சென்னை மாநகர்க் கந்தசுவாமி பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
வருகைப்பருவம்7 / 11
சென்னை மாநகர்க் கந்தசுவாமி பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்
வருகைப்பருவம்
51முருகனை வரும்படி அழைத்தல்✓
கந்தா வருக! திருஞானக்
களிறார்ந் தருமைக் கவுமாரர்
கண்முற் றிகழ்வாய் வருக!நறும்
கமல மலரிற் கடவுள்மிகச்
சிந்தா குலத்திற் படமுனிந்து
சிரத்தில் இடித்துத் தளைபூட்டும்
செல்வா வருக! சிவன்பணியும்
தெய்வக் குரவா வருக!இரு
பந்தா முலைக்குஞ் சரிதழுவும்
பவள மலையே வருக!ஒரு
பரண்மீ திருந்தாள் அடிபரவிப்
பணிவாய் வருக! பார்ப்பதியாள்
மைந்தா! சென்னைப் பதிக்குமரா!
வருக! வருக! வருகவே!
மயில்வா கனத்துப் பெருமாளே
வருக வருக வருகவே. 51
52நகர்வளம்✓
தளஞ்சேர் கமல மலரோங்கும்
தண்ணீர்க் குடத்திற், பசுந்தேனும்
தயங்கும் இசைவண் டினமும்மணி
தருஞ்சூல் உளையும் வளைத்திரளும்
குளஞ்சேர் மொழியார் விளையாட்டும்
கொல்லு மலர்க்கண் மலர்க்கொதுங்கும்
குவளைத் திரளும், அகல்வானிற்
குதிக்கச் சலியாக் கொழுமையுறும்
இளஞ்சே லினமும் முழுகியெழும்
எருமை முலைக்கண் சொரிபாலும்,
எகினத் தொனியும் இருக்கையும்தோய்ந்(து)
இமையார் உலக மெனத்தோன்றும்
வளஞ்சேர் சென்னைப் பதிமுருகா!
வருக! வருக! வருகவே!
மயில்வா கனத்துப் பெருமாளே
வருக வருக வருகவே. 52
53உமாதேவியின் அழைப்பு✓
ஆடவருக! எடுத்து முகந்(து)
அணைக்க வருக! பலபணியும்
அணிய வருக! திருமுலைப்பால்
அருந்த வருக! அலரு(ம்)மலர்
சூட வருக! உடற்புழுதி
துடைக்க வருக! குதலைமொழி
துலங்க வருக! மடிமீதில்
துயில வருக! எனஉமையாள்
கூட இருக்கும் பெருமான்கண்
குழைச்சங் கணிகா தொடுகுளிரக்
கொஞ்சி யழைக்க வரும்குமரா!
கூவு மொழிகேட் டிலைகொல்லோ?
மாட மலிசென் னையில்ஒருக்கால்
வருக! வருக! வருகவே
மயில்வா கானத்துப் பெருமாளே!
வருக! வருக! வருகவே. 53
54தனது அனுபவம் கூறல்✓
தறுகும் அருமைத் திருவுளத்தின்
தாயார் முலைப்பால் மணம்கமழ்பல்
தவிர்ந்து மடவார் இதழ்விரும்பத்
தகும்பல் முளையாப் பருவத்தே
பெறுதண் டமிழால் மிகத்துதித்தும்
பிரச மலர்ப்பூ சனைபுரிந்தும்
பெரியோர் பதந்தோய்ந்(து) உதிர்ந்ததுகள்
பிறங்கும் சுடர்முன் தலைக்கணிந்தும்
வறுமைக் கனலாற் சூடுண்டும்
மலைமீ துருண்டும் தமியேன்முன்
வந்தாய் இலையே! அந்தோ!என்
வருத்த முழுதும் அறியாயோ!
மறுவில் புகழ்சென் னையிற்றலைவா!
வருக! வருக! வருகவே
மயில்வா கனத்துப் பெருமாளே!
வருக! வருக! வருகவே. 54
55வேறு
தன்னிலை குறித்து அவலமுறுதல்✓
முத்தமிழ்ப் பனுவற் பெருக்கினைக் கனலினொடு
முந்நீரில் விட்டெறிந்தும்,
முப்பத்து முக்கோடி தேவர்முதல் யாவரையும்
முறைமாறி நிந்தைசெய்தும்,
சத்த விதபேதம் கலந்த பொதுவேடம்
தரித்தும், பொருட்கலைந்தும்
தரளநகை மதிவதன மகளிரிள முலைநலம்
தன்னைக் குறித்தும்ஒன்றும்
சுத்தபர மானந்தம் உற்றவல் லோர்கள்பலர்
சூழமகிழ் வாழ்வின்இச்சை
தொலையாது வளரப் புரிந்தனை! உனைக்கண்டு
தொழநாடி மிகமெலிந்தேன்
சித்தருக் கரசாய சிவனும்வழி படநிலவு
தெய்வநா யகவருகவே!
