முருகன் App
திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
தாலப்பருவம்4 / 11
திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் · திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்

தாலப்பருவம்

22✓
கறையின் றொளிரு மதிமுகத்துக்
கரும்பன் னாரும் ஆடவருங்
கலவித் தேறல் அயின்றயின்று
களித்துத் தருக்கி விளையாடும்
நிறையுஞ் சோமச் சிலைத்தகடு
நிரப்பிக் குலிசத் தூணிறுத்து
நிலைகொண் டரிய நவமணிகள்
நிகழும் மாழைத் தசம்புநிரைப்
பொறைகொண் டிலங்கும் பலமாடப்
புனிதக் கொடிகள் கற்பகப்பூம்
பொங்கர்க் குறுந்தாள் நறுமுகையிற்
புடைக்குந் தோறும் மடலவிழ்ந்து
தறையில் நறையில் பெருக்கற்றுஞ்
சமர புரியாய் தாலேலோ
தமரக் கடலைக் கடைந்தமுதந்
தருவோன் மருகா தாலேலோ.
23✓
மகரப் பரவை யளறுபட
மாயைத் திறமார் கிரவுஞ்ச
வயமால் வரைசெந் தூளியெழ
மதமா முகத்துச் சினத்தவுணன்
அகலக் குலிச வரைதகர
அரிமா முகன்பே ராயிரவாய்
அருஞ்சோ ரிகள்நின் றலையெறிய
அண்ட கூடந் தொடுஞ்சூதம்
இகலற் றலறி விழஅசுரர்
எவரும் பதறிக் குடியோட
இலங்கும் அமரர் கலங்காமல்
எழில்வா னுலகங் குடியேறத்
தகமைச் சுடர்நெட் டிலைவடிவேல்
தடக்கை யெடுத்தோய் தாலேலோ
தமரக் கடலைக் கடைந்தமுதந்
தருவோன் மருகா தாலேலோ.
24✓
மூல நிலத்தி லதோமுகமாய்
முகிழ்ந்து விழிஇன் பொழுதுயிலும்
மூரிப் பாம்பைக் கால்அனலை
மூட்டி யெழுப்பி நிலம் ஆறுஞ்
சீல மொடும்போய்த் தரிசித்துச்
செழுமா மதியி னமுதகடல்
தேக்கி யகத்தங் கசைவுறுமோர்
தெய்வத் தவத்தோர் உளவிழியிற்
காலுந் தீப மினல்பந்தங்
கடிகூர் விறிசு கதிர்மதிபோற்
காட்டு மொளியா யிவையாயுங்
கடந்தாங் கழிவில் பேரொளியாய்ச்
சால விளங்கும் விந்துவெனுந்
தடமா மயிலோய் தாலேலோ
தமரக் கடலைக் கடைந்தமுதந்
தருவோன் மருகா தாலேலோ.
25வேறு✓
காரார் திசைமலி போரார் களிறு
கலங்கிப் பிளிறிடவே
கனக நிறத்துத் திருகு மருப்பிற்
கனிசின மொடுமோதிப்
பேரா யிரமுடி யுரகன் நெளிக்கப்
பின்போய் முன்னோடிப்
பேசரு வடவரை குலவரை திசைவரை
பெயரும் படிதாவிப்
பார்து ழேழ்கடல் குமுறத் துள்ளிப்
பனிவா னகமோதிப்
பகருங் கோளகை சாடிப் பீடுறு
படிவரு தகருடையோய்
தாரார் பொழில்சூழ் போரூ ரிறையே
தாலோ தாலேலோ
சண்முக முக்கட் பண்ணவர் குருபர
தாலோ தாலேலோ.
26✓
அமரர் தமக்கன் றொருநாள் இரணிய
அணிவட வரைமீதே
அறைதரு மும்மா யையினூ டுருவி
அகண்டா காரமதாய்த்
திமிர மகற்றிய முச்சுட ருக்கொளி
செய்கா ரணவொளியாய்த்
திகழ்தரு புவன சராசர முழுதுஞ்
செறிபூ ரணவெளியாய்க்
கமையுறு மனவா சகமொடு காயங்
கண்டள விடவருநின்
காட்சியை மாட்சிமை பெறமுன் காட்டிய
கண்ணே யாவர்க்குந்
தமரென நிலவிய சமர புராதிப
தாலோ தாலேலோ
சண்முக முக்கட் பண்ணவர் குருபர
தாலோ தாலேலோ.
