முருகன் App
சென்னை மாநகர்க் கந்தசுவாமி பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
செங்கீரைப்பருவம்3 / 11
சென்னை மாநகர்க் கந்தசுவாமி பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்

செங்கீரைப்பருவம்

11அம்மை முருகனை அருமை பாராட்டல்✓
திருமகள் விரும்பிஅவள் மருமக ளுடன்பணி
தினம்செயும் பெருமை பெற்ற
சிவையெடுத்(து) உச்சிமோந்(து) என்உயிர்த் துணைவனார்
செந்தழல் விழிப்பி ழம்பில்
வருமதலை யேஎனது மாதவப் பயனே!
வருந்திடேல் என்று கொஞ்சி
வளையணி கரங்கொண்டு நீராட்டி உயிரெலாம்
வாழ்வது குறித்து முன்னாள்
அருமறைக் கிழவன் படைத்துபுவி யைக்கைவிர
லால்உரைத் துத்தி லகமிட்(டு)
அணிமுலை சுரந்தபால் உதவிடக் களிகூரும்
அறுமுகக் குமரேசனே!
செருமலியும் நவவீரர் துணைவந்த முருகனே!
செங்கீரை ஆடியருளே
சென்னைமா நகர்தழைய வருகந்த சாமியே!
செங்கீரை ஆடியருளே.
12முருகன் தோற்றமும் இளமை ஏற்றமும்✓
மாதவரும் வானவரும் மற்றையவ ரும்சினம்
வருந்தித் தொழற்கி ரங்கி
மணிமிடற் றைவனார் புரிதவ முதிர்ந்தவர்தம்
வன்னிவிழி யிற்பொறி களாய்
ஏதமற வந்துசர வணவாவி யிற்கமலம்
ஏறித்த வழ்ந்து மடவார்
இருமூவர் முலையமு தருந்தியும் பசிகொண்(டு)
இலங்கும்இம வான்வளர்த்த
காதலி முலைத்துணைக் கலசத்தின் அமுதம்
களித்தருந் தும்ப வளவாய்க்
காங்கேய னே!யடியர் பிழைமுழு தொழிக்கும்
கடைக்கண் மூவாறு கொண்டாய்!
சீதள மலர்க்குரவ மாலையணி தோளனே!
செங்கீரை ஆடியருளே
சென்னைமா நகர்தழைய வருகந்த சாமியே!
செங்கீரை ஆடியருளே
13ஆறுமுகங்களின் அமைப்பு இவையெனல்✓
உலகினிற் றிசைஆறெனச் சத்திஆறென
ஒழிக்கருந் தொழில் ஐந்தினோ(டு)
ஒன்றுபுணர் ஆறென, எழுத்(து)ஆ றெனச் சமயம்
உள்ளஆ றெனஎண் ணிலார்
பலவிதம் பகரஅரு ளானந்த வாரியிற்
பத்திநீ ரிடைம லர்ந்த
பதுமமல ரெனமிளிரும் அறுமுகக் குமரனே!
பன்னிரு புயத்தண்ணலே!
மலரவன் தருமறையும் அரனுதவும் ஆகமமும்
வாய்விட்டு ரைத்தும் உரையா
வண்மையே வடிவாய திருவடிக் குரவனே!
வானுலக மங்கை யர்க்கோர்
திலகமென வளருமொரு தெய்வானை மகிழ்கணவ
செங்கீரை ஆடியருளே
சென்னைமா நகர்தழைய வருகந்த சாமியே!
செங்கீரை ஆடியருளே.
14அவுணர்களை யழித்தருளல்✓
அத்திரத் தாருகனை வெற்பொடு தடிந்தாய்!ஓர்
ஆயிர முகச்சிங்கனாம்
அவுணனை அவன்சிறிது(ம்) மதியாத வச்சிரம்
அதைக்கொண் டழித்து கந்தாய்;
எத்திரத் தோர்மனமும் வெருளவளர் சூர்மா
இரண்டுகூ றாகவெட்டி
இமையவர் படுந்துயர் தவிர்த்தாய் வியன்றிகழ்
இளங்கிழை மடந்தை நல்லார்
பொய்த்திரத் திற்குருகும் என்போலி யர்க்கும்மெய்ப்
பொருளளிப்பது குறித்தும்
புவியில்உள மலைதோறும் நடனம் புரிந்தாய்!
பொறித்தோகை மயிலிவர்ந்தாய்!
சித்திரச் செங்கைவடி வேலணியு(ம்) முருகனே!
செங்கீரை ஆடியருளே
சென்னைமா நகர்தழைய வருகந்த சாமியே!
செங்கீரை ஆடியருளே.
15வேறு மகுடம் இன்ப மிகுதியால் எவரும் களிப்புறல்✓
இன்பமலி யுஞ்சசியும் இந்திரனும் மற்றுள்ள
இமையவரும் வந்து நின்றார்.
ஈரிரு முகப்பிரம னும்தவள வாணியும்நின்
இசையெடுத் தேத்துகின்றார்
பொன்பரவு மார்பினிற் பைந்துள வணிந்தமுகில்
போலும்அரி மிகவி ழைந்தான்,
புரமெரிய நகைசெய்த புண்ணியப் புனிதர், தாம்
புரிதவப் பயன்இ தென்ன
என்(பு)அலரும் இதழியுடன் அணியுமொரு நான்குபுயம்
எட்டா கிடக்க ளித்தார்
இமையமகள் அளவற்ற வாஞ்சைகொண் டுருகித்தன்
இருமுலைப் பால்சொரிந்தாள்;
அன்பரெண் ணியபடி விளங்குமுரு கேசனே!
