முருகன் App
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
பகழிக்கூத்தர்
சிறப்புப்பாயிரம்11 / 11
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் · பகழிக்கூத்தர்

சிறப்புப்பாயிரம்

104நேரிசை வெண்பா✓
செந்தமிழ்க்கு வாய்த்ததிருச் செந்திற் பதிவாழு
கந்தனுக்குப் பிள்ளைக் கவிசெய்தா—னந்தோ
திருமாது சேர்மார்பன் தேர்ப்பாகற் கன்பு
தருமால் பகழிக்கூத் தன்.
105அவையடக்கம்✓
அத்தனையும் புன்சொல்லே யானாலும் பாவேந்தர்
எத்தனையுங் கண்டுமகிழ்ந் தெய்துவார்—முத்தி
புரக்குமரன் றந்தகந்தன் பூணணிமுந் நான்கு
கரக்குமரன் பிள்ளைக் கவி.
106நூற்பயன்✓
மருநாண் மலர்ப்பொழி லுடுத்ததட மெங்குமலை
வாய்கொழித் தெறியுமுத்தை
வண்டலிடு மெக்கர்புடை சூழ்திருச் செந்தில்வரு
மயில்வா கனக்கடவுளெங்
குருநாத னொருதெய்வ யானைதன் பாகக்
குறக்கொடிக் குந்தழைசிறைக்
கோழிக் கொடிக்குங் குமார கம்பீரன்
குறும்பிறை முடிக்கும்பிரான்
இருநாழி நெற்கொண்டு முப்பத்தி ரண்டறமு
மெங்குமுட் டாதளிக்கு
மிறைவிதிரு முலையமுத முண்டுஞா னம்பெருகு
மெம்பிரா னினியபிள்ளைத்
திருநாம மெழுதுவார் கற்பார் படிப்பார்
செகம்பொது வறப்புரந்து
தேவாதி தேவரும் பரவுசா யுச்சியச்
சிவபதத் தெய்துவாரே.