முருகன் App
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
அந்தகக்கவி வீரராகவ முதலியார்
அம்புலிப்பருவம்8 / 11
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் · அந்தகக்கவி வீரராகவ முதலியார்

அம்புலிப்பருவம்

62✓
வீதிப் படுஞ்சக்ர வாளமு மிவன்றோகை
வெம்பரிச் செண்டுவெளிகாண்
விடநாக பாதாள மிவனப் பரிக்கிடும்
வெங்கவள சாலையேகாண்
மோதிப் பொரும்பெருங் கடலேழு மிவன்வேல்
முனைக்கே யடக்குபுனல்காண்
முடியா யிரத்துவட மேருவு மிவன்கரையின்
முன்கட்ட நட்டதறிகாண்
சோதித் திசாமுகக் கிரியடங் கலுமிவன்
தொடுகையிற் பம்பரங்காண்
சுரராச ருஞ்சுரரு மிவனேவ லைத்தலைச்
சூடும்ப டைச்சேனைகாண்
ஆதித்த லோகமிவ னாறிரு மதாணிகாண்
அம்புலீ யாடவாவே
அயில்வனச் செய்கையின் மயில்வனக் கந்தனுடன்
அம்புலீ யாடவாவே.
63✓
இரணிய கருப்பன்வீ டென்றென்று முன்னையே
யிகழ்ந்தழைக் குங்கொடுமைபார்த்
திக்குற்ற மெண்ணிப் பிறர்குற்ற மேபோல
ஏறுமவ னைச்சீறினான்
தரணியை யொழித்துனக் குறவா யிருக்கின்ற
தன்மையிற் கருணை பொங்கித்
தணிகையங் குவளையிற் போதுமுப் போதினுந்
தன்புயத் தேபுனைந்தான்
முரணிய வரக்கர்க் கிடந்தந்த தானாலும்
முதலன் பிறப்பதனினான்
மோதுசீ ரலைவாயின் மீதிருந் தருளினான்
மூவர்க்கு மொருதலைவனே
அரணிய வெறுப்பாக நீவெறுப் பாவையே
அம்புலீ யாடவாவே
அயில்வனச் செய்கையின் மயில்வனக்கந்தனுடன்
அம்புலீ யாடவாவே.
64✓
பூதலப் பகிரண்ட மாதலத் துள்ளார்
புறத்துளா ரெத்தேவரும்
புகுமினென் றிவன்விளித் தருளினா லமையும்
புகாதிருப் பாருமுளரோ
ஓதலிற் கதிரவன் வக்கிரன் நின்கதன்
ஒருகுருப் புகர்மந்தனாம்
ஓராறு கோளினையு நின்போ லழைத்தழைத்
துவகையிற் பெருகினானோ
காதலிற் சடையிடைக் கங்கையில் வளர்ந்தே
தவழ்ந்தெழுங் குழவிநீயும்
கங்கையில் வளர்ந்தே தவழ்ந்தெழுங் குழவியிக்
கருணா லயக்குரிசிலும்
ஆதலிற் றுணைதனக் காமெனக் கருதினான்
அம்புலீ யாடவாவே
அயில்வனச் செய்கையின் மயில்வனக்கந்தனுடன்
அம்புலீ யாடவாவே.
65✓
மதனான மைத்துனன் கவிகையா யுந்தனது
மாமற்கி ருக்கையாயும்
மாறாத தன்பிதா மகுடச் சுடர்ச்சிகா
மணியாயு நயனமாயும்
இதநாக நகரா ரெனுந்தம் பதாதியர்க்
கிடுமன்ன சாலையாயும்
இந்த்ராணி யென்கின்ற தன்மாமி பெயருமுன்
பெயராயு மிதுவன்றியும்
முதனாரி வள்ளியைப் பெற்றதாய் வடிவமுன்
வடிவின்மு யக்கமாயும்
முழுதுமிப் படிபடைத் திருவருக் குந்தொன்று
தொட்டுமுன் பெருமைபிரியா
அதனா லழைத்தன னலதுனை யழைப்பனோ
அம்புலீ யாடவாவே
அயில்வனச் செய்கையின் மயில்வனக்கந்தனுடன்
அம்புலீ யாடவாவே.
66✓
ஊழியிற் கடவுளா மிவனடைக் குஞ்சிறை
யுறைந்தவன் மெய்க்கூறுநீ
உலகத் திவன்கொடிக் கூவலுக் கேவெறுப்
போடொளித் தோடுமவனீ
சூழியிற் கரியுரித் தேவர்தந் தேவிசெந்
துகிலிடைக் கிடைபுகாமுன்
தொட்டிலிவ னுக்கிடுந் தாமரைப் போதொடும்
தொன்மாறு பட்டவனுநீ
பாழியத் திரிமக னீயவன் றம்பிகா
சிவன்மகன் சூரபன்மன்
பகையெனக் கருதினுங் கருதுவ னினைநீ
பலகாலு நித்தமுழலுமிவன்
ஆழியைப் பொருகினும் பொருவனிங் கிவனுடன்
அம்புலீ யாடவாவே
அயில்வனச் செய்கையின் மயில்வனக்கந்தனுடன்
அம்புலீ யாடவாவே.
