திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
செங்கீரைப்பருவம்3 / 11
திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் · திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
செங்கீரைப்பருவம்
12✓
மும்மையுல கெங்கும் பரந்தொளி பரப்பிடும்
முதற்பரை யெடுத்தணைத்து
முத்தருட் புனிதநீர் நிறையஆட் டிப்பெருமை
மொய்த்தநித் தியஆடையால்
மெய்ம்முழுதும் ஒத்தியிரு வேறற்ற அத்துவித
வெண்ணீ றணிந்துமிளிரும்
வீறுபூ ரணநிலப் பொட்டுமிட் டுப்பெரிய
மெய்ஞ்ஞான தீபதட்டால்
அம்மருவும் ஆலத்தி சுற்றிமற் றிச்சையுட
னானஞா னங்கிரியையென்
றருள்செவிலி யாயரங் கருகிலுற ஆறா
றகன்றசிவ வாரியிலெழுஞ்
செம்மையா ரமுதம்பு கட்டவள ருங்குழவி
செங்கீரை யாடியருளே
திமிரமல மகலவரு குமரசர வணமுருக
செங்கீரை யாடியருளே.
✓
அஞ்சக் கரப்பரத் தொட்டிலிற் சதுர்வேத
மானவட மொருநாலையும்
ஆதியுடன் இச்சைஞா னங்கிரியை நாமமுற்
றருள்வளர்ந் தொளிர்சத்திகள்
தஞ்சக் கரங்கொடு பிடித்தங் கசைத்திடத்
தகுபரையும் ஆதிசிவனுந்
தாமுள மகிழ்ந்துறச் சோமனென நிலவுபொழி
தவளயா னைக்கடவுளும்
விஞ்சக் கரம்புனையு முதல்வர்பதி னொருவரும்
விபுதர்களும் அரிபிரமரும்
வேணிமுனி வரும்அருள் ஞானமுனி வரராதி
வியனுலக ரும்பரவவே
13✓
செஞ்சக் கரப்பரிதி யெனநிலவு போரூர
செங்கீரை யாடியருளே
திமிரமல மகலவரு குமரசர வணமுருக
செங்கீரை யாடியருளே.
14✓
குஞ்சிமுடி யுற்றசெஞ் சுடிகையா டச்செவிகொள்
கோலக்கு தம்பையாடக்
குமுதமென அமுதொழுகும் இதழ்களா டக்கரங்
கொண்டபொற் றொடிகளாடக்
கஞ்சமல ரைப்பொருவு நயனமா டக்கடி
தடத்தரை வடங்களாடக்
உதவுசீ றடிமருவு
கனகநற் றண்டையாட
அஞ்சுவடி வத்தகரர் திண்டாட அரிபிரம
ராதிகுரர் கொண்டாடநீள்
அகிலசர அசுரங்கள் நின்றாட எண்டிசையொ
டண்டபகி ரண்டமாடச்
செஞ்சரவ ணப்பொய்கை மஞ்சமிசை நிலவும்இறை
செங்கீரை யாடியருளே
திமிரமல மகலவரு குமரசர வணமுருக
செங்கீரை யாடியருளே.
15✓
ஐந்தொழிலு மெனதிவைக ளாகுஞ் சிருட்டிமுத
லானமுத் தொழில்சடத்தும்
அறிவிடத் தோரிரண் டும்வினைக் கீடாய்
அவற்றையுயி ரறியாமையால்
முந்திவரு தன்னையும் பிறரையுங் கருதிநனி
முதிர்விழைவு வெகுளிமருவி
முன்னுசுக துன்பங்கள் மன்னியிரு வினைமேவி
மூடப்பி றப்பிலாழும்
பந்தமுறு முயிர்சுதந் தரமிலி சடம்பாச
மானகரு விகள்முழுதுமே
பகருநற் றவைநடத் திடுமொருவ னானிவை
பகுத்துன் சுதந்தரமறச்
சிந்தனைசெய் பந்தமறு மென்றெனக் கருள்குரவ
செங்கீரை யாடியருளே
திமிரமல மகலவரு குமரசர வணமுருக
செங்கீரை யாடி யருளே.
16வேறு✓
காம விடத்தால் மாமயல் கொண்டே நொந்தேனைக்
காருணி யத்தால் வாவென வந்தாள் தந்தோனே
தீமை யிழைத்தேழ் வாரிதி சென்றே நின்றேனைச்
சீரருள் பெற்றா ரார்கரை தந்தா ளெங்கோனே
மாமல முற்றே தோமுறு நெஞ்சேன் உய்ந்தார
வாய்மொழி நற்றேன் நீமிசை யிந்தா என்றீயுஞ்
சேம நிதிப்போ ரூரிறை செங்கோ செங்கீரை
தேவர் தமக்கோர் மாமணி செங்கோ செங்கீரை.
