முருகன் App
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
அந்தகக்கவி வீரராகவ முதலியார்
வருகைப்பருவம்7 / 11
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் · அந்தகக்கவி வீரராகவ முதலியார்

வருகைப்பருவம்

52✓
மிக்கே ருழும்பொற் பகட்டித்தும்
கயலைத் தடிந்துங் குருகடர்ந்தும்
வேலிப் புறத்து வெறுத்துவெறுத்
தெறியக் கிடந்த சதகோடி
இக்கே நெரித்துஞ் சுரிமுகங்கள்
எருமைக் கருந்தாட் படவுடைந்தும்
எய்ப்பாய் வாளைக் கமுகலைத்தும்
இலைப்பூங் கமுகான் மதியலைத்தும்
தொக்கே மழையப் பொழில்கழித்தும்
சுரும்பாற் கமலக் களைகளைந்தும்
சுடருஞ் செந்நெற் காடறுத்தும்
சொரியச் சொரியக் கடையர்குழாம்
செக்கே தாளக் குவைகுவைக்கும்
செய்கைப் பெருமாள் வருகவே
செவ்வேற் பெருமாள் மயிற்பெருமாள்
தெய்வப் பெருமாள் வருகவே.
53✓
பம்பிற் கழியே செழியவித்திப்
பாயும் புனலு மெனக்கொணர்ந்து
பகடுங் கொழுவுந் தொடராமே
பலபுள் விலங்கும் படராமே
அம்பொற் களையுங் களையாமே
அருங்கண் டகத்தால் வளையாமே
அலைக்குங் குறும்பொன் றிலாவுலகில்
அரசன் பரிசில் கரவாமே
உம்பர்ப் புயல்வேட் டுழலாமே
உமண ரமைத்த வுப்பினமும்
உழவர் விளைப்ப விளைசெந்நெற்
குவையும் வெள்ளி யொளிக்கிரியும்
செம்பொற் கிரியு மெனப்புரஞ்சூழ்
செய்கைப் பெருமாள் வருகவே
செவ்வேற் பெருமாள் மயிற்பெருமாள்
தெய்வப் பெருமாள் வருகவே.
54✓
பரியாற் கரடக் கடகரியால்
பார்க்குந் தரனா விளையாடும்
பருவச் சிறார்சிற் றடிப்பொடியும்
பசும்பொற் றொடியார் பலகோடி
பிரியாத் தெருவிற் சொரிசுண்ணம்
பிறங்குந் துகளு மகிழ்புகையும்
பெருங்கா ரகிலா வியுங்கரும்பிற்
பிழிந்த பொழிசா றடுங்குய்யும்
அரியாற் குயிலப் பயின்மாடத்
தாடுந் துவசக் குலத்துகிலும்
அண்டத் தளவும் பிறபொதுளி
அமரா வதிக்கொத் திரவுபகல்
தெரியாப் பெரிய வளங்கிளரும்
செய்கைப் பெருமாள் வருகவே
செவ்வேற் பெருமாள் மயிற்பெருமாள்
தெய்வப் பெருமாள் வருகவே.
55✓
ஆணிக் கனகத் தொகுதிகிரி
அருக்கன் பெருந்தேர்ப் பசுங்குதிரை
அலங்குங் கூல மயிர்க்கற்றை
அடவித் தழையென் றுடல்வெருண்டு
வேணிப் புரமே பறந்தெழுந்து
விழுந்தே னீகண் டருகணைந்து
வெவ்வா னரங்க னிறால்பொதுத்துத்
தாமும் பருகி மிகுந்ததெலாம்
பாணித் துணையிற் கதலிமடற்
படுத்துப் பிணவுக் குணவிடுத்துப்
பசிக்குங் குருளை கொளக்கொடுத்துப்
பசிய பலாக்காய் மிசையுறங்கும்
சேணிற் புயலிற் கரங்கழுவும்
செய்கைப் பெருமாள் வருகவே
செவ்வேற் பெருமாள் மயிற்பெருமாள்
தெய்வப் பெருமாள் வருகவே.
56✓
நிறையோ டரிக்கண் மடமாதர்
நீலக் கமலத் தடங்குடைய
நெகிழ்ந்தே விழும்பூண் மாணிக்கம்
நீருட் கருலக் கனியென்னத்
துறையோ டகலாக் கயல்கவரத்
திரியும் சிரலுங் குருகினமும்
தொகும்போ தாவு மிருந்தாராத்
தொகையுந் திகைத்துக் கரைபுகலும்
பிறையோ முகிலிற் புகுவதெனப் பெடையும்
பார்ப்பும் புடையணைத்துப்
பேரண் டமுங்கொண் டரவிந்தந்
துரந்து சுரும்பு பறந்தார்ப்பச்
சிறையோ திமம்போய்ப் பொழில்புகுதுஞ்
செய்கைப் பெருமாள் வருகவே
செவ்வேற் பெருமாள் மயிற்பெருமாள்
தெய்வப் பெருமாள் வருகவே.
