முருகன் App
திரு அருட்பா
திருவருட்பிரகாச வள்ளலார் (இராமலிங்க சுவாமிகள்)
போற்றித் திருவிருத்தம்48 / 55
1முதல் திருமுறை: தெய்வமணி மாலை2கந்தர் சரணப்பத்து3திருத்தணிகைப் பதிகங்கள். பிரார்த்தனை மாலை4எண்ணப் பத்து5செழுஞ்சுடர் மாலை6குறைஇரந்த பத்து7ஜீவசாட்சி மாலை8ஆற்றா முறை9இரந்த விண்ணப்பம்10கருணை மாலை11மருண்மாலை விண்ணப்பம்12பொறுக்காப் பத்து13வேட்கை விண்ணப்பம்14ஆறெழுத் துண்மை15போக் குரையீடு16பணித்திறம் வேட்டல்17நெஞ்சொடு புலத்தல்18புன்மை நினைந் திரங்கல்19திருவடி சூட விழைதல்20ஆற்றா விரகம்21ஏழைமையின் இரங்கல்22பணித்திறஞ் சாலாப் பாடிழிவு23காணாப் பத்து24பணித்திறஞ் சாலாமை25குறை நேர்ந்த பத்து26முறையிட்ட பத்து27நெஞ்சவலங் கூறல்28ஆற்றாப் புலம்பல்29திருவருள் விழைதல்30புண்ணியநீற்று மான்மியம்31உறுதி உணர்த்தல்32எண்ணத் தேங்கல்33கையடை முட்டற் கிரங்கல்34அடியார் பணி அருளவேண்டல்35நாள் அவம்படாமை வேண்டல்36அன்பிற் பேதுறல்37கூடல் விழைதல்38தரிசனை வேட்கை39நாள் எண்ணி வருந்தல்40ஏத்தாப் பிறவி இழிவு41பவனிச் செருக்கு42திருவருள் விலாசப் பத்து43திருவருட் பேற்று விழைவு44செல்வச் சீர்த்தி மாலை45செவி அறிவுறுத்தல்46தேவ ஆசிரியம்47இங்கிதப் பத்து48போற்றித் திருவிருத்தம்49திருப்பள்ளித்தாமம் தாங்கல்50சண்முகர் கும்மி51சண்முகர் வருகை52தனித் திருத்தொடை53இரண்டாம் திருமுறை: அருள் நாம விளக்கம்54சிவசண்முகநாம சங்கீர்த்தன லகரி55மூன்றாம் திருமுறை: சிங்கபுரிக் கந்தர் பதிகம்
திரு அருட்பா · திருவருட்பிரகாச வள்ளலார் (இராமலிங்க சுவாமிகள்)

போற்றித் திருவிருத்தம்

1அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்✓
கங்கையஞ் சடைசேர் முக்கட் கரும்பருள் மணியே போற்றி
அங்கையங் கனியே போற்றி அருட்பெருங் கடலே போற்றி
பங்கையன் முதலோர் போற்றும் பரம்பரஞ் சுடரே போற்றி
சங்கைதீர்த் தருளும் தெய்வச் சரவண பவனே போற்றி.
2✓
பனிப்பற அருளும் முக்கட் பரஞ்சுடர் ஒளியே போற்றி
இனிப்புறு கருணை வான்தேன் எனக்கருள் புரிந்தாய் போற்றி
துனிப்பெரும் பவந்தீர்த் தென்னைச் சுகம்பெற வைத்தோய் போற்றி
தனிப்பெருந் தவமே போற்றி சண்முகத் தரசே போற்றி.
3✓
மணப்புது மலரே தெய்வ வான்சுவைக் கனியே போற்றி
தணப்பற அடியர்க் கின்பம் தரும்ஒரு தருவே போற்றி
கணப்பெருந் தலைவர் ஏத்தும் கழற்பதத் தரசே போற்றி
குணப்பெருங் குன்றே போற்றி குமரசற் குருவே போற்றி.
4✓
தவம்பெறு முனிவருள்ளத் தாமரை அமர்ந்தோய் போற்றி
பவம்பெறுஞ் சிறியேன்றன்னைப் பாதுகாத்தளித்தோய் போற்றி
நவம்பெறு நிலைக்கும் மேலாம் நண்ணிய நலமே போற்றி
சிவம்பெறும் பயனே போற்றி செங்கதிர் வேலோய் போற்றி.
