சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
அந்தகக்கவி வீரராகவ முதலியார்
சிறுபறைப்பருவம்9 / 11
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் · அந்தகக்கவி வீரராகவ முதலியார்
சிறுபறைப்பருவம்
72✓
பூநா றுவரிற் பெரிய பரப்பிற்
புதியம திக்கதிரே
பொங்குஞ் செங்கதி ரிற்சொரி கின்றது
போலப் பொய்கையின்வாய்
மீனா றுதவும் புத்தமு தத்தின்
வெள்ளரு வித்திரளே
மீதிற் பொழியப் பொழியப் பருகி
விழிதுயி லும்புதல்வா
வானா றளவுங் கிளருங் கமுகினும்
வளரும்வ ருக்கையினும்
வாழை வனத்துந் தாழை வனத்தும்
மாவினும் விட்டவிறால்
தேனா றொழுகுஞ் செய்கைப் பெருமாள்
சிறுபறை கொட்டுகவே
செந்திற் பெருமாள் கந்தப் பெருமாள்
சிறுபறை கொட்டுகவே.
73✓
பையிற் சுடிகைக் கொடுநா கேசன்
பாதா ளத்தளவும்
படுமா ழித்தே ரிற்பெரு மதகிற்
பகுத்த புனற்பாயும்
தொய்யிற் பழனப் பவளச் சாலித்
தொகுதிக் கதிர்வானச்
சோதிக் கதிரின் மோதித் தகையும்
தொண்டைத் திருநாடா
மையிற் சொரியக் கிரியிற் பாலி
வழிந்தா ழியின்மட்டும்
வாளைக ளெதிரப் பாளைகளுதிரும்
மடற்கமு காடவியும்
செய்யிற் புகுதுஞ் செய்கைப் பெருமாள்
சிறுபறை கொட்டுகவே
செந்திற் பெருமாள் கந்தப் பெருமாள்
சிறுபறை கொட்டுகவே.
74✓
கனையிற் கயமுங் கயமேல் வளருங்
கமலம லர்க்காடும்
கழுநீர் மடுவு மப்பெரு மடுவின்
காலும்ப லகாலும்
நனையிற் குமுதப் புனலும் புனலே
நாலுமி கக்கிடையும்
நாகிள மேதி முலைப்பால் வழியும்
நறுங்குழி யுங்குழியும்
முனையுப் பளமு மளத்தரு கெங்கணும்
மொய்த்தெழு கானிழலும்
முன்னும் பின்னு மினத்தொரு கோடிகள்
முரலவ லம்புரிபோய்
சினைமுத் துமிழுஞ் செய்கைப் பெருமாள்
சிறுபறை கொட்டுகவே
செந்திற் பெருமாள் கந்தப் பெருமாள்
சிறுபறை கொட்டுகவே.
75வேறு✓
காழியர் நகரிற் கவுணியர் மரபிற்
காதல னாகமலைக்
கன்னி முலைத்தலை யுண்ட முதத்தைக்
களையு மரும்பொருளே
தாழியில் வளருங் குவளைப் போதொரு
முப்போ துந்தானும்
தணிகைக் கிரிபுக் கணியுங் களிறே
சதுர்ம றையின்பேறே
ஆழியு முலகு மெடுக்குஞ் சுடிகை
அராவைப் பொருதுகிழித்
தாடுந் தோகையு மாயிர கிரணத்
தருணன் வரக்கூவும்
கோழியு மெழுதுங் கொடியுடை வேளே
கொட்டுக சிறுபறையே
குகனே செய்கையின் மூவிரு முகனே
கொட்டுக சிறுபறையே.
76✓
சென்று கராவின் தொகுதி துரப்பச்
செழுநீர் நாய்தொடரச்
சிதறிச் சிதறிப் பதறிப் பதறிச்
செறுவிற் கரையேறும்
துன்று வராலுக் குடலம் வெருண்டு
துவண்டோ திமசாலம்
சோலைக் கிடப்புக் கடையும் பழனத்
தொண்டைத் திருநாடா
கன்று விடாமற் பிடியுங் களிறும்
திரியுங் கனசாரல்
காய்வயி ரத்தொகு தித்திரள் பெருகக்
கதிரின் பரிபருகும்
குன்றுதொ றாடுங் குமர பிரானே
கொட்டுக சிறுபறையே
குகனே செய்கையின் மூவிரு முகனே
கொட்டுக சிறுபறையே.
