முருகன் App
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
பகழிக்கூத்தர்
காப்புப்பருவம்1 / 11
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் · பகழிக்கூத்தர்

காப்புப்பருவம்

1திருமால்✓
பூமா திருக்கும் பசுங்களபப்
புயபூ தரத்துப் புருகூதன்
போற்றக் ககன வெளிமுகட்டுப்
புத்தேள் பரவப் பொதிகைமலைக்
கோமா முனிக்குத் தமிழுரைத்த
குருதே சிகனைக் குரைகடற்குக்
குடக்கே குடிகொண் டிருந்தசெந்திற்
குமரப் பெருமான் றனைக்காக்க
தேமா மலர்ப்பொற் செழும்பொகுட்டுச்
செந்தா மரையில் வீற்றிருக்குந்
தேவைப் படைத்துப் படைக்குமுதல்
சேரப் படைத்துப் படைக்குமுயி
ராமா றளவுக் களவாகி
யனைத்துந் தழைக்கும் படிகருதி
யளிக்கும் படைக்குத் தனியேசங்
காழி படைத்த பெருமாளே.
2சிவபெருமான்✓
உடல்வளை குழவி மதியமு நதியு
முரகமு மொழுகு செஞ்சடைக் காட்டின
ருமைமுலை குழைய மருவிய புனித
ருரைகொடு பரவு தொண்டரைக் காத்தவ
ருமிழ்நிரை மகர சலதியில் விளைவு
முறுவிட வடவை கண்டகட் டேற்றின
ருடைமணி கனக பரிபுர முரல
வொருமுறை பவுரி கொண்டமெய்க் கூத்தினர்
வடவரை முதுகு நெளிநெளி நெளிய
வரிசிலை யெனவோ ரம்பினைக் கோத்தவர்
மறுவறு முழுவெ ணிலவெழு முறுவல்
வளரொளி யிருளவ னங்கெடப் பூத்தவர்
மருவிய சகள வடிவின ரரிய
வடகலை தமிழ்வ ளம்பெறச் சேர்த்தவர்
மதுரையி லிறைவ ரிரசத பொதுவர்
மண்மலி பதயு கங்களைப் போற்றுதும்
இடவிய மதுர வரியளி குழறி
யிடறிய களப குங்குமத் தூட்பொதி
யிமசல மொழுகு கனதன விரக
மெழுகுகுற வனிதை சிந்தையிற் சேர்ப்பனை
யிடிபடு முரச முழவுட னதிர
வெதிர்பொரு நிருதர் தம்படைப் போர்க்கள
மிடமற முதிய கழுகுக ணூடாட
யிடவடல் புரியு மொய்ம்பனைத் தூற்றிய
கடதட வழுவை முகமுள கடவுள்
கருணையின் முதிய தம்பியைப் பார்ப்பதி
கரமல ரணையில் விழிதுயின் மருவி
களிபெறு குதலை மைந்தனைப் பூப்பயில்
கடிகமழ் தருவி னிழன்மகள் புதிய
கலவியின் முழுகு கொண்கனைப் போற்றிசெய்
கலைமகள் பரவு குமரனை மதுர
கவிதரு குரிசில் கந்தனைக் காக்கவே.
3உமையவள்✓
அரிபிரமர் சந்த தம்பு கழ்ந்திடு
பரசுடைய நம்பர் பங்கின் மென்கொடி
யகிலலோகமு மாதரத் தாற்ப டைத்தவ
ளரிவைமட மங்கை மென்க னங்குழை
திரிபுரை யணங்கு கங்கை யம்பிகை
யகளமாயனு பூதியிற் பூத்த பொற்கொடி
யபினவை முகுந்தர் தங்கை சுந்தரி
யுரகபண பந்தி கொண்ட கங்கணி
யமுதமூறிய பாடலுக் கேற்ற சொற்குயி
லறுசமய முங்க லந்து நின்றவண்
மறலிபர வும்ப்ர சண்ட சங்கரி
யழகெலாமிது தானெனப் போற்று சித்திர
முரிபுருவ வஞ்சி திங்க டங்கிய
திருமுகம லர்ந்த பைங்க ருங்கினி
முதல்விபூரணி ஞானவித் தாய்க்கி ளைத்தவண்
முருகுவிரி கொந்த ளம்பி றங்கிய
மணிமவுலி மண்ட லங்கொள் செஞ்சடை
முடிமனோன்மணி வாலைவற் றாக்கு ணக்கடன்
முகிண்முலை சுமந்து நொந்த சிற்றிடை
மிறுமென மருங்கி ரங்க வின்புறு
முறுவலாடிய கோமளத் தாற்பெ ருத்தவண்
