முருகன் App
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
பகழிக்கூத்தர்
சப்பணிப்பருவம்4 / 11
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் · பகழிக்கூத்தர்

சப்பணிப்பருவம்

31✓
பரவரிய நவமணி யழுத்துகல னுக்கழகு
பாலித்து வீறு பெற்ற
பன்னிரு புயங்குலுங் காமனீள் குழைதொறும்
பருவயிர குண்ட லங்க
ளிரவியொளி மட்கநின் றசையாமா லமுதொழுகு
மிந்துமுக மண்ட லத்தி
லெழுதரிய திருநுதற் புண்டரங் குறுவெயர்
விறைக்கச் சிதைந்தி டாமற்
கரகமல மலர்விரல் சிவப்புறா மற்கடக
கங்கண மொலித்தி டாமற்
கழிவண் டலம்புங் கருங்குவளை யோடைசூழ்
கழிதொறுங் கான றோறுந்
தரளமுழு மணிநிலவு தருசெந்தில் வேலவா
சப்பாணி கொட்டி யருளே
சமரமுக ரணவீர பரசமய திமிராரி
சப்பாணி கொட்டி யருளே. 31
32✓
அண்டர்தந் துயரொழித் தனமென்று கொண்டாடி
யாவலங் கொட்ட மன்னு
மயிராணி கலவியமு துண்டன மெனத்தேவ
ரரசிரு கரங்கள் கொட்டத்
துண்டவெண் பிறைபுரை யெயிற்றுவெஞ் சூருளந்
துண்ணெனப் பறைகொட் டநீள்
சுருதியந் தணரிடந் தோறுமங் கலப்பெருந்
தூரியங் கொட்ட முட்டப்
பண்டரு பெருங்கவிப் புலமைக்கு நீசொன்ன
படிதிண்டி மங்கொட் டவெம்
பகைநிசா சரர்வளம் பதிமுழுது நெய்தலம்
பறைகொட்ட வெள்வளை தருந்
தண்டரள மலைமொண்டு கொட்டுநக ராதிபா
சப்பாணி கொட்டி யருளே
சமரமுக ரணவீர பரசமய திமிராரி
சப்பாணி கொட்டி யருளே. 32
33✓
பௌவமெறி கடலாடை யுலகிலொரு வேடுவன்
பறவைக்கு நிறைபு குந்த
பார்த்திவன் பாவையு மியற்குலச் சிறையும்
பணித்தருள மதுரை புக்குத்
தெவ்வரிடு திருமடத் தெரிசெழிய னுடலுறச்
சென்றுபற் றலுமெ வர்க்குந்
தீராத வடவையனல் வெப்புமுது கூனுந்
திருத்தியொரு வாது வென்று
வெவ்வழலி லெழுதியிடு மேடும் பெருக்காற்று
விட்டதமி ழேடு மொக்க
வேகாம லெதிரே குடக்கேற வெங்கழுவில்
வெய்யசமண் மூக ரேறச்
சைவநெறி யீடேற வருகவுணி யக்குழவி
சப்பாணி கொட்டி யருளே
சமரமுக ரணவீர பரசமய திமிராரி
சப்பாணி கொட்டி யருளே. 33
34✓
பைந்தா டழைச்சிறைக் கானவா ரணமருவு
பந்தரிடு முல்லை வேலி
பாயுமுட் பணைமருப் பேறுதழு வியுமுடைப்
பாலறா மேனி மடவார்
கொந்தார் குரும்பையிள வனமுலை முகக்கோடு
குத்தக் குருந்தொ சித்துங்
குறுங்கழைத் துண்டந் தனிற்சிறு துளைக்கருவி
குன்றுருக நின்ற ழைக்குஞ்
செந்தா மரைக்கைவிரல் கொடுபுதைத் துஞ்சுருதி
தெரியவிரன் முறையில் விட்டுந்
தேனுவின் பிறகே திரிந்துங் கவுட்குழி
திறந்துமத மாரி சிந்துந்
தந்தா வளந்தனக் குதவுதிரு மான்மருக
சப்பாணி கொட்டி யருளே
தரளமெறி கரையல்வளை தவழ்செந்தில் வேலவா
சப்பாணி கொட்டி யருளே. 34
35✓
கார்கொண்ட பேரண்ட கூடமோ ரேழுநீ
கற்பிக்கு மந்த்ர சாலை
கற்பதா ருவுநின் புயத்தினுக் கணிமாலை
கட்டவளர் நந்தன வனஞ்
சீர்கொண்ட புருகுத னுந்தேவர் குழுவுநின்
றிருநாம மறவா தபேர்
சிகரகன காசலமு முன துதிரு வாபரண
சேர்வைசேர் பேழை கடனீர்
போர்கொண்ட வேலின் புலால்கழுவு நீரேழு
