முருகன் App
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
பகழிக்கூத்தர்
வாரானைப்பருவம்6 / 11
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் · பகழிக்கூத்தர்

வாரானைப்பருவம்

52✓
மூரிப் பகட்டு வரிவாளை
முழங்கிக் குதிக்கக் கால்சாய்ந்து
முதிர விளைந்து சடைபின்னி
முடங்கும் பசுங்காய்க் குலைச்செந்நெல்
சேரிக் கருங்கை மள்ளர்குயந்
தீட்டி யரிந்த கொத்தினுக்குத்
தெண்முத் தளப்பச் சிறுகுடிலிற்
சேரக் கொடுபோ யவர்குவிப்ப
வேரிக் குவளைக் குழியில்வரி
வெண்சங் கினங்க ளீற்றுளைந்து
மேட்டி லுகுத்த பருமுத்தை
வெள்ளோ திமந்தன் முட்டையென
வாரிக் குவிக்குந் திருச்செந்தூர்
வடிவேள் முருகா வருகவே
வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே.
53✓
புள்ள மரிந்த கதிர்ச்செந்நெற்
போரிற் பகடு தனைநெருங்கப்
பூட்டி யடித்து வைகளைந்து
போதக் குவித்த பொலிக்குவையை
விள்ள வரிய குடகாற்று
வீசப் பதடி தனைநீக்கி
வெள்ளிக் கிரிபோற் கனகவட
மேரு கிரிபோன் மிகத்தூற்றிக்
கள்ள மெறியுங் கருங்கடைக்கட்
கடைசி பிரித்த மணிமுத்தைக்
களத்தி லெறிய வம்முத்தைக்
கண்டு குடித்த கட்குவிலை
மள்ள ரளக்குந் திருச்செந்தூர்
வடிவேள் முருகா வருகவே
வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே.
54✓
தேட வரிய மணியரைஞாண்
சேர்க்க வருக வீரற்காழி
செறிக்க வருக திலதநுத
றீட்ட வருக மறுகில்விளை
யாட வருக மடியிலெடுத்
தணைக்க வருக புதுப்பனிநீ
ராட்ட வருக நெறித்தமுலை
யமுதம் பருக வருக முத்தஞ்
சூட வருக வுடற்புழுதி
துடைக்க வருக வொருமாற்றஞ்
சொல்ல வருக தள்ளிநடை
தோன்ற வருக சோதிமணி
மாட நெருங்குந் திருச்செந்தூர்
வடிவேள் முருகா வருகவே
வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே.
55✓
இறுகு மரைஞா ணினிப்பூட்டே
னிலங்கு மகர குண்டலத்தை
யெடுத்துக் குழையின் மீதணியே
னினியுன் முகத்துக் கேற்கவொரு
சிறுகுந் திலதந் தனைத்தீட்டேன்
றிருக்கண் மலர்க்கு மையெழுதேன்
செம்பொற் கமலச் சீரடிக்குச்
சிலம்பு திருத்தே னெறித்துவிம்மி
முறுகு முலைப்பா லினிதூட்டேன்
முகம்பார்த் திருந்து மொழிபகரேன்
முருகா வருக சிவசமய
முதல்வா வருக திரைகொழித்து
மறுகு மலைவாய்க் கரைசேர்ந்த
மழலைச் சிறுவா வருகவே
வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே.
56✓
எள்ளத் தனைவந் துறுபசிக்கு
மிரங்கிப் பரந்து சிறுபண்டி
யெக்கிக் குழைந்து மணித்துவார்வா
யிதழைக் குவித்து விரித்தழுது
துள்ளித் துடித்துப் புடையெயர்ந்து
தொட்டி லுதைந்து பெருவிரலைச்
சுவைத்துக் கடைவாய் நீரொழுகத்
தோளின் மகரக் குழைதவழ
மெள்ளத் தவழ்ந்து குறுமூரல்
விளைத்து மடியின் மீதிருந்து
விம்மிப் பொருமி முகம்பார்த்து
வேண்டு முமையாள் களபமுலை
வள்ளத் தமுதுண் டகமகிழ்ந்த
மழலைச் சிறுவா வருகவே
வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே.
