முருகன் App
திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ்
கந்தப்ப ஐயர்
அம்புலிப்பருவம்8 / 11
திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ் · கந்தப்ப ஐயர்

அம்புலிப்பருவம்

62சாமம்✓
சந்ததமும் இறைவர் விழி தோற்றினாய்; இவன் இறைவர்-
தனி நுதல்விழிப் பிறந்தான்;
தாவும் ஒரு மானைப் புணர்ந்தாய்; இவன் குறவர்
தரு மானையும் புணர்ந்தான்;
நந்து கலை ஈரெட்டு மன்னினாய்; அறுபத்து
நாலு கலை இவன் உணர்ந்தான்;
நாகம் அணி ஈசர் முடி ஏறினாய்; இங்கு இவனும்
நாக மணிமுடி ஏறினான்;
வந்த புலவர்க்கு அமுதம் ஈந்தாய்; இவன் புலவர்
வந்திக்க, அமுதம் ஈவான்;
வாலிபம் அறும் குழவி ஆகினாய்; இவன் என்றும்
வாலிபக் குழவி ஆனான்;
அந்த வகை தெரிதி நீ, தென்தணிகை வெற்பனோடு
அம்புலீ! ஆட வாவே!
அறிவாளர் சித்தம் உறும் அறுமா முகத்தனுடன்
அம்புலீ! ஆட வாவே!
63பேதம்✓
மேருவினை என்றும் நீ வலமாக வருவை; இவன்
மேரு தலைகீழ் ஆக்கினான்;
விளம்பும் உபதேச குரு இல் பிழைத்தாய்; இவன்
விளம்பு குரு உரை நயந்தான்;
சாரும் வடிவு அழிதி நீ; இவனும் அழியாது வளர்
சாரு வடிவாய் இருந்தான்;
சந்ததமும் நீங்காக் களங்கம் உற்றாய்; இவன்
சார்ந்திடு களங்கம் இல்லான்;
சீரடைய அத்திரி விழித் தாது ஆகி எண்
திக்கினும் சிதறினை; இவன்
சிவன் நுதற்கண் தழற்பொறியாய்த் தருப்பையில்
சேர்ந்து மக உருவம் ஆனான்;
யாரும் உணர் நிற்கு அதிகம் ஆம் தணிகை வெற்பனோடு
அம்புலீ! ஆட வாவே!
அறிவாளர் சித்தம் உறும் அறுமா முகத்தனுடன்
அம்புலீ! ஆட வாவே!
64✓
உரோகணி யிடத்து அதிக மோகம் ஆனாய்; இவனும்
ஒளிர் ஆரல் பால் உவந்தான்;
உயர் தலை உவாவினில் கலை அழிந்தாய்; இவனும்
உயர் தலை உவாவில் அழியான்;
சராசர உயிர்க்கு உணவு நல்கினாய்; ஞானியர்
தமக்கு அழிவு இல்வீடு அளித்தான்;
தனி நாளினுக்கு அரசன் ஆகினாய்; இவன் அமரர்
தங்களுக்கு அரசன் ஆனான்;
இராவினிடை வானத்து எழுந்து திரிவாய்; இவன்
இராப் பகல் இலா இடத்தான்;
இழிவு இலாச் சிறுவிதி சபித்திடப்படுவை; இவன்
எழில் விதியினைச் சிறை செய்தான்;
அராவினுக்கு அஞ்சா மயில் தணிகை வெற்பனோடு
அம்புலீ! ஆட வாவே!
அறிவாளர் சித்தம் உறும் அறுமா முகத்தனுடன்
அம்புலீ! ஆட வாவே!
65தானம்✓
தக்கன் நெடு சாபம் தவிர்த்திடுவன்; நரைதிரைகள்
தாங்கும் உடலும் கூனியே
சாய்ந்து கிழம் ஆகி நீ சாம் துயரும் நீக்குவன்;
சகல கலையும் தெரிந்த
மிக்க குரு இல்லைப் பிழைத்த பழி நீக்கிடுவன்;
மெய்க் களங்கமும் அறுப்பன்;
வெங்கதிர்க்கு அஞ்சி ஒளி அவியாமல் அருளுவன்;
விட அரவின் அச்சு அறுப்பன்;
பக்கம் இருபாலும் முன்பக்கமே போல வளர்
பான்மையும் அறிந்து உதவுவன்;
பைங்கூழினுக்கு இறைமை அல்லாமல் உலகு
பதினாலினுக்கு இறைமை தருவன்;
அக்கதை தெரிந்து தணிகைக்கு இறைவனோடு அமர்ந்து
அம்புலீ! ஆட வாவே!
அறிவாளர் சித்தம் உறும் அறுமா முகத்தனுடன்
அம்புலீ! ஆட வாவே!
66✓
புற இருளை நீக்கியிடும் உனது நெஞ்சு அகலாது
புக்க இருளைத் துரப்பன்;
பொங்கும் அலைகடல் கண்டு மகிழ் உனக்கு அலையாத
பூரணக் கடல் அளிப்பன்;
குறை மதியம் ஆம் உனக்கு அருள் ஞான மோன நிலை
குலவு நிறைமதி அளிப்பன்;
கொடிய அரவுக்கு அஞ்சும் உன் தனக்கு உலகம்
கொடுங் கயிற்று அரவு ஆக்குவன்;
மறுகு அமுத உரு ஆகும் உன்தனக்கு அழியாத
வாய் அமுதமொழி ஈகுவன்;
வான் எலாம் உலவிடும் உனக்கு அரிய சிற்சுகன
வானம் உறு நிலை அளிப்பன்;
அறுதி பெறு என் சொலை வினாய்த் தணிகை வெற்பனோடு
அம்புலீ! ஆட வாவே!
