திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
சப்பாணிப்பருவம்5 / 11
திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் · திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
சப்பாணிப்பருவம்
32✓
பொருநைநதி யிற்படிந் திளமரக் காவிற்
புகுந்துசந் தப்பொங்கரிற்
புக்குமண நாறுதென்றற்குழவி விளையாடு
பொதியப் பொலங்குவட்டில்
திரையெறியு மணியாழி யங்கையி லடக்கியஞ்
செந்தமிழ்க் கடல்விரித்துத்
திறமையுடன் உறையுமொரு குறுமுனி யகத்தினுள்
திமிரமற மறைமுடிவெனும்
அருளொளி பரப்புஞா னக்கொழுஞ் சுடர்வைத்த
ஆறானைக் கொண்டலே
அன்பர்வாய் வண்கமுதம் விண்டுதண் தமிழ்நறவ
மாரவெழு மொருமதியமே
தருணவுமை முககமலம் மலரவரு பரிதியே
சப்பாணி கொட்டியருளே
தடமலையை நிகர்கரிகள் திரிசமர புரிமுருக
சப்பாணி கொட்டியருளே.
33✓
அலைகட லிடைப்பெரிய மகரமீன் நீர்கிழிய
அம்பிற் கடிந்தேகுமா
றரவுயர்த் திடுகொடிக் குருகுலக் கோமகன்
அடற்படைக் கடலுடையவே
சிலைவலிய வாகுவல யப்புயப் பற்குனன்
தேர்கடவி வெற்றிவளைவாய்ச்
செம்மலரில் வைத்துமறு மன்னர்செவி செவிடுறச்
செல்லிடித் தொனிமுழக்குந்
தொலைவறு பசுங்கதி ரெறிக்கும்மர கதநிறச்
சுந்தரப் புயன்மருகனே
சுருதிமுடி வாசனத் துறைபரை முலைக்குடஞ்
சொரியமுத வாரிநாறுந்
தலைமைபெறு செங்குமுத வாயனே தூயனே
சப்பாணி கொட்டியருளே
தடமலையை நிகர்கரிகள் திரிசமர புரிமுருக
சப்பாணி கொட்டியருளே.
34✓
ஈராறு பரிதியீ ராறுமே ருதயத்
திருங்குழை சுமந்தபுயமும்
ஈரெட்டு வெண்கலைகள் மேவிக் களங்கமுய
லின்றிச்செ ழுஞ்சுடர்விடும்
ஓராறு மதியமீ ராறுதெய் வக்கமல
ஒண்மலர் மலர்ந்தபடியே
ஒற்றுமை பெறக்கொண்டு நிற்றல்போ லத்திகழும்
ஒளிவிழி சிறந்தமுகமுஞ்
சீரார் படைக்கலக் கமலமும் மார்பமுஞ்
செய்யதண் டைத்தாளுமென்
திமிரமற எனதகங் குடிகொண்டு மீளாது
திகழ்வீடு தருகுரிசிலே
தாரார் சடைப்புனிதர் பாலாகு கக்கடவுள்
சப்பாணி கொட்டியருளே
தடமலையை நிகர்கரிகள் திரிசமர புரிமுருக
சப்பாணி கொட்டியருளே.
35✓
நனவில்வரு கனவிற் சுழுத்தியிற் பொறிகரண
நற்புருட னிற்பகுதியும்
நவில்கால பரமதில சுத்தமா யையும்விண்ணின்
நண்ணுபூ ரணமாயதோர்
உனலருவி யோமத் திருஞ்சுத்த வித்தைமுதல்
ஒருமூ வகைக்கருவியும்
ஒருபரம துரியத்து விந்துவும் மிளிர்விசுவம்
உண்டதிசை யுயர்நாதமும்
வினவலுறும் உபசாந்தம் அதனில்மா மாயையும்
மிகுசொரூபம் அதனிலிருளும்
விள்ளுமென வுரைசெய்தென் உள்ளமலம் அகலஅருள்
விழிவிழிப் பொழியுமுகிலே
தனபதியை எலுவனென வுளமகிழும் அரன்மதலை
சப்பாணி கொட்டியருளே
தடமலையை நிகர்கரிகள் திரிசமர புரிமுருக
சப்பாணி கொட்டியருளே.
36✓
குலிசக் குழுச்சலவு பூனதக் கிம்புரிக்
கோடுநா லுடையவெள்ளைக்
குஞ்சரக் கும்பமிசை கொட்டல்போ லச்சிவன்
குலவுப் புயங்கொட்டல்போல்
மலைபெற்ற பைம்பிடிப் பாலுண்டு முத்தமிழ்
மதம்பொழியு மந்தநாளின்
மன்னுநத் துவமசியின் மும்மைப் பதங்களை
வகுத்தறி வுறுத்துமுறைபோற்
கலகப் பிணக்குடைச் சமயப் பெரும்பறவை
கடியுமொரு கருவியதுபோற்
கருதரிய பதிமுதல் திரிபொருளும் நிசமெனக்
கைக்குறிப் பறிவித்தல்போல்
தலைமைத் தமிழ்ச்சங்கம் அளவிட்ட விரககுக
சப்பாணி கொட்டியருளே
தடமலையை நிகர்கரிகள் திரிசமர புரிமுருக
சப்பாணி கொட்டியருளே.
