முருகன் App
திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
சிறுபறைப்பருவம்9 / 11
திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் · திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்

சிறுபறைப்பருவம்

72✓
கனககுவ டெனநிலவு வீரவா குத்தலைவர்
ககனமுக டளவும்இரதக்
கணமணி முழக்குங் கவுட்குழி திறந்துபாய்
கலுழிமத கரிமுழக்கும்
மனகதியி னைப்பொருவு குரகத முழக்கொடு
வயப்புத கணமுழக்கும்
வால்வளை முழக்கும்அதி பேரிகை முழக்கும்அகல்
வானவர்கள் முடிமுழக்கும்
பனகஅணை துயிலுமவன் முதலினோ ருபயதிசை
பல்லாண்டு சொலுமுழக்கும்
படிறவுண மாசுணக் குருமெனச் செவிபுகப்
பண்டுசூர் வென்றசதுரா
தினகரனை நிகர்சமர புரியிலுறை குமரவேள்
சிறுபறை முழக்கியருளே
செறிகலாப மயில்முதுகி னுதயசின் மயதூய
சிறுபறை முழக்கியருளே.
73✓
குடமுழா வாணன்ஈ ராயிர கரங்கொண்டு
குமுகுமென வேமுழக்கக் முழவொலி முழக்கவிரி
கொண்டலின் நிறக்கடவுள்
கோகனக மாளிகையினான்
தடமருவு கைத்தாள நற்றொனி முழக்கஅந்
தமருகத் தொனிமுழக்கத்
தாரளி முழக்கமறை நூபுர முழக்கவிரு(து)
ஆள்கள்தா ளம்முழக்க
அடல்நதி யிரைக்கமணி யரவுக ளிரைக்கஉழை
அலறமுய லகன்நெளிவுற
ஆடக மணிச்சபையின் நாடகம் இழைத்துமைக்
கன்புசெயு மின்பவடிவோன்
திடமருவு குமரனே சமரபுரி முருகனே
சிறுபறை முழக்கியருளே
செறிகலப மயில்முதுகி னுதயசின் மயதூய
சிறுபறை முழக்கியருளே.
74✓
ஆறுசம யக்கடவுள் வேறுவே றின்றியான்
ஒருவனே யங்கங்கிருந்
தன்பர்க்கு முத்திதரு வித்தென்றி யாவர்க்கும்
அறிவித்த வதனமணியே
வீரசுரர் துஞ்சவெஞ் சிறைவிண்டு வானவர்கள்
விண்ணகத் தமுதருந்த
வெற்றிமுர சன்றுனது சேனைவா ரிதியிடை
வியப்புற முழங்குமுறைபோல்
மாறுபடு காமாதி வெம்படைகள் துஞ்சிட
மலச்சிறை கழன்றுஞான
மாவின்ண ணகத்திருந் தானந்த அமுதெனது
வாய்மடுத் துண்ண அறிவில்
தேறுமறை நாதமென நினதுமுள ரிக்கரச்
சிறுபறை முழக்கியருளே
செறிகலப மயில்முதுகி னுதயசின் மயதூய
சிறுபறை முழக்கியருளே.
75✓
கட்டைமுள் தழுவுதாள் நெட்டித ழுடுத்தசெங்
கமலநான் முகனகினமுங்
கவுத்துவ மணிப்பணியொ டம்போரு காடவி
கலித்தபச் சைப்பன்றியும்
மட்டுலவு சீர்பாதம் இன்றளவு கண்டிலா
வானவனு மோரொருவரை
வழிவருஞ் சரியாதி வருவித்து வீடுதரும்
வனைதமிழ்க் காழிமேவி
எட்டுணையும் அறிவரும் அனந்தசீ வரைவதுவை
என்றுபெய ரிட்டழைத்தங்
கிரும்புண்ட நீரில் திரும்பாது வீடுதரும்
இனியகவு ணியர்விளக்கே
திட்டமொடு வரமுதவு சமரபுரி முருகவேள்
சிறுபறை முழக்கியருளே
செறிகலப மயில்முதுகி னுதயசின் மயதூய
சிறுபறை முழக்கியருளே.
76✓
வெளியில்வளி யசைவற்று நின்றவா றமலஉளம்
மிளிர்பரத் திலயமாகி
மெய்த்தவ மிழைப்பவர்க் ககல்வான நதிநீர்
வியன்தொளைக் கரநிமிர்த்தங்
களியொடுங் கரிமொண்டு குண்டிகை நிறைப்பஅல
வற்பகைக் கவிகள்தாவி
அங்கற் பகக்கனி கொணர்ந்துவந் திக்கஅனு
தினமுமவ ரறையும்மறைநூல்
கிளிகள்பயி லக்ககன கந்தருவர் வந்தமுத
கீதநா தம்முழக்குங்
கிளர்சந்த னப்பொங்கர் மலிசாரல் கயிலையங்
கிரிவார வளநிகர்க்குந்
தெளிவுதரு சமரபுரி தனில்நிலவு குமரவேள்
சிறுபறை முழக்கியருளே
செறிகலாப மயில்முதுகி னுதயசின் மயதூய
சிறுபறை முழக்கியருளே.
