சென்னை மாநகர்க் கந்தசுவாமி பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
தாலப்பருவம்4 / 11
சென்னை மாநகர்க் கந்தசுவாமி பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்
தாலப்பருவம்
21முருகப் பெருமானது சிறப்பும், செயல்களும்✓
நீறு புனைந்த கனகவரை
நெருப்பு மலையொன் றளித்தாற்போல்
நிலவும் குமர குருபரனே!
நெடுவே லணிந்த புயத்தானே!
ஆறு முகத்தெம் பெருமானே!
அடியார்க் கெளிய முருகோனே!
அனந்தம் விளையாட் டுடையானே!
அருண கிரிக்கன் றருள்புரிந்து
கீறும் பவள முகத்தின்ஒரு
கிளியதாக்கி மணியொடுபொன்
கிளர்கே யூரத் தணிந்தோனே
கிரிகள் முழுதும் திரிவோனே
சீறும் அரவ மிசைநடிக்கும்
சிகியாய் தாலோ தாலேலோ
சென்னை நகரிற் பவனிவரும்
சேந்தா தாலோ தாலேலோ.
22✓
சீரார் பரங்குன் றாதியெனச்
செப்பும் படவீ(டு) ஆறோடும்
செந்தூர் முதலாத் தமியேன்சொல்
திகழும் ஆறா(று) உவந்தோனே!
ஏரார் மயிலிற் கதிர்வேல்கொண்(டு)
இமையார் பரவ முனிவர்தொழ
இயம்பற் கரிய சமராடி
இகல்வாள் அவுணக் களைகளைவாய்!
காரார் மேனித் திருமாலின்
கண்ணின் மணியா மென உதிக்கும்
கன்னி மார்கள் இருவர்முலைக்
களபம் கமழும் கவின்மார்பா!
ஆரார் சடிலத்(து) அரனுதவும்
அமுதே தாலோ தாலேலோ
அணியார் சென்னைப் பதிபுரக்கும்
அரசே தாலோ தாலேலோ.
23✓
பாக முணராப் புன்கவிஞர்
பனுவற்றொகைக்கும் அவர் விரும்பும்
பரிசீந் தருள்வேன் எனஒருக்காற்
பகர்ந்த பவளக் கனிவாயாய்!
சோக முழுதும் அறக்களைந்து
சுகவாழ் வுதவும் பெருங்கருணை
துலங்கும் விழிகள் ஈரொன்பான்
தோய்ந்த முகம்ஆ றுடையானே!
ஏக மாகிப் பல ஆவாய்!
இமையார்சேனைக்(கு) ஒரு தலைவா!
எண்ணா யிரவர் கழுஏற
இயலாற் கறுவும் இளையோனே!
நாக மணிவார் பரவுகுரு
நாதா தாலோ தாலேலோ
நலஞ்சேர் சென்னைப் பதிபுரக்கும்
நம்பா தாலோ தாலேலோ.
24✓
பத்தி நலத்தோர்க் கெளியோனே!
பரமா னந்தத் திருநடனம்
பயிலும் பரமன் விழிப்பொறியாய்ப்
பதுமத் தடம்புக்(கு) உருவானாய்!
சித்தித் திறலும் மெய்ஞானச்
சீரும் கொடுக்கும் செயலோனே!
செங்க ணெடுமால் மருகோனே!
திகழ்வே லணியும் திரள்தோளா!
முத்தித் தலைவா! முழுமோன
முதலாம் முருகா! நறைகமழும்
மொய்ம்பார் கடம்பு புனைவோனே!
மொழிதற் கரிய புகழாளா!
தித்தித் திடும்சொற் குறமகள்சேர்
தேவே தாலோ தாலேலோ
சென்னை நகரில் விளையாடும்
செல்வா தாலோ தாலேலோ.
25வேறு மகுடம்✓
சங்கு விளங்கும் சிறப்பு
வாவி மலர்ந்த நறுங்கமல
மலর্মেற் புதுநீர்த் திரைஒதுக்க
மணிச்சூல் முதிர்ந்து பெரிதொலிக்கும்
வளைவாழ் வதனைக் கயல்பாயக்
காவில் உலவிச் சிலவீதி
கடந்து பலவா(ம்) மனைவாயிற்
கடையிற் புகுந்து மடமாதர்
கழுத்தின் எழில்கண்(டு) உளம்நாணிச்,
சேவில் இவர்வார் செவிக்கணியாம்
திறமை நாடிக் களிகூர்ந்து
தெண்ணீர்ச் சாலின் அருகில்மணி
திகழக் கான்று துயில்வளம் சேர்
தாவில் சென்னைப் பதிமுருகா!