67✓
தேயவும் பெருகவுந் தேவருன் கலைகளைத்
தினமுமோ ரொருவராகச்
சிதறிப் பறித்துண்ப தரிவையே யவரெலாம்
செவ்வேள்பெ ருஞ்சேனைகாண்
தூயவிங் கிவனிடத் தெய்தினா லமையுமச்
சுரருங்க வர்ந்திடார்காண்
தோகைவா கனமொன் றிருத்தலா லரவுனைத்
தொடவும் பயப்படுங்காண்
மாயவன் மருகனுக் கன்பெனக் சிரமத்தின்
வைத்துனைப் புனைகிலன்காண்
மதலைக்கு நேயமென மதலையஞ்சாமனடி
மலர்கொண்ட ரைக்கிலன்காண்
ஆயநின் பகைபுகா வரணிவன் சரணிவன்
அம்புலீ யாடவாவே
அயில்வனச் செய்கையின் மயில்வனக்கந்தனுடன்
அம்புலீ யாடவாவே.
68✓
நெஞ்சா லுகந்துகந் தினிதழைத் தால்வராய்
நீயவன் றிருவுளத்தே
நிமிரும் பெருங்கோபம் வந்தா லிவன்றோகை
நீலக்க லாபத்தினான்
மஞ்சார் பொருப்பெலா மாருதப் பூளையாய்
வானமுந் தூளின்மறையும்
வடமேரு வுஞ்சேவ லின்கூவ லால்விழும்
வனசத் திருக்கைவேலால்
விஞ்சாழி யேழுங் கனல்கொண்டு புகைமண்டி
வேறிடத் தோடினாலும்
வீரவா குத்தலைவர் முதலாம் பதாதியர்
விடுத்திடா ராகலினுனக்
எஞ்சா தொளித்திடப் பிறிதிடங் கண்டிலேன்
அம்புலீ யாடவாவே
அயில்வனச் செய்கையின் மயில்வனக்கந்தனுடன்
அம்புலீ யாடவாவே.
69✓
கூடன்மே லைப்பரங் குன்றகத் தொருமுழைக்
கொண்டுபோய்ப் பண்டுசங்கக்
குலமுதற் கலைவாண னைக்கரந் திடுபூத
மிடுகையிற் கூறுமாற்றுப்
பாடலா முருகுபேட் டம்முழை திறந்துவிட்
டருளிய பரம்பொருளிவன்
படவரா வென்னுமப் பூதம் வளைத்துவெம்
பகுவாய் முழைக்குளிடுநாள்
நாடெலா முன்னையுங் கலைவாண னென்கின்ற
நாமத்தின் வரிசையதனால்
நளினத் திருக்கைவே லாயுதம் விடுத்தேனும்
ஞாலமே ழுந்துழவந்
தாடலா டும்பரி விடுத்தேனும் விடுவிப்பன்
அம்புலீ யாடவாவே
அயில்வனச் செய்கையின் மயில்வனக்கந்தனுடன்
அம்புலீ யாடவாவே.
70✓
மையோத வாரிதித் திரையிற் பிறந்தனன்
வளவன் கழக்குன்றனு
மாறாது நீயுமத் திரையிற் பிறந்தனை
வளவன் கழக்குன்றனைச்
செய்யோ னெனப்புண் ணியம்புரிந் தகளங்க
னாதலிற் செவ்வேலவன்
செஞ்சிலம் பிற்சிறு டித்தாம ரைப்போது
சேவிக்க வாழ்வித்தனன்
துய்யோ னலாமற்க ளங்கனா கிக்குருத்
தோகைபொற் கொங்கைபுணரும்
தொல்பெருந் தீவினை நினைந்துனைச் சேராது
தூரவிட் டானெனவுனக்
கையோ விகழ்ச்சிவரு மக்குறை யெலாந்தீர
அம்புலீ யாடவாவே
அயில்வனச் செய்கையின் மயில்வனக்கந்தனுடன்
அம்புலீ யாடவாவே.
71✓
தவிராத வெவ்வினை தவிர்க்கு முருகாறும்
தரித்தா ரெழுத்தோதலாம்
சந்நிதிக் கருணகிரி நாதன் திருப்புகழ்ச்
சந்தம் புகழ்ந்துய்யலாம்
புவிராசன் வளவன் கழக்குன்றன் வளமைபுரி
புண்ணியந் தரிசிக்கலாம்
பொருஞ்சூ ரனைப்பொருங் கதைமுதற் கந்தப்
புராணக் கடல்காணலாம்
கவிராச னிப்பிரான் மிசைச்செய்த திருவுலாக்
கவிவெள்ளை கற்றுருகலாம்
கவிவீர ராகவன் சொற்றபிள் ளைக்கவி
கலம்பகக் கவிவினவலாம்
அவிராட கக்கோயில் புக்குவிளை யாடலாம்
அம்புலீ யாடவாவே
அயில்வனச் செய்கையின் மயில்வனக்கந்தனுடன்
அம்புலீ யாடவாவே.