57✓
பரம்பிற் குமுறுங் கடற்படுவிற்
பரவ ரிழைத்த கழைத்தூண்டிற்
படுமுட் கயிறு வயிறுபுகப்
பதைத்து வெடிபோய்ப் பரியசுறா
நிரம்பிப் பெருகும் பெருங்கழிக்குள்
விழுந்தே நிமிர்ந்து வயற்கேறி
நீலக் கயத்து ளிழிந்துகயக்
கரையிற் பயிரா நீங்காத
கரும்பிற் கரிய நிழல்புனற்கே
கண்டே வெருண்டத் தூண்டிலெனக்
கலங்கித் திசைநான் கினுமோடுப்
பிறிதோ ரிடமுங் காணாது
திரும்பிப் பழைய வழிக்கேகும்
செய்கைப் பெருமாள் வருகவே
செவ்வேற் பெருமாள் மயிற்பெருமாள்
தெய்வப் பெருமாள் வருகவே.
58✓
கன்னற் குலமும் பலபொதும்பிற்
கறங்கு மிறாலும் பிறங்கியமுக்
கனியும் பொழிந்த கொழுஞ்சாறும்
கழனி மடுப்பக் கழனிபடும்
பன்னெற் கதிரும் பசுந்தாளும்
பசுந்தாண் மேய்ந்த பான்மேதிப்
பைம்புற் கொளுவுங் கடைவாயும்
பருவத் தரிந்த பிறையிரும்பும்
முன்னற் கரிய பெரும்போரும்
அப்போர் விளைத்த மள்ளர்கையும்
முதிரும் வருக்கைச் சுளையழித்துக்
குவித்த களம்போன் முதன்மொழிந்த
செந்நெற் களமு மளியலம்பும்
செய்கைப் பெருமாள் வருகவே
செவ்வேற் பெருமாள் மயிற்பெருமாள்
தெய்வப் பெருமாள் வருகவே.
59வேறு✓
குரைகழ லடியை யடியவ ரிருகை
கொடுதொழு துருக வருகவே
குவலய முழுது மலமற வறிவு
குணநெறி பெருக வருகவே
அரைவட மணியு மணிபரி புரமும்
அலைகள் பெருக வருகவே
அவுணர்த முயிரு முதிரமு மறலி
அலகைகள் பருக வருகவே
வரைமுக டிடிய மழையுடல் கிழிய
வரிமுது குரக நெளியமேன்
மகிதல மதிர வுடுகுல முதிர
வலம்வரு பரிதி யிரியவேழ்
திரைகட லலகு தெருமர முருக
சிறைமயி லிறைவ வருகவே
தெரிதமிழ் வளவ னகரியின் முருக
திருமகள் மருக வருகவே.
60✓
பதறிய கலப மறநெறி யுலவை
படவட குவடு மிடையவேழ்
படுகட னடுவு கிழிதர வுரக
படமுடி யிடிசெய் துலவுவாய்
உதறிய வருண மணிகண கிரண
உலகிருள் கடிய முடியவே
றுழிதரு மயிலின் மரகத துரகம்
உகையறு முகவ வருகவே
கதறிய விரலை கடகரி வருடை
கவிமரை கரடி யிடறிவீழ்
களபமொ டகிலு மடியற நெடிய
கழைபொழி தரள முருளநீர்
சிதறிய வருவி யொழுகிய பழனி
திகழ்மலை முதல்வ வருகவே
தெரிதமிழ் வளவ னகரியின் முருக
திருமகள் மருக வருகவே.
61✓
கரிபுரம் வெளிறு மகபதி ககன
கனபதி புகுத வெகினனார்
கருதுற வரிய வுபநிட வறிவு
கலையறி குறிய நறியநீள்
பரிபுர மழலை யிருபத விமலை
பணைமுலை யமுத மொழுகவோர்
பகீரதி நயன பதுமமு மிதய
பதுமமு மலர வருகவே
அரிபுர நிகரு முகிலிடி வயிறும்
அறைபட விடியு மலறவே
அலைகடல் பலவு மகிலமு முடுக
அடுபகை பொதுளி யிருளமா
திரிபுர மெரிய வொருவிசை முறுவல்
செயுமவன் மதலை வருகவே
தெரிதமிழ் வளவ னகரியின் முருக
திருமகள் மருக வருகவே.