முருகன் App
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
பகழிக்கூத்தர்
அம்புலிப்பருவம்7 / 11
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் · பகழிக்கூத்தர்

அம்புலிப்பருவம்

63✓
கலையா னிரம்பாத கலையுண் டுனக்குநிறை
கலையுண் டிவன்றனக்குக்
களங்கமரு குறமா னுனக்குண்டு குறமான்
கருத்துண் டிவன்றனக்குத்
தொலையாத கணமுண் டுனக்குமங் கலகணத்
தொகையுண் டிவன்றனக்குத்
துளியமுத முண்டுனக் கிவனுக்கு மாறாத
சொல்லமுத முண்டுனக்குக்
கொலையா டரவழிப் பகையுண்டு கடுவிடங்
கொப்புளிக் குங்கட்செவிக்
கோளரா வைக்கொத்தி யெறியுமே கார்மிக்
குமரனுக் குண்டுகண்டா
யலைவாழி சூழ்திருச் செந்தில்வடி வேலனுட
னம்புலீ யாடவாவே
யரவின்முடி நெளியமயின் முதுகில்வரு குமரனுட
னம்புலீ யாடவாவே.
64✓
மாமோக மண்டல மகற்றியறி வென்னுமுழு
மண்டலத் தைத்தொடுத்து
வடவைமுக மண்டலத் தழலா லுருக்கியினன்
மண்டலத் தூடுபுக்குச்
சோமோத யக்கிரண மண்டலத் தமுதத்
துளித்திவலை பருகியுடலைச்
சோதிமண் டலமென விளங்குமவ ரிவனுடைய
துய்யமுக மண்டலத்தை
யேமோ கருத்தூற விருத்திப் பெரும்பரத்
தெல்லைமண் டலமெய்தலா
மென்றுகொண் டிவன்மண் டலச்சக்ர நிலையா
றெழுத்திலீ டேறுவருனக்
காமோ பெருக்கமென் செந்தில்வடி வேலனுட
னம்புலீ யாடவாவே
யரவின்முடி நெளியமயின் முதுகில்வரு குமரனுட
னம்புலீ யாடவாவே.
65✓
முதிருமிசை வரிவண் டலம்புகம லாலய
முகிழ்க்குநிரு நாலிதழ்க்குண்
முக்கோண நடுவிலொரு வட்டச் சுழிக்குண்மலர்
முகமண் டலத்துவெயிலா
லெதிருமரு ளந்தகா ரப்படலை தள்ளிவந்
தெழுமிரவி மண்டலத்தி
லின்புற்று நீவந் தொளிக்குமிட மந்தவா
னிரவிமண் டலமுடுக்க
ளுதிருமடு செருவிலிவன் வேலேறு பட்டவ
ருகந்தபெரு வெளியாகையா
லொள்ளமு துகுத்தபதி னாறுகலை கொள்ளுமுன்
னுடலினுங் குறைபடாதோ
வதிருமக ராழிசூழ் செந்தில்வடி வேலனுட
னம்புலீ யாடவாவே
யரவின்முடி நெளியமயின் முதுகில்வரு குமரனுட
னம்புலீ யாடவாவே.
66✓
வெறியா ரிலைத்தொடைத் தக்கனழல் வேள்வியை
வெகுண்டுபகல் பல்லுகுத்து
வெள்ளிவிழி யைக்கெடுத் தயிரா வதப்பாகன்
வேறுருக் கொடு பறக்கச்
செறியா டகத்தகட் டிதழ்முளரி நான்முகன்
சென்னியைத் திருகிவாணி
செய்யதுண் டந்துண்ட மாக்கியத் தக்கன்
சிரத்தையொரு வழிபடுத்திப்
பொறியா ரழற்கடவுள் கைத்தல மறுத்துவிண்
புலவர்முப் பத்துமூவர்
போனவழி யொருவர்போ காமலுன் னுடலையும்
புழுதியிற் றேய்த்ததெல்லா
மறியாத தல்லநீ செந்தில்வடி வேலனுட
னம்புலீ யாடவாவே
யரவின்முடி நெளியமயின் முதுகில்வரு குமரனுட
னம்புலீ யாடவாவே.
67✓
விடமொழுகு துளைமுள் ளெயிற்றுவன் கட்செவி
விரிக்கும் பணாடவியுறா
மென்பொறி யுடற்பெரும் பகுவா யராவடிவை
வெம்பசி யெடுத்துவெம்பிக்
குடதிசைக் கோடையைப் பருகிக் குணக்கெழுங்
கொண்டலை யருந்திவாடைக்
கொழுந்தையுந் தென்றலையு மள்ளிக் குடித்துக்
கொழுங்கதிரை யுண்டதினியுன்
னிடமொழிய வேறோ ரிலக்கில்லை நீயதற்
கெதிர்நிற்க வல்லையல்லை
யிவனுடன் கூடிவிளை யாடிநீ யிங்கே
யிருக்கலா மிங்குவந்தா
லடல்புனையு மயிலுண் டுனக்குதவி யாகையா
லம்புலீ யாடவாவே
யரவின்முடி நெளியமயின் முதுகில்வரு குமரனுட
னம்புலீ யாடவாவே.