சென்னைமா நகர்தழைய வருகந்த னேஅதிக
சீக்கிரத் தினில் வருகவே! 55
56வழக்கெடுத்தோதி வருகை வேண்டல்✓
அருணகிரி தானென்றொர் ஆயிரந் தரம்வந்(து)
அருட்கன விடத்துரைத்தும்,
அஞ்சலென்(று) இருகரம் காட்டியும், பொருளிரந்து
அலையவிட் டனை;அன்றியும்
சருவபிர சாதமென்(று) இலையிலும் வெண்ணீ(று)
தந்து(ம்)மட மங்கைநல்லார்
தருமயலு(ம்) மலிவுறக் கண்டனை; இவற்றினொடு
சாற்றிடத் தக்கவாய
பெருவழக்(கு) இன்னமும் அனந்தமுண்(டு) அன்பரெதிர்
பேசாமல் விடுவதில்லை
பீலிநிழ லிற்றிகழும் வேலினொடு நனவிற்
பிறங்கா திருக்கைமுறையோ!
திருமகள் பிரானுக்கு மருமகன் எனக்குலவு
தெய்வநா யகவருகவே
சென்னைமா நகர்தழைய வருகந்த னே!அதிக
சீக்கிரத் தினில்வருகவே. 56
57வேறு
தனதன தனதன தனதன தனதனதன்னன தனனா தனதனா✓
அரன்வழி படமகிழ் குருவென மொழியினும்
அன்னவன் நுதலூ(டு) அவிர்வதாம்
அழல்விழி தரவரு சிசுவென நுவலினும்
அங்ஙனம் இசைவாம் இயல்பினான்;
இரவல ரொடுபல புலவர்கள் மிடிகெட
இம்மையில் அருள்கூர் பெருமையான்
இமகரர் மறுவிலர் சிலர்உல விடல்நிகர்
என்னும்நன் முகம்ஆ(று) உடையவேள்
சரவண பவன்அழ கியமயில் மிசைதிகழ்
தன்மையன் அடியார் பகைவர்ஊர்
சலதியில் முழுகிட முனிபவன் மறமகள்
சம்மத வழிபோம் நடைகொள்சேய்
திரமுறு பரமெனும் நிலைதவ றிடன்;ஒளிர்
செந்நிற முகிலே! வருகவே
தெளிதமிழ் நயமுணர் உணர்வினர் மருவிய
சென்னையின் முருகா! வருகவே.
58✓
அலைகடல் அணிபுவி, மலர்மக ளொடுதினம்
அண்ணிய புயமால் மருகனே!
அரவமும் மதியமும் இதழியும் அவிர்சடை
அண்ணலை அகலாள் புதல்வனே!
கொலைமலி நிசிசரர் தமைஅவர் பவமொடு
கொன்முனை நெடுவேல் வயவனே!
குகுகுகு குகுகுகு எனும்ஒலி தருகொடி
கொன்மலை நிகர்தோள் வரிசையாய்!
நிலைதொனி சுவைநிறம் அறிகிலர் கவியையும்
நெய்ம்மலி குரவோ(டு) அணிகுவாய்!
நெறிகளில் உயர்வது கருணைய தெனும்ஒரு
நின்னயம் உடையார் உறவனே!
சிலைமதன் மலர்தொட வனசரர் குடிலிடை
சென்மல ரடியாய்! வருகவே!
தெளிதமிழ் நயமுணர் உணர்வினர் மருவிய
சென்னையின் முருகா! வருகவே.
59வேறு
தனன தனன தனன தனன
தன்ன தனன தனதனா✓
பருவ மகளிர் உருகி யினிது
பன்னும் அழக! வருகவே
படியர் கதறி மறுகு கொடுமை
பண்ணும் ஒருவ! வருகவே
இருமின் இடையில் நிலவு பவளம்
என்னும் உருவ! வருகவே
இமய மகளும் அரனும் அருமை
எண்ணு புதல்வ! வருகவே
கருணை யருவி சொரியும் நெடிய
கண்ணின் மிகைய! வருகவே
ககன வனிதை முகர உதவு
கன்ன அணிய! வருகவே
செருவில் உயரும் வலிமை குலவு
தென்னர் தலைவ! வருகவே
திருவும் விதியின் மனையு(ம்) மருவு
சென்னை முருக! வருகவே.
60தய்ய தாத்த தன்ன தாந்த தனன தனன தனதனா✓
வள்ளி மாக்கொ(டு) உண்ணும் ஆண்டி
வருக வருக வருகவே
வைத பாட்டும் நண்ணு சேந்தன்
வருக வருக வருகவே
வள்ளல் ஆக்கம் மன்னு மாண்பன்
வருக வருக வருகவே
மையின் மேற்கொ(டு) உன்னு பாங்கன்
வருக வருக வருகவே
வள்ளை மாப்பெண் முன்னு காந்தன்
வருக வருக வருகவே
வல்ல வேற்கை துன்னு தோன்றல்
வருக வருக வருகவே
வள்ளல் போற்று மஞ்சை தாங்கி
வருக வருக வருகவே
வையம் ஏத்து சென்னை வேந்தன்
வருக வருக வருகவே.