திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
பகழிக்கூத்தர்
சிறுபறைப்பருவம்8 / 11
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் · பகழிக்கூத்தர்
சிறுபறைப்பருவம்
74✓
பொருவாகை சூடுமர வக்கொடிக் குருகுலப்
பூபால ரேறுமந்தப்
பூபால னுக்கிளைய துணைவர்நூற் றுவரும்
பொருபதினெட் டக்குரோணி
யொருவாய்மை சொற்றபடை வீரருஞ் செருவினி
லுருத்தெழுறு நீதியைய
ருடனாக நின்றுபற் குணன்மணித் தேரினுக்
குள்ளசா ரதியாகியும்
மருவார்க டானையிற் பட்டவர்த் தனர்மகுட
வர்த்தன ரடங்கலும்போய்
மயங்கவொரு நாள்விசைய னுக்குவிசை யம்பெருக
மண்ணேழு முண்டுமிழ்ந்த
திருவாய் வலம்புரி முழக்குதிரு மான்மருக
சிறுபறை முழக்கியருளே
செருவிலெதிர் பொருதுபர நிருதர்குல கலகனே
சிறுபறை முழக்கியருளே.
75✓
முருந்தாரு மணிமுறுவ னெய்தனில் மகளிரிள
முகிழ்முலை தனக்குடைந்து
முளரிமுகை நீரிற் குளித்துநின் றொருதாளின்
முற்றிய தவம்புரியவெங்
கருந்தாரை நெட்டிலைப் புகர்வே லெனப்பொருங்
கட்டடைக் குள்ளுடைந்து
காவிமலர் பங்கப் படக்கருங் குழல்கண்டு
கரியமுகி லுடல்வெளுத்துப்
பொருந்தாம லோடியுந் தரசாரி யாயொரு
பொருப்பற வளமையேறும்
புகழேற வாழுந் திருச்செந்தி லாயுனது
பொற்றாள் வணக்கமுற்றுத்
திருந்தார்க ணெஞ்சம் பெரும்பறை முழக்கநீ
சிறுபறை முழக்கியருளே
செருவிலெதிர் பொருதுபர நிருதர்குல கலகனே
சிறுபறை முழக்கியருளே.
76✓
கங்கையணி யுஞ்சடையில் வைத்தகுழ விப்பிறைக்
கடவுளா லயமனைத்துங்
கங்குற் கருங்கடல் கழிந்தவை கறையிற்
கலித்தவால் வளைமுழக்கும்
பங்கய மலர்ப்பொகுட் டிதழ்வாய் துளிக்கும்
பசுந்தேற லுண்டுமெள்ளப்
பலகோடி சஞ்சரீ கப்படலை பெடையொடு
படிந்துபல கான்முழக்கும்
வெங்கய முடக்கும் புழைக்கர நிமிர்த்துவெளி
மேகநீ ரைக்குடித்து
வீதிவாய் நின்றுபிளி றித்தின முழங்கும்வெறி
வெண்டிரைக் குண்டகழியிற்
செங்கயன் முழக்குந் திருச்செந்தில் வேலனே
சிறுபறை முழக்கியருளே
செருவிலெதிர் பொருதுபர நிருதர்குல கலகனே
சிறுபறை முழக்கியருளே.
77✓
காவான பாரிசா தத்தருக் குலநிழற்
கடவுளெரு வீதிதோறுங்
கடிமணப் புதுமங் கலத்தொனி முழக்கமுகை
கட்டவிழ்த் திதழுடைக்கும்
பூவாரி லைத்தொடைய ளளகா புரேசன்
புரந்தொறுங் குளிறுமுரசம்
பொம்மென முழக்கமன் மதனுடைய பல்லியப்
பொங்குதெண் டிரைமுழக்கப்
பாவாணர் மங்கலக் கவிவாழி பாடிப்
பரிந்துதிண் டிமமுழக்கப்
பரவரிய திருவிழா வென்றுபல பல்லியம்
பட்டினந் தொறுமுழக்கத்
தேவாதி தேவருயர் சதுமறை முழக்கநீ
சிறுபறை முழக்கியருளே
செருவிலெதிர் பொருதுபர நிருதர்குல கலகனே
சிறுபறை முழக்கியருளே.
78✓
வரைவாய் முழக்குங் கடாயானை வெங்கூன்
மருப்பில்விளை முத்துமிளவேய்
மணிமுத்து மடுபால வனசுரத் திற்கரு
வராகத்தின் முத்துமண்ட
ருரைவாய் முழக்கும் பெரும்புறவி லுந்திநத்
துமிழுமணி முத்துமள்ள
ரொள்ளியறா மருதவே லிச்செந்நெல் கன்னறரு
மொளிமுத்து மோங்குநெய்தற்
கரைவாய் முழக்குமுட் கூனல்வெண் பணிலங்
கடுந்து ளைஞந்துகான்ற
கதிர்முத்து மொக்கக் கொழித்துவரு பொருநைபாய்
கழிதொறுங் கயல்குதிக்கத்
திரைவாய் முழக்குந் திருச்செந்தில் வேலனே
சிறுபறை முழக்கியருளே
செருவிலெதிர் பொருதுபர நிருதர்குல கலகனே
சிறுபறை முழக்கியருளே.
