மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ்
திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
வாரானைப்பருவம்7 / 11
மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ் · திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
வாரானைப்பருவம்
51✓
பாடற் சுரும்பு குடைந்தாடும்
பதுமத் தவிசி னான்முகனைப்
பண்டைச் சுருதிப் பொருள் வினவிப்
பகரா னாக நரைக்குடுமி
சூடத் துடனே தகரமுடி
துளங்கப் புடைத்துச் சிறைப்புகுத்தித்
தொல்லைத் தேவ ரொருமூவர்
தொழுது வேண்ட விடுத்தருளி
நாடற் கரிய மறைமுதலை
நம்பன் கேட்ப வுரைத்தபடி
ஞாலம் புகுந்து சிறந்தசிவ
ஞானி யுணர முறைவிரித்து
மூடச் சமயம் பிணக்கமற
மொழிந்தாய் வருக வருகவே
முழுது மயிலா சலமுகந்த
முருகா வருக வருகவே.
52✓
சகமுஞ் சகமுன் றிவையுள்ள
சராச ரங்க ளெத்துணையுந்
தழைத்தே யரும்ப வருள்பூத்து
தாவா தேயங் கனிந்தினிதி
னிகழும் பரமு மவையெய்த
வென்று நீங்கா வுறுதுணையா
யிதைய கமலந் தனிலும்விழி
யிருதா மரைப்போ தினுமகலா
தகமும் புறமு மாகிநிறை
யன்னை முகத்தி னொடுதாதை
யைந்து முகமு மலரவுன
தருளுற் றிருந்த வாறுதிரு
முகமு மலர வெமதுகுல
முதலே வருக வருகவே
முழுது மயிலா சலமுகந்த
முருகா வருக வருகவே.
53✓
வேரிப் புதுப்பூ மலர்மாரி
விண்ணோர் சொரிய வல்லசுரர்
விழிநீர் பொழிய வழிமொழிந்து
விரிஞ்சன் முதலோ ரடிவணங்க
வாரித் தலமும் பாதலமும்
வானத் தலமு மனங்குளிர
மந்தா கினிவாழ்ந் தெடுப்பவர
மகளிர் பல்லாண் டினிதிசைப்ப
சோரிச் சுடர்வேல் வெயில்விடச்செஞ்
சூட்டுச் சேவற் கொடியாடத்
தூண்டா விளக்கும் விளக்கடியிற்
றோன்றும் நீலப் பிழம்புமென
மூரிக் கலாப மயிற்கடவு
முதல்வா வருக வருகவே
முழுது மயிலா சலமுகந்த
முருகா வருக வருகவே.
54✓
இளைத்த மருங்கு லுமைமடந்தை
யிருகைத் தலச்செம் பதுமத்து
மெறிநீர்க் கங்கா நதியகத்து
மெழுந்த செழும்பூஞ் சரவணத்தும்
வளைத்த மேருச் சிலையாளி
வயங்கும் பால லோசனத்தும்
மதுரம் பொழியு மருணகிரி
வாக்கி னிடத்து மவனிநிதிற்
றிளைத்த வனுபூ தியினுமறைச்
சிரத்து மழியாச் சிதாநந்தச்
செந்தேன் பரவைக் கடலகத்துஞ்
சிறியேன் சிந்தைச் சிலாதலத்து
முளைத்த பவள விளங்கிளையின்
முளையே வருக வருகவே
முழுது மயிலா சலமுகந்த
முருகா வருக வருகவே.
55✓
சுற்றும் பரவை யுலகமொரு
துகளி னேந்தி யெறிந்தாடுந்
துளப நறுந்தார்ச் சுகரம்போர்
தோலையாப் பொருது பறித்திட்டுக்
கொற்றம் பறவை கொடுவந்து
கொழுத்த மார்பின் வெண்கோடுங்
கோமான் குடிலச் சடிலமுடிக்
குழவி மதியப் பனிக்கோடுந்
தெற்று முரக மிறையெனவாய்
திறப்பச் சேர்த்து மதுவகலத்
திரும்பப் பிரித்து மிவ்வண்ணஞ்
செங்கைப் பதுமத் தலங்கொட்டி
முற்றும் விளையாட் டயருமில
முகையே வருக வருகவே
முழுது மயிலா சலமுகந்த
முருகா வருக வருகவே.