பொழிலுமத் தனைதீ வுமோர்
பொலிவினுட னேநின் கலாபமயில் வையாளி
போய்மீளும் வீதி யெனவே
தார்கொண்ட மணிமார்ப செந்தில்வடி வேலனே
சப்பாணி கொட்டி யருளே
தரளமெறி கரையில்வளை தவழ்செந்தில் வேலவா
சப்பாணி கொட்டி யருளே. 35
36✓
கவளமத வெற்புநிலை யுலகுபர வப்ரபைகொள்
கைத்தா மரைக் கடகபூண்
கதிரொளி விரிக்கவளர் சிகையினிடு சுட்டிமிசை
கட்டாணி முத்தொ ளிரவே
பவளவிதழ் புத்தமுத மொழுகுமத லைக்குதலை
பற்பாதி சொற்றெ ரியவே
பரிபுர மொலிக்கவரு குறுநகை யெழுப்பியிடு
பைச்சேட னுச்சி குழிபா
யுவளக மனைத்துமின வரிவளை முழக்கவெடி
யுற்றேபெ ருத்த கயல்போ
யொருபுடை குதிக்கவரி யலவனை யிற்புகுத
வுப்புறு நெட்ட கழிதோய்
தவளமணி முத்தையலை யெறியுநக ருக்கதிப
சப்பாணி கொட்டி யருளே
சருவிய புறச்சமய விரதியர் குலக்கலக
சப்பாணி கொட்டி யருளே. 36
37வேறு✓
கருதிய தமனிய மணியரை வடமிடு
கட்டுவ டத்தோடுங்
கழலிடு பரிபுர மொலியெழு மணியுமிழ்
கைக்கட கப்பூணு
மிருசுட ரொளிபெற மருவிய தளர்நடை
யிட்டும திப்பாக
வெழுமதி புரைதிரு முகமலர் குறுவெய
ரிட்டுவ ரத்தாமஞ்
சொருகிய நறுமலர் முகையவிழ் சிகையிடு
சுட்டிநு தற்றாழத்
தொழுதுனை வழிபடு மடியவ ரிளையவர்
சொற்படி தப்பாமற்
குருமணி யலையெறி திருநக ரதிபதி
கொட்டுக சப்பாணி
குருபர சரவண பவசிவ மழவிடை
கொட்டுக சப்பாணி. 37
38✓
வரைபுரை புயமிசை யிடுதொடி யணிகலன்
மற்றுள முத்தார
மணிமுடி குழையிடு மிருசிகை யழகெழ
மைக்குவ ளைப்போதின்
விரைசெறி குழலியர் செவிலிய ரவரவர்
மிக்கவி ருப்பரனார்
விபுதரு முனிவரு முனதடி பரவியுன்
வெற்றியு ரைப்பார்சீ
ரரைமணி யுடைமணி கணகண கணவென
வத்திமு கத்தானு
மரிபிர மனுமுமை கணவனு மனமகி
ழற்புவி ளைத்தார்பார்
குரைகட லலையெறி திருநக ரதிபதி
கொட்டுக சப்பாணி
குருபர சரவண பவசிவ மழவிடை
கொட்டுக சப்பாணி. 38
39✓
கந்தத் தகட்குணர் விந்தத் தனிக்கடவுள்
கற்பா யெனச்சுருதி நூல்
கண்டித் துரைத்திடவு மிந்தக் கரத்திலுரை
கற்பா லுரைத்தி யெனவே
யந்தப் பொருட்பகுதி யந்தத் தினைப்பகரு
மப்போ வெறுத்து முனிவா
யஞ்சத் திருக்குமய னஞ்சச் சிறைக்குளிடு
மப்பா சிறக்கு மமலா
பந்தப் பிறப்பொழிய வந்தித் திருக்குமவர்
பற்றாக நிற்கு முதல்வா
பண்டைக் குடத்திலுறு முண்டச் சிறுத்தமுனி
பற்றாசை யுற்று மிகவாழ்
சந்தப் பொருப்பிறைவ செந்திற் பதிக்குமர
சப்பாணி கொட்டி யருளே
சங்கத் தமிழ்ப்புலவ துங்கக் கொடைக்குமர
சப்பாணி கொட்டி யருளே. 39
40வேறு✓
முதுமொழி நினைவுதெ ரிந்த நாவலர்
முட்டா துனைப்பு கழவே
முளரியில் மருவி யிருந்த நான்முகன்
முக்காலு மிச்சை சொலவே
புதுமலர் சிதறிம கிழ்ந்து வானவர்
பொற்றா ளினைப்ப ரவவே
புகலரு மிசைதெரி தும்பு ராதியர்
புக்கா தரித்து வரவே
மதுகர மிடறிய தொங்கன் மாலிகை
மற்பூத ரத்த சையவே
மணியொளி வயிரம லம்பு தோள்வளை
மட்டாய் நெருக்க முறவே
சதுமறை முனிவர்க டங்க ணாயக
சப்பாணி கொட்டி யருளே
சரவண பவகுக செந்தில் வேலவ
சப்பாணி கொட்டி யருளே. 40