முருகன் App
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
அந்தகக்கவி வீரராகவ முதலியார்
சிற்றிற்பருவம்10 / 11
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் · அந்தகக்கவி வீரராகவ முதலியார்

சிற்றிற்பருவம்

82✓
கோவே கொவ்வைச் செழும்பவளக்
கொழுந்தே குறவர் பசுங்கிளியும்
குலிச னளித்த விளங்குயிலும்
குனிக்கு மயிலுந் தனித்தகலாக்
காவே வேதப் பெருங்கடலே
கடலிற் கடையாக் கவுத்துவமே
கங்கைப் புனலால் வளர்ந்தெழுந்த
கரும்பின் சுவையே சுரும்பிமிராப்
பூவே பூவில் வருந்தேனே
பொருங்கோ ளரியே யரியபரம்
பொருளே யுலகுக்கு கொருபொருளாம்
அவற்கும் விளங்காப் பொருள்விளக்கும்
தேவே தேவக் குலமுதலே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேயே சேயூர்ப் பெருமானே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
83✓
கானே கமழும் கடம்பவிழ்தார்க்
கடவுட் கரசே சுரலோகம்
காக்குந் துணையே யவுணர்குலம்
களையுங் களிறே யிளையசிறு
மானே யுலகுக் கொருதிருத்தாய்
மகவே மகரா லயங்காயும்
வடவா முகமே யறுமுகமா
மதிய முதித்த வானகமே
தானே யுவமை தனக்கலது
பிறிதொன் றில்லாத் தனிப்பொருளே
தருமப் பொருளே யெழுத்தாறும்
தரித்தா ரிதயத் தாமரைச்செந்
தேனே தெவிட்டாத் தெள்ளமுதே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேயே சேயூர்ப் பெருமானே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
84✓
மருவிற் பசுமைத் துளவோனும்
வனசத் தவனுங் காணாத
வடிவிற் சோதி மடிப்புறத்தே
மலருந் திருத்தா மரையலவோ
உருவிற் புவனஞ் சதகோடி
உதரத் துமிழ்ந்த பெருமாட்டி
உரமுந் தனமுங் கரமுமறந்
துறையாச் சிறுபங் கயமலவோ
தருவிற் பெரியார் சிரமனைத்தும்
தரிக்குங் கமலக் குலமலவோ
சதுமா மறையின் றலைப்பூத்த
தண்டைப் புதுமுண் டகமலவோ
தெருவிற் பொடியும் புகத்தகுமோ
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேயே சேயூர்ப் பெருமானே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
85✓
உதயா தவற்கு நிகரற்கும்
ஒழியாப் பதமு மழைவண்ணத்
தொருவன் புரந்த மாளிகையும்
உம்பர்க் கரசன் பீடிகையும்
சுதையா தரிக்குஞ் சுரர்வீடும்
உடுவி னிருப்பும் பெருமுனிவர்
சுருதி கிளைக்குந் திருமனையும்
சோரா வுரகப் பேரகமும்
மதயா னையினெண் டிசைப்பாலர்
மணியா லயமும் விஞ்சையர்கள்
வயங்குங் கோயில் பலப்பலவும்
மக்கட் குடியும் புக்கவுணர்
சிதையா துதித்த பிரானன்றோ
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேயே சேயூர்ப் பெருமானே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
86✓
உருமே கடுக்குந் திருவரைநாண்
உடுக்கு மணிக்கிங் கிணிநாவிட்
டொருசற் றொலித்தாற் பகிரண்ட
கூடந் திடுக்கிட் டுடையாதோ
மருவே திகழுஞ் செங்கமல
மலர்ச்சீ றடியிற் சிறுசதங்கை
வாய்விட் டரற்றிற் கடலேழும்
வாய்விட் டரற்றி மறுகாதோ
குருமே தகைய கடகமுங்கைத்
தொடியுங் கறங்கிற் புவனமெலாம்
கோலி வளைக்கும் பலகோடிக்
குவடும் பிதிர்பட் டுதிராதோ
திருமே னிகுழைந் திடநடந்து
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேயே சேயூர்ப் பெருமானே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
