முருகன் App
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
பகழிக்கூத்தர்
தாலப்பருவம்3 / 11
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் · பகழிக்கூத்தர்

தாலப்பருவம்

21✓
அடரும் பருநவ மணிமுடி யமரரு
மமரர்க் கிறைவனுநீ
டளகைந ராதியு மீரொன் பதின்மரு
மருமறை முனிவோருஞ்
சுடருந் தருமிரு சுடரும் பரவிய
தோகைய ரெழுவருமுத்
தொழின்முக் கடவுளு மவரவர் தங்குறை
சொல்லித் துதிசெய்தார்
படருங் கிரணப் பரிதி நெடுங்கதிர்
பாயும் பகிரண்டம்
பழுமர மென்னப் பனையென நிமிரும்
பாழிக் கைநீட்டித்
தடவும் புகர்முக தந்திக் கிளையாய்
தாலோ தாலேலோ
சந்த மணங்கமழ் செந்திற் பதியாய்
தாலோ தாலேலோ.
22✓
கங்குல் பொருந்திய குவளைக் குழியிற்
கழியிற் பழனத்திற்
கரையிற் கரைபொரு திரையில் வளைந்த
கவைக்கால் வரியலவன்
பொங்கு குறுந்துளி வாடையி னொந்து
பொறாதே வெயில்காயும்
புளினத் திடரிற் கவரிற் றுரவிற்
புன்னை நறுந்தாதிற்
கொங்கு விரிந்த மடற்பொதி தாழைக்
குழுமுட் கரியபசுங்
கோலச் சிறிய குடக்கா யிற்புயல்
கொழுதுஞ் செய்குன்றிற்
சங்கு முழங்கிய செந்திற் பதியாய்
தாலோ தாலேலோ
சமய விரோதிக டிமிர திவாகர
தாலோ தாலேலோ.
23வேறு✓
தண்டே னொழுகு மொழிமடவார்
தாமங் கொழுதிச் சுருண்டிருண்டு
தமரக் களிவண் டடைகிடந்து
தழைத்து நெறித்த குழற்பாரங்
கொண்டே மெலிந்த தல்லாது
குரும்பைக் களப முலைசுமந்து
கொடிபோன் மருங்குல் குடிவாங்கக்
குழையிற் குதித்த விழிக்கயலைக்
கண்டே வெருவிக் கயன்மறுகக்
கனக வெயின்மா ளிகையுடுத்துக்
ககனந் தடவுங் கோபுரத்தைக்
கருதி வடவெற் பெனக்கதிரோன்
றிண்டேர் மறுகுந் திருச்செந்தூர்ச்
செல்வா தாலோ தாலேலோ
தெய்வக் களிற்றை மணம்புணர்ந்த
சிறுவா தாலோ தாலேலோ.
24✓
பாம்பா லுததி தனைக்கடைந்து
படருங் கொடுங்கார் சொரிமழைக்குப்
பரிய வரையைக் குடைகவித்துப்
பசுக்கள் வெருவிப் பதறாமற்
காம்பா லிசையின் றொனியழைத்துக்
கதறுந் தமரக் காளிந்திக்
கரையி னிரைப்பின் னேநடந்த
கண்ணன் மருகா முகையுடைக்கும்
பூம்பா சடைப்பங் கயத்தடத்திற்
புனிற்றுக் கவரி முலைநெரித்துப்
பொழியு மமுதந் தனைக்கண்டு
புனலைப் பிரித்துப் போட்டெகினந்
தீம்பால் பருகுந் திருச்செந்தூர்ச்
செல்வா தாலோ தாலேலோ
தெய்வக் களிற்றை மணம்புணர்ந்த
சிறுவா தாலோ தாலேலோ.
25✓
மங்கல மங்கலநூ லெங்குமொ ழிந்தனர்காண்
வானோ ரேனோர்போய்
வந்துவ ணங்கினர்மே லந்தர துந்துபிகேள்
வாரு டா டாதே
கொங்கைசு மந்திடைநூ லஞ்சும ணங்கனையார்
கூடா தூடாரோ
கொண்டவ ரந்தருவா யண்டர்பெ ருந்தவமே
கோமா னாமாநீ
செங்கம லந்தனிலே பைங்குழு தங்களிலே
சேல்பாய் வானாடா
தென்ற லுடன்றமிழ்தேர் தென்பொதி யம்பயில்வாழ்
தேனார் தார்மார்பா
சங்குர லம்புரிசூழ் செந்தில்வ ளம்பதியாய்
தாலோ தாலேலோ
சங்கரி தன்குமரா மங்கையர் தங்கணவா
தாலோ தாலேலோ.