77✓
பங்கக் கமலத் தவனைக் கமலப்
பதத்தளை களைகவெனப்
பரிதித் திகிரிக் குலிசப் பாணிப்
பண்ணவ ரிருவருமத்
துங்கத் தவருஞ் சுரரும் பிறரும்
சொல்லும் வணக்கமொடும்
தொழுத கரத்தொடும் வந்து நெருங்கும்
தொல்கோ புரமுடையாய்
சிங்கக் குருளைத் திரளே களபத்
திரளைக் குருகுகொளத்
தேடித் தேடித் திரியும் பிடியும்
திண்களி றுங்களிறும்
கொங்கப் பழனிக் கொலிமலை முதலே
கொட்டுக சிறுபறையே
குகனே செய்கையின் மூவிரு முகனே
கொட்டுக சிறுபறையே.
78வேறு✓
முதலைகவ ரக்களிறு முதலென நினைக்குமவன்
முதுமகள் விருப்பவழகா
முனிமொழி வழிக்குருகு பெயர்கொடு கிடக்குமொரு
முகடுதொடு வெற்பழநிலா
மதலைமௌ லிக்கரிய கருவிட மிடத்துணியும்
மறிகடல் விடுத்தமுதுவார்
வயரதவி தத்துரக சலதியவு ணத்தொகுதி
மரபொடு துடித்தழுவரோ
குதலையுமு தச்சுவைக ளறுவர்மக ரச்செவிகள்
குடிகொள வழைத்தமுதுநீர்
குரைசரவ ணத்தருகு கவுரிதழு வித்தனது
கொடியிடையில் வைப்பவனையாள்
திதலைமுலை தத்தருவி பருகியழு மெய்க்குழவி
சிறுபறை முழக்கியருளே
திருவளவர் பொற்பதியில் வருகுளவ சத்திதர
சிறுபறை முழக்கியருளே.
79✓
நறியபல விற்பெரிய முடவடி வெடுத்தகனி
நவையற நிறைத்தசுளையோ
நகைமதி முதற்பரிதி தகைபடு மடற்கதலி
நனிபல பலித்தபழமோ
முறியவை சிவப்பொழுகு மழகியன கொக்குவன
முதுகிளை கிளைத்தபழமோ
முகடுதொடு மக்கடலி னெரியநெரி சைக்குளழி
முகிலென வொழுக்குபுனலோ
உறியமுது துய்க்குமவ னிருகையிலு மத்துழல
உததியி னுதித்தகதையோ
உபநிடம றைப்பசுவின் முலைமடி சுரப்படைய
உலகிடை துளித்ததுளியோ
சிறியமழ லைச்சுவையி தெனமல ரிதழ்ச்சிறுவ
சிறுபறை முழக்கியருளே
திருவளவர் பொற்பதியில் வருகுளவ சத்திதர
சிறுபறை முழக்கியருளே.
80✓
புகைவிடு சுடர்க்கனலி தலைவிமடி புக்கமுது
பொழிமுலை யலைத்தகைகொடே
பொருதிரை குரைத்தொழுகு பகிரதி யுறப்பவெழு
புதுமதி யழைத்தகைகொடே
முகைவிடு மடற்பொதுளு முளரியிடு தொட்டிலினின்
முரலளி விலக்குகைகொடே
முதலறு வரைப்பருகி விமலையுட லைத்தழுவி
முடிமல ரெடுத்தகைகொடே
நகைவிடு முடிச்சுரரை வெருவன்மி னெனக்கருணை
நயனமொ டமைத்தகைகொடே
நளினனும் விளக்கரிய பொருளையறை யக்குறியின்
நடுகுழை யிழைத்தகைகொடே
சிகைவிடு கதிர்க்கடவுள் வரவறி கொடிக்கடவுள்
சிறுபறை முழக்கியருளே
திருவளவர் பொற்பதியில் வருகுளவ சத்திதர
சிறுபறை முழக்கியருளே.
81✓
உரைவிரி திருப்புகழை விழுமியவர் முப்பொழுதும்
ஒலிகெழு முழக்கவழுவா
உபநிட முதற்சுருதி கருதியமு னிக்குழுவும்
ஒழிவற முழக்கமுழுதே
தரைவிரி வினைத்துரிசு தனையற வறுக்குமுகில்
தருமமு முழக்கவெதிரே
தமதுசிறை யைத்தடியு மதிகவிர லைப்பகைவர்
தகுதியின் முழக்கவருகே
நிரைவிரி தமக்குறவி னறுவர்தவ சித்தியென
நிழலொடு முழக்கநெடிதே
நிருதருதி ரப்புணரி பருகலை நினைத்தவகை
நிறைகுல முழக்கமுறையே
திரைவிரி கடற்குரிய மருகமுரு கக்கடவுள்
சிறுபறை முழக்கியருளே
திருவளவர் பொற்பதியில் வருகுளவ சத்திதர
சிறுபறை முழக்கியருளே.