு சுழலவாக்
கணனா வதங்க சரிய
ஆனாறு வடிகணை விழிக்கடைகள் புடைபெயர
வுபயதன பார மேரு
வொளியார வடமாட வாடுதொறு மாடுதொறு
மொருமருங் கிலுமி ரங்க
வானூறு படவுயரும் வேய்தந்த நித்திலம்
மணிக்க வணில்வைத் தெறிந்து
வளைகுறற் செந்தினைப் பைம்புனைத் திதணெறி
வள்ளிபடி கள்ளை யோர்ப்புந்
தேனூறு மழலைக்கு வாயுறி நின்றவா
சிறுபறை முழக்கி யருளே
செம்பொன்மயி லைக்கிரியு கந்தவடி வேலவா
சிறுபறை முழக்கி யருளே.
79வேறு✓
தனபதி மகபதி பதியுடன் வருயிர
தருமொரு வித்தகனே
தமிழொடு வடகலை யெவையவை யவைதெரி
சகல சனப்ரியனே
பனகரு முலகரு மமரரும் வழிபடு
பதயுக சிற்சுகனே
பறிதலை யமணரை நடுகழு முனையிடு
பலகவி விற்பனனே
மனகதி யதனினு மிகுகதி பெறுபொறி
மயில்வரு மற்புதனே
வரமடி யவர்பெற வருண்மழை பொழிதரு
வசைமுகத் தினனே
தினகர செயதர திரிபுரை யருள்பவ
சிறுபறை கொட்டுகவே
திசைதிசை யடிதொழ மயிலையி லுறைபவ
சிறுபறை கொட்டுகவே.
80✓
குறமட மகளிரு தனதட முழுகிய
குணமலி பொற்புயனே
குறுகலர் வயிறெரி தவழ்வுற முனையயில்
குரைகடல் விட்டவனே
மறலிதன் விறல்கெட வடியவர் பயம்விட
வருமொரு கொற்றவனே
வரகவி சொலுமவர் தமையிடர் செயுமவர்
மரபை யழிப்பவனே
யுறுதியொ டடியிணை பணிபவர் துயர்முழு
தொழிய வொழிப்பவனே
யுயிரினு மமுதினு மினியவ னெனமன
முருகனர் கற்பகமே
திறலுடை யவுணரை யெதிர்பொரு தடுபவ
சிறுபறை கொட்டுகவே
திசைதிசை யடிதொழ மயிலையி லுறைபவ
சிறுபறை கொட்டுகவே.