முருகன் App
சென்னை மாநகர்க் கந்தசுவாமி பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
சிறுபறைப்பருவம்10 / 11
சென்னை மாநகர்க் கந்தசுவாமி பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்

சிறுபறைப்பருவம்

81✓
தெய்வம்ஒன்(று) அன்பர்கள் நிமித்தம்பல் வாறாய
திருவுருக் கொள்ளும் என்றும்
செந்தமிழ்ச் சந்தக் கவிச்சுவைக்(கு) உயர்பேறு
செவிகளுக் கில்லை யென்றும்
மெய்வழி கிடக்கப்பொய் வழிதேடி உழலுவது
வெவ்வினைக் கொடுமை யென்றும்
வீடுபெற் றுப்பிறவி நோய்தவிர்ந் தொழிவதே
மேலான பெருமை யென்றும்
மைவனப்(பு) இலகியகண் மங்கையர்கள் இன்பத்தின்
வாஞ்சையறல் அருமை யென்றும்,
மாலயன் முதற்றேவர் தாமும்மா னிடராகி
வருவதும் சரதம் என்றும்
செய்வளம் பெரிதிலகு சென்னைநகர் வேலவா!
சிறுபறை முழக்கி யருளே
சிவபிரான் வழிபடத் திகழ்ஞான தேசிகா
சிறுபறை முழக்கி யருளே.
82சிவனாதிய ஆறு கடவுளர்களே ஆறுமுகமெனல்✓
அம்பொன்வார் சிலைகொண்டு முப்புரம் எரித்தவனும்
ஆடலம் பிகையு(ம்) முந்நாள்
அமரர்குலம் வாழ்வுறக் கடல்கடைந் தமுதுதவ
அரிவையுரு ஆயி னானும்
கொம்பொன்(று) ஒடித்திகலும் அவுணேசன் ஆருயிர்
குடித்துக் களித்து ளானும்
குலவுகரம் ஆயிரம் கொண்டிருட் பகைவென்று
குவலயம் சுற்று வானும்
பைம்பொன் மழைக்கோள் முதற்குலவு பலரும்நின்
பதுமமுகம் ஆ(று) என்னமெய்ப்
பத்தருணர் வுற்றபடி பலரும் தெரிந்துயப்
பதினாலு லோகத்தினும்
செம்பொன்மா மதில்குலவு சென்னைநகர் வேலவா!
சிறுபறை முழக்கி யருளே
தென்பொதியை முனிபரவு சிவஞான தேசிகா!
சிறுபறை முழக்கி யருளே.
83கடலலை ஒதுக்கும் கவினுறு பொருள்கள்✓
வெளிறுபடு பலமுத்தி னங்களும் துல்உளைவு
மிஞ்சியிரை கின்ற சங்கும்
வித்தரும மிகையு(ம்)மணி வகைகளும், பலர்மனம்
வெதும்பப் பறித்த பொருளால்
களிபெருகி வேறொருவ ருக்கும்இட் டுண்ணாது
காலங் கழிக்கும் அவர்தாம்
காசொன்று நூறாகும் எனமரக் கலமதிற்
கட்டிவிட் டிடுவ பலவும்
குளிர்கமல மும்குவளை யும்புரையு மலர்வகைக்
குவியலும், தினம்இ ரந்து
கொள்ளுமவ ருக்(கு)ஆய கலமும், பசுந்தழைக்
கொத்துமுத லாய பிறவும்
தெளிகடற் றிரைசிந்து சென்னைநகர் வேலவா!
சிறுபறை முழக்கி யருளே
செந்தமிழ்ப் பைங்கிள்ளை யுணர்ஞான தேசிகா
சிறுபறை முழக்கி யருளே.
84சென்னையிற் குலவும் சிறந்த ஒலிமுழக்கம்✓
வயமருவு கவுமார மாதவர்கள் மிகவேலும்
மயிலும்என வேமு ழக்க
மதிசூடி யைப்பரவு வார்பலரும் அரகர
மகாதேவ எனமு ழக்க
வியன்மருவு பஞ்சா யுதக்கடவுள் ஆதியரை
வேண்டுவார் அவர வர்க்கு
விழைவான படிமுழக் கக்கலிக் கஞ்சாது
விப்பரர்கள் மறைமு ழக்க
நயமலியும் விழிமகளிர் செம்பவள வாய்கொண்டு
நற்குரவை ஒலிமு ழக்க
நால்வகைப் புலவோர்கள் கவிமுழக் கத்தேரின்
நடுநின்று சிறக டித்துச்
செயமுழக் கும்கொடிகொள் சென்னைநகர் வேலவா
சிறுபறை முழக்கி யருளே
தென்போரி யான்அனையர் தெரிஞான தேசிகா!
சிறுபறை முழக்கி யருளே.
85எருமைகளின் செயல்✓
ஒன்றுபடும் ஆழியந் தேருடைச் சுடரோனை
உச்சியிற் காணு முன்னம்
உழவர்ஏர் விட்டவிழ்க் கும்கரும் பகடுபல
ஓடிக் குதித்து வப்புற்(று)
அன்றுமலர் தாமரைத் தண்ணீர்த் தடத்திடை
அவாஅற முழுக்கா டிமீண்(டு)
அணிவேய் எனக்குலவு கன்னலங் காவினில்
அதட்டிப் புகுந்த வற்றை
மென்றுசில முத்தைக் கடித்துமிழ்ந்(து) அகடளவில்
மேய்ந்துசெவி அசைய வாயில்
வெண்ணுரை பெயச்சு வைத்(து) அங்கையொன் றில்லாத
வேழமாம் எனநடந்து
சென்றுதொழு விற்றுயில்கொள் சென்னைநகர் வேலவா
சிறுபறை முழக்கி யருளே
தெண்டனிடு வார்க்குதவி செயும்ஞான தேசிகா
சிறுபறை முழக்கி யருளே.
