முருகன் App
சென்னை மாநகர்க் கந்தசுவாமி பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
முத்தப்பருவம்6 / 11
சென்னை மாநகர்க் கந்தசுவாமி பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்

முத்தப்பருவம்

41போலி முத்துக்களை வெறுத்துக் கூறல்✓
சாலிப் பயிரில் விளைந்தமுத்தும்
தவளநி றச்சங்(கு) உமிழ்ந்தமுத்தும்
சசியில் முகிலிற் றழைத்தமுத்தும்
தந்தி மருப்பிற் றயங்குமுத்தும்
வேலிக் கழையில் வெடித்தமுத்தும்
வென்றி மதன்கைச் சிலையின்முத்தும்
விளம்பும் இவைநேர் முத்தனைத்தும்
விரும்பிச் சிறிதும் மெலிவடையேன்
பாலிப் பவன்நான். முகன்கனகப்
பதியோன் பெறும்வாழ் வையும்வெறுத்துன்
பதம்பே ணிடுவார் தமைப்பணிவேன்
பரிதி யிருமூன் றெனத்திகழும்
மோலிக் குமர குருபரனே
முத்தம் தருக முத்தமே
முழங்கும் கடற்கென் னையிற்குமரா
முத்தம் தருக முத்தமே.
42முருகனால் உபதேசம் பெற்றவர்கள்✓
அழியும் பொருள்ச(து) அழியாமல்
அவிரும் பொருள்(ஈ)து அழிந்ததுபோன்(று)
அழியாப் பொருள்(ஈ)து எனமூன்றும்
அறியப் புரியும் பிரணவத்தின்
உழியொன் றியமெய்ப் பொருளைவிரித்(து)
உமையா ளமரும் இடப்பாகத்(து)
ஒருவன் றனக்கும், மலயமலை
உறையுந் தமிழ்க்கா வலன்றனக்கும்
பொழியு மதுரக் கலிபாடும்
புனிதக் கிளியாம் அருணகிரிப்
புலவன் றனக்கும், வளங்குலவும்
போரூர் முனிவன் முதற்பலர்க்கும்
மொழியும் பவளத் திருவாயால்
முத்தம் தருக முத்தமே
முழங்குங் கடற்சென் னையிற்குமரா
முத்தம் தருக முத்தமே. 42
43கலைமகளின் உருவங்களால் முத்தமிழுக்கு நிற உவமை கூறல்✓
திருந்துந் தவளக் கமலமலர்ச்
சீரார் பொகுட்டின் மிசைஅனம்போல்
தினம்வீற் றிருந்து கலைமுழுதும்
தெரிக்கும் கருணைப் பெருமாட்டி
கருந்தும் பிகளா டியகந்தற்
கற்றை யனைய இயற்றமிழ்க்கும்
கரம்தாள் இதழ்போற் சிவந்திலங்கும்
கவினார் இசைக்கும் கலன்களையேற்
பொருந்தும் நிறநா டகத்தினுக்கும்
புலவர் விரும்பும் அவைகொடுத்துப்
பொருப்புத் தொறும்ஆ டிடுமவனே
புத்தே ளினர்கோ னனல்கடவேன்;
முருந்து நகைவாய் இருமூன்றால்
முத்தம் தருக முத்தமே
முழங்கும் கடற்சென் னையில்முருகா
முத்தம் தருக முத்தமே. 43
44தான் திருமலையில் உருண்ட நாளில் மனக்காட்சியில் முருகன் முத்தம் தந்தது✓
மின்னாற் முலைக்குங் குமக்கோட்டில்
வேரிக் குமுத மலர்வாயில்
விடவாள் அரவக் கடிதடத்தில்
வீணே மயல்கொண்டு உழல்வேனைத்
தன்னால் வலியத் தடுத்தாண்டு
தமிழ்வா ரிதியில் முழுக்காட்டித்
தடமா மலையின் மிசையருட்டித்
தனித்தோர் கனவிற் றருமுத்தம்
என்னா ருயிரின் அழுக்ககற்றி
இமையார்க் கரிய பெருவாழ்வை
ஈய விலையால் விழைகின்றேன்
இன்னே தரில்நன்(று) யாவருக்கும்
முன்னா முளைத்த முருகோனே
முத்தந் தருக முத்தமே
முழங்குங் கடற்சென் னையில்முருகா
முத்தந் தருக முத்தமே. 44
45வேறு முத்தம் பெற்றவர் இவரிவர் என்றல்✓
எப்பொழுதும் அம்பலத்(து) ஆடிக் கபாலத்(து)
இரந்துண்ட தந்தையாரும்
இழையெனத் தகுசிற் றிடைப்பேதை என்றுரு
எடுத்துற்ற அன்னையாரும்,
மெய்ப்பொழுது காட்டும்ஒரு சுடருற்ற வயிறிலகும்
வேழமுக அண்ணனாரும்,
வேலையிற் கமடமொடு மீனாகி யும்சிறிது
விளையாடு(ம்) மாமனாரும்,
இப்பொழுது வரல்போதல் என்னும்ஒரு நிலையற்(று)
இலங்குதிரு மாமியாரும்,
இருமனைவி மாரும், ஒருகிளியும், எனதுள்ளமும்
இயம்பரிய உவகைகொண்டு
முப்பொழுது(ம்) முத்தமிடும் முருகைய னே!இன்று
முத்தம் கொடுத்தருள்வையே
முதிர்புகழ்ச் சென்னையிற் குடிகொண்ட கந்தனே
முத்தம் கொடுத்தருள்வையே. 45
46நியாயம் கூறி முத்தம் விழைதல்✓
சத்தியம தாகஒரு முத்தமென் கனவினிற்
றந்ததுண்(டு), அருணகிரிநீ
தான்எனப் பலகால் உரைத்ததுண்(டு), இன்சொற்
றமிழ்க்கடல் உயர்ச்சியென்று
பத்தியறி சாட்சியாய்ச் சீட்டுக் கொடுத்தஉட்
பட்சமுண்(டு), இணையில்கலிநோய்
படருற்ற பேரெனப் பொருள்இரந் துழலெனப்
பலவூர்க் கனுப்பல்உண்டு
பொய்த்திரை யெனத்தக்க மூவே டணைப்பேய்கள்
போராட விட்டதுண்டு
பொதியமுனி ஆதியர் மகிழ்ந்துதழு வத்தகும்
போதசா ரத்தைநல்கி
முத்திதரல் உண்டென்னில் மயில்மீது வந்துதினம்
முத்தங் கொடுத்தருள்வையே
முதிர்புகழ்ச் சென்னையிற் குடிகொண்ட கந்தனே
முத்தம் கொடுத்தருள்வையே. 46
47வேறு தத்தன தந்தன தன்னன தய்யன தனனா தந்தந் தந்தனனா✓
எட்குள் நிறைந்திடும் எண்ணெயை ஒவ்விடும்
இயல்பா நிற்கும் புங்கவனே!