ஆடியருள் செங்கீரையே
அன்னமலி சென்னைநகர் தன்னில்வளர் கந்தனே
ஆடியருள் செங்கீரையே.
16முருகன் விளையாட்டால் இவை நிகழுமெனல்✓
வண்டமிழ்ச் செஞ்சொற் கவித்தொடை தொடுக்குமவர்
வறுமைநோய் முற்றும் நீங்கும்
மாநிலத் திற்றிங்கள் ஒன்றுக்கு மும்மாரி
வந்துவந் தினிது பொழியும்
தெண்டனிட் டுன்னைமிக நம்புபவர் தமைநிந்தை
செய்யுமவர் குலம்ந சிக்கும்;
செங்கோல் விளங்கிக் கொடுங்கோல் பிடிக்குமவர்
சீர்அழிந் திடும்; அவுணரால்
தண்டமடை யாதும்பர் களிகூர்வர்; மாதவம்
தழையும்;மல ரோன்வ குத்த
சட்சமய மும்பெருகும்; மற்றையர் விளம்புபொய்ச்
சமயம்எல் லாம்ஒளிக்கும்
அண்டமுக டெங்கும்விரி யுங்கலப மயிலாளி!
ஆடியருள் செங்கீரையே
அன்னமலி சென்னைநகர் தன்னில்வளர் கந்தனே!
ஆடியருள் செங்கீரையே.
17வேறு தாழிசை முருகன் அவதாரத்தால் நிகழும் மகிழ்ச்சி யாடல்கள்✓
பணிபவர் சிந்தையில் உண்மைநலந்திகழ் பத்தி மிகுத்தாடப்
பங்கய மாதர்அ ருட்சிவை யோடு பரிந்துவி யந்தாடத்
திணிபெறு தோள்வய வீரர்இ கற்பிணி தீர்கை நினைத்தாட
செங்கண்மு ராரிமு தற்பல தொண்டர் திடுக்கம் ஒழிந்தாட
மணியுமிழ் கட்செவி ஆடிட ஆடு(ம்) மயூரமுடன் சேவல்
வாழியெ னக்கவி பாடுநர் ஆட,வ னப்புறுகிண்கிணியோ(டு)
அணிகலன் ஆட அசைந்தும கிழ்ந்தினி(து) ஆடுக செங்கீரை
ஆசறு சென்னையில் வாசமு றுங்குகன் ஆடுக செங்கீரை.
18மேற் படி✓
சந்ததம் அன்பர்கள் சிந்தையில் உற்றொளிர் சண்முகமதியாட
சத்திமு தற்பல பற்றிய செங்கை தடம்புய முடன்ஆடக்
கொந்தலர் வெட்சிக டம்புகு ராமலர் கூதளமோ(டு) ஆடக்
குஞ்சிமணித்திரு அரையொடு பண்டிகுலுங்கிடும் நடையாட
செந்தமி ழிற்றுதி செய்பவ ருக்கருள் சீறடி யுங்கழலும்
சீர்மலி தண்டையும் நூபுர முந்திகழ் செங்கன கப்பதிசேர்
அந்தர வாணர்கள் சென்னியும் ஆடிட ஆடுக செங்கீரை
ஆசறு சென்னையில் வாசமு றுங்குகன் ஆடுக செங்கீரை.
19வேறு மகுடம் சந்தம் தன்னன தந்தன தந்தன தானன தந்தா தந்தான✓
மும்மல வெம்பவ மின்றிய மேலவர் முன்கூ றுஞ்சீர்கொள்
முன்னவ னென்றொளி ரும்பல யானைகள் மொய்ம்பார் கொம்போடு
தம்மத மிஞ்சிமு ழங்கிஉ லாவிய சஞ்சா ரஞ்சோலை,
தண்முகில், பைந்தினை உந்திவில் வேடுவர் தங்(கு)ஊர், வன்பாரும்
எம்மத மொன்றிய தொண்டருமேவி இதெந்தே வின்தானம்
என்னவி ளம்பிவ ணங்கநிலாவிடும் இன்பா ருங்கோவில்
செம்மணி கொண்ட குறிஞ்சியின் வானவ செங்கோ செங்கீரை
சென்னையில் வந்தம ருங்கதிர்வேலவ! செங்கோ செங்கீரை
20தன்னன தந்தன தந்தன தானன தந்தா தந்தான✓
சின்னம்ஒ ழிந்தபெ ரும்புகழ் ஈபவ! செங்கோ செங்கீரை
செம்மணி யென்றநி றம்பெறு சேவக செங்கோ செங்கீரை
சின்னவன் என்றிடி னுங்களி கூர்பவ! செங்கோ செங்கீரை
தென்னவ னென்றும்வ ருங்கரு ணாகர செங்கோ செங்கீரை
✓
சின்னலம் என்றனொ டும்பகர் வேலவ செங்கோ செங்கீரை
திண்மை பொருந்திய செந்தகர்மாவல! செங்கோ செங்கீரை
சின்னமு ழங்கவ ருங்குரு தேசிக! செங்கோ செங்கீரை
சென்னையில் வந்தம ருங்கதிர் வேலவ! செங்கோ செங்கீரை.