87✓
சுற்றின் முழங்குங் கடலேழும்
உலையாய்ச் சுடுதீ வடவனலாய்த்
தொல்லைத் திகிரிக் கிரியடுப்பாய்ச்
சுடர்மா மேரு கடமேயாய்
முற்றில் பிடித்துக் கொழித்தெடுக்கும்
வல்சி முகட்டி லுடுக்குலமாய்
முதிருங் கதிரே திருவிளக்காய்
முகிலூர் தியினான் மூதூரும்
பற்றில் வகுத்த பேரளகைப்
பதியும் பசும்பொன் னறையேயாய்ப்
பணிப்பா தலஞ்செம் மணிப்பேழைப்
படியா யடையும் பகிரண்டஞ்
சிற்றி லிழைப்பா டன்மகனே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேயே சேயூர்ப் பெருமானே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
88✓
நகைத்தண் டரளத் திரளரிசி
நறுந்தே னுலையுங் கவிழாதோ
நந்தின் கடமு முடையாதோ
நளிமா துளைத்தீ யவியாதோ
தொகைத்தண் பவள விளக்கணைந்து
விடாதோ வடியோம் வதுவையெனச்
சொல்லிச் சொல்லிக் கொணர்ந்தசிறார்
விருந்தும் வருந்திச் சோராதோ
முகைப்புண் டரிக முரம்பிணிந்து
முலையென் றறிந்து னிடத்திரங்கி
மொழிந்து துயிற்று மணற்குழந்தை
முழுத்தா மரைக்கண் விழித்துமனம்
திகைப்புண் டழுது தேம்பாதோ
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேயே சேயூர்ப் பெருமானே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
89✓
வெய்யோன் பகலை யிரவாக்கும்
விரகிற் பெரிய நின்மாமன்
மேனாட் பொதுவ ரகம்புகுந்து
வெண்பா லுறியி னடிக்குழிப்பக்
கையோ ரிரண்டும் பிணித்திலரோ
குடவர் மடவார் சகங்காக்கும்
கடவு ளெனத்தான் பயந்தனரோ
கட்டா தகல விட்டனரோ
ஐயோ புலந்து தமியேமும்
அன்னை மார்க்குஞ் செவிலியர்க்கும்
அழுது மொழிந்தாற் சீறாரோ
அனைத்து மொருவ னாகிநிற்கும்
செய்யோன் மகனென் றஞ்சுவரோ
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேயே சேயூர்ப் பெருமானே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
90✓
உவந்து தமியேன் முகக்கமலத்
தொளிவா டுகைக்கு நின்றிருத்தாள்
ஓரா யிரக்காற் பணிந்துபணிந்
தொழியா திரக்கு மொழியினுக்கும்
கவந்த நடிக்கு மவுணர்செருக்
களத்தே செருக்கு முனதுதகர்
கடவு ளினத்தின் கொடுமருப்பால்
கலங்கு நிலைக்குங் கழுநீராய்
நிவந்த கருங்கண் சொரிந்தெமது
நிறமுங் கறுத்த கண்ணீர்க்கும்
நிலாநித் திலமும் வயிரமுமே
கொழித்துக் கொழித்து நிலத்திழைத்துச்
சிவந்த விரற்கு மிரங்காயோ
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேயே சேயூர்ப் பெருமானே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
91✓
எழுத்தாய் நிகரு மிருகரங்கள்
வருந்தி வருந்தி யமன்முதலோர்
இயற்றும் பெருஞ்சூர் மாளிகையோ
இருங்கோ ளரிமா முகனகமோ
முழுத்தா ரகன்றன் சீரகமோ
முதிருங் கதிரா யிரத்தினையும்
முனிந்தோன் முரசும் பேரிகையும்
முழங்கி யெழும்பொற் கோயில்லோ
முழுத்தா மரைக்கை மணிமிடற்றான்
மகரச் செவியுட் பகருமொரு
வழுவாப் பொருளை யறியாது
மயங்கித் தியங்கிச் சிறையுறைந்தான்
செழுத்தா ரைப்பூஞ் சிற்றில்லோ
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேயே சேயூர்ப் பெருமானே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.