57✓
வெண்மைச் சிறப்புள் ளோதிமங்கள்
விரைக்கே தகையின் மடலெடுத்து
விரும்புங் குழவி யெனமடியின்
மீதே யிருத்திக் கோதாட்டித்
திண்மைச் சுரிசங் கினிற்குவளைத்
தேறன் முகந்து பாலூட்டிச்
செழுந்தா மரைநெட் டிதழ்விரித்துச்
சேர்த்துத் துயிற்றித் தாலாட்டப்
பெண்மைக் குருகுக் கொருசேவற்
பெரிய குருகு தன்வாயிற்
பெய்யு மிரையைக் கூரலகு
பிளந்து பெட்பி னினிதளிக்கும்
வண்மைப் புதுமைத் திருச்செந்தூர்
வடிவேள் முருகா வருகவே
வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே.
58✓
ஓடைக் குளிர்தண் டுளிப்பனியா
லுடைந்து திரையிற் றவழ்ந்தேறி
யொளிரும் புளினத் திடையொதுங்கி
யுறங்குங் கமடந் தனைக்கடந்து
கோடைக் குளிர்காற் றடிக்கவுடல்
கொடுகி நடுங்கி யூன்கழிந்த
குடக்கூன் பணிலத் துட்புகுந்து
குஞ்சக் கிரங்கி யிரைகொடுக்கும்
பேடைக் குருகுக் கொருசேவற்
பெரிய குருகின் சிறைப்புறத்துப்
பிள்ளைக் குருகு தனையணைத்துப்
பிரச மடற்கே தகைப்பொதும்பின்
வாடைக் கொதுங்குந் திருச்செந்தூர்
வடிவேள் முருகா வருகவே
வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே.
59✓
விண்டு மாவின் கனி தடத்தின்
மீதே வீழக் குருகினங்கள்
வெருவி யிரியக் கயல்வெகுண்டு
வெடிபோய் மீள மண்டுகங்
கண்டு பாய வரிவாளை
கழிக்கே பாயக் கழிக்கானற்
கம்புள் வெகுண்டு துண்ணெனக்கட்
கடைதான் விழித்துத் தன்பார்ப்பைக்
கொண்டு போயக் கருவாளைக்
குலைக்கே பாயக் குடக்கனியின்
குறுங்காற் பலவு வேர்சாய்ந்த
குழிக்கே கோடி கோடிவரி
வண்டு பாயுந் திருச்செந்தூர்
வடிவேள் முருகா வருகவே
வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே.
60✓
பேரா தரிக்கு மடியவர்தம்
பிறப்பை யொழித்துப் பெருவாழ்வும்
பேறுங் கொடுக்க வரும்பிள்ளைப்
பெருமா னென்னும் பேராளா
சேரா நிருதர் குலகலகா
சேவற் கொடியாய் திருச்செந்தூர்த்
தேவா தேவர் சிறைமீட்ட
செல்வா வென்றுன் றிருமுகத்தைப்
பாரா மகிழ்ந்து முலைத்தாயர்
பரவிப் புகழ்ந்து விருப்புடனப்
பாவா வாவென் றுனைப்போற்றப்
பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால்
வாரா திருக்க வழக்குண்டோ
வடிவேள் முருகா வருகவே
வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே.
61வேறு✓
கலைதெரி புகலி வளமுற மருவு
கவுணிய வருக வருகவே
கருணையி னுரிமை யடியவர் கொடிய
கலிகெட வருக வருகவே
சிலைபொரு புருவ வனிதைய ரறுவர்
திருவுள் மகிழ வருகவே
சிறுதுளி வெயர்வு குதிகொள வுனது
திருமுக மலர வருகவே
கொலைபுரி விகட மணிமுடி நிருதர்
குலமற வருக வருகவே
குருமணி வயிர மிருசிகை நெடிய
குழைபொர வருக வருகவே
மலைமகள் கவுரி திருமுலை பருகு
மழவிடை வருக வருகவே
வளையுமிழ் தரள மலையெறி நகரில்
வரபதி வருக வருகவே.
62✓
அணிநெடு மவுலி யெறிசிறு புழுதி
யழகுட னொழுக வருகவே
யடியிடு மளவி லரைமணி முரலு
மரவொலி பெருக வருகவே
பணிவிடை புரிய வருமட மகளிர்
பரவினர் புகழ வருகவே
பலபல முனிவ ரனைவரு முனது
பதமலர் பரவ வருகவே
பிணிமுக முதுகி லரியணை யழகு
பெறவரு முருக வருகவே
பிறைபொரு சடிலர் தமதிட மருவு
பிடிபெறு களிறு வருகவே
மணியித ழொழுகு மமுதுகு குதலை
மழவிடை வருக வருகவே
வளையுமிழ் தரள மலையெறி நகரில்
வரபதி வருக வருகவே.