17வேறு✓
களவுறு ஞானிக ளுளமலர் மீதி
லெழுந்தூ றுந்தேனே
கடையனை மேவிய மலமற வோர்குரு
என்றே வந்தோனே
அளவுறு சூரிய ரெனமயி லேறி
யுவந்தா ருங்கோவே
அகமுக மாயொரு சுழிமுனை சேர்பவ
ரங்கே யுந்தேவே
இளநில வாள்நகை யுறுகுற மாதை
யியைந்தா ளுந்தோளா
எழிலடி யார்முத லனைவரு மேநசை
கொண்டா ருந்தாளா
தெளிவுற வேயென தகநிறை பேரொளி
செங்கோ செங்கீரை
திகழ்சம ராபுரி முருக சடானன
செங்கோ செங்கீரை.
18வேறு✓
மகபதி சக்கிரி மலரயன் நத்திய
வண்டே ருங்காவே
மலமறும் முத்தர்க ளெனும்அளி சுற்றிய
தண்டூ மும்புவே
இகலறு மெய்த்தவ முழுதையும் உற்றவர்
எண்கூ ரும்பேறே
எழிலருள் பெற்றுயிர் மயில்கள் களிக்க
எழுந்தா ருங்காரே
ககனசு ரர்க்கொரு துணையென நெட்டயில்
கொண்டே நின்றோனே
கடவுள் மடப்பிடி தனஇணை தைத்தொளிர்
திண்தோள் மொயம்போனே
திகழ்மதி யொத்தொளிர் சமரபு ரிக்கிறை
செங்கோ செங்கீரை
செறிதய வுற்றவ ரிதயபு ரிக்குக
செங்கோ செங்கீரை.
19வேறு✓
குவளைப் பிழிசெங் குமுதப் பிழிகோ
கனகப் பிழிகூடிக்
கோதறு சேதக மாகிக் கூனற்
கொழுவுழு சீதைதொறுந்
தவளத் தரளத் தொடுபிழி ஊறல்த
தும்பக் கடைசியர்தந்
தண்ணகை யொடுமித ழூறலொ டுஞ்சம
னாமென வுட்சினவிப்
பவளக் கடிகைப் பேரணி சரிதிகழ்
பங்கய மென்கையாற்
பணிலத் தரளத் திரளைத் திடரிற்
பழனக் கரைதரவே
திவளுற் றிடுதுண் டீரநன் னாடா
செங்கோ செங்கீரை
சீரூர் போரூர் வீரம யூரா
செங்கோ செங்கீரை.
20✓
புள்ளுங் கிளியும் மயிலும் குயிலும்
பொன்னஞ் சிறையனமும்
பொருபோ டரமுங் கரியுந் திரியும்
பொங்கர்ப் புதுமலர்வாய்க்
கள்ளும் விள்ளும் இறாலிழி பிழியுங்
கனிவகை யின்சாறுங்
காலாய் மடுவாய் ஆறாய் ஓடிக்
கடல்புக எதிரேறித்
துள்ளும் மகரம் புயலின தகடு
துணித்துச் சலமேவிச்
சுடர்வாள் மகரஞ் சாடிக் கங்கை
துளைந்து திரும்பிவருந்
தெள்ளும் வளமுள தொண்டைநன் னாடா
செங்கோ செங்கீரை
சீரூர் போரூர் வீரம யூரா
செங்கோ செங்கீரை.
21✓
ஓதிம சாலம் மேதியி னங்கள்
உழக்கப் பேரேரி
ஒள்ளிய கமலப் பள்ளியை விண்டங்
குயர்தண் டலையேறத்
தாதவிழ் தண்டலை ஞிமிறுகள் விரைசெறி
தடமலர் மீதேறத்
தடநீ ராடிய மடவார் வெருவித்
தண்ணதி நீரேறக்
கோதறு நதியுறை வாளைகள் தாவிக்
குளிர்வயல் மடையேறக்
குலவிய மடைதவழ் குடவளை பதறிக்
கொழுவிய கமுகேறத்
தீதற வொளிர்தரு தொண்டைநன் னாடா
செங்கோ செங்கீரை
சீரூர் போரூர் வீரம யூரா
செங்கோ செங்கீரை.