திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
முத்தப்பருவம்6 / 11
திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் · திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
முத்தப்பருவம்
42✓
கயல்கொக் குடும்பின் சிரசுகளுங்
கரிக்கோ டேன முடக்கோடுங்
கழையுங் கரும்புங் கமுகினமுங்
கதலி சாலி கடிக்கமலம்
புயனத் தாதி தருமுத்தம்
புனலிற் கனலிற் புடவியினிற்
பொன்றும் பொதியிற் கேழொளிபோம்
பொருந்தும் விலையுண் டவைவேண்டேம்
இயல்புற் றொன்றான் அழிவிலதாய்
என்றும் புதுமை தருமொளியாய்
எவர்க்கும் மதிக்க அரிதாகி
இருந்து மிகுந்த மதுரமெலாம்
முயல்வுற் றளிக்கும் நின்கனிவாய்
முத்தந் தருக முத்தமே
முகுந்தன் மருகா சமரபுரி
முருகா முத்தந் தருகவே.
43✓
சந்தங் கமழுந் தாநிலத்தோர்
தருக்கோ டிவர்ந்த பொறிஅளிகால்
தளைக்கு முருகு நாண்கழைக்கோ
தண்டங் குழைத்து வளைத்தேற்றி
இந்தங் கவிகை யமுநநிழல்
ஈயக் குயில்கள் விருதூத
இசைவா ரிதிப்பே ரிகைமுழங்க
இருள்மால் களிறுஞ் சுகப்பரியுங்
கந்தங் கமழுங் குழற்படையுங்
கடவுள் வசந்த னொடுசூழக்
களித்து வருவோ னொளித் தேகக்
காட்சி தருகட் டழகுடையோய்
முந்துந் தவத்தோர் பணிசரண
முதல்வா முத்தந் தருகவே
முகுந்தன் மருகா சமரபுரி
முருகா முத்தந் தருகவே.
44✓
பெருகுங் கருணை சுரந்தொழுகும்
பிராட்டி பசும்பொற் குடத்தமுதும்
பிறங்கும் அறுவர் ஈராறு
பெரிய குரும்பை யொழுக்கமுதுங்
கருகுஞ் சசுரர்க் கருள்புரிந்து
கடலின் அகடு கிழித்தொழுகுங்
கங்கைப் பெருந்தாய் ஆயிரமாங்
கனிவாய் முத்த மிடுமுழுதுங்
குருகின் சிறையும் பிறைக்கொழுந்துங்
கூடத் திகழ்செஞ் சடைப்பெருமான்
குமுதத் திருவாய் முத்தமிடக்
கொழிக்கும் நறவும் மோனசுக
முருகுந் ததும்புங் கனிவாயால்
முத்தந் தருக முத்தமே
முகுந்தன் மருகா சமரபுரி
முருகா முத்தந் தருகவே.
45✓
பனியிற் குறிய துளிதூற்றும்
பரவைத் தரங்க மெடுத்தெறிந்த
பணிலத் திரளும் இரசிதப்பூம்
பணிச்செப் பேய்ந்த முரண்இனமும்
நனிமுற் றியதுல் உளைந்துசொரி
நளிவெண் தரளத் திடர்தோறும்
நவைதீர் பவள வண்டல்வரை
நடுவும் படவர் மடமகளிர்
இனிதுற் றிவர்ந்து பனைப்பாளை
இருந்த கலச மதுவருந்தி
இணர்க்கே தகையும் புனைப்போதும்
எடுத்து முடித்துக் களித்தாடும்
முனிவர் குழாங்கள் புகழ்போரூர்
முதல்வா முத்தந் தருகவே
முத்தார் கொத்தே அனாதிவரு
முத்தா முத்தந் தருகவே.
46வேறு✓
பூனத மாலைக் கிண்கிணி பலவும்
பொலிவொடு கணகணெனப்
புனிதத் தண்டையி னொலிகல கலெனப்
பொற்றொடி நிரையதிர
மேல்நகும் அரைவடம் ஓசை தழைந்திட
வியன்நவ மணிமாலை
விரவி யலம்பக் குண்டல மொளிவிட
மிளிர மணிச்சுடிகை
யான முடப்பட மாயிர முந்தள்
ளாடத் தளர்நடையிட்
டம்மை செவிக்கின் சுவைபெற மழலை
அரும்பிழி சொரிவாயால்
மோன சுகந்தரு ஞானப் பிள்ளாய்
முத்தந் தந்தருளே
முத்தமிழ் நற்சம ரப்பதி நாயக
முத்தந் தந்தருளே.
