சென்னை மாநகர்க் கந்தசுவாமி பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
சிற்றிற்பருவம்9 / 11
சென்னை மாநகர்க் கந்தசுவாமி பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்
சிற்றிற்பருவம்
71முருகனின் அருமைப்பாடு✓
அருமைப் புலவர் பகர்தமிழ்ப்பாட்(டு)
அனந்தம் வினவிக் களிகூர்ந்தும்
அம்பொற் பிடியும் கருங்குயிலும்
அனையார் மகிழ்முத்(து) ஆடியும்நல்
தருமத் தொடுபா வமும்இமையாத்
தடங்கண் மலராற் பார்வையிட்டும்
தாய்மார் எழுவர் முலைப்பாலும்
சருவும் தினைப்பிண் டியும்புசித்தும்
மருமுற் றியசெங் கடம்பாதி
மலர்மிக் கணிந்தும் மலைதொறும்போய்
மாறா நடனம் புரிந்தும்திகழ்
வழக்க முழுதும் மறந்தனையோ?
திருவுக் கினிய மருகோனே
சிறியேம் சிற்றில் சிதையேலே
சென்னைப் பதிவாழ் குமரகுரு
தேவா! சிற்றில் சிதையேலே.
72முருகனிடம் நீ செல்லவேண்டிய இடம் இவை எனல்✓
பொல்லார் நிணத்தைக் கழுகாதி
புசித்து மகிழும் சமர்ஆடப்
புலவர் பதியில் அவுணர்குலம்
புகுதா வண்ணம் புரந்துவக்கக்
கொல்லா விரதப் பெருந்தவமே
குறியென் றுணரார் சமயநெறி
குலையத் திருவாய் மலர்திறக்கக்
குறவர் மகளும் குஞ்சரியும்
மல்லா டிடுமுன் நடுத்தீர்க்க
மதுரத் தமிழை இகழ்தீயோர்
மணிநா அறுத்துக் கனலில்இட
வழுத்தும் அவர்க்கு வரம்உதவச்
செல்லா(து) எமைஒ ரெதிராக்கிச்
சிறியேம் சிற்றில் சிதையேலே
சென்னைப் பதிவாழ் குமரகுரு
தேவா! சிற்றில் சிதையேலே.
73முருகன் திருவடி ஊன்றப்பெறும் இடங்கள்✓
மருத்தா மரையான் உணர்வரிய
மறையின் சிரத்தில், ஆகமத்தில்
மதியம் புனல்கொக் கிறகாதி
வயங்கும் சடையில் வானுலகத்
தருத்தார் அகத்தார் எலும்பணியும்
தடமார் பகத்தில் தமிழ்முனிவன்
தனதுள் ளத்தில், கவுமாரத்
தவத்தோர் வரையத் தரும்ஏட்டில்
விருத்தா கரக்குங் குமத்தனத்தில்
மேனை மகளார்மே கலையில்
விழியிற் பலவாம் மலைக்கு வட்டில்
விளங்கித் தொனிக்கும் வியன்சதங்கைத்
திருத்தாள் மலரிற் பொடிதோயச்
சிறியேம் சிற்றில் சிதையேலே
சென்னைப் பதிவாழ் குமரகுரு
தேவா! சிற்றில் சிதையேலே.
74சிறுவீட்டின் அமைப்புக் கூறல்✓
யாங்கள் வருந்தி மணற்கொழித்(து)ஈண்(டு)
இதுசோ றடும்வீ(டு) இதுகூடம்
இரவிற் றுயிலும் அரங்கிதுநிற்(கு)
இயைந்த பூசைக் கிடம்இதுநற்
பாங்கர் மகிழ்பட் டகசாலை
பக்கத் திண்ணை இதுஇ(து)எனப்
பலவா றாகப் பெயரமைத்துப்
பகுத்துச் சமைத்த விதம்பாராய்!
தாங்கற் கரிய துயரெமக்குத்
தந்து மகிழேல் எம்மொடுநீ
தானும் இருந்து விளையாடில்
தலைமை உனதென் பதும்தவறோ!
தீங்கர் உணராப் புகழோனே
சிறியேம் சிற்றில் சிதையேலே
சென்னைப் பதிவாழ் குமரகுரு
தேவா! சிற்றில் சிதையேலே.
75சிறுமியர் முறையீடு✓
அன்ன முதற்பல் உணவும்உனக்(கு)
அளித்து வணங்கி நீமகிழ்வுற்(று)
அருந்திக் கழிக்கும் அவைதாமே
அருள்வாழ் வெனப்பெற் றமையேமா?
வன்னத் தளிர்மெல் இளமேனி
மகளி ரினத்தில் நீவிரும்பும்
வண்ண(ம்) மணத்தற் குதவேமா?
மதிவாள் நுதலில் வெயர்வரும்ப
இன்ன பணிகள் முடிந்ததற்பின்
ஏன்வந் தனையென்(று) இசைத்தேமா?
யாது பிழையாம் இழைத்தேம்என்(று)
இவ்வா றுளத்திற் சினம்கொண்டாய்?
சின்ன விரற்றாட் டுணைநோவச்
சிறியேம் சிற்றில் சிதையேலே
சென்னைப் பதிவாழ் குமரகுரு
தேவா! சிற்றில் சிதையேலே.
