திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
காப்புப்பருவம்2 / 11
திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் · திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
காப்புப்பருவம்
2திருமால்✓
பூமேவு பொய்கைப் பொறிச்சிறகர் வண்டினம்
பொங்கரின் விருந்துயர்தரும்
போரூரின் முருகனைச் சீர்மேவு குமரனைப்
புனிதஞா னக்குரவனைக்
காமேவு கடவுட் பசுந்துணர் விரிந்துநறை
கடிமணத் தொடுபிலிற்றுங்
கண்ணகல் நிழலரசு சசிகணவ னுக்குதவு
கந்தவே ளைப்புரக்க
தூமேவு ஞானசத் திக்கடலின் மொண்டுசிற்
சொலிதசத் துவப்பொருப்பில்
தோமற இவர்ந்துலக மெங்கும் பரந்துயிர்த்
தொகைவகைப் பயிர்கள்தழையத்
தேமேவு மதுரம் பழுத்தொழுகு மென்மொழித்
திருமின் கலந்துமிளிரச்
செய்யபே ரருள்மாரி பொய்யாது பொழிகின்ற
செங்கட் கருங்கொண்டலே.
3சதாசிவம்
வேறு✓
காரென வாருயிர் மீதரு ளேபொழி
கண்ணனை விண்ணவனைக்
கந்தனை யெந்தையை வந்தனை யன்பர்
கடும்பகை கொன்றவனைச்
சீர்சம ராபுரி யாளனை மாளுறு
தேவர்ம ணாளனையோர்
சின்மய ரூபனை நன்மையெ லாமுறு
சேயினை யருள்புரிக
ஓர்வரி தாமுயி ரியாவையும் நேர்வினை
ஒத்தும லப்பகைபோய்
ஒண்கதி மேவிட ஐந்தொழில் தந்திடும்
உத்தம சிற்பரமாய்ச்
சேருரு வாயுரு வாயிரு வகையுஞ்
செறிபொரு ளாய்நிறைவாய்ச்
செம்முகம் ஐந்தொடு செம்மையில் நின்றருள்
செய்தச தாசிவமே.
4பராசத்தி✓
விடயவா வாரகஞ் சொருபவா வாரக
மெனப்பகர் விதங்களாகி
விரிமலாக் கங்குலுயிர் விடயஞா னத்தினொடு
மிகுசொருப ஞானத்தையுந்
தடையதா கச்செயத் தனுவாதி நாலையுந்
தருமாயை யறிவினாலுந்
தண்ணருட் பேரறிவி னாலுமத் தடைவிடுந்
தகுபரையை யஞ்சலிப்பாம்
அடலினோ டெழுமவுண ருடல்வேறு கூறுபட
அலகைவே தாளபூதம்
ஆடப்பெ ருங்கைக கூவப்ப ருந்துநிழல்
நீடச்சி வந்தவடிவேல்
நொடியிலே வியகுகனை நெடியமால் மருகனை
நிகரில்போ ரூர்முருகனை
நுணியகூ ரறிவுகொடு கருதுவோ ரமுதமென
நுவலுமோ ரருள்புரியவே.
5விநாயகர்
வேறு✓
பகவதி கரவணை மிசையயில் பயிலும்
இகலறு குமரனை யினிதருள் புரிக
அகரமும் உகரமும் மகரமு மாகித்
திகழுறு பிரணவ மெழுசிறு களிறே.
6திருநீறு
வேறு✓
சோதி மகரக் குழைசெறிசுந்
தரத்தோ ளீரா றுடையானைச்
சுருதி யிரைக்குந் தண்டையந்தாள்
துணையென் முடியிற் பொறித்தானை
மாது வளருஞ் சமரபுரி
வாழ்வை வானோர் சிகாமணியை
வடிவே லரசை மயிலரசை
வந்து புறங்காத் தளித்திடுமால்
ஆதி பகவன் ஞானவடி
வழலிற் பூத்து நித்தியமாய்
அணிந்தோர் தமக்கு வசிகரமாய்
அருந்தி னோர்கட் காரமுதாய்
நீதி யறியும் பசுமலத்தை
நீக்கு மொருநற் குறிகாட்டி
நிகழ்பே ரின்பக் கடலூட்டி
நின்ற புகழ்வெண் திருநீறே.