79✓
முனைவாளை வடிவேலை வடுவைவெங் கடுவையிதழ்
முளரியைப் பிணையையதவேள்
மோகவா ளியையுடு சகோரத்தை வென்றுகுழை
முட்டிமீ ளுங்கண்மடவார்
நினைவாளை வாண்முறுவ லாடியிள முலையானை
நேர்நேர் நிறுத்திநெய்த
னீடுமள காடவி வனத்திற் பிணித்துவெண்
ணித்தில வடந்தெரிந்து
புனைவாளை நான்முடி விளம்பிநடு வாளைமென்
போதிலுறை வாளையொப்புப்
பொலிவாளை நின்றுகளை களைவாளை நாடிவிளை
போங்கழி கடந்துமெள்ளச்
சினைவாளை பாயுந் திருச்செந்தில் வேலனே
சிறுபறை முழக்கியருளே
செருவிலெதிர் பொருதுபர நிருதர்குல கலகனே
சிறுபறை முழக்கியருளே.
80✓
அறந்தரு புரந்தரா தியருலகி லரமகளி
ராடுமணி யூசல்சிற்றில்
அம்மனை கழங்குபல செறியுந் தடஞ்சார
லருவிபாய் பரங்கிரியுமுட்
புறந்தரு புனிற்றுவெள் வளைகடற் றிரைதொறும்
பொருதசீ ரலைவாயுமென்
போதுகமழ் திருவாவி னன்குடியு மரியமறை
புகலுமே ரகமுமினிமைக்
குறந்தரு கொடிச்சியர் பெருங்குரவை முறைகுலவு
குன்றுதோ றாடலுந்தண்
கொண்மூ முழங்குவது கண்டின மெனக்கரட
குஞ்சரம் பிளிறுமரவஞ்
சிறந்தபழ முதிர்சோலை மலையும் புரந்தநீ
சிறுபறை முழக்கியருளே
செருவிலெதிர் பொருதுபர நிருதர்குல கலகனே
சிறுபறை முழக்கியருளே.
✓
எழுமிரவி மட்கவொளி தருமணி யழுத்துமுடி
யிமையவர் மகிழ்ச்சிபெறவே
யிருகுழை பிடித்தவிழி யரமகளிர் சுற்றிநட
மிதுவென நடித்துவரவே
வழுவறு தமிழ்ப்புலவன் முறைமுறை யுரைத்துவெகு
வரகவிஞ ருட்குழையவே
மகபதியு மிக்கமுனி வரர்கணமு மிச்சையுடன்
வழியடிமை செப்பியிடவே
81✓
பொழுதுதொறு மொக்கவிதி முறையுனை யருச்சனைசெய்
புனிதசிவ விப்ரருடனே
புகலரிய பத்தசன மரகர வெனக்குலவு
புரவலர் விருப்பமுறவே
செழுமறை முழக்கவரு முருககும ரக்கடவுள்
சிறுபறை முழக்கியருளே
திரளுமணி முத்தையலை யெறியுநக ருக்கதிப
சிறுபறை முழக்கியருளே.
82✓
தவனநிர தப்புரவி வலமுறையில் வட்டமிடு
தருணவட வெற்பசையவே
தமரதிமி ரத்துமித மெறியுமக ரப்பெரிய
சலதியொலி யற்றவியவே
புவனமுழு தொக்கமணி முடிமிசை யிருத்துபல
பொறியுரக னச்சமுறவே
புணரியிடை வற்றமொகு மொகுமொகுவெனப்பருகு
புயலுருமு வெட்கியிடவே
பவனனு மிகுத்தகடை யுகமுடி வெனப்பெருமை
பரவியடி யிற்பணியவே
படகநிபி டத்துமுனி யசுரர்வெரு விக்கரிய
பரியவரை யிற்புகுதவே
சிவனருண் மதிக்கவரு முருககும ரக்கடவுள்
சிறுபறை முழக்கியருளே
திரளுமணி முத்தையலை யெறியுநக ருக்கதிப
சிறுபறை முழக்கியருளே.
83✓
சகரமக ரச்சலதி யுலகுதனி லிப்பொழுது
சருவிய புறச்சமயநூ
றலையழிய முத்திதரு சிவமய முத்தர்பெறு
தவநெறி தழைத்துவரவே
யகரவுக ரத்தில்விளை பொருளடைவு பத்தியுறு
மடியவர் தமக்கருளவே
யமரருல கத்தவரு மெவருமரு விப்பரவி
யடியிணை தனைப்பணியவே
பகரவு நினைத்திடவு மரிதுனது சொற்பெருமை
பரகதி யளிக்குமெனவே
பலபல முனித்தலைவ ரனைவரு முனக்கினிய
பணிவிடை தனைப்புரியவே
சிகரபர வெற்பில்வரு முருககும ரக்கடவுள்
சிறுபறை முழக்கியருளே
திரளுமணி முத்தையலை யெறியுநக ருக்கதிப
சிறுபறை முழக்கியருளே.