சென்னை மாநகர்க் கந்தசுவாமி பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
சிறுதேர்ப்பருவம்11 / 11
சென்னை மாநகர்க் கந்தசுவாமி பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்
சிறுதேர்ப்பருவம்
91சோலைச் சிறப்பு✓
புன்னைமலர் வண்டின்இசை குயில்பாடும் இசையினொடு
பொலிவுறப் புனல்அ ருந்தும்
புயலினொடு தென்றல்வந்(து) உலவமர கதநிறப்
புள்ளிமா மயில்க லாபம்
தன்னையும் சிறகையும் விரித்தகவி நடம்இடத்
தாவு கோடர மகிழ்ந்து
தண்ணுமையில் முட்கனி தனைக்கொட்டி அலர்மலர்த்
தாளமும் இடக்கண்டதால்
பொன்னைநில மாவுடைய புனிதநகர் மங்கையர்
பொறாமையுற் றுக்கண் இமையாப்
புலர்வுறத் திகழ்பொழிற் செறிவுடுத்(து) இணையிலமெய்ப்
புகழ்பொறுத் துக்கு லாவும்
சென்னைமா நகரிணிற் குடிகொண்ட கந்தனே
சிறுதேர் உருட்டி யருளே
சிவன்விழிப் பொறியெனச் சரவணத் துற்றவா
சிறுதேர் உருட்டி யருளே.
92முருகன் ஏந்திய ஆயுதவகையும், கைகளின் இயல்பும்✓
சங்கரன் வியந்துகொளும் இருதலைச் சூலமும்
தமதியப் பதிபு ரக்கும்
தலைவன்முத லோர்புகழும் வயிரமும் சாபமும்
சாயகமும் நெடிய வாளும்
துங்கமுறு பலகையும் சக்கரமும் வளையும்
துறட்டியும் கயிறும் ஏந்திச்
சுடரனைய செஞ்சுட்டு வாரணம் பற்றித்
துலங்கும் இலைவே லணைத்துக்
கங்கண மிலங்கச் சிலர்க்கபய வரதமும்
காட்டி, இவையன்றி மற்றும்
கழறுவார் கழறுமவ் வண்ணமவர் நெஞ்சிற்
கவின்(று)இலை விபூதி யுதவும்
செங்கமல மலரனைய கைகொண்டு சென்னையிற்
சிறுதேர் உருட்டி யருளே
தெண்டிரைத் திரள்குலவு சரவணத் துற்றவா
சிறுதேர் உருட்டி யருளே.
93✓
அரிநெடுங் கணையாக, மேருமலை வில்லாக
அரவரசு நாண தாக
அமரரும் பூதரும் படையாக நான்முகம்
அமைந்தவன் சூத னாக
விரியுமறை ஒருநான்கும் மாவாக நீஉணரும்
மெய்ப்பொருள் இருந்த பதியாய்
வெள்ளையறி(வு) உள்ளவரும் விள்ளக் கிடந்தபொறி
விசைகொண்ட கசையதாகப்
பரிதிமதி உருள்ஆழி யினமாக வரையினம்
பரவையினம் ஆதி யாவும்
பலவகை உறுப்பாக நகையினும் கனலுடைய
பரமன்ஒரு தலைவனாகத்
திரிபுரம் பொடியாக வருபெருந் தேரில்ஒரு
சிறுதேர் உருட்டி யருளே
சென்னையின் புகழுனைய சரவணத் துற்றவா
சிறுதேர் உருட்டி யருளே.
94கயல்மீன்களின் வளம்✓
பாலுடைக் கவரியின(ம்) முழுகிட அவற்றினது
பருமடியின் மீது முட்டிப்
பைங்கன் றெனக்குழைந்(து) அவைசொரிந் திடல்மிகப்
பருகிப் பருத்து வப்பால்
வாலுடற் குருகினந் தனைவெருட் டிக்கமுகில்
வாழையில் தாழை தன்னில்
மலிகுலை யறப்பாய்ந்து மின்னெனக் கோடரமும்
வாள்அரவும் அஞ்ச உன்னிச்
சாலு(ம்)முகி லைக்கிழித்(து) ஆதித்தன் மண்டலம்
தாண்டி இமகரன் வசிக்கும்
தலமும்விட் டுத்தனது பெயர்புனையும் உடுவினம்
தனைஉழக் கித்தி ரும்பும்
சேல்உலவு பெருவளச் சென்னைநக ராதிபா
சிறுதேர் உருட்டி யருளே
செம்பவள மலையெனச் சரவணத் துற்றவா
சிறுதேர் உருட்டி யருளே.
95வேறு - தண்ணீர்ச் சிறப்பு✓
கைந்நீ டியசெம் புகர்வனப்புக்
களிறு பொழியு(ம்) மதப்புனலும்
கதலிக் கனிமாங் கனிபலவின்
கனிஆ தியவிற் கசிதேனும்
மைந்நீங் கரிய விழிமகளிர்
வனச முலைப்பொற் புதுமுலையில்
மாறா திழியும் மணச்சேறும்
வாவிக் கமலம் மணிக்குவளை
மொய்ந்நீந் தலிற்சிந் தியநறவும்
மொழியும் இவைநேர் வனபிறவும்
முந்நீர்க் கடலின் புலவகற்றி
முகிலும் மலையும் மணம்கமழச்
செய்ந்நீர் திகழ்சென் னையிற்குமரா
சிறுதேர் உருட்டி யருள்வாயே
செவ்வேல் அணிந்த புயமுருகா
சிறுதேர் உருட்டி யருள்வாயே.
