முருகன் App
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
அந்தகக்கவி வீரராகவ முதலியார்
சப்பாணிப்பருவம்5 / 11
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் · அந்தகக்கவி வீரராகவ முதலியார்

சப்பாணிப்பருவம்

32✓
பாரங்க மீரேழை யுஞ்சுமக் கின்றவப்
பணிராச ராசமகுடப்
பந்திபெய ரத்திசைத் தந்திபெய ரப்பருப்
பதகோடி கோடிபெயரச்
சூரங்க மாவடிப் பெயரவீ ரைந்துமா
ருதமுந்து ரந்துவீசச்
சுடராழி யும்பெயர வந்துபே ரமரரொடு
தொல்வரைக் கரசுபெயர
ஓரங்க மாயிரமு கப்பாணி தலைக்கொண்
டுலாவுசூ லப்பாணிதன்
உவகைக்கு மாரமுற் கரகபா ணிக்குமுடி
யுடையப் புடைக்கும்வீரா
சாரங்க பாணிதன் மருகசே யூர்முருக
சப்பாணி கொட்டியருளே
சத்தியே வற்பாணி குத்துசே வற்பாணி
சப்பாணி கொட்டியருளே.
33✓
வங்கக் கடற்சூழு மெழுதீ வையுந்தெய்வ
மாவின்சு னிக்காவலாய்
வலம்வந்த செந்தா மரைப்புலத் தண்டையும்
வயிரச்ச தங்கைநிரையும்
திங்கட் கதிர்ப்பரிதி வெங்கதிர் வெருண்டண்ட
கூடந்தி டுக்கிடுமணித்
திருவரைக் கிங்கிணியு மொருபோது மாறாது
செய்கைநகர் வைகுமதலாய்
துங்கத் திருக்கூட லாடிறைவ னார்முனந்
துறைபெறச் சொற்றபொருளின்
தொன்மையுரையேழேழி னன்மையுரையீதெனும்
சோதனைக் குலகு காணச்
சங்கத் தமிழ்ப்பலகை யேறுபுல மைத்தலைவ
சப்பாணி கொட்டியருளே
சத்தியே வற்பாணி குத்துசே வற்பாணி
சப்பாணி கொட்டியருளே.
34✓
பேழைத் திரட்கொண்ட வெண்டரள பந்தியைப்
பெய்யக் கவிழ்த்தபரிசிற்
பெருமுத்து குத்தவெண் சங்குநூ றாயிரம்
பின்பிடித் தொருவாளைபோய்க்
கூழைப் பிறைக்குவளை சூடுமக் கடைசியர்
குழாங்கண்டு விண்டுவெருவக்
குழுமிக் கரைச்சென்று தவழத் துரக்கின்ற
கொள்ளைக் குளத்தருகெலாம்
வாழைக் குலைக்குலமு மஞ்சளிஞ் சிக்காடும்
மதுரக் கருப்படவியும்
வளவயற் சாலியும் வேலியுஞ் சதகோடி
மடியப் படிந்துசிதறத்
தாழைக் குலக்கனி கனிந்துசொரி சேயூர
சப்பாணி கொட்டியருளே
சத்தியே வற்பாணி குத்துசே வற்பாணி
சப்பாணி கொட்டியருளே.
35✓
நீளவட் டப்பறவை யோரேழை யுந்தனது
நிழலே கவிப்பவிருபால்
நீலக் கலாபம் பரப்பியிப் புவியெலாம்
நெளியநின் றகவிநேமி
வாளவட் டத்தையு மெட்டுநா கத்தையும்
மதநாக மோரெட்டையும்
வைக்கும் பணாமவுலி நாகமிரு நாலையும்
வாய்க்கொண்டு மூதண்டமாம்
கோளவட் டக்கிரண மாயிரமு முதுகுடக்
கொத்துமா ணிக்கமுதிரக்
கோபத்தொ டுதறியுஞ் சாபத்தொ டெழுகின்ற
கொண்டலைக் கண்டளவிலாத்
தாளவட் டத்தினடி மாயூர சேயூர
சப்பாணி கொட்டியருளே
சத்தியே வற்பாணி குத்துசே வற்பாணி
சப்பாணி கொட்டியருளே.
36✓
ஒப்பாரு மற்றகொற் றப்பரவர் பேதையர்
உவப்பினொரு வர்க்கொருவர்போய்
உவரிக் கரைத்தலைச் சிற்றிலை யிழைத்தந்தி
ஊருழைப் போதுபோதிற்
கப்பாரு முத்தரும் பியபுன்னை காள்கரும்
பனைகாண் மடற்கதைகாள்
காணா தெமைத்தேடி னாலெங்கண் மகவுங்கள்
கையடைக் கலமாகையால்
மெய்ப்பாணி மஞ்சனமு மிடுமின்வெண் ணீறிடுமின்
விழுநிலக் காப்புமிடுமின்
மெத்துமுத் தங்கொடுமின் வருகவென் றெதிருமின்
விரும்புமம் புலியையழைமின்
சப்பாணி கொட்டுமி னெனுஞ் செய்கை நகராளி
சப்பாணி கொட்டியருளே
சத்தியே வற்பாணி குத்துசே வற்பாணி
சப்பாணி கொட்டியருளே.
