முருகன் App
திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
வருகைப்பருவம்7 / 11
திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் · திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்

வருகைப்பருவம்

52✓
விரைநறுங் குழலினார் கொங்கைப் பெருங்குவடு
மிகுதடக் கடலுழக்க
வெள்ளைவா ளைக்களிறு கொள்ளுசூழ் முகிழ்பிளிறி
விள்ளக் கிழித்தஃதுறு
நிரைதருங் கந்திக் குடக்கழுத் தறமோதி
நெட்டிலைக் கதலி சாடி
நீடுகன் னற்கா டொடித்துப் பொறிச்சிறைய
நீலவண் டோது கஞ்சத்
திரளொடும் பணைமண்டு நெற்றா ளுடைத்திடச்
செறிதரள முகிலாதியிற்
சிந்தப் பெருஞ்சோதி யுடுமண் டலத்தினில்
திகழ்கின்ற மருதவேலி
மருவியம் புகழ்கொண்ட சமரபுரி தனில்நிலவு
மஞ்ஞைவா கனன்வருகவே
மலிபுவன முழுவதுங் கிடுகிடென நொடியில் வலம்
வருகந்த வேள்வருகவே.
53✓
பொன்னஞ் சிறைப்பேடை அன்னங் களிப்போடு
புனலாட நிகழ்கண்டுதன்
புகலாவி யின்சேவ லுடனூடி மாலையம்
பொழுதிற் கரந்துறைதரத்
துன்னுறு மடற்கேத கைத்துணரை வெள்ளிதழ்த்
தூயகஞ் சக்குழுவினைச்
சுரிமுகச் சங்கினைத் திரையெறியு நித்திலத்
தொகுதியைச் சூலிப்பியைப்
பன்னுநா ரைத்திரளை நாடிப் பசும்புனைப்
பஞ்சரத் திடைகண்டுதன்
பவளவா யதின்வாய் மடுத்தரு கணைத்துப்
பரிந்ததனின் முனிவகற்றி
மன்னுந் தருக்கொடு திளைக்குநெய் தற்சமர
மாநகர்க் கிறைவருகவே
மலிபுவன முழுவதுங் கிடுகிடென நொடியில்வலம்
வருகந்த வேள்வருகவே.
54✓
குழையளவு தாவடி செலுங்கயற் கட்கவுரி
கொஞ்சிவிளை யாடுகிளியைக்
குழகர்வே ணிப்பிறைத் தோணிமிசை வைத்தலை
கொழித்தகங் கையில்விடுத்தும்
உழைவெருவி யுகளவெம் புலியதளை ஆனனத்
துறவைத்து நகைகொட்டியும்
ஒளிர்மணிச் சுடிகைமுட வுப்படத் தரவத்தை
உலர்தலை முழைக்கண் உய்த்தும்
இழைபொருவும் ஆமையோ டதில்அறலை மொண்டெரி
அவித்தரி மருப்புவில்லுக்
கெண்தோள் தயங்கும்புரி நூல்நாண் வளைத்திட்
டெழிற்கரத் திடைபிடித்து
மழைபொருவு களன்மடியில் விளையாடு குகசமர
மாநகர்க் கிறைவருகவே
மலிபுவன முழுவதுங் கிடுகிடென நொடியில்வலம்
வருகந்த வேள்வருகவே.
55✓
மேருப் பொருப்பையொரு தண்டெனக் கொண்டும்எழு
வேலையை யுறிஞ்சிவிட்டும்
விரிசக்ர வாளகிரி யொருவாகு புரியாக
வெவ்வலித் தோளிலிட்டும்
பேருற்ற கயம்எட்டும் எட்டுநா கங்கொடு
பிணித்துச் செவிக்கணிந்தும்
பெரியபுவ னப்பொறைக் கமடம தெடுத்துப்
பிறங்குசில் லென்விடுத்துஞ்
சீருற்று விளையாடு பூதக் கணத்தொடுஞ்
சென்றுசூர் வேட்டையாடுஞ்
சேவகப் பெருமாளென் ஆவியுட் பெருமாள்
செயத்தேவர் முனிவர்பெருமாள்
மாரிப் புயற்கருணை பொழிகின்ற போரூர
மாயூர குகவருகவே
மலிபுவன முழுவதுங் கிடுகிடென நொடியில்வலம்
வருகந்த வேள்வருகவே.