56✓
மறுவி லொருவாண் முகங்கதிர்கள்
வழங்கி ஞாலத் திருள்மாற்ற
வணங்கி யேற்று மார்வலர்க்கு
வரங்க ளொருவாண் முகங்கொடுப்ப
வுறுதி புரியுந் தணர்வேள்வி
யோர்ப்ப வொருவாண் முகமதிபோ
லொழிந்த பொருளே யுறநாடி
யொருவாண் முகமெண் டிசைவிளக்கச்
செறுனர் மடிய முறுக்கியொரு
திகழ்வாண் முகஞ்செங் களம்வேட்பச்
சிறுநுண் மருங்குற் குறவல்குற்
செல்வி யொடுவாண் முகமொன்று
முறுவ லரும்ப விரும்புமறு
முகவா வருக வருகவே
முழுது மயிலா சலமுகந்த
முருகா வருக வருகவே.
57✓
நகைத்தார் முடிவா னவர்க்கொருகை
நல்கி யேந்த வொருகையுக்கம்
நயந்து தழுவ வொருகைதுகி
னலஞ்சேர் குறங்கின் மிசையசையப்
பகைத்தார் முனையங் குசமொருகை
பரித்துக் கடவ விருகரந்தோற்
பரத்தோ டெஃகு வலந்திரிப்ப
பாணி யொன்று மார்பிலங்க
வகைத்தா ரொருகை யொன்றிசைய
வான்மேற் றுடியோ டொருகைகொட்ட
மணியொன் றிரட்ட வொருகைமழை
வழங்க வொருகுஞ் சரிக்குமண
முகைத்தா ரொருகை சூட்டமகிழ்
மொய்ம்பா வருக வருகவே
முழுது மயிலா சலமுகந்த
முருகா வருக வருகவே.
58✓
களரி புகுந்த வவுணர்குலங்
களைந்தாய் வருக வருகவே
கானக் குறத்தி மணம்புணர்ந்த
கடம்பா வருக வருகவே
விளரி வரிவண் டுழுந்தாம
வேலா வருக வருகவே
விண்ணா டாள வமரர்சிறை
மீட்டாய் வருக வருகவே
தளிரி லெதிர்நின் றெமைப்புரக்குந்
தலைவா வருக வருகவே
சந்தத் தமிழ்பா டுதற்குவரந்
தந்தாய் வருக வருகவே
முளரி யனைய வாறுதிரு
முகவா வருக வருகவே
முழுது மயிலா சலமுகந்த
முருகா வருக வருகவே.
59வேறு✓
விதுவு முரகமு நதியு மிடைசடை
விடைய னொருமகன் வருகவே
வினையின் வலிகெட வருள்பன்னிருவிழி
விரக னிருபமன் வருகவே
குதலை யமுதுகு மதலை கலைதெரி
குறிசி லதிசயன் வருகவே
குழல னடல்புரி தகர னெழில்பெறு
குமர குருபரன் வருகவே
பதும மலர்மிசை யவனை யிடுசிறை
பணிய விடுபவன் வருகவே
பழியர் குலமட வனிதை தனகிரி
படியு மழகினன் வருகவே
மதுகை யயில்கொடு புழுதி படவொரு
வரையை யெறிபவன் வருகவே
மயிலை நெடுமலை யதிப னரிதிரு
மருக னறுமுகன் வருகவே.
60✓
அதிரு மலைகடல் கதற வொருமுறை
யயிலை விடுபவன் வருகவே
யமரர் சிறைவிட வசுரர் குறைபட
வமரி னடுபவன் வருகவே
முதிரு மொருகிழ வுருவ னொருமழ
முருக னெனுமவன் வருகவே
முழுதும் வழிவழி யெமையு மடிமைகொண்
முதல்வ வுமைமகன் வருகவே
யெதிரும் யமபடர் மறிய மயின்மிசை
யிசைய வருபவன் வருகவே
யினிய கடலையெள் ளயிலு மிபமுக
னிளைய வடல்புரி வருகவே
மதுர கவிபுனை தருபன் னிருபுயன்
வனச பதயுகன் வருகவே
மயிலை நெடுமலை யதிப னரிதிரு
மருக னறுமுகன் வருகவே.