86வேறு✓
காவற் கடவுள் மகளிர்மனம்
களிக்கும் விளையாட் டுடையானே
கருது மவரைக் கனற்கோபக்
காலன் அணுகா தருள்வோனே
ஏவற் றொழிலும் புரிந்துசிலர்
இயம்பும் பனுவல் புனைவோனே
ஈரா(று)உருவன் எனப்பெயர் பூண்(டு)
எண்ணில் வடிவம் எடுப்போனே
சேவற் கொடியொன் றுடையானே!
சிறுநாட் கொடியிற் சலியானே
சீரார் கொடியிற் புனைபீலிச்
சேலைக் கொடிபால் இரந்தோனே
மூவற் றவிர்மெய்ப் புகழோனே
முழக்கி யருளாய் சிறுபறையே
முதிர்வண் தமிழ்ச்சென் னையிற்குமரா
முழக்கி யருளாய் சிறுபறையே.
87✓
கன்னித் தமிழை வேறுளபல்
கலையோர் எதிர்ந்து கழியாமல்
காயும் கனியும் இருக்கஉடல்
காதி எவரும் அருந்தாமல்
வன்னிக் கரத்தார் எனஇரக்கும்
வல்லார் பெருமை மறையாமல்
வரையா மொழியும் ஆகமத்தின்
வகையும் சிறிது(ம்) மழுங்காமல்
பொன்னிற் பெரிதொன் றிலையென்னப்
புகல்வார் ஆண்மை பொலியாமல்
பொய்மெய் யாகி மெய்பொய்யாய்ப்
போகி டாமற், புகழ்வார்தம்
முன்னிற் பவனே உலகெங்கும்
முழக்கி யருளாய் சிறுபறையே
முருகார் பொழிற்சென் னையிற்குமரா
முழக்கி யருளாய் சிறுபறையே.
88வேலாயுதத்தின் வெற்றி கூறல்✓
தீது மலிதா ருகன் உடலில்
தீரா மயல்நோய் தரு(ம்)மலையில்
தெண்ணீர்க கடலில், திறன்மாவில்
திகழ்வா ளொடுநேர் வருஞ்சூரில்
ஓதும் எழுவர் வெளிற்று டம்பில்
உரம்சேர் குதிரைத் தலைப்பேயில்
ஓரா யிரவர் உறும்குகையில்
ஒருபாட் டுணர்வான் தனைஎதிர்த்து
வாது புரிவார் நடுமார்பில்
வளந்தோய்ந் திலகு(ம்) முதுகுளத்தூர்
வந்தாற் பகைத்தோன் மந்திரத்தில்
வழுத்தச் சலியார் மனத்துயரில்
மோதும் வடிவேற் குகவேளே
முழக்கி யருளாய் சிறுபறையே
மூவாப் புகழ்ச்சென் னையின்முருகா
முழக்கி யருளாய் சிறுபறையே.
89வேறு சந்தம் தனதன தனதன தன்னன தானன தனத்த தனதனனா✓
உனதிரு பதமலர் நண்ணிய மாதவர்
உவப்பு மலிவுறவான்
உலகினர் அவுணர்கள் பண்ணிய தீதறும்
உயர்ச்சி பெறமலர்மீ(து)
அனவர தமும்உறை புண்ணிய வேதியன்
அணைக்கும் இளமுலையாள்
அனையவர் தமைஇருள் துன்னிய மூடர்கள்
அதட்டும் வினைகெடநீள்
கனமென உதவிடு தன்மையை நாடிய
கருத்தர் பலர்தழல்நேர்
கலியிடை முழுகிய புண்ணற வார்புவி
களித்து மெலிதுயர்போய்
முனமென மிளிர்தர முன்னியெ நேரமும்
முழக்கு சிறுபறையே
முதுகட லொலிமலி சென்னையில் வாழ்குக!
முழக்கு சிறுபறையே.
90தத்தன தத்தன தன்னன தானன தனத்த தனதனனா✓
முத்தந கைச்சிவை முன்னருள் பாலக
முழக்கு சிறுபறையே
முப்புரம் அட்டவர் கண்மணி யானவ
முழக்கு சிறுபறையே
முத்தர் பெறத்தகு மெய்ம்முதல் ஓர்பவ
முழக்கு சிறுபறையே
முற்றும்உ ணர்த்திடும் வண்மைகொள் பாவல
முழக்கு சிறுபறையே
முத்தம்அ ளித்தொரு சொன்னுவல் வானவ
முழக்கு சிறுபறையே
மொய்க்குர வுற்றலர் பொன்மலை நேர்புய
முழக்கு சிறுபறையே
முத்தமிழ் கற்றவர் உன்னிடல் ஈபவ
முழக்கு சிறுபறையே
முட்டுதல் அற்றுயர் சென்னையில் வாழ்குக
முழக்கு சிறுபறையே.