56✓
அளகுபல முட்டைதன் சிறைகொண் டணைக்குமா
றண்டரா சிகளைனத்தும்
அகலப் பெருஞ்சிறையில் விகலப் பொருட்போல்
அடக்கிவைத் தும்விடுத்துங்
களவகல வருசுத்த மாயைவெளி முழுதுங்
கடந்தொரு கணத்தில்வந்துங்
கலிகவே தத்திலெழு சலராசி தந்தாழி
காலஅழல் வெகுளிதந்தும்
புளகமெழு மெய்ச்சிறை யடித்துப்பிர சண்டப்
பொருங்கா லளித்துநச்சுப்
புழையெயிற் றூரகன்மணி யிரவிதந் துஞ்சிறைப்
பொருவில்நிழல் மதியளித்தும்
வளமையுடன் நடனமிடு மாயூர போரூர
மாவீர குகவருகவே
மலிபுவன முழுவதுங் கிடுகிடென நொடியில்வலம்
வருகந்த வேள்வருகவே.
57✓
பூதம் புலன்பொறிகள் கரணங் குணம்பகுதி
புகலரு கலாதிசுத்தம்
பொருவிலிரு மாயையுங் காணவரும் ஆணவப்
பொங்கிருளு மூடுருவியே
பேதங் களைந்துயிர்ப் போதங் கலைந்துகலை
பேசொணா நேர்மை வெளியாய்ப்
பேரா யிரங்கோடி சூரியரும் மட்கப்
பிறங்கியெழு ஞானவொளியாய்
ஏதங் கடந்துட் புறம்பாகி யாவைக்கும்
இன்பபரி பூரணமதாய்
இலகருட் சத்தியே சத்தியா கக்கையில்
எடுத்தஞா னச்சேவகா
மாதங் கனங்கள்மும் மாரிபொழி போரூர
மாயூர குகவருகவே
மலிபுவன முழுவதுங் கிடுகிடென நொடியில்வலம்
வருகந்த வேள்வருகவே.
58வேறு✓
கருத்தே புகுந்து கதிகாட்டுங்
கண்ணே வருக மெய்ஞ்ஞானக்
கரும்பே வருக கருணைபொழி
காரே வருக ஆனந்தப்
பெருக்கே வருக யாங்கள்பெறும்
பேறே வருக மறைசொல்கிளிப்
பிள்ளாய் வருக பிறங்குதெய்வப்
பெருமாள் வருக குறமடந்தை
தருக்கே வருக மிடியகற்றுந்
தருவே வருக மன்பதைக்கோர்
தஞ்சே வருக எமையளிக்குந்
தாயே வருக பவப்பிணிக்கு
மருந்தே வருக சமரபுரி
வாழ்வே வருக வருகவே
மறையின் சிரமெய்ப் பொருளான
வள்ளல் வருக வருகவே.
59✓
வட்டாட் டாகு மெங்கள்பவ
மாற்ற வருக பொறிவேழம்
வணக்க வருக மனமாவை
மாய்க்க வருக மலர்ச்சிறையை
விட்டாட் கொண்டு மெய்ஞ்ஞானம்
விளக்க வருக வியனருளே
மேலீ டாக்கி யெங்குநிறை
மிளிர்பே ரின்பந் தரவருக
தட்டா திருந்த சிவமென்றுந்
தானென் றிளைக்கும் மயலகற்றித்
தானே யதுவா யதுதானாய்த்
தயங்கு மோனந் தரவருக
மட்டார் சோலைச் சமரபுரி
வாழ்வே வருக வருகவே
மறையின் சிரமெய்ப் பொருளான
வள்ளல் வருக வருகவே.
60வேறு✓
உயிருள் மருவு திமிரம் இரிய
ஒளிரும் அளவில் பரிதியே
உததி பொருவு கருணை யமுதென்
உளனு ளுதவும் மதியமே
இயலின் மதுர முழுதும் அறியும்
இசைகொள் பெரிய புலவனே
இரவு பகலும் நினையும் அடியர்
இதய நகரின் அரசனே
கயிலை யிறைவர் மகிழ வொருசொல்
கழறு பரம குரவனே
ககன சுரர்கள் முடிகள் தடவு
கமல சரண கடவுளே
மயிலின் முதுகில் உதய குமரன்
வருக வருக வருகவே
மகிமை தழுவு சமர புரியன்
வருக வருக வருகவே.
61✓
அறைய அரிய கருவி யடவி
யருக வொழுகு நதியமே
அறிவில் சமய அரிகள் வெருவி
அலற முடுகு சரபமே
நிறைகொள் பரம சுகமெய் யடியர்
நினைவி லுதவு பிரமமே
நிகழும் அயனும் அறிய அரிய
நிமல வொளியுள் மதுரமே
கறைகள் இரிய எனது மனது
கருவி நிலவு புணரியே
கலக வினைவ லனலை யடுநற்
கருணை பொழியும் எழிலியே
மறைகள் குலவு கமல சரணன்
வருக வருக வருகவே
மகிமை தழுவு சமர புரியன்
வருக வருக வருகவே.