திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
பகழிக்கூத்தர்
சிறுதேர்ப்பருவம்10 / 11
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் · பகழிக்கூத்தர்
சிறுதேர்ப்பருவம்
94✓
தண்டே னுடைந்தொழுகு மருமாலை நீண்முடி
தரிக்குஞ் சதக்கி ருதுசெந்
தருணமணி யாசனத் தேறமா தலிசெழுந்
தமனியத் தேரு ருட்டப்
பண்டே பழம்பகை நிசாசரர்க ளுட்கப்
பரப்புநிலை கெட்ட தென்று
பரவுங்கு பேரன்வட பூதரம் பொருபுட்
பகத்தே ருருட்ட வீறு
கொண்டே யுதித்தசெங் கதிரா யிரக்கடவுள்
குண்டலந் திருவில் வீசக்
கோலப்ர பாமண் டலச்சுடர் துலக்கமுட்
கோலெடுத் தருண வருணன்
றிண்டே ருருட்டவளர் செந்தில்வாழ் கந்தனே
சிறுதே ருருட்டி யருளே
சேவற் பதாகைக் குமாரகம் பீரனே
சிறுதே ருருட்டி யருளே.
95✓
வாராரு மிளமுலை முடைத்துகிற் பொதுவியர்
மனைக்குட் புகுந்து மெல்ல
வைத்தவெண் டயிருண்டு குடமுருட் டிப்பெருக
வாரிவெண் ணெயையு ருட்டிப்
பாராம லுண்டுசெங் கனிவாய் துடைத்துப்
பருஞ்சகடு தன்னை யன்று
பரிபுரத் தாளா லுருட்டிவிளை யாடுமொரு
பச்சைமான் மருக பத்தி
யாராமை கூறுமடி யவர்பழ வினைக்குறும்
பறவே யுருட்டி மேலை
யண்டபகி ரண்டமு மனைத்துலக முஞ்செல்லு
மாணையா யாழியையு ருட்டிச்
சேராநி சாசரர் சிரக்குவ டுருட்டநீ
சிறுதே ருருட்டி யருளே
சேவற் பதாகைக் குமாரகம் பீரனே
சிறுதே ருருட்டி யருளே.
96✓
கொந்தவிழ் தடஞ்சாரன் மலயமால் வரைநெடுங்
குடுமியில் வளர்ந்த தெய்வக்
கொழுந்தென்ற லங்கன்று மாடகப் பசுநிறங்
கொண்டுவிளை யும்பரு வரைச்
சந்தன நெடுந்தரு மலர்ப்பொதும் பருமியற்
றண்பொருநை மாநதி யுமத்
தண்பொருநை பாயவிளை சாலிநெற் குலையுமச்
சாலிநெற் குலைய டர்ந்து
முந்தவிளை யும்பரு முளிக்கரும் பும்பரு
முளிக்கரும் பைக்க றித்து
முலைநெறிக் கும்புனிற் றெருமைவா யுஞ்சிறுவர்
மொழியும் பரந்த வழியுஞ்
செந்தமிழ் மணக்குந் திருச்செந்தில் வேலனே
சிறுதே ருருட்டி யருளே
சேவற் பதாகைக் குமாரகம் பீரனே
சிறுதே ருருட்டி யருளே.
97✓
பெருமையுட னீடலத் திருவர்பர சமயமும்
பேதம் பிதற்றி விட்ட
பிறைமருப் புக்கரும் பகடுமுந் நீரிற்
பிழைத்துநீள் கரையி லேறப்
பொருவருஞ் சன்னிதியி லெய்துவது போன்மணி
புடைக்குமிள நீரி ரண்டு
புணரியின் மிதந்துசன் னிதியேற விந்நாட்
பொருந்தவிளை யாடி முன்னா
ளிருதரையி னிற்சந் தனக்கொடி மரத்தினை
யிழுத்துவரு மெருமை யேற்றை
யெப்பொழுது முதியகற் பகடாக வுலகத்தி
லியாவருங் காண வென்று
திருவுள மகிழ்ந்துதிரு விளையாடல் கண்டநீ
சிறுதே ருருட்டி யருளே
சேவற் பதாகைக் குமாரகம் பீரனே
சிறுதே ருருட்டி யருளே.
