முருகன் App
திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
சிற்றிற்பருவம்10 / 11
திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் · திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்

சிற்றிற்பருவம்

82✓
தேமாங் கனியின் அடுப்பமைத்துத்
திகழுன் கழிந்த வலம்புரியிற்
செந்தே னுலைப்பெய் தரவீன்ற
செழுமா மணிவெங் கனல்மூட்டிப்
பூமா தளையின் விதையரிசி
புகட்டிச் சமைத்துக் கதலிமடற்
பொங்கப் பிழியும் அதன்கனியும்
பொருந்த அளவிக் கறியட்டுக்
காமா தவிப்பூம் பந்தரிடைக்
கயற்கண் ஆயம் இழைத்த வண்டல்
கருதும் புவன கோடியெலாங்
கரந்தும் படைத்துங் காக்குமொரு
சீமான் உனக்கோ ரிலக்கோசொல்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
தேரூர் வீதிப் போரூரா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
83✓
அங்கைத் தலத்திற் குண்டகழ்நீர்
அடக்கு முனிவர் ஏறனையான்
அகத்தின் ஞான விளக்கேற்றும்
அடிகேள் பவள விளக்கவியேல்
செங்கண் திரள்மெய் யுடையோற்குச்
செழுங்கற் பகத்தின் நிழல்தருவோய்
செந்தேன் துளிக்குங் குருந்தநிழல்
தீக்கேல் மேன்மேற் புடைத்தெழுந்த
கொங்கைச் சுமையோ டருங்களபங்
கூடச் சுமந்து வாடுமிடைக்
கொம்பர் அரம்பை மடமகளிர்
குலவச் சிதையா விடனித்தோய்
திங்கட் கிரண நித்திலப்பூஞ்
சிற்றில் சிதையேல் சிதையேலே
தேரூர் வீதிப் போரூரா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
84✓
விதையா யிருக்கும் ஐந்தெழுத்தும்
வேதாகமமும் முத்தமிழும்
விளங்குஞ் சரியா திகள்நான்கும்
வீறாகியமெய்ச் சிவபதமுஞ்
சுதையா தரிக்குந் திருநீறுஞ்
சோதி நயனத் திருமணியுந்
துகள்தீர் பத்தி விதிநெறியின்
தொடர்புஞ் செடிதீர் மெய்யடியார்
இதையா லயத்தைப் பிரியாதங்
கிருள்தீர்ஞான மணிவிளக்கும்
இலங்கு மவுனந் துளும்பாத
இன்பவளனுஞ் சந்ததமுன்
சிதையா தளிக்கு மோரிறையே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
தேரூர் வீதிப் போரூரா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
85✓
மறையின் சிரமெய் வாச்சியமும்
மருவுங் கருவி யாறாறின்
வயங்கு முடியிற் பேரருளும்
வானோர் முடியின் நறுந்தொடையுங்
கறைகொள் மிடற்றோன் திருப்புயத்துக்
கடியா ரிதழிச் செந்தாருங்
கவுரி கருணை நறவுபொழி
கண்ணென் கமலத் தண்மலரும்
அறையுந் தணிகை மலைச்சுனைக்குள்
அலரும் மலரும் மணக்குமுன
தருஞ்சீ ரடிசிற் றிலிற்புழுதி
அளவி மணப்பத் தகுமோதான்
சிறைவண் டோகைக் கிறையோனே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
தேரூர் வீதிப் போரூரா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
86✓
அடியார் நிமலத் திருவகத்துள்
அன்பு பொறுமை யவாவுறுத்துல்
அடுப்பாங் கமைத்து மலக்காட்டத்
ததிக ஞானக் கனல்மூட்டி
மடியா திருந்த வுயிர்க்கலசம்
வழிய அருட்பே ருலைவார்த்து
மாறாப் பெருமைச் சிவானந்த
மதுரச் சோறு தினம்பொங்கி
விடியாச் சீவ போதஇருள்
வீய மவுனச் சுடர்விளக்கு
விளக்கி யிருந்த படியிருந்து
மேலாஞ் சிற்றில் விளையாடுஞ்
செடிதீ ரகத்தோர் புகழ்வாலை
