சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
அந்தகக்கவி வீரராகவ முதலியார்
முத்தப்பருவம்6 / 11
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் · அந்தகக்கவி வீரராகவ முதலியார்
முத்தப்பருவம்
42✓
நத்துக் கொத்துத் திங்கட் கொத்து
நகுந்தள வுக்கொத்து
நற்கீ ரத்துக் கொத்துக் குந்த
நறுந்தா திற்போதிற்
கொத்துக் கொத்துப் பொலிவாள் கொழுநற்
கொத்தும் பைந்துளவக்
கோவிற் கொத்துக் குலிசற் கொத்துக்
குலவுந் திருவுருவாய்ச்
சித்துக் கொத்துப் பத்துத் திக்கும்
செறியவி ருள்பொதுளத்
திண்து தத்துக் கொத்துப் பொருவோன்
சிதறப் பொரும்வீரா
முத்துக் கொத்துப் பத்திக் கனிவாய்
முத்தந் தந்தருளே
முருகா செய்கை முராரிதன் மருகா
முத்தந் தந்தருளே.
43✓
வித்தே வித்தும் பழனத் தளையின்
வெள்ளிக் குறுமுளையின்
வெண்சிறை யன்ன மிதிக்குந் தோறும்
வெருண்டெழு வாணர்குழாம்
பத்தே யெட்டே யொருகைக் கேனும்
பணில மெடுத்தெறியப்
பால்வெண் டரள மேல்விண் டுதிரும்
பாலித் திருநாடா
அத்தே வர்க்குந் தொன்முனி வர்க்கும்
அனந்தற் கும்புவனத்
தட்ட திசைக்கா வலவர்க் கும்வே
றசல சலத்திற்கும்
முத்தே வர்க்குந் தேவன் புதல்வா
முத்தந் தந்தருளே
முருகா செய்கை முராரிதன் மருகா
முத்தந் தந்தருளே.
44✓
பாவாய் குதலைக் குயிலே மழலைப்
பசலை மடக்கிளியே
பவளக் கொடியே தவளத் தரளப்
பணியே கண்மணியே
பூவா யெனவந் திமயத் தரசன்
புகழத் திகழுமிளம்
புதல்விக் கருமைப் புதல்வா பெருமைப்
புவனத் தொருமுதல்வா
தேவா திபனே கருணா லயனே
சிவனே யத்தவனே
சேயே சுருதித் தாயே தமிழின்
திருவே யொருபோதும்
மூவா முதலே மூவிரு முகனே
முத்தந் தந்தருளே
முருகா செய்கை முராரிதன் மருகா
முத்தந் தந்தருளே.
45✓
கொற்றத் துழவர் புயத்தி லுழத்தியர்
கொங்கைக் குவடுபொரக்
கூடிக் கூடிப் புலவிக் கலவிக்
குலாவி யுறங்குதலும்
நிற்றம் புலரி யெழுப்பியழைக்கும்
நீர்நிறை யோடையினும்
நீலத் தகழி யினுங்கரை யேறி
நிலாவெண் சங்கமெலாம்
சுற்றப் புரியின் புரிசையும் வீதித்
தொகுதியு மாவணமும்
தொடுகா வணமும் பிறங்கிட் டாங்கவர்
தோரண மணிவாயின்
முற்றத் ததிருந் தொண்டைநன் னாடா
முத்தந் தந்தருளே
முருகா செய்கை முராரிதன் மருகா
முத்தந் தந்தருளே.
46வேறு✓
நவக்குஞ் சரமே செறிவனத்து
நறிய முருக்கே பசுங்காந்தள்
நனைத்தண் போதே மாதளையே
நாறுங் குமுதச் சீரிதழே
உவக்குங் கொடித்தா மரைத்தோடே
உருவத் திலவே பருவத்தால்
உடலம் பழுத்த வீர்விழியே
ஒழியாக் கொவ்வைக் கொழுங்கனியே
நிவக்கும் பொருப்பி லசோகம்மே
நிறக்குங் குலிகக் குழம்பழகே
நெறிசெம் பவளத் தொளியேயென்
றிவைக ளனைத்து நிரைத்தொன்றாய்ச்
சிவக்கும் படியே சிவப்பொழுகும்
திருவாய் முத்தந் தருவாயே
செய்கைக் கரசே மயிற்கரசே
திருவாய் முத்தந் தருவாயே.