76வேறு
சோலைச் சிறப்பு (குரங்கின் விளையாடல்)✓
தந்தியின் போரொலியும் முகிலொலியும் மேலிடத்
தாவிப் பயந்தொ துங்கிச்
சந்தவண் தமிழெனப் பொழிகின்ற பெருமழைத்
தாரைகள் சகித்தி டாமல்
கந்தியில் தென்னையில் பூவிரியு(ம்) மடலெனும்
கவிகையின் கீழ்க்கி டந்து
கதிர்வெயிற் கண்டுடன் பலவினிற் பாய்ந்துமுதிர்
கனிகளைக் கீறி யுண்டு
மந்திர சடாக்கரம் சிறிது(ம்)மொழி யாதகவி
வாணர்க ளெனப்பி ணங்கி
வண்டுண்டு மிஞ்சிய மலர்கட் குடித்துவெறி
மண்டைமேற் கொண்டு கனிகள்
சிந்திடும் பொழில்மருவு சென்னைமா நகர்முருகு
சிற்றிற் சிதைத்தி டேலே
சிறியேமை எதிராம் எனக்கொண்டு யாம்செய்த
சிற்றிற் சிதைத்தி டேலே.
77தம் குறைகூறித் தயவினை வேண்டல்✓
வாயஞ்சி டா(து)இரக் கின்றவர்முன் இடிபோலும்
வன்சொல் உரைத்து ளேமா?
வந்தவர் பசித்திருக் கப்புசித் தேப்பமிடும்
மாகொடுமை கற்று ளேமா?
நீயன்றி வேறுமொரு தெய்வம்உண் டெனஎங்கள்
நெஞ்சிற் குறித்து ளேமா?
நெறிதவறி உயிர்வதைத்(து) ஊனுண்டு தடுமாறும்
நீசரை அடுத்து ளேமா?
பேயஞ்சி வம்பினில் உயிர்ப்பலி கொடுக்கின்ற
பித்தரை மதித்து ளேமா?
பெரியோரை யும்புலவர் தங்களையு மதியாத
பேராண்மை கொண்டு ளேமா?
தேயமெங் கும் பரவு சென்னைமா நகர்முருக
சிற்றிற் சிதைத்தி டேலே
சிறியேமை எதிரா மெனக்கொண்டு யாம்செய்த
சிற்றிற் சிதைத்தி டேலே.
78நியாயங்கூறி நிறையருள் வேண்டல்✓
நம்பிவந் தவர்தமது கண்களைக் கட்டியும்
நடுக்காட்டில் விடலாகுமா?
நாணுனக் கடிமையென வழிபடுமெய் அடியார்கள்
நைவுறச் செயலாகுமா?
தம்பியொரு வனையேவி அந்நாள் உரைத்தமொழி
தனைமறந் திடலாகுமா?
தண்டமிழ்ப் பொதியவரைத் தருசெம்பு நதியினிடை
சாற்றல்பொய்த் திடலாகுமா?
கொம்பினிற் றிகழ்முலைக் கோதையர்க்(கு) உருகியும்
கூச்சமிக் குறலாகுமா?
குற்றம் பொறுத்தெம்மை ஆண்டுகொண் டால்உலகு
குடிபோகும் எனலாகுமா?
தெம்பில்உயர் வார்மருவு சென்னைமா நகர்முருக
சிற்றிற் சிதைத்தி டேலே
சிறியேமை எதிராம் எனக்கொண்டு யாம்செய்த
சிற்றிற் சிதைத்தி டேலே.
79வேறு - சந்தம்
தனதன தானன தன்னன தானன தத்தத் தனதானா✓
உயிர்வதை யாகிய புன்மைகொள் வாரிடம்
உற்றுத் தவியாதே
உலகமெ லாம்இகழ் துன்மதி யாளரொ(டு)
ஒத்துப் பழகாதே
பயிரனை யார்களை அன்னவ ரால்இடர்
பட்டுச் சுழலாதே
பதுமமு ளான்நுவல் சண்மத வாணர்கள்
பற்றைப் பழியாதே
வயிரவ லாரிதன் விண்ணுல காசையில்
மட்குற் றொழியாதே
மதுரித கோமள நன்னய வாணர்சொல்
வைப்பைக் கழியாதே
செயிரறு சீர்தரு சின்மய தேசிக
சிற்றிற் சிதையேலே
தெளிவினர் மேவிய சென்னையில் வேலவ
சிற்றிற் சிதையேலே.
80✓
திருமக ளார்தரு கன்னியர் நாயக! சிற்றிற் சிதையேலே
சிவபெரு மானது கண்ணருள் பாலக! சிற்றிற் சிதையேலே
திருகிய கோடுறு செந்நிற மாவல! சிற்றிற் சிதையேலே
செறிபொழில் சூழ்தரு பன்மலை யாதிப! சிற்றிற் சிதையேலே
திருடியும் ஓர்கவி தன்னிடம் ஈபவ! சிற்றிற் சிதையேலே
திகழ்துவர் மேல்கொடு பொன்மயில் ஊர்குக! சிற்றிற் சிதையேலே
திருவருள் மேலிடு சின்மய தேசிக! சிற்றிற் சிதையேலே
தெளிவினர் மேவிய சென்னையில் வேலவ! சிற்றிற் சிதையேலே