5✓
மூவடி வாகி நின்ற முழுமுதற் பரமே போற்றி
மாவடி அமர்ந்த முக்கண் மலைதரு மணியே போற்றி
சேவடி வழுத்தும் தொண்டர் சிறுமைதீர்த் தருள்வோய் போற்றி
தூவடி வேல்கைக் கொண்ட சுந்தர வடிவே போற்றி.
6✓
விண்ணுறு சுடரே என்னுள் விளங்கிய விளக்கே போற்றி
கண்ணுறு மணியே என்னைக் கலந்தநற் களிப்பே போற்றி
பண்ணுறு பயனே என்னைப் பணிவித்த மணியே போற்றி
எண்ணுறும் அடியார் தங்கட் கினியதெள் அமுதே போற்றி.
7✓
மறைஎலாம் பரவ நின்ற மாணிக்க மலையே போற்றி
சிறைஎலாம் தவிர்ந்து வானோர் திருவுறச் செய்தோய் போற்றி
குறைஎலாம் அறுத்தே இன்பம் கொடுத்தனன் குருவே போற்றி
துறைஎலாம் விளங்கு ஞானச் சோதியே போற்றி போற்றி.
8✓
தாருகப் பதகன் தன்னைத் தடிந்தருள் செய்தோய் போற்றி
வேரறச் சூர மாவை வீட்டிய வேலோய் போற்றி
ஆருகச் சமயக் காட்டை அழித்தவெங் கனலே போற்றி
போருகத் தகரை ஊர்ந்த புண்ணிய மூர்த்தி போற்றி.
9✓
சிங்கமா முகனைக் கொன்ற திறலுடைச் சிம்புள் போற்றி
துங்கவா ரணத்தோன் கொண்ட துயர்தவிர்த் தளித்தோய் போற்றி
செங்கண்மால் மருக போற்றி சிவபிரான் செல்வ போற்றி
எங்கள்ஆர் அமுதே போற்றி யாவர்க்கும் இறைவ போற்றி.
10✓
முத்தியின் முதல்வ போற்றி மூவிரு முகத்த போற்றி
சத்திவேற் கரத்த போற்றி சங்கரி புதல்வ போற்றி
சித்திதந் தருளும் தேவர் சிகாமணி போற்றி போற்றி
பத்தியின் விளைந்த இன்பப் பரம்பர போற்றி போற்றி.
11✓
தெருளுடை யோர்க்கு வாய்த்த சிவானந்தத் தேனே போற்றி
பொருளுடை மறையோர் உள்ளம் புகுந்தபுண் ணியமே போற்றி
மருளுடை மனத்தி னேனை வாழ்வித்த வாழ்வே போற்றி
அருளுடை அரசே எங்கள் அறுமுகத் தமுதே போற்றி.
12✓
பொய்யனேன் பிழைகள் எல்லாம் பொறுத்திடல் வேண்டும் போற்றி
கையனேன் தன்னை இன்னும் காத்திடல் வேண்டும் போற்றி
மெய்யனே மெய்யர் உள்ளம் மேவிய விளைவே போற்றி
ஐயனே அப்ப னேஎம் அரசனே போற்றி போற்றி.
13✓
முருகநின் பாதம் போற்றி முளரியங் கண்ணற் கன்பாம்
மருகநின் கழல்கள் போற்றி வானவர் முதல்வ போற்றி
பெருகருள் வாரி போற்றி பெருங்குணப் பொருப்பே போற்றி
தருகநின் கருணை போற்றி சாமிநின் அடிகள் போற்றி.
14✓
கோதிலாக் குணத்தோய் போற்றி குகேசநின் பாதம் போற்றி
தீதிலாச் சிந்தை மேவும் சிவபரஞ் சோதி போற்றி
போதில்நான் முகனும் காணாப் பூரண வடிவ போற்றி
ஆதிநின் தாள்கள் போற்றி அநாதிநின் அடிகள் போற்றி.
15✓
வேதமும் கலைகள் யாவும் விளம்பிய புலவ போற்றி
நாதமும் கடந்து நின்ற நாதநின் கருணை போற்றி
போதமும் பொருளும் ஆகும் புனிதநின் பாதம் போற்றி
ஆதரம் ஆகி என்னுள் அமர்ந்தஎன் அரசே போற்றி.