எற்குநி னைந்திடும் வண்மையை நல்கிட
எனவே நித்தஞ் சிந்தைசெய்வாய்!
கட்குடி வண்டுகள் பன்னிய பஃறொடை,
கனபூண், மொய்க்குந் திண்புயனே!
கற்பு மலிந்துள கன்னியர் நல்லுரை
கழறார் வத்தின் சும்பிரமா!
புட்குற வன்குகன் என்னினும் மெய்யருள்
பொழிசீர் முற்றும் கண்குவியாய்!
புத்தியில் வஞ்சகம் உன்னிய மெய்கொடு
புகழ்வாழ் வுற்றுன் றன்கழலாம்
முத்தியில் வந்திருள் மும்மையை வெல்லுவன்;
முடியா(ம்) முத்தம் தந்தருளே
முப்பொரு ளுந்திகழ் சென்னையில் வைகிய
முருகா முத்தந் தந்தருளே. 47
48பெரியோர்கள் பண்பாடு கூறல் தனதன தத்தன தனதன தன்னன தனனா தத்தந் தந்தனனா✓
விதிமறை யிற்பகர் மகமென மன்னுயிர்
வெருள்கூ ரக்கொன் றுண்டறியார்!
விலைமக ளீர்க்கதி மயல்கொடு சொன்னவை
விரைவாய் இட்டுந் தொண்டுசெயார்!
அதிவித சித்திர மதுரவி யன்மலி(வு)
அமர்பா டற்கண் டும்பழியார்;
அருள்விழி யைத்தரு குரவரின் முன்னவன்
அயில்வேல் பற்றுஞ் சிங்கமதே
துதிமின்ன னப்பகர் புலவர்ம தன்மலர்
தொடநாண் உற்றஞ் சுந்தெளிவோர்;
துரியப தத்துறு முழுநிலை துன்னுநர்;
சுரரால் மெச்சும் பண்பினர்நேர்
முதிரறி ஞர்க்குயிர் எனவளர் சண்முக
முடியா(ம்) முத்தந் தந்தருளே
முறையில்ந டப்பவர் பலர்வளர் சென்னையின்
முருகா முத்தந் தந்தருளே. 48
49வேறு மகுடம் நகர்வளம் தனதன தானன தன்னன தந்தன தத்தன தத்தனனா✓
வயமத(ன்) நாணது புன்னைம லர்ந்துள
மற்கள்மி குத்துணலால்
மயல்கொடு பாடிட, விண்முகில் அம்பிடை
மட்டில்பு னற்கொடுபேர்
இயல்பறும் ஒரொலி பண்ணிட, ஞெண்டிநம்
இற்பிற கிற்செலலால்
எமனென நூல்வலை பின்னிய வன்கையர்
எய்த்துநு ளைச்சியர்பால்
நயமொடு பேசிட, மின்னுசெ முங்கயல்
நற்பனை மட்டையின்மேல்
நகுகனி சூழ்குலை யின்மிசை உந்திட,
நச்சர வக்கடிநேர்
முயல்உட லான்மகிழ் சென்னையில் வந்தவ!
முத்தம ளித்தருளே
முழுதுணர் பாவல! சண்முக முங்கொடு
முத்த மளித்தருளே. 49
50தனதன தானன தன்னன தந்தன தத்தன தத்தனாணா✓
முருகுநி லாவிய பன்மலை கொண்டவ!
முத்தம ளித்தருளே
முனைமலி வேடுவர் பெண்ணைம ணந்தவ!
முத்தம ளித்தருளே
முருகுகு கூதள(ம்) மன்னும் நெடும்புய
முத்தம ளித்தருளே
முதிர்கவி வாணர்கள் எண்ணம றிந்தவ!
முத்தம ளித்தருளே
முருகு கெ டாதுறும் வன்மைபெ றுங்குக!
முத்தம ளித்தருளே
முதல்வர்வி னாவிய உண்மைமொ ழிந்தவ!
முத்தம ளித்தருளே
முருகுயர் வீதிகொள் சென்னையில் வந்தவ!
முத்தம ளித்தருளே
முழுதுணர் பாவல! சண்முக முங்கொடு
முத்தம ளித்தருளே. 50