47✓
இருண்மைப் படலங் கெடநூங் குஞ்சுடர்
எழின்மா ணிக்கவரை
ஈரைந் துடனக் கிரிவந் தீரா
றிணைவுறு பரிசதெனக்
கருடத் துவசனும் அறிவரி யாணணி
கடகத் தோள்தழுவிக்
கறையறு முழுமதி யொருபத் தொன்று
கலந்து மகிழ்ந்துறல்போல்
அருள்மெய்த் தொழுகு முகத்தொடு முகம்வைக்
தழகிய மழலைசொலி
ஐய னுளங்களி பொங்குற முத்தம்
அடிக்கடி தருவாயால்
முருகுற் றெழுநீ பத்தொடை யழகா
முத்தந் தந்தருளே
முத்தமிழ் நற்சம ரப்பதி நாயக
முத்தந் தந்தருளே.
48✓
பூவே பூவிற் பரிமள மேயப்
பூநிறை சுவைநறவே
பொங்குங் கடலே கடலி லுதித்தெழு
புனிதத் தெள்ளமுதே
காவே காவிற் கொஞ்சும் பஞ்ச
வனக்கட வுட்கிளியே
கண்ணே கண்ணுறு பாவாய் பூவாய்
கனியே கனிரசமே
தேவே தேவர் சிரோன்மணி யேயென்
சீருயி ரேயுயிரிற்
செம்பொரு ளேயரு ளேமுழு மணியே
மணியிற் றேசிகமே
மூவா மறையே மறையின் பொருளே
முத்தந் தந்தருளே
முத்தமிழ் நற்சம ரப்பதி நாயக
முத்தந் தந்தருளே.
49✓
ஆடக நன்கத் தரியால் வேளுக்
கம்பு திருத்துவுபோல்
அலவன் குறுமுள் தாள்கொடு குவளையொ
டம்புய இதழ்கிள்ளும்
ஓடையில் நீடுங் கவையடி மேதிகள்
உறுகுட மடியில்வரால்
உகள வடிக்கடி முட்டக் கன்றென
உள்ளிச் சொரிவெள்ளம்
பீடுறு மாலைச் சாடிகொ ளாதெழு
பிரச வெளத்துடனே
பெருகிக் கதலியின் மஞ்சளொ டின்ஞ்சி
பெருங்கழை செஞ்சாலி
மூடி நிறைந்குந் தொண்டைநன் னாடா
முத்தந் தந்தருளே
முத்தமிழ் நற்சம ரப்பதி நாயக
முத்தந் தந்தருளே.
50✓
மாலைப் பொழுதிற் பெடையொடு சிறையளி
வனசக் கோயில்புக
வளர்மதி யமுத கரங்கொண் டிதழ்வா
சக்கத வதுமூடக்
காலைப் பரிதி கரத்தா லந்தக்
கதவு திறந்துவிடுங்
கடிமல ரேரிப் பெருமத கெழுநீர்
கதிர்வயல் புகஎதிர்போஞ்
சேலைச் சினைபடு களிறு துரத்தச்
செறிநில விறிசெனவே
சிதறிக் கன்னற் காடு முறிப்பத்
தேன்முத் தொடுசொரியும்
மூலிச் சுவைநிகர் பாலிநன் னாடா
முத்தந் தந்தருளே
முத்தமிழ் நற்சம ரப்பதி நாயக
முத்தந் தந்தருளே.
51வேறு✓
சிமயம் மொய்த்தொன் றிமய வெற்பன்
தவப லம்பெம் பிடியனாள்
செறிக ளிப்பண் புறவு ரைக்குஞ்
சிலசொல் கற்குஞ் சிறுகிளாய்
அமர ருக்கும் முனிவ ருக்கும்
அடிய வர்க்கும் அமுதமே
அவுண ருக்குஞ் சமண ருக்குங்
கொடிய வர்க்கும் அனலமே
குமுத நற்பங் கயம்மு ருக்குங்
குலிகம் மிக்குஞ் சுவைநறாக்
குலவு கற்கண் டிவையி ருக்கும்
இதழ ளைப்பைங் குழவியே
சமர நற்செம் பதிய ருக்கன்
தருக முத்தந் தருகவே
தணிகை வெற்பன் சரவ ணத்தன்
தருக முத்தந் தருகவே.