முருகன் App
சென்னை மாநகர்க் கந்தசுவாமி பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
சப்பரணிப்பருவம்5 / 11
சென்னை மாநகர்க் கந்தசுவாமி பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்

சப்பரணிப்பருவம்

31✓
குரவமல ரும்செச்சை மலரும்அலர் நீபமும்
கூதாள மும்பு னைந்து
குன்றங்கள் தோறும் குறிச்சிதொறும் நடமிடும்
கோலா கலக்கு மரனே!
அரவரசின் உடலம்நெளி வுற்றுலைய விளையாடும்
அணிமயிற் கலப நிழலூ(டு)
அரிவையர்கள் இருவரொடு பவனிவரும் ஒருவனே!
அமரரொடு முனிவர் தாமும்
பரவநிசி சரர்தமது குலமறக் களையும்வேற்
படைகுலவு புயவீரனே!
பங்கய மலர்ப்பொகுட் டுறையும்விதி யறியாத
பரமரக சியம்உ ணர்த்தும்
சரவணப் புனலில்ஒரு சிறுகுழவி யானவா!
சப்பாணி கொட்டி யருளே
தன்னைநிகர் சென்னையினில் மன்னிவளர் சண்முகா!
சப்பாணி கொட்டி யருளே.
32✓
கானவர்கள் கண்டெடுத் துக்குடிலில் வைத்தெமது
கருவூல மென்று கொஞ்சிக்,
கண்குலவு பீலியந் தானையும் பலகறைக்
கலனுந் திருத்தி, அப்பால்
ஏனலிற் பரண்மீ திருத்திடக் கவணோ(டு)
இளங்குயி லெனக்கு லாவும்
எம்மைதரு தினைமா விழைந்துகிழ முனிவேடம்
இட்டுமுன் பட்ட பாடு
வானவர்கள் மகளறிந்(து) ஊடிக் கொளக்கெஞ்சி
வஞ்சமன்(று); உன்றன் ஆவல்
மனதில், அவள்ஆவல் உடலத்(து)எனச் சொல்லிஅவள்
மகிழும் குறிப்ப றிந்து
தாணுகி மெல்லெனச் சருவுமண வாளனே
சப்பாணி கொட்டி யருளே
தன்னைநிகர் சென்னையினில் மன்னிவளர் சண்முகா!
சப்பாணி கொட்டி யருளே.
33✓
கொங்காரு மென்மலர்த் துணர்மருவு கற்பகக்
குளிர்சோலை நீழ லின்கண்
குலவிநவ மணிஆ தனத்தமரர் பலரும்
குனிந்திறைஞ் சக்கு விறுறா
அங்காவி மலரனைய விழிமினார் நடமாட
அம்புயப் பரும லரைநேர்
ஆயிரங் கண்ணோடு கொலுஇருப் பவன்வலி(து)
அளித்தமகள் அருகி ருக்கப்
பைங்கான கத்தொரு குறத்திக்கு மயல்கொண்ட
பண்பினால், நம்பு மன்பர்
பலர்நிற்க என்னைப் பரிந்தாண்டொர் உண்மையும்
பகரத்து ணிந்த முருகா
சங்காய குழைநம்பர் தரவந்த கந்தனே!
சப்பாணி கொட்டி யருளே
தன்னைநிகர் சென்னையினில் மன்னிவளர் கந்தனே
சப்பாணி கொட்டி யருளே.
34வேறு - மகுடம்✓
பன்னீரிலைத் திருநீற்றின் பண்பு
வஞ்சக மனக்கயவர் உணர்வரிய புகழ்கொண்டு
மலைதோ றிலங்கும் அரசே!
வள்ளியினும் என்றனக் கினிதாகும் அன்பர்பகர்
வண்தமி ழெனப்ப கர்ந்தாய்!
செஞ்சரண யுகளம் குறிப்பார்கள் தமைநிந்தை
செய்யுமவர் குலம ழிப்பாய்!
சேவலங் கொடியொன்று திண்புயம் கருதுநர்
செயம்பெறக் கண்டு மகிழ்வாய்!
சஞ்சல(ம்) ஒழித்தெழிற் பன்னீரி லைக்குள்உறு
தவளவெண் ணீறு தானே
சருவபிர சாதமென நம்பிடுங் கவுமாரர்
சமரச விளக்க மாவாய்!
குஞ்சர முகக்கடவு ளுடன்வந்த துணைவனே
கொட்டி யருள் சப்பாணியே
குற்றமறு சென்னையினில் உற்றகும ரேசனே
கொட்டி யருள் சப்பாணியே.
35முருகன் கைதட்டலால் ஏற்படும் நிகழ்ச்சிகள்✓
வாரமிகு பொன்னகர்த் தேவர்கோன் மனைமுன்றில்
வாயில்மும் முரசு கொட்ட
வளமருவு பாற்கடலில் வந்தமின் னாருளம்
மகிழ்ந்துநெடு வீணை கொட்டச்
சூரன்முத லாமவுணர் நெஞ்சிற் றிடுக்கெனத்
தொலையாத பறைகொட் டஊன்
துய்க்கும்அகல் வாய்அசுர மங்கையர்கள் கண்ணீர்
தொடுத்(து)அருவி யென்று கொட்டப்
பூரமிவர் வாள்கணவன் நெடுமாயன் அன்னவர்கள்
புந்தியினில் உவகை கொட்டப்
பொதியையமா முனியனைய புண்ணியர்கள் மதுரம்
பொலிந்ததுதி கொட்ட மற்றும்
கோரமிகு பூதகணர் தோள்கொட்ட இன்றுநீ
கொட்டி யருள் சப்பாணியே
கொற்றமிகு சென்னையினில் உற்றகும ரேசனே
கொட்டி யருள் சப்பாணியே.