சிறுவா சிற்றில் சிதையேலே
தேரூர் வீதிப் போரூரா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
87✓
ஆறு வதன தாமரைகள்
அலரு மதுரச் சுவைமடுவே
அடியார் இதய தாமரையுள்
அரும்பி மாறாப் பரிமளமே
வீறும் அமரர் கணஞ்சூழ்ந்து
வியப்ப முளைத்த முழுமதியே
வெவ்வா ளவுணக் கருங்கடலை
விழுங்கி யெழுந்த வடவனலே
மாறு படுபுன் சமயவன
மலைத்து முறித்த மதகளிறே
மாயாப் பிறவிக் கனலவிய
வளருங் கருணை பொழிகாரே
தேறு முயிருட் பூரணமே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
தேரூர் வீதிப் போரூரா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
88✓
கரியின் கோடும் அகில்திரளுங்
கடிச்சந் தனமுங் கழைமணியுங்
கடுவூற் றிருந்த தொளையெயிற்றுக்
கடுங்கண் அரவின் முழுமணியும்
விரியுந் தரங்கக் கரங்கள்கொடு
விரவிக் கொழித்து நிலங்கிழித்து
வேலை புகுதப் பாதலத்தில்
மிளிரும் இராச வுரகபடம்
பரியும் மணிகள் நீர்கதுவல்
பரிதி யுருவம் பலஎடுத்துப்
பரமா னந்தக் கடல்படிவான்
பரிந்து மூழ்கித் தவஞ்செயல்போல்
தெரியும் பாலித் திருநாடா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
தேரூர் வீதிப் போரூரா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
89✓
தருவிற் படரும் வல்லியெனத்
தகுமா டவரை மடவார்கள்
தழுவப் புயத்தின் முலைக்கோடு
தைப்பத் தெரியல் முகையுடைந்து
முருகுற் றெழுந்து துகில்நனைக்கும்
முரிச் சுதைமா ளிகையிழைத்த
முதிரும் பதும ராகவொளி
முழுமீன் திகழும் அகல்வானப்
பருநித் திலவெண் பந்தருக்குப்
பவள நெடுங்கால் பலநாட்டும்
பண்பா மதியம் பந்தர்நடுப்
பால்வெண் தரளப் புஞ்சமெனத்
தெரியும் பாலித் திருநாடா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
தேரூர் வீதிப் போரூரா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
90✓
கமலக் களைசெந் நெலிற்களையுங்
கடைச்சி மகளிர் வளையொலியாற்
கயல்போய்க் கரும்பை வளைத்தொடிப்பக்
கலித்த கொழுஞ்சா றொழுகுவழித்
தமரக் கனிவண் டொழுங்கேறல்
சம்ப ராரி நாணேற்றுந்
தனுவைப் பொருவ மலரோடை
தருக்கு மவன்தூ ணியைநிகர்ப்ப
நிமலக் கமுகின் குடப்பணில
நிலவுக் கவிகை தனையேய்ப்ப
நெடுமா ளிகையின் மகளிர்அவன்
நேரும் ஞாயிற் படையேய்க்குந்
திமிலப் பாலித் திருநாடா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
தேரூர் வீதிப் போரூரா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
91✓
அருணன் தபனஞ் செவ்விளநீர்
அகற்றப் பசும்பொற் புரவியிளைப்
பரும்பும் பொதும்பில் துயில்முகில்நீர்
ஆற்றக் கமுகு குடைநிழற்றக்
கருவின் இருந்து நிமிர்ந்துதலை
கவிழ்க்குஞ் சாலிக் கதிர்கற்றைக்
கவரி மருங்கின் காலசைப்பக்
கடிச்சண் பகங்கள் மணம்வீசத்
தருண வாழை யாலவட்டஞ்
சந்தப் பொதியக் காலெறியத்
தரணி யிதயக் களிசிறப்பத்
தயங்கு மணித்தேர் மெலச்செலுத்துந்
திருவெண் பாலிச் செழுநாடா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
தேரூர் வீதிப் போரூரா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.