27✓
கோளகை தடவிக் குடைபல நீடக்
கொடியெண் திசைமூடக்
கோதறு பேரணி சூரியர் மறையக்
கொழுவிய வெயில்வீச
நீளிய சாமரை வீசப் பேரிகள்
நீள்கட லேழெனவே
நின்று முழங்கத் தெய்வந நகரில்
நிரம்பும் அரம்பையர்தாம்
வேளை மருட்டு விழித்தொழில் கைத்தொழில்
வேறா காநடன
மிட்டு வரப்புய லொத்தவன் முதலவர்
மெய்ச்சிவ ரச்சுரர்கைத்
தாளம தொத்தவெள் ளானையி லுற்றோய்
தாலோ தாலேலோ
சண்முக முக்கட் பண்ணவர் குருபர
தாலோ தாலேலோ.
28✓
தென்னங் காவைச் சூழப் பூகத்
திரளவை புடைசூழத்
தேமா வினமற் றவைபுடை சூழச்
செறிதரு பலவின் இனம்
மின்னு மவைபுடை சூழப் பெருவா
ழைக்கா டவைசூழ
மிளிர்கன் னற்கா டவைசூ ழப்புனல்
மிகுநெற் பணைமருதம்
மன்னுஞ் சூழற் பொன்னம் பூமியில்
வானவர் வந்திழிய
மலிசோ பானம் போல விளங்கிய
வளனொடும் இளமாழைத்
தன்னந் திகழ்சா ரற்போ ரூர
தாலோ தாலேலோ
சண்முக முக்கட் பண்ணவர் குருபர
தாலோ தாலேலோ.
✓
செங்கட் சிறுமின் னொளிர்வன மேதிச்
செழுமே கங்குழுமித்
திகழ்தரு வரைமிசை கனைகுர லொடுதீம்
பால்சொரி வெள்ளருவி
வெங்கட் பணிமணி யின்குவை கழைமணி
வெண்குவை பொங்கொளிசேர்
வியன்நீ லக்குவை யொடுமுச் சங்கநல்
வேணியெ னும்படியே
துங்கப் பேரலை கொண்டு வரன்றித்
துண்ணென் றிழியொலியாற்
றுடியடி வரைமுழை தோறுங் கண்படு
சோலைச் சாரலெலாந்
தங்கப் பொடியே மிளிர்போ ரூரா
தாலோ தாலேலோ
சண்முக முக்கட் பண்ணவர் குருபர
தாலோ தாலேலோ.
30வேறு✓
கஞ்சனை யன்று முனிந்து சிவந்தருள்
கையாய் தாலேலோ
காமனை வென்றவர் தோளிலு லாவிய
காலாய் தாலேலோ
மஞ்சன் மகன்கன வின்சொல் வழங்கிய
வாயாய் தாலேலோ
மஞ்சள் வடஞ்செறி குஞ்சரி கொங்கைகொள்
மார்பா தாலேலோ
விஞ்சுறு மன்பினர் பந்தனை கொன்றொளிர்
விழியாய் தாலேலோ
வேடுவர் மங்கையு ளங்குடி தங்கிய
மெய்யாய் தாலேலோ
தஞ்சென வந்தவ ருஞ்சீடு சமர
புராதிப தாலேலோ
சரவண பவனே குரவணி தருசண்
முகனே தாலேலோ.
31✓
குண்டைச் சமணக் கரிகளை யடுகோ
ளரியே தாலேலோ
கும்பத் திடுமென் பைத்திரு விற்றரு
குழகா தாலேலோ
பண்டைத் தமிழ்நக் கீரன் சிறைவிடு
பண்பா தாலேலோ
பச்சைக் கொடிகச் சுப்பொரு கலசப்
பாலா தாலேலோ
மண்டைத் தலையிற் பலிநசை கொண்டவன்
மைந்தா தாலேலோ
வாரண மைந்து கரங்கொடு தழுவிய
வாகா தாலேலோ
தண்டைத் தாளுந் தோள்களும் அழகிய
சதுரா தாலேலோ
சரவண பவனே குரவணி தருசண்
முகனே தாலேலோ.