அறிவாளர் சித்தம் உறும் அறுமா முகத்தனுடன்
அம்புலீ! ஆட வாவே!
67தண்டம் (வேறு)✓
சே ஊரும் சிவன் நீர் மேவும் சடை
சேர்வாய் நன்று இது ஆனாலும்,
தேன் ஆர் பைங்கழை பூ ஆர் அம்பு இறை
சீர் சால் வெண்குடை ஆனாலும்,
கா வாழ் இந்திரன் வானோர் நுங்க முன்
கால்வாய் பொங்கு அமிர்து ஆனாலும்,
கான் ஆரும் பயிர் ஊண் ஆகும்படி
காய்வாய் தண் கதிர் ஆனாலும்,
'நீ வா!' என்று இவன் ஓதா முன்பு எதிர்
நீதான் வந்திலை யானாயேல்,
நீள் காலின் றளையோவாய்; அம்புயம்
நேராகும் துயர் ஈவானால்;
மா ஆர் பைங் கழுநீர் வாழும் கிரி
வாவா அம்புலி வாவாவே!
மாதேவன் குகனோடு ஆடும்படி
வாவா அம்புலி, வாவாவே!
68✓
தாயாய் இன்பு அருள் சேய் வா என்றலும்
தாழ்வாய் வந்திலை; போவாயேல்,
தாய்வாய் வந்து அலை மோதா நின்று, இருள்
சார்வாய், வஞ்சகனாய் நீயும்
தேய்வாய் வெங்கய நோயால்; வெங்கதிர்
சேர்போது உன் கதிர் வீவாயே;
தீ ஆரும் பணி வாயால் உண்டு இடர்
தீராது அங்கு உழல்வாய் வானில்;
தூய்து ஆம் நின்குரு மால் ஆம் அங்கனை
சூதால் வந்து அணை சோரா! நீள்
சோமா! பெண்பழி போமாறும், கறை
சூழா வண் வடிவு ஆமாறும்,
மாயாது ஒண் கழுநீர் வாழும் கிரி
வாவா அம்புலி வாவாவே!
மாதேவன் குகனோடு ஆடும்படி
வாவா அம்புலி, வாவாவே!
69✓
வேறு ஆகும் சுரர் மாயோன் நண்பு உறு
வேதாவும் தொழுதே ஏகி,
வீடு ஆர் தம்பதி சேர் மாஒண் கதை
மேலோரும் சொல ஓர்வாய் நீ;
கூறாமுன் வருவாயேல், நன்று அருள்
கூர்வாய்; வண்புகழ் சேர்வாயே;
கூசாது அன்பொடு நீ வா வெம் பணி
கோள் ஆரும் பகை தீர்வாயே;
சீறா வந்து எதிர் மாய் சூரன் செரு
தீரா நின்றது; மா பாவம்
தேயா நின்றது; வாழ்வு ஈகின்றது;
தேன் ஆரும் சுனை ஆர் பானல்
மாறாது அம் புவியோர் தாழும் கிரி
வாவா அம்புலி வாவாவே!
மாதேவன் குகனோடு ஆடும்படி
வாவா அம்புலி, வாவாவே!
70(வேறு)✓
வானில் உறுவோர் அந்தணர்கள்
வாடி அழுதே துன்புறலும்,
மாயை தரு சூரன் சிரமும்
வாழும் அரிமாவின் சிரமும்
தான முடி தோயும் கிரியும்
தாருகனும் வீழும்படிமுன்
சாடும் அயில் ஏவும் கரம் நீள்
தாள்கள் தொழுவார் அம் புவியில்
ஊனம் இலரால்; இங்கு வராது
ஓடி உழல்வாய்; நன்று அலவே!
ஓதும் முன் நீ வந்திலையேல்,
ஊனம் உறுவாய்; அங்கு அதனால்
ஆனையினம் ஆரும் தணிகை
ஆட வருவாய், அம்புலியே!
ஆறுமுகனோடு இங்கு ஒரு நீ
ஆட வருவாய், அம்புலியே!
71✓
வீடு பெறலாம்; அன்பர் பெறு
மேன்மை பெறலாம்; செங்கதிர் முன்
வீறு பெறலாம்; எங்கும் உழல்
வேலை தவிர் வாழ்வும் பெறலாம்;
மாடு பெறலாம்; நொந்து அழியா
வாய்மை பெறலாம்; இன்ப சுக
வாரி பெறலாம்; வெம் பணியின்
வாதை அறலாம்; முந்தை முயற்
கூடும் அறலாம்; பெண் களவில்
கூடு பழி பாவம் தெறலாம்;
கூனும் அறலாம்; வந்திடு எனக்
கூறும் முனம் நீ வந்தனையேல்
ஆடு மயில் சூழ் தென்தணிகை
ஆட வருவாய், அம்புலியே!
ஆறுமுகனோடு இங்கு ஒரு நீ
ஆட வருவாய், அம்புலியே!