98✓
ஆதிநூன் மரபாகி யதனுறும் பொருளாகி
யல்லவை யனைத்து மாகி
யளவினுக் களவாகி யணுவினுக் கணுவா
யனைத்துயிரு மாகி யதனின்
சாதியின் பிரிவாகி வெவ்வேறு சமயங்க
டானாகி நானாகி மெய்ச்
சாலோக சாமீப சாரூப சாயுச்ய
தன்னொளியி லீலை யாகி
யோதிய தனைத்தினு மடங்காமல் வேறாகி
யுள்ளும் புறம்பு மாகி
யொளியிலொளி யாகிமற் றிரவுபக லற்றவிட
மொப்புவித் தெனையி ருத்தித்
தீதினை யகற்றிநின் திருவருள் புரிந்தவா
சிறுதே ருருட்டி யருளே
சேவற் பதாகைக் குமாரகம் பீரனே
சிறுதே ருருட்டி யருளே.
99வேறு✓
புலமை வித்தக மயூரவா கனவள்ளி
போகபூ ஷணசூரன்
சலமொ ழித்தவ நிசாசரர் குலாந்தக
சடாக்ஷர காங்கேய
குலவு கொற்றவ குமாரகண் டீரவ
குருபர புருகூத
னுலக ளித்தவா செந்தில்வாழ் கந்தனே
யுருட்டுக சிறுதேரே
யுரக நாயகன் பஃறலை பொடிபட
வுருட்டுக சிறுதேரே.
100✓
வீதிமங்கல விழாவணி விரும்பிய
விண்ணவ ரரமாதர்
சோதி மங்கல கலசகுங் குமமுலை
தோய்ந்தகங் களிகூரச்
சாதி மங்கல வலம்புரி யினமெனத்
தழைச்சிறை யொடுபுல்லி
யோதி மந்துயில் செந்தில்வாழ் கந்தனே
யுருட்டுக சிறுதேரே
யுரக நாயகன் பஃறலை பொடிபட
வுருட்டுக சிறுதேரே.
101✓
விரைத்த டம்பொழில் வரைமணி யாசனத்
திருந்துவிண் ணவர்போற்றி
வரைத்த டம்புரை மழவிடை யெம்பிரான்
மனமகிழ்ந் திடவாக்கா
லிரைத்த பல்கலைப் பரப்பெலாந் திரட்டிமற்
றிதுபொரு ளெனமேனா
ளுரைத்த தேசிகா செந்தில்வாழ் கந்தனே
யுருட்டுக சிறுதேரே
யுரக நாயகன் பஃறலை பொடிபட
வுருட்டுக சிறுதேரே.
102✓
மாது நாயக மெனவடி வுடையசீர்
வள்ளிநா யகமண்ணி
லீது நாயக மெனவுனை யன்றிவே
றெண்ணாநா யகமுண்டோ
போது நாயகன் புணரியி னாயகன்
பொருப்புநா யகன்போற்றி
யோது நாயக செந்தில்வாழ் கந்தனே
யுருட்டுக சிறுதேரே
யுரக நாயகன் பஃறலை பொடிபட
வுருட்டுக சிறுதேரே.
103✓
தக்க பூசனைச் சிவமறை யோர்பெருந்
தானநா யகர்தம்பேர்
திக்க னைத்தினு மெண்முத லிமையோர்
தேவர்தந் திருமேனி
மிக்க மாலிகை தருபவ ரடியவர்
மின்னனார் சமயத்தோர்
ஒக்க வாழ்கெனச் செந்தில்வாழ் கந்தனே
யுருட்டுக சிறுதேரே
யுரக நாயகன் பஃறலை பொடிபட
வுருட்டுக சிறுதேரே.