7சிவகண்மணி✓
அரிய மனமும் அறிவரிதாய்
அருவாய் நிறைவா யிருந்துமுனர்
அமரர் திரிபு ரஞ்செய்குறை
அறையக் கேட்டு முக்கண்வழிக்
கரிய களச்செம் புயல்கருணை
பொழியப் பெருகுங் கடற்பிறந்து
கருதும் அடியார் பவக்கடலைக்
கடத்தும் மணியைத் துதித்திடுவாம்
பெரிய தவத்துக் குறுமுனியெம்
பெருமான் செவிவாய் மடுத்தருந்தப்
பிறங்கு ஞான மொழிநறவு
பெய்யுங் குமுத வாயானைத்
தெரியல் நறுமா முகைகுறமான்
திளைக்கும் முலைக்கோ டுழவலருந்
திருமார் பகனைச் சமரபுரிச்
சேயைப் புறங்காத் தளித்திடவே.
8திருவைந்தெழுத்து
வேறு✓
கருதரிய பலவுயிர்கள் பந்தனைக் கார்க்கடற்
கரையிவர வருகலனை யன்பருட் காட்சியை
அருமறையும் அறிவரிய அஞ்சுகப் பேற்றினை
அரியசிவ னுரியபெயர் ஐந்தினைப் போற்றுதுங்
குரவுகமழ் குறவனிதை கொண்கனைக் கார்த்திகை
குடமுலையின் அமுதகடல் உண்டகத் தேக்கனைத்
தருணகும ரனையினிய தண்டலைச் சீர்ப்பொலி
சமரபுரி தனில்நிலவு கந்தனைக் காக்கவே.
9திருமகள்
வேறு✓
பொற்குவடு பத்துநூ றிலகுமுடி தொறும்இரவி
பூணெனக் கொண்டுமதியம்
பொழிநிலவு வெள்ளத்தின் மிசைமிதந் தழகுசெறி
புண்டரிகம் மண்டுபுயலை
அற்புதத் தொடுகொண்டு மிளிரஅப் புயல்நடு
அரும்புநால் வகைமலரொடும்
அஞ்சோதி மினலொன் றிருந்தென இருந்தொளிர்
அணங்கினை நினைந்துதொழுவாம்
எற்செறி திருப்பரங் குன்றாவி னன்குடி
இரும்பொழில் திருவேரகம்
ஈறில்சீ ரலைவாய் விளங்குபழ முதிர்சோலை
என்னுமுறை புகழ்பதிதொறுங்
கற்குவடு தொறுமினிய நற்சமர புரியும்உறை
கடவுளைக் கடவுளரெலாங்
கைம்மலர் குவிக்கஇரு கால்மலர் படைத்தவொரு
கந்தனை யளிக்கவென்றே.
10கலைமகள்✓
நெய்தலங் காடுமிரு காவிபொரு வள்ளையும்
நிகழ்குமிழும் முகைமுல்லையும்
நிறைநறைக் குமுதமுந் தொடியுடைத் தோன்றியொடு
நேர்கன்னி காரமுகையும்
எய்தரிய நூபுரக் கமலமுஞ் செறிகடவுள்
எகினம்வெள் ளைக்கமலமீ
தேர்பெற்ற மறைமுதலை கலைசொற் றிருந்தென
இருந்தவளை யஞ்சலிப்பாங்
கைதையங் கானமும் புன்னையங் கானமுங்
கானல்நெய் தற்கானமுங்
கடிமணத் தொடுநறவும் மகரமுந் தத்திலகு
கல்யாண மாமறுகென
மைதவழ் பொழிற்புளினம் மலிசுயற் புலவையும்
வளைஅலவ னுறுபசியையும்
வாரா தகற்றியொளிர் நெய்தலஞ் சமரபுரி
வருகுகனை யருள்புரியவே.
11பலதேவர்
வேறு✓
எண்திசை யோர்வசு எண்மர்கள் வயிரவர்
எண்மர் மருத்துவரும்
ஈரிரு மூவரும் ஓரொரு பதின்மரும்
ஈரறு சூரியரும்
அண்டர் வியாழன் அடும்புய வீரர்
அலர்ந்த சரோருகமேல்
அந்தண னோரெழு மங்கையர் சோமனும்
வந்தரு ளேபுரிவார்
தண்டையு நீடு சதங்கையும் நீளொளி
தங்கிய கிண்கிணியுந்
தாளிணை மாமலர் மீதினி லோசை
தழைந்திட வந்தமையாம்
ஒண்தொடி கொஞ்ச இருந்து குறங்கில்
உவந்தருள் கொங்கையமு
துண்டருள் கந்தனை யஞ்சம ராபுரி
ஓண்கும ரேசனையே.