96சிறுதேர் உருள்வதால், இவையிவை உருளவேண்டுமெனல்✓
வல்லார் உளத்திற் குறிஉருள
வாக்கில் இருமூன் றெழுத்துருள
மலர்மென் கரத்தில் மணியுருள
வானிற் கதிர்வெண் மதியுருளப்
பொல்லார் உடலம் களத்துருளப்
புலவர் மிடிநோய் புறத்துருளப்
பொன்னூர் அமரர் துயர்முழுதும்
புலைவாள் அவுணர் புரத்(து)உருளக்
கல்லா மனத்துக் கயவர்கொடும்
கண்ணீர் அருவி கரைந்துருளக்
காமர் முழுவெண் திருநீற்றோர்
களிக்கண் தரளம் கனிந்துருளச்
செல்லார் பொழிற்சென் னையிற்றலைவா
சிறுதேர் உருட்டி யருள்வாயே
செவ்வேள் அணிந்த புயமுருகா
சிறுதேர் உருட்டி யருள்வாயே.
97முருகன் போர்ச் செயலும், தன்னை யாண்ட கருணையும்✓
வெய்ய சமரில் நவவீரர்
வெற்பில் மயங்க உருட்டும்ஒரு
வேழத் துதிக்கை முதல்உறுப்பு
வெவ்வே(று) உருள உருட்டிஅப்பால்
சையம் அனைய பெருஞ்சீயத்
தலையும் கரமும் உருட்டிஉடல்
தனையும் உருட்டித் தனிச்சூதம்
தறிபட் டுருள உருட்டிஒரு
பையல் பரவிப் பணிவானைப்
பட்சத் துடன்ஓர் மலைக்குவட்டிற்
பாற்றுக்(கு) உதவா வணம்உருட்டிப்
பரிந்தாண் டருளி உலகில்விடும்
செய்ய புகழோய்! சென்னைநகர்ச்
சிறுதேர் உருட்டி யருள்வாயே
செவ்வேள் அணிந்த புயமுருகா!
சிறுதேர் உருட்டி யருள்வாயே.
98வேறு - சந்தம்
தனதன தனதன தன்னன தானா, தனத்த தனதானா✓
இருள்படு மிடியிடை இன்னமும் நாயேம்
இளைத்து மறுகாதே
எமன்விட வருபடர் நின்னடி யார்பால்
எதிர்த்து மொழியாதே
கருணையில் வனசரர் அன்னவர், மேலோர்
கருத்தை இகழாதே
கடகரி நிகரொலி துன்னிய பாவார்
கலக்கம் அடையாதே
மருமலர் சொரிதரு கன்னல்வி(ல்) லானூர்
வழக்கு மலியாதே
மரகத மணிநிற மஞ்ஞையை நேர்வாள்
மகிழ்ச்சி யுறமேனாள்
ஒருபர சிவனருள் சண்முக நாதா
உருட்டு சிறுதேரே
உயர்புகழ் மருவிய சென்னைவி சாகா
உருட்டு சிறுதேரே.
99தந்தன தந்தன தன்னன தானா தனத்த தனதானா✓
நம்பறி வின்றிய புன்மையர் தாமே
நடுக்கம் அடையாரோ
நன்றிய றிந்துனை எண்ணுநர் மேலாம்
நலத்தில் அமிழாரோ
கொம்பவிர் கின்றவை உண்ணவும் நாணார்
குதர்க்கம் அழியாதோ
கொன்றிடல் அஞ்சிய நன்னெறி சேர்வார்
குறித்து மகிழாரோ
செம்பது மங்கொளும் மின்னனை யாள்நீர்
திருத்த(ம்) மருவாதோ
செந்தமி ழின்சுவை மும்மையும் ஓர்வார்
தியக்க(ம்) மறையாதோ
உம்பர் தொழும்பத(ம்) மன்னிய வேலா
உருட்டு சிறுதேரே
ஒண்புகழ் தங்கிய சென்னைவி சாகா
உருட்டு சிறுதேரே.
100தனதய்யனத் தனதன்னனத் தணனாதனத் தனனா✓
தெருள்நல்கும்உத் திரபொன்மயச் சிறுதேர்உருட் டுகவே!
சிவன்உள்ளு(ம்) மெய்ப்பத!பன் மணிச்சிறுதேர்உருட் டுகவே!
செருவல்லவர்க்(கு) எம!வன்மரச் சிறுதேர்உருட் டுகவே
சிகிமைகளிற்(று) இவர்தென்னமற் சிறுதேர்உருட் டுகவே
திருவௌவுபொற் பிடிஎண்ணநற் சிறுதேர்உருட் டுகவே
சிறுவள்ளியைத் தொழுமன்னவிற் சிறுதேர்உருட் டுகவே
தெருவைகுமத் தியநின்னெழிற் சிறுதேர்உருட் டுகவே
திறல்மல்குகைக் குக!சென்னையிற் சிறுதேர்உருட் டுகவே.
101வெண்பா✓
அந்தரரும் போற்றும் அணிச்சென்னை வாழவந்த
கந்தனது பிள்ளைக் கவிமுற்றும் - சிந்தனையிற்
கொண்டால் வினைப்பிணிபோம் கோடாது கோடிநலம்
உண்டாகும் நெஞ்சே உணர்.