47✓
எஞ்சா முகிற்கு ளிரண்டுமுகில்
எறிதேன் கடலும் பாற்கடலும்
இருபக் கமும்போய் முகந்துமுகந்
திறைப்ப நறைப்பைந் துழாய்மௌலிப்
பஞ்சா யுதனென் றொருகேழல்
உழும்பே ரண்டப் பழனத்துப்
பழைய வேதச் சுவையையிதைக்
கரும்பா யமைத்துப் பணைத்தெழலும்
விஞ்சா ரமுதப் பிறைவாட்கொண்
டிறையோ னறுப்ப வெடுத்துவட
மேருச் செக்கூ டிருநான்கு
கரியால் வெய்யோன் றிருப்பவிழும்
செஞ்சா றிழைத்த தெனுமழலைத்
திருவாய் முத்தந் தருவாயே
செய்கைக் கரசே மயிற்கரசே
திருவாய் முத்தந் தருவாயே.
48✓
காம்பான் மலரப் படுங்கடவுட்
கமல மிரண்டென் றதிசயிப்பக்
கருலுந் தடந்தோ ளுடன்கடகக்
கரத்தா லிருமுத் திருமேனி
ஆம்பா லகரா முனைப்புனைப்பூ
ணாகத் தெடுத்தாங் கொருகுழவி
யாகத் தழுவி யவளுங்கை
யடங்கா வகையோ ரொழுகியநாள்
பாம்பா லனைய வணைத்துயிலும்
பரஞ்சோ தியைவிட் டிங்குமொரு
பசும்பாற் கடலோ கிடப்பதெனப்
பனிமா லிமயத் துமைமுலைக்கண்
தீம்பான் மணக்குஞ் சரவணத்தாய்
திருவாய் முத்தந் தருவாயே
செய்கைக் கரசே மயிற்கரசே
திருவாய் முத்தந் தருவாயே.
49✓
மருவாய் வனசத் திறையவனைச்
சிறையுட் பிணித்த பருவத்தே
மகரக் கடலே ழுடுத்தபெரும்
புவனக் குருவாய் வருவார்க்கும்
குருவா யம்பொற் செவிதாழ்த்துத்
குடிலை யுரைக்கும் படியுரைத்த
கொற்றங் கேட்டெம் பெருமாட்டி
நித்தங் களிக்குங் குலவிளக்கே
அருவாய் மதனைப் பொருவார்க்கும்
அறியாப் பொருளை யறிவித்த
அமிர்தப் பவள மிதுவோவென்
றருகே தனது முகநீட்டித்
திருவாய் முத்தந் தருவாட்குத்
திருவாய் முத்தந் தருவாயே
செய்கைக் கரசே மயிற்கரசே
திருவாய் முத்தந் தருவாயே.
50வேறு✓
பூமாவின் மனையனைய கனைகடலி லளறுபடு
புலவினொடு பயில்வனவு முத்தமோ
போராட வுபயவிட வரவமவை தொடரவுடல்
புலருமதி பொதிவனவு முத்தமோ
வாமாயி தெனவமரர் பதிமருவு முகிலிடியின்
மடுவிலெரி பொரிவனவு முத்தமோ
மாறாத வஞ்சரண ஞிமிறுகளின் முளரிநறு
மலரின்மிதி படுவனவு முத்தமோ
ஆமாவி னவனையொரு குழவியென வுமிழ்கழையின்
அடவியனல் சுடுவனவு முத்தமோ
ஆனாது மருவினவ ரெவரெனினு மவருயிரை
அடுகரியில் வருவனவு முத்தமோ
தேமாவி னொருகனியை நுகரநிலம் வலம்வருகை
செயுமெனது குகதருக முத்தமே
சேயூர வரிமருக கிரிவனிதை தருமுருக
திரிபதகை சுததருக முத்தமே.
51✓
பூவாதி யுலகடைய வடையுமிரு ளுடையவொளி
பொழியுமரு கமலமலர் வத்திரா
போகாத திருவதிக மருவுமக பதிபுகுத
புகலுமிள நிலவுசொரி சந்திரா
கோவாதி விடைவலவர் படைமழுவின் வலவர்கிரி
குமரியொரு தலைவரவர் புத்திரா
கோடாத வறநெறியி னறுவகைமை லிபியை நவில்
குணநிபுண ரகுணகிரி மித்திரா
மாவாதி யதிகதியி னிரதவித மிககரட
மதவுததி விகடமத மத்தமா
மாறாத வனிகமுட னவுணர்கட லெதிரவதிர்
மறிகடலி னடுவுமொரு முத்தமா
தேவாதி பதிகுமர னமரரிவர் பலருமுறை
சிறையைவிடு துரைதருக முத்தமே
சேயூர வரிமருக கிரிவனிதை தருமுருக
திரிபதகை சுததருக முத்தமே.