68✓
பண்டுபோ லின்னமுத மின்னங் கடைந்திடப்
பழையமந் தரமில்லையோ
படர்கடற் குண்டகழி யளறாக வற்றிப்
பாரினிற் றிடரானதோ
விண்டலத் தமரர்களு மமரேச னுஞ்சேர
வீடிநீ டந்தகார
மேவியெழு பகிரண்ட கூடம்வெளி யானதோ
விடமொழுகு நெட்டெயிற்று
மண்டுவா சுகிதுண்ட மானதோ விண்ணமொரு
வாலிக்கு வாலில்லையோ
மதியிலா மதியமே யிவனினைந் தாலெந்த
வகைசெலா தாகையானீ
யண்டர்நா யகனெங்கள் செந்தில்வடி வேலனுட
னம்புலீ யாடவாவே
யருவரைகள் கிடுகிடென மயில்கடவு முருகனுட
னம்புலீ யாடவாவே.
69✓
வட்டமா கத்துள்வெளி வடிவுகொள லாலென்று
மானைத் தரித்திடுகையான்
மந்தா கினித்தரங் கத்துவள மெய்தலான்
மன்னுங் கணஞ்சூழ்தலால்
இட்டமொடு பேரிரவில் வீறுபெற லாலுலகி
லெவருந் துதித்திடுதலா
லிரவிகண் ணுறுதலா னிடபத்தி லேறலா
லேமமால் வரையெய்தலான்
முட்டமறை வேள்விக் குரித்தாகை யால்வெய்ய
மூரியர வுக்குடைதலான்
முக்கணுமை பங்கனா ரொக்குநீ யென்றுதிரு
முகமலர்ந்து துணையழைத்தா
லட்டபோ கம்பெறுவை செந்தில்வடி வேலனுட
னம்புலீ யாடவாவே
யருவரைகள் கிடுகிடென மயில்கடவு முருகனுட
னம்புலீ யாடவாவே.
70✓
காதலா லெறிதிரைக் கடன்மகளிர் சிறுமகார்
கரையிற் குவித்தமுத்துங்
கருவாய் வலம்புரி யுமிழ்ந்தமணி முத்துமுட்
கண்டன்மடல் விண்டசுண்ணத்
தாதலர விளவாடை கொடுவருங் கானல்வெண்
சங்குநொந் தீற்றுளைந்து
தனியே யுகுத்தபரு முத்தமுந் தன்னிலே
சதகோடி நிலவெறிக்கு
மீதலா லொருசிறிது மிரவில்லை யெவருக்கு
மிரவில்லை நீயுமிங்கே
யேகினா லுனதுடற் கறையுடைத் திடுதலா
மென்பதற் கையமில்லை
யாதலா னீதிபுனை செந்தில்வடி வேலனுட
னம்புலீ யாடவாவே
யருவரைகள் கிடுகிடென மயில்கடவு முருகனுட
னம்புலீ யாடவாவே.
71✓
கடியவளி யெறியுந் தழைச்சிறைக் கூருகிர்க்
கருடவா கனனுமிகல்கூர்
கட்டைமுள் ளரைநாள நெட்டித ழுடுத்தபொற்
கமலயோ னியுமெழுந்து
கொடியவெங் கொலைபுரி வராகமென வொருவனெழு
குவலய மிடந்துதேடக்
குறித்தொருவ னெகினமா யண்டபகி ரண்டமுங்
கொழுதிக் குடைந்துதேட
முடியவிது காறுமவ ரறிவுறா வகைநின்ற
முழுமுதற் கடவுளடியு
முடியுநீ கண்டனை யெனக்கருதி யின்றுதிரு
முகமலர்ந்து துணையழைத்தா
லடியவரை வாழ்வித்த செந்தில்வடி வேலனுட
னம்புலீ யாடவாவே
யருவரைகள் கிடுகிடென மயில்கடவு முருகனுட
னம்புலீ யாடவாவே.
72✓
பெரியமா கத்துணீ வருவையிவன் வஞ்சகம்
பேசுமா கத்துள்வாரான்
பெருகநீ வேலையிற் புகுவா யிவன்பார்
பிளக்கவோ வேலைவிட்டா
னுரியமா குணவரையி லுறுவைநீ யிவனன்
புறாதகுண வரையேவுறா
னுடலிலே முழுமறு வுனக்குண் டிவன்றனக்
கொருமறுவு மில்லைமீளக்
கரியமா முகிலிலே மறைவைநீ யிவனெடுங்
கரியமா முகிலின்மறையான்
கருதிநீ யிவையெலா முணரிவன் பெருமையைக்
கண்டுநீ யங்கிராதே
யரியமா தவனெங்கள் செந்தில்வடி வேலனுட
னம்புலீ யாடவாவே
யருவரைகள் கிடுகிடென மயில்கடவு முருகனுட
னம்புலீ யாடவாவே.
73✓
பரியநிழ றன்னைச் சுளித்துவெயி லொடுபொருது
பாதசங் கிலியைநூறிப்
பாரிசா தத்தருவை யிடுகள கெனக்கவுட்
பகுவாய் புக்குகுதட்டித்
தரியலர் நகர்ப்புறத் தெயிலிடு கபாடந்
தனைத்தூள் படுத்தியவர்பொற்
றருணமணி முடியிடறி முறைமுறை யழைக்குந்
தழைச்செவிப் பிறைமருப்புச்
சொரியுமத தாரைக் குறுங்கட் பெருங்கொலைத்
துடியடிப் புகரொருத்தல்
துங்கவே ளிவனுடைய முன்றிற் புறத்திற்
றுளைக்கர நிமிர்த்துநிற்கு
மரியகரு நாகமென வெருவல்கொல் லிவனுட
னம்புலீ யாடவாவே
யருவரைகள் கிடுகிடென மயில்கடவு முருகனுட
னம்புலீ யாடவாவே.