முருகன் App
சென்னை மாநகர்க் கந்தசுவாமி பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
அம்புலிப்பருவம்8 / 11
சென்னை மாநகர்க் கந்தசுவாமி பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்

அம்புலிப்பருவம்

(சாமம்)
61ஒப்புமை கூறல்✓
முருகனும் சந்திரனும் சமம்
சீதகிர ணப்பிரபை மலிவுற்று வெண்ணிறம்
திகழவரு கின்ற சீரும்
சேயிழை மடந்தையர்கள் சிலர்சிந்தை செய்யச்
சிலர்க்குவகை நல்கு பண்பும்
வேதனொடு வந்தமத வேளுக்கு மேலென்ன
மெய்ப்புலவர் செப்பு புகழும்
வெள்ளத்தி னும்பொருவில் வெற்பினு மிகச்சென்று
விளையாடு கின்ற வியனும்
மாதமொரு நாள்உலகில் அனைவோரும் விரதமொடு
வழிபடத் தக்க மாண்பும்
மழுவாளி கண்ணில்வரு வோன்எனப் பலநூலும்
மாறாது ரைக்கும் இயல்பும்
ஆதவ(ன்) நடுச்சென்று மீளலும் இவற்கும்உள(து)
அம்புலீ ஆட வாவே
அன்னம்அமர் செய்குலவு சென்னைமுரு கையனுடன்
அம்புலீ ஆட வாவே.
62✓
நல்லகிர்த் திகைமகளிர் காதலன் எனப்புலவர்
நவிலச் சிறந்து பல்லோர்
நடுவினிற் கொலுஇருந்(து) உம்பர்வழி யாய்இந்த
நானிலம் சுற்றி மலரோன்
சொல்லவளர் ஓராறு நெறிகளின் பொதுவாய்த்
துலங்கிஒரு மங்கை வலிதில்
தோயும்நலம் எய்திஈ ரெண்கலையில் வெவ்வேறு
தோற்றமென உருவெ டுத்து
வெல்லவல மேடத்தின் மீதேறி மற்று(ம்)மனம்
வேண்டுசில வாக னத்தின்
மேற்கொண்டு பல்உயிரும் வெருளஉல கெங்கணும்
விரிந்தெமனும் வெட்க நிற்கும்
அல்லற முனிந்திடுதல் இருவர்க்கும் உடைமையால்
அம்புலீ ஆட வாவே
அன்னம்அமர் செய்குலவு சென்னைமுரு கையனுடன்
அம்புலீ ஆட வாவே.
63✓
செங்கரும் புச்சிலைக்(கு) அஞ்சித் தொடர்கரிய
சேயிழையை மருவு பண்பும்
சித்திரத் தினும்அதிக உல்லாச மாகச்
சிறக்கின்ற பெருவ னப்பும்
பங்கய மலர்த்தொகுதி நாணு(ம்)முக மும்துணைப்
பட்சமும் பட்சி யுறவும்
பனிமலர்த் தருநிழற் புலவர்குலம் வாழுமுன்
பாடு பட்டுயர் கீர்த்தியும்
சங்கரன் சடிலம் தொடும்பேறும் ஒருகளிறு
தலையாற் சுமக்கும் நலமும்
சலதிநடு விற்சென்று மீளலும் கொளுமிவன்
றனைஅனையன் நீஎனத் தேர்ந்(து)
அங்கரம் கொண்டுவா! வா!என்(று) அழைப்பதால்
அம்புலீ ஆட வாவே
அன்னம்அமர் செய்குலவு சென்னைமுரு கையனுடன்
அம்புலீ ஆட வாவே.
64பேதம் (வேறுபாடு)✓
பதினாறு கலையுடையன் நீ!இவன் கலைஆறு
பத்தோடு நாலும் நம்பும்
பத்தருக் குதவுவோன் அரவினைக் கண்டுட்
பயந்(து)அது விழுங்கி உமிழும்
ததிநாடி மெலிவைநீ! இவன்ஏறு(ம்) மயிலும்
தடந்தோ ளில்உறு சேவலும்
தடையறக் கொத்திக் கிழித்துண்ணும் இந்திரன்
தனதேவல் செய்கு வாய்நீ
புதிதாய மணிமுடி தரித்தவன் விரும்புமுயர்
பொன்னகரில் வைத்தோன் இவன்
போரவுணர் பெயர்சொலில் நடுங்குவாய் நீ!அவர்
புறங்காண வல்லான் இவன்
அதியாவல் உற்றுனை அழைக்கத் தகாதுகாண்
அம்புலீ ஆட வாவே
அன்னம்அமர் செய்குலவு சென்னைமுரு கையனுடன்
அம்புலீ ஆட வாவே.
65✓
முன்போது சூரியர்கள் பலர்நாண மிளிருமணி
முடிஆறு கொண்டோன் இவன்
முளரிமகிழ் ஒருபரிதி முற்படினும் உள்ளஒளி
முழுமையு(ம்) மழுங்குவாய் நீ!
பொன்போகம் விழைகின்ற தேவர்களில் ஒருவன்நீ!
புரதகனன் ஆதி யோரும்
போற்றுமுயர் புகழ்துன்று புனிதவேள் இவன்மதன்
புனையும்ஒரு குடையா வைநீ!
மின்போலு மலர்மக ளிடத்(து)அவனை ஈன்றவனும்
மெச்சவரு சாமி யிவன்நீ
வெளிறிலகு சயரோகி! இவன்அருட் சுடரா
விளங்குதிரு மேனி யுடையான்!