தாலோ தாலோ தாலேலோ
தனிவேற் குமர குருபரனே
தாலோ தாலோ தாலேலோ.
26குரங்குகளின் ஆடல்✓
காரும் குளிர்தென் றலும்உலவும்
கவினார்சோலைக் குரங்கின்இனம்
கமழ்பூந் துணரின் கள்ளருந்திக்
களித்துக் குதித்துத் திரிதல்கண்டு
வாரும் கிழியப் பணைத்தமுலை
மடவார் படைசூழ் மதவேள்; தன்
வரியார் கருப்புச் சிலைவாங்கி
மலர்வா ளிகளைப் பொழிவதனால்
சோரு மயல்கொண்(டு) ஒன்றையொன்று
தொழுது புணர்ந்து பலவினது
சுளைவிட் டெறிந்து விளையாடித்
துலங்கும் வளத்தாற் சுரர்புகழ்சீர்
சாரும் சென்னைப் பதித்தலைவா
தாலோ தாலோ தாலேலோ
தனிவேற் குமர குருபரனே
தாலோ தாலோ தாலேலோ.
27வேறு - தாழிசை✓
பரமன் விரும்பிய பிரணவ மெய்ப்பொருள்
பகர்தரு சண்முகனே!
பங்கய மங்கையர் தங்கண வர்க்கருள்
பன்னிரு தோளானே!
சரவண வாவியி னூடுபி றந்து
தவழ்ந்தமு தற்பொருளே,
தண்ணருள் மாரிபொ ழிந்தடி யார்புடை
தன்னை யளிப்பவனே!
குரவம லர்த்தொகை சூடிம டந்தையர்
கோலம் ஒழிப்போனே!
குன்றுதொ றாடியென் நெஞ்சினும் வந்து
குதிக்கு மெழிற் குகனே!
சரபமெ னத்தகு சேவல ணிந்தவ!
தாலோ தாலேலோ
தாழ்வுறு சென்னையில் வாழ்வுறும் வேலவ
தாலோ தாலேலோ.
28✓
கஞ்சம லர்ப்பிர மன்றனை வென்றுயர்
கையுறு செய்யவனே!
கார்கட லன்னநி றத்திரு மாலருள்
கன்னியர் தங்கணவா!
நஞ்சம்அ யின்றபி ரான்அழல்! அற்பகம்
நல்கவ ரும்புதல்வா!
ஞானவி னோதசி வோகமு ளார்பணி
நண்ணிய புண்ணியனே!
அஞ்சல ளித்துமென் நெஞ்சம் வருந்தல்அ
றிந்துறை யுங்குகனே!
ஆனைமு கத்தொரு வன்றுணை யாவரும்
ஆறுமு கத்தரசே!
சஞ்சல முற்றும்ஒ ழிக்கும்ம காரத!
தாலோ தாலேலோ
தாழ்வுறு சென்னையில் வாழ்வுறும் வேலவ!
தாலோ தாலேலோ.
29வேறு - சந்தம்✓
தத்தையி லங்கிய பன்னிரு தோள்கொள்வி
சாகா தாலேலோ
சற்சனர் சிந்தையில் எண்ணிடல் ஈயும்உ
தாரா தாலேலோ
சித்தையி கழ்ந்தவர் உன்னரி தாகிய
தேவா தாலேலோ
செக்கரும் ஒஞ்சிய செம்மைகு லாவிய
தேகா தாலேலோ
நத்தைய யணிந்துள கைம்முகில் பேணிய
நாதா தாலேலோ
நக்கன்வ ணங்கலின் உண்மையை ஓதிய
நாவா தாலேலோ
வித்தைய னந்தமு(ம்) மன்னிய நீறணி
வேலே தாலேலோ
விற்பனர் மிஞ்சிய சென்னையில் வாழ்கதிர்
வேலா தாலேலோ.
30✓
சருவசு தந்தர! சண்முக தேசிக!
தாலோ தாலேலோ
தகுவர்ப் பயங்கொள மின்னிய வேலவ!
தாலோ தாலேலோ
தருவரை யன்றரு கன்னிகை நாயக!
தாலோ தாலேலோ
சமணழி யும்படி பன்னிய பாவல!
தாலோ தாலேலோ
சருவொடு செந்தினை தன்னையும் ஆர்பவ!
தாலோ தாலேலோ
சரவண மொன்றிய தண்மலர் வானவ!
தாலோ தாலேலோ
தருமனை வென்றவர் கண்மணி யானவ!
தாலோ தாலேலோ!
தமிழ்நய மிஞ்சிய சென்னையில் வாழ்குக
தாலோ தாலேலோ.