முருகன் App
திரு அருட்பா
திருவருட்பிரகாச வள்ளலார் (இராமலிங்க சுவாமிகள்)
தரிசனை வேட்கை38 / 55
1முதல் திருமுறை: தெய்வமணி மாலை2கந்தர் சரணப்பத்து3திருத்தணிகைப் பதிகங்கள். பிரார்த்தனை மாலை4எண்ணப் பத்து5செழுஞ்சுடர் மாலை6குறைஇரந்த பத்து7ஜீவசாட்சி மாலை8ஆற்றா முறை9இரந்த விண்ணப்பம்10கருணை மாலை11மருண்மாலை விண்ணப்பம்12பொறுக்காப் பத்து13வேட்கை விண்ணப்பம்14ஆறெழுத் துண்மை15போக் குரையீடு16பணித்திறம் வேட்டல்17நெஞ்சொடு புலத்தல்18புன்மை நினைந் திரங்கல்19திருவடி சூட விழைதல்20ஆற்றா விரகம்21ஏழைமையின் இரங்கல்22பணித்திறஞ் சாலாப் பாடிழிவு23காணாப் பத்து24பணித்திறஞ் சாலாமை25குறை நேர்ந்த பத்து26முறையிட்ட பத்து27நெஞ்சவலங் கூறல்28ஆற்றாப் புலம்பல்29திருவருள் விழைதல்30புண்ணியநீற்று மான்மியம்31உறுதி உணர்த்தல்32எண்ணத் தேங்கல்33கையடை முட்டற் கிரங்கல்34அடியார் பணி அருளவேண்டல்35நாள் அவம்படாமை வேண்டல்36அன்பிற் பேதுறல்37கூடல் விழைதல்38தரிசனை வேட்கை39நாள் எண்ணி வருந்தல்40ஏத்தாப் பிறவி இழிவு41பவனிச் செருக்கு42திருவருள் விலாசப் பத்து43திருவருட் பேற்று விழைவு44செல்வச் சீர்த்தி மாலை45செவி அறிவுறுத்தல்46தேவ ஆசிரியம்47இங்கிதப் பத்து48போற்றித் திருவிருத்தம்49திருப்பள்ளித்தாமம் தாங்கல்50சண்முகர் கும்மி51சண்முகர் வருகை52தனித் திருத்தொடை53இரண்டாம் திருமுறை: அருள் நாம விளக்கம்54சிவசண்முகநாம சங்கீர்த்தன லகரி55மூன்றாம் திருமுறை: சிங்கபுரிக் கந்தர் பதிகம்
திரு அருட்பா · திருவருட்பிரகாச வள்ளலார் (இராமலிங்க சுவாமிகள்)

தரிசனை வேட்கை

1எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்✓
வேல்கொளும் கமலக் கையனை எனையான்
மெய்யனை ஐயனை உலக
மால்கொளும் மனத்தர் அறிவரும் மருந்தை
மாணிக்க மணியினை மயில்மேல்
கால்கொளும் குகனை எந்தையை எனது
கருத்தனை அயன்அரி அறியாச்
சால்கொளும் கடவுள் தனிஅருள் மகனைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
2✓
கண்ணனை அயனை விண்ணவர் கோனைக்
காக்கவைத் திட்டவேற் கரனைப்
பண்ணனை அடியர் பாடலுக் கருளும்
பதியினை மதிகொள்தண் அருளாம்
வண்ணனை எல்லா வண்ணமும் உடைய
வரதன்ஈன் றெடுத்தருள் மகனைத்
தண்ணனை எனது கண்ணனை அவனைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
3✓
என்னுடை உயிரை யான்பெறும் பேற்றை
என்னுடைப் பொருளினை எளியேன்
மன்னுடைக் குருவின் வடிவினை என்கண்
மணியினை அணியினை வரத்தை
மின்னுடைப் பவள வெற்பினில் உதித்த
மிளிர்அருள் தருவினை அடியேன்
தன்னுடைத் தேவைத் தந்தையைத் தாயைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
4✓
பரங்கிரி அமருங் கற்பகத் தருவைப்
பராபரஞ் சுடரினை எளியேற்
கிரங்கிவந் தருளும் ஏரகத் திறையை
எண்ணுதற் கரியபேர் இன்பை
உரங்கிளர் வானோர்க் கொருதனி முதலை
ஒப்பிலா தோங்கிய ஒன்றைத்
தரங்கிளர் அருண கிரிக்கருள் பவனைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
5✓
அரும்பெறல் மணியை அமுதினை அன்பர்
அன்பினுக் கெளிவரும் அரசை
விரும்புமா தவத்தோர் உள்ளகத் தொளிரும்
விளக்கினை அளக்கரும் பொருளைக்
கரும்பினை என்னுட் கனிந்திடும் கனியை
முனிந்திடா தருள்அருட் கடலைத்
தரும்பர சிவத்துள் கிளர்ந்தொளிர் ஒளியைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
6✓
மாரனை எரித்தோன் மகிழ்திரு மகனை
வாகையம் புயத்தனை வடிவேல்
தீரனை அழியாச் சீரனை ஞானச்
செல்வனை வல்வினை நெஞ்சச்
சூரனைத் தடிந்த வீரனை அழியாச்
சுகத்தனைத் தேன்துளி கடப்பந்
தாரனைக் குகன்என் பேருடை யவனைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
7✓
வேதனைச் சிறைக்குள் வேதனை படச்செய்
விமலனை அமலனை அற்பர்
போதனைக் கடங்காப் போதனை ஐந்தாம்
பூதனை மாதவர் புகழும்
நாதனை உமையாள் பாலனை எங்கள்
பரமனை மகிழ்விக்கும் பரனைத்
தாதனை உயிர்க்குள் உயிரனை யவனைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
8✓
குழகனை அழியாக் குமரனை அட்ட
குணத்தனைக் குறித்திடல் அரிதாம்
அழகனைச் செந்தில் அப்பனை மலைதோ
றாடல்வாழ் அண்ணலைத் தேவர்
கழகனைத் தண்டைக் காலனைப் பிணிக்கோர்
காலனை வேலனை மனதில்
சழகிலார்க் கருளும் சாமிநா தனைத்தென்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
9✓
முத்தனை முத்திக் கொருதனி வித்தை
முதல்வனை முருகனை முக்கண்
பித்தனை அத்தன் எனக்கொளும் செல்வப்
பிள்ளையைப் பெரியவர் உளஞ்சேர்
சுத்தனைப் பத்தி வலைப்படும் அவனைத்
துரியனைத் துரியமும் கடந்த
சத்தனை நித்த நின்மலச் சுடரைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
10✓
வள்ளயில் கரங்கொள் வள்ளலை இரவில்
வள்ளிநா யகிதனைக் கவர்ந்த
கள்ளனை அடியர் உள்ளகத் தவணைக்
கருத்தனைக் கருதும்ஆ னந்த
வெள்ளம்நின் றாட அருள்குரு பரனை
விருப்புறு பொருப்பனை வினையைத்
தள்ளவந் தருள்செய் திடுந்தயா நிதியைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.