அன்போடு வானன அழைப்பதன் அதிட்டமே
அம்புலீ ஆட வாவே
அன்னம்அமர் செய்குலவு சென்னைமுரு கையனுடன்
அம்புலீ ஆட வாவே.
66✓
மலரவன் கைகொண்டு சிட்டித்த பொருள்நீ!
வருந்திஅவன் அழஇ டித்து
வந்தளையி லிட்டகை யுடையன்இவன், நின்உடல்
வளர்ந்துகுறை வாம்;இ வன்றன்
இலகுடன் ஒரேதன்மை யென்றென்றும் நிற்கும்விண்
இடம்அன்றி அறிகி லாய்நீ!
இவன்அண்ட பிண்டங்கள் எங்கணும் திரிகுவான்
இடைவிடா மறுஉன் றனக்(கு)
உலகறிய ஒருசிறிதும் மறுவில்லை இவனுக்(கு)
உனக்கிறப் பும்பி றப்பும்
உண்(டு)இவனை நம்புமவர் தொண்டர்க்கும் அவையுறா(து)
உவகையுற்(று) உனைய ழைத்தான்
அலகில்வள மருவுமலை தொறும்நடம் இடுங்குகனொ(டு)
அம்புலீ ஆட வாவே
அன்னம்அமர் செய்குலவு சென்னைமுரு கையனுடன்
அம்புலீ ஆட வாவே.
67வேறு (தானம்) உதவி✓
மயிலால் அரவப் பகைநீங்கி
மலர்க்கண் அருளால் மறுத்தீர்ந்து
வழங்கும் இலைவெண் திருநீற்றால்
மாறாச் சயநோய் வழக்கொழிந்து
கயிலைக் கிரியார் செவிகேட்கக்
கழறும் பொருளை உணர்வதனால்
கால பயமும் தவிர்ந்துமலர்க்
கடவுள் விதியும் கடந்துதமிழ்
பயிலு முனிவன் முதலாய
பழமைக் கவுமா ரரிற்கூடிப்
பலவா றாடும் பெரும்பேற்றைப்
பரிசாம் எனப்பெற் றிடலாகும்
அயில்வேற் குமர குருபரனோ(டு)
ஆட வருவாய் அம்புலியே
அழகார் சென்னைப் பதிக்குகனோ(டு)
ஆட வருவாய் அம்புலியே.
68✓
வேலும் மயிலும் துணையெனும்சொல்
விளம்பி யறியாக் கவிஞரையும்
வேதன் வகுத்த நெறியாறும்
விடுத்(து)ஓர் உயிர்கொன் றுணவுகொள்ளும்
மாலுந் தியபாழ் மதம்புகுந்து
வஞ்சம் புரிவோர் தமையும்வென்று
வல்லோர் வணங்கும் தலந்தொறும்போய்
வளமைத் தமிழாற் றுதிபாடிப்
பாலும் அமுதும் பலகோடி
பத்த ருடனே பகிர்ந்தருந்திப்
பாருள் ளளவும் திகழ்புகழும்
பதமும் பெறலாம் படப்பாம்பும்
ஆலும் துயில்மால் மருமகனோ(டு)
ஆட வருவாய் அம்புலியே
அழகார் சென்னைப் பதிக்குகனோ(டு)
ஆட வருவாய் அம்புலியே.
69தண்டம் (ஒறுத்தல்)✓
உன்னை விழுங்கி உமிழ்வானை
ஒருக்காற் பிடித்துக் கொடுவந்தோன்
உடலை இவன்தொண் டரில்ஒருவன்
உரவாட் படையால் ஒறுத்ததுவும்
பொன்னை நிகரும் இவன்தோகைப்
புரவி திருமால் இவர்கருடப்
புள்ளை எளிதிற் புசித்ததுவும்,
போதன் இவர்வால் ஓதிமப்புள்
தன்னை யிவன்கைப் பெருஞ்சேவல்
தட்டா தெடுத்துப் பருகியதும்
சரதம் தகர்உண்(டு) ஆனையுண்டு
தறுகண் கொளில்எங் ஙனம்ஆமோ?
அன்னை யெனும்வேற் படையானோ(டு)
ஆட வருவாய் அம்புலியே
அழகார் சென்னைப் பதிக்குகனோ(டு)
ஆட வருவாய் அம்புலியே.
70வேறு தந்தன தத்தன தன்னன தானன தந்தன தந்தனனா✓
தந்திஉ னைப்பொருவும் வெண்ணிற மாம்அமு
தங்கவ ளம்கொளலே
சண்டைவி ருப்புடன் உன்னிடு(ம்) மேடம்(அ)
தன்பகை நின்குலமே
திந்திமி தித்தக தொம்மென ஆடிய
செஞ்சிகி நஞ்(சு)உணலே
திண்பெறு குக்குட மன்னிய கால்இகல்
சிந்தமு னிந்திடலே
வெந்திடும் அக்கினி என்நவ வீரர்கள்
வென்றிம லிந்துளதாம்
மின்றிகழ் சத்திகொள் முன்னவ(ன்) நாடிடும்
விந்தைசெய் கின்றவரே
மந்திர முற்றருள் சண்முக வேளிடம்
வந்தருள் அம்புலியே
மங்கள மிக்குயர் சென்னைவி சாகன்முன்
வந்தருள் அம்புலியே.