37✓
மதகோடி யாயிரங் கோடிசெஞ் சேல்புகுத
வயமருப் பெருமைக்குழாம்
வயலிற் கிடந்தனவு மாடவீ திக்கடைய
வரவிறா லைப்பொருதுபோய்
விதகோடி கண்டலை யலைக்கின்ற சேயூர
வெய்யகன லித்தேவனும்
வெண்ணிறக் கங்கையில் விடுத்தலுஞ் சரவண
மிசைச்சென்று வளர்கின்றநாள்
பதகோடி வேதங்கண் மணநாறு மாறுசெம்
பவளத்து ளாறுமீனப்
பணைமலைத் துணைமுலைப் பாலருவி பாயப்
பசுந்தாம ரைத்தொட்டில்வாய்ச்
சதகோடி பானுவொத் தழகெழத் துயில்குழவி
சப்பாணி கொட்டியருளே
சத்தியே வற்பாணி குத்துசே வற்பாணி
சப்பாணி கொட்டியருளே.
38✓
பௌவத் திறங்காத வைகைப் புனற்கும்
படுங்கனற் குங்கவுரியன்
பாதகக் கூனுக்கும் வெப்புக்கு மரசைப்
பதிக்கே பனைக்குமுனிவிற்
கௌவத் துரக்கின்ற வெவ்வரா வின்கொடுங்
கடுவுக்கு மக்கடுவினால்
காயத்து ளார்விடக் காயத்தை வெந்தழல்
காயவே மென்பினுக்கும்
தெய்வப் பெருஞ்சுருதி யடவியிற் கதவுக்கும்
நெறியிலாச் சிறுபுத்தனார்
திண்சிரத் திற்குமுமை திருமுலைப் பாலறாத்
திருவாய்ப் பசுந்தமிழினைச்
சைவத்தை யறிவித்த கவிவீர சேயூர
சப்பாணி கொட்டியருளே
சத்தியே வற்பாணி குத்துசே வற்பாணி
சப்பாணி கொட்டியருளே.
39வேறு✓
முகடுகிழி வித்தழுத சிறுகுரல் செவிப்புகுது
முற்றரள மொத்தெழுநிலா
முறுவல்பொலி யக்குறுகு மறுவர்முலையிற்சுதகம்
முப்போதும் விட்டொழுகுபால்
அகடுநிமி ரப்பருகி யொருசரவ ணத்தமரு
மக்கால முக்கணுடையார்
அமலையை யெடுத்தியென மலைமக ளெடுத்துவளர்
அத்தாவ ருத்தியரசே
பகடுகண் மருப்பொடிய வடமதுரை யிற்பொருது
பற்றாத றப்பொருதுநேர்
பணைமருதறப்பொருது துணைபெறுபிறைக்குநிகர்
பற்பேயி னைப்பொருதுவோர்
சகடுபொரு சிற்றிடையன் மருகமுரு கக்கடவுள்
சப்பாணி கொட்டியருளே
தவளமதி யக்கவிகை வளவநக ரிக்குமர
சப்பாணி கொட்டியருளே.
40✓
மகரசல திப்படியின் மலரடி நினைப்பவர்
மனத்தாம ரைப்பரிதியே
மறமகள் விழிக்குவளை கயமகள் விழிக்குவளை
மைப்போதி னுக்குநிலவே
நிகரவச லப்புதல்வி முகிழ்முலை முகட்டிடு
நிறத்தரவ டத்தரளமே
நிருதரென நெட்டுலகு பொருதுகவ ரத்திகிரி
நெருப்பாறு வித்தபுயலே
சிகரகிரி விற்கைகொடு திரிபுரமெ ரித்தவர்
திருக்கூடு விட்டசுடரே
திகிரியன் வயக்குலிச னிரணிய கருப்பனிவர்
செப்பார ணத்துமுதலே
சகரமடு வைக்கனலு சுடர்விடு மயிற்கடவுள்
சப்பாணி கொட்டியருளே
தவளமதி யக்கவிகை வளவநக ரிக்குமர
சப்பாணி கொட்டியருளே.
41✓
வளைபடு கடற்புவியி னுயிர்படு பிறப்பொழி
வழிக்காக வைத்ததுணையே
மதுரமுரு கக்கவிதை மகிழ்தரு திருப்புகழ்
மலர்க்கே மணத்தமணமே
திளைபடு தமிழ்ச்சுவையி னிருபதம் வழுத்திய
திறப்பா வலர்க்குநிதியே
திசைமுகனை யெற்றியவன் மகனையடிமைக்கொடு
செவிக்கே தெளித்தபொருளே
களைபடு துயர்ப்புணரி யினுமமர ரைக்கனக
கரைக்கேற விட்டகலமே
கயிலையர சற்கரசி பகிரதி யிவர்க்கினிய
கட்டாம ரைக்குண்மணியே
தளைபடு கடப்பமல ரளிகுல முழக்குபுய
சப்பாணி கொட்டியருளே
தவளமதி யக்கவிகை வளவநக ரிக்குமர
சப்பாணி கொட்டியருளே.