37✓
கண்ணன் திருத்தங்கை முலையமுத கடலுண்டு
கனஞான வரையிவர்ந்து
கருதரிய சுரர்முதற் பயிர்கள்தழை யப்பெருங்
காரவுண மாசுணமெலாந்
துண்ணென் றுளஞ்சுறுக் கிட்டுமுரி யச்செழுஞ்
சுடர்விடுந் தாரைநெடுவேற்
சோதிமின் மின்னியெழு தீபச் சிகைப்பொருவு
சுடிகைக் கொடிப்பேரிடி
எண்ணென் திசைக்களிறு பிளிறிட இடித்துமுறை
இன்னருட் பொழியுமுகிலே
இசைமுழவு பேரிகை வலம்புரி முழக்கமுடன்
எழில்மங்க லச்சுமையுந்
தண்ணந் துறைப்பரவை யோடிகலு போரூர
சப்பாணி கொட்டியருளே
தகைமைபெறு குறவனிதை விழியிணைகள் குடிகொள்புய
சப்பாணி கொட்டியருளே.
38✓
மரகதப் பந்திநிறை பைங்கிரண மண்டலம்
வழங்குகுழை முகமதிகளும்
மாணிக்க மணிராசி யிளவெயிற் றிசைவீசு
மகுடநீ டியமுடிகளுங்
கரநதிர்ப் பகலெனச் சுடர்விரித் தொளிர்வயிர
டகநிரை செறிதோள்களுங்
கறையகலு மதிமண் டலங்களென நித்திலங்
கதிர்விடு மாணிமார்புந்
திரகதச் செக்கரின் நிறத்துகில் மருங்குலுந்
திப்பியத் தலநவமணித்
திரண்மண்டு தண்டையங் கமலமுந் திகழவிச்
சித்திரப் பைஞ்சிறையயிற்
குரகதத் தினைநடவி யடியவர்க் கருள்முருக
கொட்டியருள் சப்பாணியே
கூரு ரயிற்கிறைவ போரூர் நகர்க்கதிப
கொட்டியருள் சப்பாணியே.
39வேறு✓
உடலிற் குடர்நீ ளக்கொடு சென்றுவ
ணத்திரள் வட்டமிட
ஒள்ளிய செல்வப் பிள்ளைகள் பற்பல
உயர்பட் டம்விடல்போற்
கடலிற் படுகுரு திப்பெரு வெள்ளங்
கட்குழி சிறுபலபேய்
கடிஅதள் மூடிய பேரிகை முழவு
கரங்கொடு கரைகாண
மிடலுற் றிடுபிண மாமலை தோறும்
வியன்பேய் களியாட்டம்
இட்டா டத்தலை வட்டா டக்கடு
வெந்துர்க் குலமுழுதுங்
கொடுமைத் திறமும் அறவேல் விட்டவ
கொட்டுக சப்பாணி
கொற்றவ நற்சம ரப்பதி யுத்தம
கொட்டுக சப்பாணி.
40வேறு✓
ஆடகத் திரள்மதிலும் மேல்நிலைச் சிகரிகளும்
ஆணிமுத் தொளிர்மேடையும்
ஆழிதத் தலைபொருவு பீடுடைக் கொடிகள்பல
ஆடுபொற் குடமாடமும்
நீடுதெற் றிகளுமணி தளிகைச் செழுமனையும்
நேர்செலுத் தியதேர்களும்
நீர்நிறைத் திடுகுடமும் வாழைநற் கமுகினமும்
நீள்நிலைப் பலதேர்களும்
சேடுறத் திகழ்மகர தோரணப் பலமறுகு
தோறுமுத் தமிழோர்களும்
சீர்மறைத் தலைவர்பரி பூரணத் தவரளகை
யாளனொத் தவர்யாவருங்
கூடிமொய்த் தொளிர்சமர மாநகர்க் கொருமுதல்வ
கொட்டியருள் சப்பாணியே
கூடலிற் செழியன்அழல் கூன்அறப் புரியும்இறை
கொட்டியருள் சப்பாணியே.
41வேறு✓
தீதறு கற்பக நற்றரு வுற்ற
செயக்குலி சப்பாணி
சேட னுடற்றுயில் பச்சை நிறத்த
செருச்செய் வளைப்பாணி
போதிடை யுற்றுல கத்தை யளித்த
புதுக்கர கப்பாணி
பூசுரர் நற்றவர் கற்றவ ரேத்து
புவித்தலம் உற்றார்கள்
மூதணி கைக்கம லத்தொ டுவப்பு
முகக்கம லப்போது
மூட விரிக்க வுதித்த மதிக்கதிர்
ஒத்தெழு மெய்த்தேவே
கோதறு நற்சம ரப்பதி யுத்தம
கொட்டுக சப்பாணி
கூர்கொள யிற்படை யுற்றக ரத்திறை
கொட்டுக சப்பாணி.