77✓
புகர்படு தொண்டை நிமிர்த்துச் சிகிவாய்
பொருவக் கரிமதியிற்
பொங்கமு தள்ளிப் பிடிகளி பெருகப்
போய்வாய் வழியூற்றி
மகவுடு தடவும் பொழில்படு முகில்வாய்
மணிநீர் திணிதரளம்
வாரி யிறைத்துக் கற்பக நற்குழை
மலர்நறை சொரிதரவே
தகர முறித்துக் கயமுனி பகுவாய்
தந்தப் பிடிநுதலைத்
தைவந் தருகி லணைத்து மணத்திடு
சண்பக மலர்துயிலுந்
குகைபடு சாரற் போரூ ரிறையே
கொட்டுக சிறுபறையே
கொத்துறு முத்தமிழ் மெத்தவ ளர்த்தவ
கொட்டுக சிறுபறையே.
78✓
அளைகடை முடைகது வியதளிர் வடிவத்
தாய்ச்சியர் மத்தொலியும்
அங்குட மடிமுலை விம்மிக் கன்றுளி
ஆன்றிரை கத்தொலியுங்
கிளைபடு தொளைவழி விரல்விடு தொறுவர்கள்
கீதக் குழலொலியுங்
கேழ்செறி கானக் கோழிகள் முறைமுறை
கிட்டிக் கூவொலியும்
விளைதரு தளவத் தளிபல விளரி
விளக்கிய சீரொலியும்
விடியற் காலைக் கடலைப் பொருவ
மிகுத்தெழு மாமுல்லைக்
குளமலி கண்ணன் தருபோ ரூரிறை
கொட்டுக சிறுபறையே
கொத்துறு முத்தமிழ் மெத்தவ ளர்த்தவ
கொட்டுக சிறுபறையே.
79✓
கிளிமொழி புகல்வார் கீதம்பயில்வார்
கின்னரி வாசிப்பார்
கேழ்கலன் அணிவார் மாலைகள் புனைவார்
கிளர்மயில் நடமிடுவார்
அளிசுழல் பூம்பந் தெறிவார் குங்குமம்
அள்ளியி றைத்திடுவார்
ஆடவர் புயவணை மீதிற் றுயில்வார்
அழகுப ணிக்கருள்வார்
களிறிடை வருவார் சிவிகையில் வருவார்
கவனப் பரிவருவார்
காமன்இல் வருவார் மாமன்இல் வருவார்
கஞ்சன்இல் வந்தருள்வார்
குளிர்தமிழ் புனைவார் நிகழ்போ ரூரிறை
கொட்டுக சிறுபறையே
கொத்துறு முத்தமிழ் மெத்தவ ளர்த்தவ
கொட்டுக சிறுபறையே.
80✓
உதடு கடந்த நெடும்பலும் உள்குழி
கணுமெக் கியவயிறும்
ஊரர வங்கள் நெளிந்திடு செவிகளும்
உளநெட் டைப்பலபேய்
கதழெரி வெம்பசி யுற்றனம் என்று
களிப்பொடு கைகொட்டக்
ககனர்க் கரசிகல் அற்றனம் என்றணி
கடகத் தோள்கொட்ட
மதமலி யவுணரு ளம்பறை கொட்டிட
வானவர் நகரியெலாம்
மன்னிய வீரப் பேரிகை கொட்ட
மணிக்குடர் உதிரநிணங்
குதிகொளும் வெற்றிச் சத்தி தரித்தோய்
கொட்டுக சிறுபறையே
கொத்துறு முத்தமிழ் மெத்தவ ளர்த்தவ
கொட்டுக சிறுபறையே.
81வேறு✓
மரகத மணிக்குவடு தழைசிறை விரித்துரகன்
மணிமுடி நெளிக்கஇருமூ
வளமுள முடிப்பவள வரையினை யெடுத்துநட
மிடலென மயிற்பரியின்மேல்
அருள்விழி கொழிக்கமுக மதிநில வெறிக்கநினை
அடியவர் களிக்கவருவோய்
அமணர்கள் பிதற்றுகலை யலைகடல் முழக்கம்அற
அருமறை முழக்கமுறையே
இருமதுரை யிற்பெரிய நதிவிடு திருப்பதிகம்
எதிர்செல வெடுத்தபெருமான்
இருளென மலைக்கும்மல மறவுன தடிக்கமலம்
எனதுபுன் முடிக்கண் அருள்வோய்
செருவலி முழக்குநிசி சரர்கெட வுருத்தஇறை
சிறுபறை முழக்கியருளே
செழுமணி மதிற்சமர புரியிலுறை சிற்பரம
சிறுபறை முழக்கியருளே.