முறைமுறை முழங்கு கின்ற கிண்கிணி
பரிபுர மலம்பு செம்ப தம்புரை
முளரிநாண்மலர் வாழ்வெனப் போற்றி நிற்குதும்
உரியபதி னெண்க ணங்க ளுஞ்சதுர்
மறைமுனிவ ரும்ப ரிந்து நின்கழ
லுறுதிதானென நாவெடுத் தேத்தி நித்தலு
முளமிக மகிழ்ந்து செங்க ரங்களின்
மலர்கொடு வணங்கி யஞ்ச லென்றமை
யுடைமையாயரு ணீயெனக் காத்த நட்பனை
யுடுமுக டதிர்ந்து விண்ட லங்களு
மரியபகி ரண்ட மும்பி ளந்திட
வுதறுதோகை மயூரனைத் தோற்ற முற்றெழு
முபநிடத மந்த்ர தந்தி ரந்தனி
லசபையி லடங்கு மைம்பு லன்களி
லுவகைகூரும னோகரக் கூத்த னைப்பொரு
தரியலர் நெருங்கு செங்க ளம்புகு
நிசிசரர் துணிந்த வெம்ப றந்தலை
தழுவுபாடல் விசாகனைப் பாற்க டற்றரு
தரளநகை செங்க ருங்க ணிளநகை
குறமகள் மணம்பு ணர்ந்த திண்புய
சயிலமோகன மார்பனைத் தேட்டந் தமிழ்ப்பொதி
தழைமுகை யுடைந்து விண்ட லம்பிய
புதுநறவு சிந்து பைங்க டம்பணி
தருணசீதள வாகனைக் கோட்ட கத்துயர்
சரவண மிலங்க வந்த கந்தனை
முருகனை விளங்கு செந்தில் வந்திடு
சமரமோகன வேலனைக் காத்த ளிக்கவே.
4கணபதி✓
கருணையின் வழிபடு முதியவ டனையுயர்
கயிலையி னொருமுறை யுய்த்த விதத்தினர்
கனவட கிரிமிசை குருகுல மரபினர்
கதைதனை யெழுதிமு டித்த கருத்தினர்
கலைமதி யினையிரு பிளவுசெய் தொருபுடை
கதிரெழ நிறுவிய வொற்றை மருப்பினர்
கடுநுகர் பரமனை வலமுறை கொடுவரு
கனிகவர் விரகுள புத்தி மிகுத்தவர்
பொருவரு மிமகிரி மருவிய பிடிபெறு
பொருகளி றெனமிகு பொற்பு விளைத்தவர்
போதவிழ் நறுமல ரணைமிசை தமதுடல்
புளகம தெழவொரு சத்தி தரித்தவர்
பொதுவற விடுசுடர் முழுமணி யொளிவிடு
பொலிவெழு பவளமு தித்த நிறத்தினர்
புகர்முக முடையவர் குடவயி றுடையவர்
புகழிரு செவியினை றுத்தி வழுத்துதும்
இருமையு முதவிய சிவபர சமயமு
மிமையவ ருலகும ளித்த களிப்பனை
யிசைமுரல் மதுகர முறைமுறை பெடையுட
னிடறிய முகைவிரி செச்சை வனப்பனை
யிளகிய புளகித மலைமுலை மாமக
ளிகலிய புலவிய கற்று மழுப்பனை
யிகல்புரி பரநிசி சரர்குல கலகனை
யெனைவழி யடிமைப டைத்திடு நட்பனை
அருமறை யுரைதரு பிரமனை யமரரு
மடிதொழ விடுசிறை விட்ட திறத்தனை
யடியவர் கொடுவினை துகள்பட நடமிடு
மழகிய சரணம ளித்த வரத்தனை
யளவுறு கலவியின் முழுகிய குறமக
ளழகினி லொழுகியி ருக்கு மயக்கனை
யலையெறி திருநகர் மருவிய குமரனை
யறுமுக முருகனை நித்தல் புரக்கவே.
5கலைமகள்✓
அவனி பருகிய மாநெடு வுந்தியி
லமரு மொருபிர மாவெனு மந்தண
னரிய சதுமறை நாவிலி ருந்தவ
ளளவில் பலகலை யோதியு ணர்ந்தவள்
தவள முளரியில் வாழ்வுபு ரிந்தவள்
தவள மணிவட மாலைபு னைந்தவள்
தவள வடிவுள வாணிசு மங்கலி
தனது பரிபுர பாதமி றைஞ்சுதும்
உவரி முதுதிடர் பாயவி டப்பணி
யுரகன் மணிமுடி தூள்பட மந்தர
முலைய வெறிசுழன் மாருத மெங்கணு
முதறு சிறையயில் வாகன னின்புறு
கவரியி னரிவளை சூல்கொடு தங்கிய
கமட முதுகினி லேறநெ டுந்திரை
கதறு கடலலை வாய்முரு கன்பெறு
கருணை தருகவி மாலைவி ளங்கவே.