36வேறு✓
ஆலக் கொடுவாய்ப் பணியணிபூண்(டு)
அருந்தும் இரையும் அதுவாக்கொண்(டு)
அதன்மேல் நடக்கு(ம்) மயில்விரிக்கும்
அழகார் தோகைப் பரிநிழலில்
ஞாலத் தினையுண் டுமிழ்ந்தபிரான்
நளின மலர்க்கண் உதவுமிரு
நல்லார் அருகிற் களிகூர
நடுவுற் றிருந்து ஞாங்கர்முனைச்
சூலப் படைவெண் குலிசமுதற்
றுலங்கு மவைபற் பலபூண்டு
தொண்டு புரிவார் வசிக்குமிடம்
தோறுந் தினம்போய் விளையாடும்
கோலக் குமர குருபரனே
கொட்டி யருளாய் சப்பாணி
குறைதீர் சென்னைப் பதிமுருகா
கொட்டி யருளாய் சப்பாணி.
37✓
மதிக்குந் திருப்பாற் கடல்அமுதம்
வழியு மொழிப்பா வையர்சூழ
வன்னக் கிளிமேற் றினம்பவனி
வருவான் தொடுக்கும் மலர்க்கணையால்
விதிக்கு(ம்) முதுநூல் நெறிதவறி
வீணாட் கழித்து மனம்புண்ணாய்
வெறுக்கை யுடையார் மனைதொறும்போய்
வெதும்பி யெனைப்போல் மெலியாமல்
கதிக்கும் விருப்புற்(று) அருந்தமிழாற்
கனவி னிடத்தும் கடம்பணியும்
கழலைப் பரவி எழுத்தாறும்
கருதும் பெரியோர் கண்காணக்
குதிக்கும் கருணைக் குகவேளே
கொட்டி யருளாய் சப்பாணி
குறைதீர் சென்னைப் பதிமுருகா
கொட்டி யருளாய் சப்பாணி.
38வேறு - தாழிசை✓
நகர் வளம்
கணவரொ(டு) ஊடிய கன்னியர் சிந்திய
கற்பணி மிக்கேய்தல்,
கதிரவ னார்வெயில் என்னஇ லங்கிடல்,
கைக்களி(று) உற்றாசில்
மணமத நீர்ஒரு மும்மையு மிஞ்சிடல்
மட்குதல் அற்(று)ஊரும்
வளையமிழ் மாமணி வெண்மைது லங்கிடல்
மத்தம்எ ருக்காதி
இணரொடு சூடினர் அன்னவர் தம்புடை
இத்திறம் ஒப்பாகும்
எழில்வளம் ஆயிரம் மன்னுநெ டுந்தெரு
இற்றொறும் மெய்ச்சீர்கொள்
குணதரர் வாழ்வுறு சென்னையில் வந்தவ
கொட்டுக சப்பாணி
குருபர னாகிய சண்முக புங்கவ
கொட்டுக சப்பாணி.
39✓
மதியணி வார்சடை அண்ணல்வ ணங்கலின்
மற்றையர் கற்காத
மறைபொருள் ஓதிய வண்மைபெ றுங்குக!
மற்புய! விற்காரர்
துதிபகர் சேவக! விண்ணவர் முன்படு
துக்கம்ஒ ழித்தீடில்
சுவணம்நி லாவிய நன்னகர் இன்பருள்
சொற்பெரு மைச்சீல!
விதியழ மோதிய பன்னிரு திண்கர!
வித்தக! முற்பாவ
வினைமலி சாரணர் தம்மைமு னிந்தவ
வித்தைகள் ஒப்பாய
கொதிதிரை ஒலிடு சென்னைபு ரந்தவ!
கொட்டுக சப்பாணி
குருபர னாகிய சண்முக புங்கவ
கொட்டுக சப்பாணி.
40வேறு மகுடம் - சந்தம் தானன தந்தன தன்னன தய்யன தத்தா தத்தான✓
கூரநெ டுங்கதிர் துன்னயில் வல்லவ
கொட்டாய் சப்பாணி
கோமள மொன்றிய கன்னியர் புல்புய
கொட்டாய் சப்பாணி
கூரறி வின்சில புண்ணியர் உள்பவ
கொட்டாய் சப்பாணி
கோபமி குந்தக ரின்மிசை எய்தினை
கொட்டாய் சப்பாணி
கோரணி மிஞ்சிடும் அம்மணர் வைவினை
கொட்டாய் சப்பாணி
கோகன கம்பொரு பன்னிரு கைகொடு
கொட்டாய் சப்பாணி
கோரமில் சுந்தர(ம்) மன்னிய செய்யவ
கொட்டாய் சப்பாணி
கோதில்வ ளந்திகழ் சென்னையில் வைகினை
கொட்டாய் சப்பாணி.