26வேறு✓
மரகத வடிவஞ் செங்கதிர் வெயிலால்
வாகாய் வாடாதோ
மதிமுக முழுதுந் தண்டுளி தரவே
வார்வேர் சோராதோ
கரமல ரணைதந் தின்புறு மடவார்
காணா தேபோமோ
கனமணி குலவுங் குண்டல மரைஞா
ணோடே போனால்வார்
பொருமிய முலையுந் தந்திட வுடனே
தாய்மார் தேடாரோ
புரவல ரெவருங் கண்டடி தொழுவார்
போதாய் போதாநீள்
சரவண மருவுந் தண்டமிழ் முருகா
தாலோ தாலேலோ
சதுமறை பரவுஞ் செந்திலை யுடையாய்
தாலோ தாலேலோ.
27வேறு✓
கூருமிகல் சாய்த்த வீரா தீரா தார்மார்பா
கூறுமியல் பார்த்தூன் மேலே யாரார் பாடாதார்
மேருவரை நாட்டு வாழ்வார் வானா டாள்வார்போல்
வேளையென மீட்டுன் மேலே வீழ்வர் சூழ்வார்பா
ராருமிரை பார்த்து நீணீ ரூடே தாராமே
யானகழி நீக்கி மேலே நாவா யோடேசேல்
சேருமலை வாய்க்கு நாதா தாலோ தாலேலோ
தேவர்சிறை மீட்ட தேவா தாலோ தாலேலோ.
28வேறு✓
அரைவடமுந் தண்டையு மின்புரை யரைமணியுங்
கிண்கிணி யுங்கல ணணியு மாறா வீறார்சீ
ரறுமுகமுந் தொங்கல் சுமந்தபன் னிருகரமும்
குண்டல முங்குழை யழகு மாரார் பாராதார்
விரையொரு மென்குஞ்சி யலம்பிய புழுதியுமங்
கங்குழை பண்டியு மெலியு மேலே வீழ்வார்பார்
வெகுவிதமுங் கொண்டு தவழ்ந்திடி லவரவர்தங்
கண்கள் படும்பிழை விளையு மேதே னேகாதே
வரைமணியுந் தங்கமு மொன்றிய கனபரியங்
கந்தனி லின்றுகண் வளர் வாராய் வாழ்வேநீ
மணிநகையுங் கொண்டு துயின்றிலை விரலமுதங்
கொண்டுகி டந்தனை மதுர மாய்நீ பேசாயோ
திரைபொருதென் செந்தில் வளம்பதி வளரவருங்
கந்தசி வன்பெறு சிறுவா தாலோ தாலேலோ
திசைமுகனுஞ் சங்கரி யுஞ்சது மறையுமிறைஞ்
சும்பரை யம்பிகை சிறுவா தாலோ தாலேலோ. 28
29வேறு✓
அரவுசிறு பிறையிதழி திரிபதகை பொதிசடிலர்
பாலா வேலாதே
ரருணவெயி லிரவிசுழ லிமகிரியி லரிவைபெறு
வாழ்வாய் வாழ்வோனே
குரவருள மகிழவுயர் குருவடிவு தருபெருமை
கோடாய் தாடாளா
குமரகுரு பரமுருக குதலைமொழி தெரியவுரை
கூறாய் மாறாதே
இரவலரு முனிவர்களு மிமையவரு முனதடிமை
யாமே யாமேநீ
யெமைமுனியி லொருதுணையு மிலையடிமை யடிமையென
வீழ்வார் சூழ்வார்பார்
பரசமய குலகலக சிவசமய கு..திலக
தாலோ தாலேலோ
பணிலமுமிழ் மணியையலை யெறியுநகர் வருகடவுள்
தாலோ தாலேலோ. 29
30வேறு✓
பங்கயன் முதலோ ரிந்திர னிமையோர் பாரோ ரேனோர் பார்
பண்புடனுனையே சிந்தையி னினைவார் பானீ மால்கூராய்
வெங்கட கரிசூ ழெண்டிசை யுறைவார் வீணாள் காணாதே
மின்பரி புரதாள் பொன்புரை முடிமேல் வேய்வார்வீறாலே
செங்கனி மணிவாய் தங்கிய நகைதா தேவா சீறாதே
திண்டிறன் முருகா தண்டமிழ் விரகா சேரார் போரேறே
சங்கரி மருகா சங்கரி சிறுவா தாலோ தாலேலோ
சந்தத மியறேர் செந்திலை யுடையாய் தாலோ தாலேலோ. 30