6அரிகரபுத்திரன்✓
விரியு நீள்சடி லத்திடை மகுட வாசித ரித்தவர்
வளையு நீடுக ருப்புவின் மதுர வாளிதொ டுத்தவர்
அரிய பூரண புட்கலை யரிவை மாரிரு பக்கமு
மழகு கூரும கிழ்ச்சிய ரடிவி டாமல்வ ழுத்துதும்
உரிய நான்மறை நித்தலு முறுதி யாகவ ழுத்திய
வுவகை யாகக்க வித்துறை யுதவு நாவலன் முற்றிய
பரிய வாளைகு தித்தெழு பரவை சூழுந கர்க்கிறை
பழநி வேலவ னைப்புகழ் பனுவன் மாலைத ழைக்கவே
7பகவதி✓
விளையுஞ் செழுந்தே னுடைந்துமுகை விண்டொழுகு
வெண்டா மரைப்பொகுட்டு
வேதா முடித்தலை முடிக்குஞ் சடாடவியள்
வெங்கொலை மடங்கலேறி
வளையும் பனிப்பிறை மருப்புக் குறுங்கணெடு
மகிடாசு ரன்சிரத்தில்
வலியநட மிடுகுமரி பகவதிச ரோருக
மலர்த்தாள் வணக்கமுறுவாம்
உளையுந் தடந்திரைத் திமிரமக ரக்குழி
யுவர்ப்பரா வாரவேலை
யொலியிடுங் குண்டகழி சுவறிமே டாகவே
லுள்ளுறை கழித்துநிருதக்
கலையுங் களைந்துல களிபுலோ மசைதன்மங்
கலநா ணளித்தபெருமாள்
கடியமயில் வாகனப் பெருமா ளுவந்தெனது
கவிமாலை கொண்டருளவே.
8காளி✓
காயுங் கொடும்பகைத் தாருக விநாசனி
கபாலியங் காளிநீலி
காளிமுக் கண்ணியெண் டோளிமா தரிவீரி
கவுரிகலை யூர்திகன்னி
பாயுந் தழற்புகைப் பாலைக் கிழத்திவெம்
பிணப் பிலத்திமோடி
பரசுதர னுடனடன மிடுசூலி சாமுண்டி
பாதார விந்தநினைவாம்
ஆயும் பெரும்பனுவ லாசுகவி மதுரகவி
யாரிய சித்திர கவிதைவித்
தாரகவி யிடுமுடிப் புக்குள மயங்காமா
லடியவர்க் கருள்குருபரன்
றேயும் பனிப்பிறைத் திருநுதற் கடவுண்மகளிர்
தெண்ணித் திலங்கொழித்துச்
சிற்றில்விளை யாடல்புரி யுந்திருச் செந்தில்வரு
சேவகன் புகழ்பாடவே.
9ஆதித்தர்✓
வெள்ளப் பெருந்துளி யிறைக்கும் பெருங்காற்று
வெண்டிரையி னழுந்தியெழு
வெம்புரவி யொற்றையா ழித்தடந் தேரேறி
வேதபா ரகரிறைஞ்சப்
பள்ளக் கடற்றிரை கலக்கியு ழியினிருட்
படலமுழு துந்துடைத்துப்
படர்சுடர் விரித்துவரு பன்னிரு பதங்கர்பொற்
பாதமலர் சென்னிவைப்பாம்
உள்ளக் களிப்பறா வரிவண்டு பண்பாட
வோதிம நடிக்கமுள்வா
யுட்குடக் கூன்வலம் புரிமுத்த முமிழநீ
ரோடையிற் குருகுகாணக்
கள்ளக் கருங்கட் சிவந்தவாய் வெண்கைக்
கடைசியர் நுளைச்சியருளங்
களிகூரு மலைவா யுகந்தவே லனையெங்கள்
கந்தனைக் காக்கவென்றே.
10முப்பத்துமுக்கோடி தேவர்கள்✓
பொதுவி லாடு மத்தற்கு நீடு
பொருளை யோதி யொப்பித்த சீலர்
புணரி தோய்ந கர்க்கு நாயகர்
புலமை நீதி யொப்பற்ற கேள்வர்
குதலை வாய்மொ ழிச்சத்தி பாலர்
குருதி பாய்க திர்க்கொற்ற வேலர்
குறவர் பாவை சொக்கத்தின் மோகர்
குமரர் காவ லுக்கொத்த காவற்
மதுர கீத விற்பத்தி வாணர்
மகுட வேணி முத்தத்த ரீகர்
மவுன மோன பத்திக்க லாபர்
மனையில் வாழ்வு வைப்புற்ற நேயர்
முதுமை யான சொற்பெற்ற நாவலர்
முனிவர் வேள்வி யிச்சிக்கு மூணர்
முடிவி லாத கற்பத்தி னூழி
முதல்வர் தேவர் முப்பத்து மூவரே.